ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German minister of defence to head European Commission

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு தலைமை ஏற்க உள்ளார்

By Peter Schwarz
4 July 2019

வாரக்கணக்கில் சர்ச்சைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய தலைவர்கள் செவ்வாயன்று ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய தலைமையை நியமிக்க உடன்பட்டனர்.

தற்போதைய ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக இருப்பார். சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய இயக்குனரான பிரான்சின் கிறிஸ்டீன் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கிக்குத் (ECB) தலைமை கொடுப்பார். பெல்ஜிய பிரதம மந்திரி சார்ல்ஸ் மிஷேல் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக இருப்பார் மற்றும் ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் போர்ரெல் அதன் தலைமை இராஜாங்க அதிகாரியாக ஐரோப்பிய ஒன்றிய புதிய உயர் பிரதிநிதியாக இருப்பார்.

ஆணைக்குழு தலைவருக்கு இனி ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். அங்கே வொன் டெர் லெயனுக்கு கணிசமான எதிர்ப்பு உள்ளது. 28 அங்கத்துவ நாடுகளின் 751 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய வாக்குப்பதிவு செய்வார்கள் என்றாலும், இந்த முன்மொழிவு இப்போதும் பாராளுமன்றத்தில் தோல்வி அடையலாம்.

எவ்வாறிருப்பினும் நேற்று ஐரோப்பிய பாராளுமன்றம் இத்தாலியின் டேவிட் சாஸ்சோலியை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்து, அவ்விதத்தில் அரசு தலைவர்கள் முன்மொழிந்தவாறு ஒரு சமூக ஜனநாயக கட்சியினரை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது உயர்மட்ட பதவியில் இருத்தியது. வொன் டெர் லெயன் மற்றும் லகார்ட் பழமைவாத முகாமில் இருந்து வருகிறார்கள், மிஷேல் ஒரு தாராளவாத பிரிவைச் சேர்ந்தவர் என்பதோடு, போர்ரெல் சமூக ஜனநாயகவாதியாவார்.

அரசு மற்றும் அரசாங்க தலைவர்களின் முன்மொழிவு ஒரு தெளிவான அரசியல் சமிக்ஞையாகும். அது, ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மன்-பிரெஞ்சு செல்வாக்கின் கீழ் ஒரு இராணுவ பெரும்சக்தியாக விரிவாக்குவதற்காக நிற்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய புதிய தலைமை மீதான பிரச்சினையானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் முரண்பாடுகளும், பிளவுகள் மற்றும் மோதல்களும் தற்போது எந்தளவுக்கு ஆழமாக உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவை, வெவ்வேறு பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை நலன்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையே, வடக்கு மற்றும் தெற்கு இடையே, கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையே ஓடுகின்றன. சமரசங்களோ அல்லது ஒருமனதான தீர்வுகளோ பெரிதும் சாத்தியமில்லை என்று தெரியுமளவுக்கு அவை மிகவும் கூர்மையாக உள்ளன.

ஜூன் 20-21 இல், ருமேனியாவில் நடந்த வழமையான ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவராக ஜோன்-குளோட் ஜூங்கரை அடுத்து வருபவர் மீது ஓர் உடன்பாட்டை எட்ட தவறியது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஐரோப்பிய தேர்தல்களில் பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) முன்னணி வேட்பாளர் ஜேர்மனியின் மான்ஃபிரெட் வேபரை வலியுறுத்தி இருந்தார், அதேவேளையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உறுதியாக வேபரை நிராகரித்தார்.

அரசு மற்றும் அரசாங்க தலைவர்கள் மத்தியிலோ அல்லது ஐரோப்பிய பாராளுமன்றத்திலோ வேபருக்குப் பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தபோது, கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஒசாகாவில் ஜி20 உச்சிமாநாட்டின் போது உத்தியோகபூர்வமற்ற ஒரு சந்திப்பில் மேர்க்கெல் மற்றும் மக்ரோனுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய முன்மொழிவை வரைந்தார். டச் சமூக ஜனநாயகவாதி பிரான்ஸ் ரிம்மர்மான் ஆணைக்குழு தலைவருக்கான புதிய தலைமை வேட்பாளராக ஆக இருந்தார், EPP இக்கு பாராளுமன்ற தலைவர் பதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட இருந்தன. கவுன்சில் தலைவர் பதவி ஒரு தாராளவாதிக்கு செல்வதாக இருந்தது.

ஆனால் இந்த முன்மொழிவு கிழக்கு ஐரோப்பியர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஜூன் 30 இல் சிறப்பு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவராக இருந்தபோது போலாந்து மற்றும் ஹங்கேரிக்கு எதிராக ஒரு சட்ட தீர்ப்பை வழங்கிய ரிம்மர்மானை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள். திங்கட்கிழமை அதிகாலை வரையில் நீண்ட, 19 மணி நேர பேரம்பேசல்கள் இருந்த போதினும், எந்த தீர்வும் தென்படுவதாக தெரியவில்லை. இந்த உச்சமாநாடு செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் ஊர்சுலா வொன் டெர் லெயனை ஆணைக்குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆச்சரியமான விதத்தில் முன்மொழியப்பட்டபோது அது பல கருத்துரையாளர்களால் ஒரு "அதிசயம்" என்று கூறப்பட்டது. அனைத்து அரசாங்க தலைவர்களும் வொன் டெர் லெயன் மீது ஒன்றுபடலாம் ஏனென்றால், வேறெவரையும் விட, இப்பெண்மணி தான் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா மற்றும் சீனா இரண்டையும் எதிர்க்கும் ஓர் இராணுவ சக்தியாக மாற்றுவதற்காக அதை ஆயுதமயப்படுத்துவதற்காக நிற்கிறார்.

60 வயதான மருத்துவரும் ஏழு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண்மணி ஜேர்மனியில் மிகவும் மூர்க்கமான ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகளில் ஒருவராவார். அவரது தந்தை, ஏர்ன்ஸ் ஆல்பிரெக்ட், 14 ஆண்டுகள் கீழ்-சாக்சோனியின் மாநில முதல்வராக இருந்தார். வொன் டெர் லெயன் அவரே கூட 2005 வரையில் மேர்க்கெல் அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருந்துள்ளார், முதலில் குடும்பநலத்துறை அமைச்சராகவும், பின்னர் தொழிலாளர்துறை அமைச்சராகவும் பின்னர் டிசம்பர் 2013 இலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கின்றார்.

அவர் பாதுகாப்புத்துறையை ஏற்ற பின்னர், ஜேர்மன் இராணுவ செலவினங்கள் 30 இல் இருந்து 45 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டன. அவர் நேட்டோவுடன் நல்லுறவுகளைக் கொண்டுள்ளதுடன் ரஷ்யாவை ஒட்டிய எல்லையில் அக்கூட்டணியின் இராணுவ அணிவகுப்புக்கு அழுத்தமளிப்பதில் ஒரு முன்னணி பிரமுகராக இருந்தார். இதனால் தான் அவர் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் ஆதரவைப் பெறுகிறார். அதே நேரத்தில், அவர் ஐரோப்பிய இராணுவத் திட்டத்தையும் முன்னோக்கி நகர்த்தி வருகிறார், இது மக்ரோனாலும் ஆதரிக்கப்படுகிறது, மேலும் பிரெஞ்சு துருப்புகளுடன் ஜேர்மனி நெருக்கமாக செயலாற்றி வரும் மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் மாலியில் ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

பல செய்திகளின்படி, வொன் டெர் லெயன் ஆணைக்குழு தலைமைக்கு மக்ரோனால் முன்மொழியப்பட்டிருந்தார், ஆனால் மேர்க்கெலினால் அல்ல. பிரெஞ்சு ஜனாதிபதியைப் பொறுத்த வரையில், குறிப்பாக ECB தலைமையைப் பிரான்சுக்காக உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமாக இருந்தது. ECB தலைமைக்கான ஜேர்மன் வேட்பாளரான, ஜேர்மன் மத்திய வங்கியின் தலைவர் ஜென்ஸ் வைட்மான் ஒரு கட்டுப்பாடான நாணய கொள்கைக்கு உறுதியான ஆதரவாளராக உள்ளார். மக்ரோன் என்ன விலை கொடுத்தாவது இதை தடுக்க விரும்பினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவராக கிறிஸ்டின் லகார்டும் கடும்சிக்கன கொள்கைகளுக்குப் பொறுப்பாவார். முக்கூட்டு என்றழைக்கப்படுவதில் அங்கத்துவமாக உள்ள சர்வதேச நாணய நிதியம் கிரேக்க மக்களைச் சீரழித்துள்ள சிக்கன நடவடிக்கை உத்தரவுகள் அனைத்தின் மீதும் செயலாற்றி உள்ளது. மிகவும் கடன்பட்டுள்ள அந்நாட்டுக்குக் கடன் வழங்குவதைக் குறைக்குமாறு லகார்ட் முன்மொழிந்திருந்தார், இது பேர்லினால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

2011 இல் சர்வதேச நாணய நிதியத்தில் இணைவதற்கு முன்னதாக, லகார்ட் நான்கு ஆண்டுகள் பிரான்சுவா ஃபிய்யோனின் பழமைவாத அரசாங்கத்தில் பிரெஞ்சு நிதி மந்திரியாக செலவிட்டார். அப்பெண்மணி பின்னர், சந்தேகத்திற்குரிய வியாபாரியான Bernard Tapie இக்கு 403 மில்லியன் யூரோ நஷ்டஈடு வழங்க அனுமதி வழங்கியதற்காக கண்டனத்திற்கு உள்ளார்.

அரசு மற்றும் அரசாங்க தலைவர்களின் இந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கத்தைக் கணிசமானளவுக்குப் பலப்படுத்தும். ஐரோப்பிய பாராளுமன்றத்தால் வொன் டெர் லெயன் உறுதி செய்யப்பட்டால், 52 ஆண்டுகளுக்கு முன்னர் வால்டர் ஹால்ஸ்டைனுக்குப் பின்னர் இவரே முதல் ஜேர்மன் ஆணைக்குழு தலைவராக இருப்பார்.

கவுன்சில் தலைவராக ஆக உள்ள சார்ல்ஸ் மிஷேலும் இமானுவல் மக்ரோனின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். மக்ரோனின் கட்சியான குடியரசை நோக்கி அணிவகுப்போம் (La République en Marche) போலவே, அவரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தாராளவாத குழுவைச் சேர்ந்தவர் தான். பெல்ஜிய பிரதம மந்திரியைப் போலவே, மிஷேலும் தேசியவாத புதிய பிளேமிஸ் கூட்டணியுடன் கூட்டணியில் இருந்துள்ளார். ஆகவே ஐரோப்பிய தேர்தல்களில் குறிப்பிடத்தக்களவில் தங்களின் பலத்தை அதிகரித்துள்ள இத்தாலியா லெகா போன்ற அதிவலது கட்சிகளுடன் அதிக நெருக்கமாக செயலாற்றுவதில் மதிப்பு பெற்றுள்ளார்.

எதிர்வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் போர்ரெல் ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (PSOE) ஒரு நீண்டகாலமாக தனது தொழில்வாழ்வைக் கொண்டிருந்தவர். 2004 இல் இருந்து 2007 வரையில், அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைவராக இருந்தார். ஓராண்டுக்கு முன்னர், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் அவரை ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்திருந்தார். போர்ரெல் கட்டலோனிய சுதந்திரத்திற்குக் கடுமையான எதிர்ப்பாளராவார். அது அவர் பிறந்த பிரதேசமாகும்.

ஐரோப்பிய அரசு மற்றும் அரசாங்க தலைவர்கள் முன்மொழிந்த வேட்பாளர் பட்டியல், ஐரோப்பாவில் இராணுவவாதம் மற்றும் பலமான ஜேர்மன்-பிரெஞ்சு மேலாதிக்கத்தை நோக்கிய வலதுசாரி திருப்பத்திற்கான ஒரு தெளிவான மாற்றத்தை அர்த்தப்படுத்துகிறது. அது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான மோதல்களைத் தீர்க்கப் போவதில்லை மாறாக மேற்கொண்டும் அவற்றை அதிகரிக்கும். இது, ஐரோப்பிய ஒன்றிய தலைமை அலுவலகங்களில் முற்றிலும் இதுவரையில் பிரதிநிதித்துவம் செய்திராத கிழக்கு ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமல்ல, மாறாக மேற்கு ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் பொருந்தும்.

இதற்கு சான்றாக, ஜேர்மனியில் பழமைவாத ஊடகங்கள், வேட்பாளராக லகார்ட் நிறுத்தப்பட்டதன் மீது கோபத்தை வெளிப்படுத்தின. Die Welt கருத்துரைக்கையில், “வேட்பாளராக லகார்ட்டை நிறுத்தி, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஸ்திரப்பாட்டு ஒன்றியத்திற்கு திரும்புவதற்கான அவற்றின் கடைசி வாய்ப்பைத் தவற விட்டுள்ளன,” என்று குறிப்பிட்டது. இன்றைய ECB தலைவர் மரியோ திராஹி போலவே, இப்பெண்மணியும் "கடன் வழங்கியுள்ள நாடுகளை விட கடன் பெற்ற நாடுகளுக்கு ஆதாயமான போக்குகளுக்காக நிற்கிறார்" என அது மேலும் குறிப்பிட்டது.