ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Bretton Woods Agreement 75 years on

பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் 75 ஆண்டுகள்

Nick Beams
22 July 2019

இன்று பிரெட்டன் வூட்ஸ் மாநாடு நிறைவடைந்து 75 ஆண்டுகளைக் குறிக்கிறது, அம்மாநாடு இரண்டு உலகப் போர்கள் மற்றும் 1930களின் பெருமந்தநிலையின் அழிவுக்குப் பின்னர் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மறுஸ்திரப்படுத்தலுக்கான அடித்தளம் அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து, அவ்விதத்தில் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிட்டது.

அவ் உடன்படிக்கையின் 75 வருடங்களுக்கு பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை அதன் அடித்தளங்களை உலுக்கிய மற்றும் ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியுடன் தொடங்கிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் எழுச்சிக்கு உந்துதலளித்த அதே பேரழிவுகளின் ஒரு வெடிப்பிற்கு முகங்கொடுக்கிறது.

அம்மாநாட்டில் பங்கெடுத்தவர்கள், அப்போது ஜேர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் ஈடுபட்டிருந்த நேச நாடுகளின் பிரதிநிதிகள், ஒரு புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதற்கான அவர்களின் கலந்துரையாடல்களுக்கு காரணமாக இருந்தவை, அவர்களின் ஆட்சியினது உயிர்பிழைப்புக்குக் அவசியமானது என்பதைக் குறித்து துல்லியமாக நனவுபூர்வமாக இருந்தனர்.

அக்கூட்டத்தின் இறுதியில் பேசுகையில், அமெரிக்க கருவூலத்துறை செயலர் Henry Morgenthau அதன் தீர்மானங்களைப் பின்வருமாறு தொகுத்தளித்தார்: “சர்வதேச கூட்டுறவு மூலமாக —அதாவது, பொதுவான நோக்கங்களை எட்டுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மூலமாக— நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பதே மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் திறமையான வழியாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்,” என்றார்.

இந்த நோக்குநிலையை உந்திய அச்சங்கள் அமெரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான துணை செயலர் வில்லியம் கிளேடனால் காங்கிரஸ் சபையின் ஓர் உரையில் மார்ச் 1945 இல் வெளிப்படுத்தப்பட்டது. உயர் இறக்குமதி வரிவிதிப்புகளுக்கு வக்காலத்துவாங்கியவர்களுக்கு எதிராக அவரது கருத்துக்களைத் திருப்பியவாறு, அவர் எச்சரிக்கையில், “இரண்டு உலக போர்களுக்கு இடையே மிகக் கடுமையாக நடத்தப்பட்ட சர்வதேச பொருளாதார போர்முறை போன்ற ஒன்றால், உலக சமாதானம் எப்போது வேண்டுமானாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம்,” மேலும் “ஜனநாயகமும் சுதந்திர வர்த்தகமும் இன்னொரு உலக போரை தாக்குப் பிடிக்காது” என்றார்.

துல்லியமாக உலகம் இப்போது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ அந்த பாதையைத்தான் அது வர்ணிக்கிறது. அதாவது, ஆழமடைந்து வரும் பொருளாதார மோதல் மற்றும் டொனால்ட் ட்ரம்பினது ஜனாதிபதி பதவியின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ட்ரம்ப் அவரின் பதவியேற்பு விழா உரையில் அறிவித்தார்: “நமக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொண்டு, நமது நிறுவனங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, நமது வேலைகளை அழித்துக் கொண்டிருக்கின்ற மற்ற நாடுகளின் சூறையாடல்களில் இருந்து நாம் நமது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு என்பது மிகப் பெரியளவில் செல்வ வளத்திற்கும் மற்றும் பலத்திற்கும் இட்டுச் செல்லும்.” அதற்கு இரண்டுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா தீவிரப்படுத்தப்பட்ட பொருளாதார போர்முறையை நடத்தி வருவதுடன், "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அதன் கூட்டாளிகள் மற்றும் போட்டியாளர்கள் மீது ஒருபோல இறக்குமதி வரிவிதிப்புகள் அல்லது அச்சுறுத்தல்களைத் திணித்து அவற்றை தாக்கிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையை வடிவமைத்தவர்கள் எச்சரித்த இதே கொள்கைகள் ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்வது வெறுமனே ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையின் விளைவு என்ற பிரமைக்கு யாரும் ஆளாகிவிடக்கூடாது. உண்மையில் ஜனநாயக கட்சியினர் இன்னும் அதிகமாக போர் நாடுபவர்களாக உள்ளனர். அவர்கள் சீனா மீது விதிக்கப்பட்ட முடமாக்கும் அமெரிக்க தடையாணைகளை, ஏதேனும் வர்த்தக உடன்படிக்கையின் பாகமாக, நீக்குவதில் இருந்து ட்ரம்பைத் தடுக்கும் விதித்தில், சீனத் தொலைத்தொடர்பு பெருநிறுவனம் ஹூவாய் இக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி உள்ளனர்.

தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற வர்த்தகப் போர் மற்றும் உலகப் போர் அச்சுறுத்தல் என்பது, ஏதேனும் ஒரு வகையில் "திசையை திருத்துவதால்" கடந்து சென்றுவிடக் கூடிய, முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஒரு குறிப்பிட்ட குழுவின் சிந்தனை முறையின் அல்லது உளவியலின் விளைவு கிடையாது என்ற உண்மையை இந்த இருகட்சிகளினது ஆதரவு சுட்டிக்காட்டுகிறது. அதற்கு பதிலாக, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் ஆழமாக அமைந்துள்ள எளிதில் கையாள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியில் வேரூன்றி உள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியமே கூட பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளின் பின்னரான காலத்தில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையினது வரலாற்று பரிணாமத்தின் விளைபொருளாகும்.

பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையில் இரண்டு முக்கிய தூண்கள் இருந்தன, ஒன்று அரசியல்ரீதியானது மற்றொன்று பொருளாதாரரீதியானது.

ஒரு புதிய உலகப் பொருளாதார ஒழுங்கை அமைப்பதற்காக உலக முதலாளித்துவத்தின் தலைவர்கள் ஒன்று சேர்வதைச் சாத்தியமாக்கிய அந்த அரசியல் அடித்தளம் என்னவென்றால், 1920 கள் மற்றும் 1930 களில் வெடித்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களையும் மற்றும் போர் அதன் இரத்தச்சேற்றில் முடிவுற சென்று கொண்டிருந்த நிலையில் ஐரோப்பா எங்கிலும் மற்றும் ஆசியாவின் பெரும்பகுதிகளிலும் வெடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் புதுப்பிக்கப்பட்ட முதலாளித்துவ-எதிர்ப்பு போராட்டங்களையும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் மற்றும் உலகெங்கிலுமான ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகளும் காட்டிக்கொடுத்தமை ஆகும்.

போருக்கு முன்னதாக, மக்கள் முன்னணி (popular front) என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம் —அதாவது, ஆளும் வர்க்கங்களின் ஜனநாயகப் பிரிவுகள் என்று கூறப்பட்டவைகள் உடனான கூட்டணி— 1936 இல் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் காட்டிக்கொடுப்புக்கும் மற்றும் 1936-39 உள்நாட்டு போரில் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் தலை நசுக்கப்படுவதற்கும் இட்டு சென்றிருந்தது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகளின் விளைவாகவும் மற்றும் 1917 புரட்சிக்குப் பிந்தைய முதலாவது தொழிலாளர் அரசு தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாகவும் எழுந்திருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் அப்போது உலக ஏகாதிபத்தியத்தின் பிரதான முண்டுகோலாக ஆகி இருந்தது.

1943 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவம் கம்யூனிச அகிலத்தைக் கலைத்தபோது, போருக்குப் பிந்தைய உலகில் அது வகிக்கவிருந்த பாத்திரம் குறித்து உலக ஏகாதிபத்தியத்திற்கு உத்தரவாதம் வழங்கியது. இது 1945 பெப்ரவரியில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சேர்ச்சில் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உடனான யால்டா உச்சி மாநாட்டில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இம்மாநாட்டில் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் மீண்டும் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவளிக்கும் என்பதை ஸ்ராலின் தெளிவுபடுத்தினார். இந்த உறுதிமொழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஸ்ராலினிச கட்சிகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் முதலாளித்துவ அரசாங்கங்களுக்குள் நுழைந்த போதும் மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் முனைவை ஒடுக்கிய போதும் கௌரவிக்கப்பட்டது.

இவ் உடன்படிக்கைக்கான பொருளாதார அடித்தளம், அமெரிக்க முதலாளித்துவத்தின் பலமாக இருந்தது, அதன் தொழில்துறை தகைமைகள் 1945 வாக்கில் உலக உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் கணக்கில் கொண்டிருக்கும் அளவுக்கு போரின் போக்கில் அதிகரித்திருந்தது.

தொழிலாள வர்க்கம் தவறுதலாக ஸ்ராலினிச கட்சிகளை அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் கட்சிகளாக பார்த்த காரணத்தாலும் மற்றும் நாஜி ஜேர்மனியைத் தோற்கடிப்பதில் செம்படை வகித்த முன்னணி பாத்திரத்தின் காரணமாகவும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய ஆதரவை அனுபவித்து வந்த ஸ்ராலினிச கட்சிகளின் கூட்டுழைப்பை அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்காவினால் அதன் பொருளாதார பலத்தைப் பயன்படுத்த முடிந்தது.

இருப்பினும் அது பொதுநலன்களை கருதி அவ்வாறு செய்யவில்லை, மாறாக போரால் பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவத்தை மீளஸ்திரப்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் ஆகும். ஐரோப்பாவும் உலகின் ஏனைய பகுதிகளும் 1930 களின் நிலைமைகளுக்குத் திரும்பினால், உலக சந்தை விரிவாக்கத்தைச் சார்ந்துள்ள அமெரிக்க பொருளாதாரம் அழிவை முகங்கொடுக்கும் என்றும், ஸ்ராலினிசத்தின் அரசியல் பாத்திரம் நிலைக்க முடியாதவாறு இருந்தாலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே கூட புரட்சிகர போராட்டங்களின் வெடிப்பே இறுதிவிளைவாக இருக்கும் என்றும் அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.

உலகளாவிய போரின் வெடிப்பு என்பது, உலகப் பொருளாதார அபிவிருத்திக்கும் உலகம் எதிர்விரோத தேசிய-அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவு என்பதையும், இது முன்பினும் கூடுதலாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான வன்முறையான மோதல்களை அதிகரிக்கும் என்றும் 1914 இல் முதலாம் உலக போர் வெடிப்பில் இருந்து, மார்க்சிச இயக்கம் பகுத்தாராய்ந்து இருந்தது. சந்தைகள், இலாபங்கள் மற்றும் ஆதாரவளங்களுக்கான மோதல்களை மையத்தில் வைத்து சம்பந்தப்பட்டிருந்த இத்தகைய சக்திகள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில், தன்னைத்தானே மேலோங்கிய உலக சக்தியாக ஸ்தாபிப்பதன் மூலமாக உலக பொருளாதாரத்திற்கும் மற்றும் தேசிய அரசுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க முனைந்தன, இது மொத்தத்தில் ஒவ்வொன்றையும் மற்றொன்றுடன் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.

இந்த முரண்பாடு பிரெட்டன் வூட்ஸ் நாணய முறையில் வெளிப்பாட்டைக் கண்டது, அது பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான மோதல்களைக் குறைக்க உத்தேசித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாத்து பொருளாதார நிபுணர் ஜோன் மேனார்ட் கீன்ஸ் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிவர்த்தனைகளுக்கு நிதியளிக்க ஒரு சர்வதேச நாணயமான "பான்கோர்" (bancor) என்பதை ஸ்தாபிக்க முன்மொழிந்தார். ஏனைய பிரதான சக்திகளைப் போலவே அமெரிக்காவை அதே கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கி, அவ்விதத்தில் அதன் மேலாதிக்கத்தைக் குறைப்பதே கீன்ஸ் திட்டத்தின் சாராம்சமாக இருந்தது.

“பான்கோர்" திட்டம், திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலரே மறுவடிவமைக்கப்பட்ட சர்வதேச நாணய முறைக்கான அடிப்படையாக ஆக்கப்பட்டது. சர்வதேச கூட்டுறவுக்கான அவசியம் குறித்த அனைத்து வார்த்தைஜாலங்களைப் பொறுத்த வரையில், அமெரிக்க மேலாதிக்கமே பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையில் பொதியப்பட்டது. ஓர் அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் வீதம் டாலரை தங்கத்துடன் பரிமாறிக் கொள்ளலாம் என்பது மட்டுமே வற்புறுத்தலாக இருந்தது.

உலக பொருளாதாரத்திற்கும் தேசிய அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படவில்லை, மாறாக பிரெட்டன் வூட்ஸ் முறையின் கீழ் அது வெறுமனே ஒடுக்கப்பட்டிருந்தது. அது மீண்டும் மேற்பரப்புக்கு வரக்கூடியதாக இருந்தது.

வரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்குமான பொது உடன்படிக்கை (General Agreement on Tariffs and Trade) மற்றும் மிக நவீன அமெரிக்க உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக உலக பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பது போன்ற பிற நடவடிக்கைகளுடன் சேர்ந்து பிரெட்டன் வூட்ஸ் நாணய உடன்படிக்கை அனைத்து பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களிலும் ஒரு பொருளாதார விரிவாக்கத்திற்கு உயர்வளித்தது. அதற்குப் பின் வந்த போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் போது, முதலாளித்துவம் முந்தைய அரை-நூற்றாண்டின் சீரழிவுகளைக் கடந்து விட்டது என்றும், உலகளாவிய பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிர்வகித்துக் கொள்ளலாம் என்பதும் சம்பிரதாயமான புரிதலாக இருந்தது.

ஆனால் பிரெட்டன் வூட்ஸ் நாணய முறை ஓர் உள்ளார்ந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தது. உலக சந்தையின் விரிவாக்கம் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய ஏனைய முதலாளித்துவ பொருளாதாரங்களின் அபிவிருத்தியை எந்தளவுக்கு அதிகமாக ஊக்குவித்ததோ, அதேயளவுக்கு அதிகமாக அந்த முறை அது அடித்தளமாக கொண்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஒப்பீட்டளவிலும் கேள்விக்கிடமின்றியும் குழிபறித்தது.

ஏற்கனவே 1960 களின் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்ட இந்த முரண்பாடு, ஆகஸ்ட் 15, 1971 இல் ஜனாதிபதி நிக்சன் தங்கத்தின் கையிருப்பு வீழ்ச்சியை முகங்கொடுத்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி ஒளிபரப்பில் அமெரிக்கா இனி தங்கத்திற்கு டாலர்களை மாற்றீடாக வழங்காது என்று தன்னிச்சையாக அறிவித்த போது, வெடித்து மேற்புறத்திற்கு வந்தது.

அமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வின்மை மற்றும் இறக்குமதிகளில் 10 சதவீத கூடுதல் வரிவிதிப்பையும் உள்ளடக்கி இருந்த நிக்சனின் நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மீதும் மற்றும் அதன் நிதியியல் அமைப்பு முறையின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு நோக்கம் கொண்டிருந்தன. ஆனால் ஒப்பீட்டளவிலும் கட்டுக்கடங்காமலும் இருந்த அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சி, அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் தீவிரமாக மட்டுமே ஆனது. தங்கத்தின் பின்புலத்திலிருந்து சுதந்திரப்படுத்தப்பட்ட அரசு-நிர்ணய செலாவணி (fiat currency) ஸ்தாபிக்கப்பட்டமை, கடந்த நான்கு தசாப்தங்களில் நிதியியல் மூலதனத்தின் வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சியில் பிரதான காரணிகளில் ஒன்றாக இருந்தது.

தொழில்துறை உற்பத்தியில் இப்போது சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பின்னால் நிற்கும் அளவுக்கு அமெரிக்க மேலாளுமை சீராக சரிந்ததுடன், இலாப திரட்சியோ அதிகரித்தளவில் ஊகவணிகம் மற்றும் நிதியியல் சந்தை நடவடிக்கைகளைச் சார்ந்ததாக ஆகியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ள ஹூவாய் விடயம் இந்த நிகழ்ச்சிப்போக்கை தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. 5ஜி மொபைல் தொழில்நுட்பம் இணையம் வழியாக தொழில்துறை தகைமையை அபிவிருத்தி செய்வதில் பிரதான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதால், அத்தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஹூவாய் முன்னிலையில் இருப்பதால் அது இலக்கில் வைக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் மிகப்பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தலைச்சிறந்து விளங்கிய ஒரு நாட்டிற்கு இப்போது ஹூவாய் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது, ஏனென்றால் அங்கே அதனுடன் ஒப்பிடத்தக்க அமெரிக்க நிறுவனம் எதுவும் இல்லை. இவ்வாறு இல்லாமல் போனதற்கான காரணம், அமெரிக்காவில் இலாபம் ஈட்டுவதென்பது உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் செய்வதற்கு மாறாக குறுகிய கால ஆதாயங்கள் மற்றும் நிதித்துறை தந்திரங்களையே அமெரிக்கா அதிகரித்தளவில் சார்ந்துள்ளது என்பதனால் ஆகும்.

பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளின் காலத்தில் அது ஒடுக்க முனைந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளும் மீண்டுமொருமுறை வெடித்து மேற்பரப்புக்கு வந்துள்ளன. அவை 1930 களின் பேரழிவுகளின் உருவாக்கத்திற்கு காரணமான அதே வகையான இறக்குமதி வரிவிதிப்புகள் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, இப்போது தொழில்நுட்ப தடைவிதிப்புகள், அத்துடன் போருக்கான வழிவகைகள் மூலமாகவும், அதன் மேலாதிக்கத்தை மீளப்பலப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவில் அவற்றின் மிகவும் வெடிப்பார்ந்த வடிவை எடுத்து வருகின்றன.

உலக தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை, முதலாம் உலக போர் வெடித்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளிலேயே லியோன் ட்ரொட்ஸ்கி வரையறுத்தார். 1915 இல், அவர் எழுதுகையில், உலக சோசலிச புரட்சிக்கான முன்னோக்கும் மற்றும் சோசலிச பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதும் தொழிலாள வர்க்க போராட்டங்களை வழிநடத்தும் நாளாந்த நடைமுறை வேலைத்திட்டமாக ஆக வேண்டும் என்றார். முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் மற்றொரு உலக பெருமோதலை நோக்கி சென்று கொண்டிருக்கையில் அந்த பகுப்பாய்வு முன்னெப்போதையும்விட மிகவும் உண்மையாக உள்ளது.