ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Iran accuses 17 of spying for CIA as tensions escalate

பதட்டங்கள் தீவிரமடைகையில், மத்திய உளவுத்துறைக்கு (சிஐஏ) உளவுபார்த்ததாக ஈரான் 17 பேர் மீது குற்றஞ்சுமத்துகிறது

By Steve James and Robert Stevens
23 July 2019

படிப்படியாக விரைந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய அரசாங்கம் அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் என்று குற்றஞ்சாட்டி, இராணுவம் மற்றும் அணுஆலை நிறுவுதல்களில் பணியாற்றி வந்த 17 ஈரானிய தேசிய பிரஜைகளை அது கைது செய்திருந்ததைத் திங்களன்று அறிவித்தது.

ஈரானிய மாணவர் செய்தி நிறுவனத் தகவல்படி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகவர்களில் சிலருக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைச்சகத்தின் வேவுபார்ப்பு-தடுப்புத்துறை தெரிவித்தது, அதேவேளையில் மற்றவர்கள் அமெரிக்க நடவடிக்கைகள் மீது தகவல்கள் திரட்டும் ஈரானிய முயற்சிகளுக்கு ஒத்துழைத்து வருவதாக தெரிவித்தது. சிஐஏ உளவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இராணுவம் மற்றும் அணுஆலைகளின் "முக்கிய இடங்களில்" பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும், அவர்கள் இந்த ஆண்டு மார்ச் வரை 12 மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அந்நபர்கள் "அதிநவீன பயிற்சி" பெற்றுள்ளதாகவும், அமெரிக்க நுழைவனுமதி அல்லது அமெரிக்காவில் வேலைகள் வழங்கப்படுமென அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்ததாக தெஹ்ரான் தெரிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய வாதங்களை "முற்றிலும் பொய்" என்று நிராகரித்த அதேவேளையில், வெளியுறவுத்துறை செயலரும் முன்னாள் சிஐஏ இயக்குனருமான மைக் பொம்பியோ கூறுகையில், “ஈரானிய ஆட்சி பொய்யுரைப்பதில் ஒரு நீண்ட வரலாறு கொண்டது,” என்றார். இருப்பினும் "ஈரானிய இஸ்லாமிக் குடியரசில் இருந்து உள்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கர்களின் ஒரு நீண்ட பட்டியல் மீது நாங்கள் செயலாற்றி வருகிறோம்" என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

பல வாரங்களாகத் தீவிரமடைந்து வரும் பதட்டங்களுக்குப் பின்னர் இந்த கைது நடவடிக்கைகள் வருகின்றன. ஜூன் மாத இறுதியில், ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் நடத்தி இருக்கக்கூடிய ஒரு பேரழிவுகரமான இராணுவ தாக்குதலில் இருந்து அது வெறும் 10 நிமிடங்களே விலகி இருந்தது, அத்தாக்குதல் ஒரேயடியாக பிராந்திய மோதலைத் தூண்டியிருக்கக்கூடும் என்பதோடு, எதிரெதிர் தரப்பில் உள்ள உலகின் பிரதான சக்திகளை உள்ளிழுக்க அச்சுறுத்தியது.

இடைப்பட்ட வாரங்களில், அமெரிக்க நிர்வாகம் ஈரான் மீது இன்னும் கூடுதலாக நீடித்த அழுத்தத்தை அதிகரிக்க செயலாற்றி உள்ளது. வாரயிறுதி வாக்கில், பிரிட்டிஷ் கொடியைப் பறக்கவிட்டிருந்த எண்ணெய் கப்பல் ஸ்டீனா இம்பெரோ (Stena Impero) ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றபோது அதை ஈரான் சிறைபிடித்த சம்பவம், புதிய கடற்படை மற்றும் விமானப்படை ஆத்திரமூட்டல்களுக்குச் சாக்குபோக்காக பற்றிக்கொள்ளப்பட்டது.

ஈரானிய கொடியைப் பறக்கவிட்டிருந்த மிகப்பெரிய எண்ணெய் கப்பல் கிரேஸ் 1, ஜிப்ரால்டர் அருகே பிரிட்டிஷ் அரச கடற்படையால், ஒரு தூண்டுதலற்ற உரிமைமீறல் நடவடிக்கையாக, ஜூலை 4 இல் வளைத்துப் பிடிக்கப்பட்டதற்கு பதிலடியாக ஸ்டீனா இம்பெரோ சிறைபிடிக்கப்பட்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற அடாவடித்தன நடவடிக்கையில் ஒரு புதிய மற்றும் அபாயகரமான கட்டத்தைக் குறிக்கும் வகையில், அப்பிராந்தியத்தைப் போரின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ள ஸ்டீனா இம்பெரோ சம்பந்தப்பட்ட நெருக்கடி, பிரிட்டிஷ் ஆளும் வட்டாரங்களுக்குள் ஏற்கனவே நிலவும் ஆழ்ந்த பிளவுகளை இன்னும் கிளறிவிட்டு வருகிறது.

அமெரிக்க அரசாங்கம் விட்டொழித்த 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை பிரிட்டனில் பழமைவாத அரசாங்கம் தாங்கிப்பிடிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, பிரிட்டிஷ் நிறுவனங்களும் ஈரானில் கணிசமான நலன்களைக் கொண்டுள்ளன. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் பலத்தை மீறி செயல்படுவதற்குப் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மேலாளுமையையும் மற்றும் இராணுவ ஆதரவையும் சார்ந்திருந்துள்ளது.

வெளியேறும் பிரதம மந்திரி தெரேசா மே தலைமையில் அரசாங்கத்தின் கோப்ரா அவசர குழுவின் நேற்றைய காலை கூட்டத்தைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் மக்களவையில் (House of Commons) ஓர் அறிக்கை வெளியிட்டார்.

ஈரானின் நடவடிக்கையை "அரசு உரிமைமீறல் நடவடிக்கை" என்றும், “உலகப் பொருளாதாரம் சார்ந்திருக்கும் சுதந்திர கப்பல் போக்குவரத்து கோட்பாட்டின் அப்பட்டமான மீறல்" என்றும் ஹன்ட் விவரித்தார்.

அமெரிக்கா, ஓமான், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேசியிருப்பதாக தெரிவித்த அவர், “கப்பல் சிப்பந்திகளும் பண்டங்களும் இந்த இன்றியமையா பிராந்தியத்தின் வழியாக பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு [இப்போது] ஐரோப்பிய தலைமையிலான கப்பற்படை பாதுகாப்பை நிறுவுவதற்கு கோர" இருப்பதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய மேலாதிக்கத்திலான இந்த படையை அப்பிராந்தியத்தில் அமெரிக்க முன்மொழிவுகளுக்கு ஒரு குறைநிரப்பியாக இருக்குமென விவரித்த ஹன்ட், ஆனால், “அது ஈரான் மீதான அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்த கொள்கையின் பாகமாக இருக்காது ஏனென்றால் நாங்கள் ஈரான் அணுசக்தி உடன்படிக்கையைத் தொடர்ந்து பேணுவதற்குப் பொறுப்பேற்றுள்ளோம்,” என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஹன்ட் இன் நிலைப்பாட்டை தொழிற் கட்சியினது நிழல் அமைச்சரவையின் பாதுகாப்பு அமைச்சர் ஃபாபியன் ஹமில்டன் உடனடியாக ஆமோதித்தார், “சமீபத்திய வாரங்களில் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாமல் இருப்பதுடன், எல்லா தரப்பில் இருந்தும் கண்டிக்கப்பட வேண்டும்,” என்றவர் ஒத்தூதினார்.

ஆனால் ஈரான் உடனான இராணுவ மோதல் தவிர்க்கப்பட வேண்டுமென கூறிய அவர், வளைகுடாவில் அமெரிக்க நடவடிக்கைகளின் பொறுப்பற்றத்தனத்தின் மீது பிரிட்டிஷ் அரசின் கணிசமான பிரிவுகளது கவலைகளுக்குக் குரல் கொடுத்தார். “ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி... ஈரானுடன் தொடர்ந்து செயல்படும் எந்தவொரு நாட்டின் மீதும் அல்லது நிறுவனத்தின் மீதும் அது தடையாணைகளை மீளத் திணித்ததில் இருந்தே, அங்கே தீவிரப்பாடு தவிர்க்கவியலாது உள்ளது,” என்றார்.

ஜூலை 4 இல் ஜிப்ரால்டர் அருகில் ஈரான் எண்ணெய் கப்பல் கிரேஸ் 1 ஐ பிரிட்டன் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் சிறைபிடித்ததா என்று ஹாமில்டன் கேள்வி எழுப்பினார். “கிரேஸ் 1 கப்பல் இப்ரியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக அமெரிக்கா 48 மணி நேரங்களின் முன்பே மாட்ரிட் அரசாங்கத்திற்கு கூறியதாக ஸ்பானிய பத்திரிகை El País இல் இருந்து நமக்கு தெரிய வருகிறது, ஜிப்ரால்டர் கடற்பகுதியில் நடக்கும் கைப்பற்றலின் சட்டபூர்வ அடித்தளத்தைப் பலப்படுத்த அந்த அரசாங்கம் 36 மணி நேரங்களுக்கு முன்னதாக ஏன் புதிய சட்டமசோதா அறிமுகப்படுத்தியது என்பதையும் அது விவரிப்பதாக இருக்கும்,” என்றார்.

ஹாமில்டன் கேள்விக்கு ஹன்ட் திட்டவட்டமான பதிலளிக்கவில்லை.

அரசாங்கம் எவ்வாறு "அந்த அணுசக்தி உடன்படிக்கையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர" உத்தேசித்துள்ளது, “நாம் திரும்ப முடியாத கட்டத்தை எட்டுவதற்கு" முன்னதாக "ஈரானுக்கு எதிரான அதன் தடையாணைகளை ட்ரம்ப் நிர்வாகம் கைவிட செய்ய இணங்குவிக்கவும்" அரசாங்கம் என்ன உத்தேசித்துள்ளது என்று ஹன்ட் இக்கு ஹாமில்டன் கேள்வி எழுப்பினார்.

பிரச்சினையை மிகவும் அப்பட்டமாக்கி, தொழிற் கட்சியினது நிழல் அமைச்சரவையின் நீதித்துறை செயலர் ரிச்சர்ட் பர்கன் வாரயிறுதியில் ட்வீட் செய்கையில், “ஈரான் மீதான போர் இன்னும் கூடுதலாக சேதப்படுத்துவதாக இருக்கும் என்பதோடு, ஈராக் மீதான போரை விட நிலைகுலைப்பதாக இருக்கும். டொனால்ட் ட்ரம்பின் மற்றும் [அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஈரான்-விரோத போர்வெறியருமான] ஜோன் போல்டனின் சக கூட்டாளிகளாக இருப்பதை நாம் தவிர்க்க வேண்டியுள்ளது, அதற்கு பதிலாக இராஜதந்திர பாதையைப் பின்தொடர வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

கட்சி தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆகவிருக்கின்றவரும் டோரி தலைமைக்கான ஹன்ட் இன் போட்டியாளருமான முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான 2016 கருத்து வாக்குப்பதிவுக்குப் பின்னர் இருந்து, ட்ரம்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

மே அறிவுறுத்துவதை விட இவர், ஈரானுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டுமென ஜோன்சன் ஆதரவாளர்களின் ஒரு பிரிவு கோரியுள்ளபோதிலும், இவர் தெஹ்ரானுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ தாக்குதல்களையும் ஆதரிப்பதை இதுவரையில் நிராகரித்துள்ளார்.

ஆனால் ஜோன்சனின் ஆதரவாளரும், பிரெக்சிட் ஆதரவாளரும் மற்றும் முன்னாள் டோரி தலைவருமான Iain Duncan Smith கிரேஸ் 1 பிடிக்கப்பட்டதைப் பின்தொடர்வதில் வாரயிறுதி வாக்கில் மே அரசாங்கம் தயாரிப்பின்றி இருந்ததாக அதைக் குற்றஞ்சாட்டினார். “பிரிட்டன் அரசாங்கம் ஒரு நேசமான நிலைப்பாட்டுக்கு பெரும்பாலும் உடன்படா விட்டாலும் கூட, பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்துக்கு உதவியாக அமெரிக்க கையிருப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வாஷிங்டன் பிரிட்டன் அரசாங்கத்திற்கு அவற்றை வழங்க முன்வந்திருந்ததாகவும், அந்த கட்டத்தில் அவர்கள் அதை ஏற்கவில்லை என்றும் நம்பகமான ஆதாரநபர்களிடம் இருந்து... நான் தெரிந்து கொண்டேன்,” என்றார்.

ஸ்டீனா இம்பெரோவை ஈரான் சிறைபிடித்தமை குறித்து திங்களன்று பொம்பியோவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதும், “முதலில் அவர்களின் கப்பல்களைப் பாதுகாத்து கொள்வதன் மீதான பொறுப்பு பிரிட்டன் மீது விழுகிறது,” என்று பதிலளித்த அவர், “எங்கள் தரப்பில் இருந்து செய்ய வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது என்றாலும் இந்த கடல் வழிகளைத் திறந்து வைப்பதில் உலக நாடுகளும் இதில் மிகப்பெரும் பங்களிப்பை செய்ய வேண்டும்,” என்பதைச் சேர்த்துக் கொண்டார்.

பொம்பியோ ஈரானைத் தொடர்ந்து அச்சுறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிடவில்லை, அதுவொரு "மோசமான ஆட்சி" என்று அறிவித்த அவர், அது "தேச உரிமைமீறலுக்கு நிகரான ஒன்றை நடத்தி உள்ளது, சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலை ஒரு தேசிய அரசு கைப்பற்றியுள்ளது... எங்களுக்கு ஈரானுடன் போருக்குச் செல்ல விருப்பமில்லை. அவர்கள் ஒரு சராசரி தேசமாக நடந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அவர்கள் இதை புரிந்து கொள்வார்களென நம்புகிறேன், இந்த அச்சுறுத்தல் நிஜமானது என்ற உண்மையைக் குறித்து ஒட்டுமொத்த உலகமும் விழித்தெழுந்து உள்ளதென நினைக்கிறேன்,” என்றார்.

“சிலர் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, ஒரு போர் தொடங்கினால் பிரிட்டன் முழுமையாக அமெரிக்கா தரப்பில் சாய்வதைத் தடுக்க அங்கே எந்த வழியும் இல்லை,” என்று பிரிட்டனின் அட்மிரல் லார்ட் வெஸ்ட் கூறியதைப் போல, வாரயிறுதி வாக்கில் பல பிரபல அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்கள் கருத்துரைத்துள்ள நிலையில், அவற்றில் எதுவுமே இந்த சம்பவங்கள் போராக தீவிரமடையலாம் என்பதை நிராகரிக்கவில்லை.