ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Cuba conference tailors Trotsky to the politics of bourgeois nationalism

கியூப மாநாடு முதலாளித்துவ தேசியவாத அரசியலுடன் ட்ரொட்ஸ்கியை ஒன்றிணைக்கின்றது

By Bill Van Auken
13 June 2019

 


லியோன் ட்ரொட்ஸ்கி

கியூப தலைநகர் ஹவானாவில் மே 6 முதல் 8 வரை “லியோன் ட்ரொட்ஸ்கி சர்வதேச கல்வி நிகழ்வு” (International Academic Event Leon Trotsky) என தலைப்பிடப்பட்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.

ஃபிடல் காஸ்ட்ரோவாலும் அவரது சகோதரர் ராவுல் ஆலும் நீண்டகாலம் தலைமை தாங்கப்பட்டு வரும் முதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்தின் கருவியான, ஆளும் கியூப கம்யூனிஸ்ட் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை நசுக்கியதையும் ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் நிறுவனருமான ட்ரொட்ஸ்கிக்கு எதிரான மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்களை நியாயப்படுத்தியதையும் எடுத்துக்கொண்டால், இந்த தலைப்பில் மாநாட்டைக் கூட்டுவது என்பது மறுக்கமுடியாத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

காஸ்ட்ரோவின் தலைமையால், கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஈவிரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டனர், அவர்களின் உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர் மற்றும் அவர்களது பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டு அடித்து நொருக்கப்பட்டது.


ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்த ரமோன் மெர்க்கடேர், கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த சகோதர் ரமோன் காஸ்ட்ரோ உடன்

லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தவரும் சோவியத் ஒன்றியத்தின் இரகசிய போலீஸ் அமைப்பான ஜிபியு (GPU) இன் முகவருமான ரமோன் மெர்க்கடேர், 1960 இல் மெக்சிகன் சிறையிலிருந்து விடுதலையான உடனேயே கியூபாவிற்குப் பறந்தார், அங்கு ஹவானா விமான நிலையத்தில் சே குவாராவினாலும் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவாலும் அவருக்கு இதயங்கனிந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. 1978 இல் அவர் இறக்கும்வரை ஹவானாவுக்கும் மாஸ்கோவிற்கும் இடையில் தொடர்ச்சியாக பயணம் செய்துவந்தார்.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையை ஒழுங்குசெய்வதில் ஒரு முக்கிய பங்கு வகித்த ரமோன் மெர்க்கடேரது தாய் கரிடாட் மெர்க்கடேர் 1960 களில் கியூப அரசாங்கத்தால் பாரிசிலுள்ள அதன் தூதரகத்தில் மக்கள் தொடர்பு இயக்குநராக பணியில் அமர்த்தப்பட்டார்.


ஹவானாவில் மெர்க்கடேர்

1966 இல் ஹவானாவில் நடந்த மூன்றுகண்ட மாநாட்டில் ஃபிடல் காஸ்ட்ரோ நிகழ்த்திய உரையில், ட்ரொட்ஸ்கிசத்தை கொடூரமாக தாக்கி, இது “கேவலமானது” “குமட்டலானது” “ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கின் ஒரு மோசமான கருவி” என்று மாஸ்கோ வழக்குகளின் பாஷையை அப்படியே எதிரொலித்தார்.

ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான காஸ்ட்ரோ ஆட்சியினாலான உத்தியோகபூர்வ ரீதியிலான இந்தப் பிரச்சாரம் இருப்பினும், பெரும்பாலும் இதனால்தான் கியூப பொதுமக்கள் மத்தியில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் மரபுரிமை பற்றி அறிய பெரும் ஆர்வம் உள்ளது. கியூப எழுத்தாளர் லியோனார்டோ பதுரா (Leonardo Padura) வால் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றி மையப்படுத்தியிருந்த, 2009ல் வெளியான நாவலான நாயை நேசித்த மனிதன் (The Man Who Loved Dogs) பிரபலமானதில் இது வெளிப்படையானது. மெக்சிக்கோ நகரில் உள்ள ட்ரொட்ஸ்கியின் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர் மற்றும் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட அறையையும் பார்த்த பின்னர் பதுரா இந்த நாவலை எழுதுவதற்கு தூண்டப்பட்டார். அவர் கியூபாவிற்குத் திரும்பி வந்ததும், அந்த புரட்சிகர தலைவரைப் பற்றி கியூப நூலகத்தில், ட்ரொட்ஸ்கி ஒரு ஓடுகாலி மற்றும் ட்ரொட்ஸ்கி ஒரு துரோகி என இரண்டே இரண்டு புத்தகங்கள் இருந்ததைக் கண்டதாக நினைவுகூர்ந்தார்.


1966ல் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்த முக்கண்ட மாநாட்டில் காஸ்ட்ரோ உரை

சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை பேணுவதில் ட்ரொட்ஸ்கியினதும் ட்ரொட்ஸ்கிசத்தினதும் பாத்திரத்தையும் சரியான முறையில் எடுத்துக்காட்டுவது தெளிவாகவே கியூபாவில் ஆழமான முக்கியத்துவம் உள்ளது. தீவில் இடைவிடா ஏகாதிபத்திய அழுத்தத்தினாலும் வெளிநாட்டு மூலதனத்துடன் பேரம் செய்துகொள்வதன் மூலமும் அதன் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் கியூப அரசாங்கத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையாலும் கியூப தொழிலாள வர்க்கம் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது.

ஆயினும், ஹவானாவில் நடைபெற்ற மாநாட்டின் நோக்கம் இதுவல்ல. மாநாட்டின் தலைப்புடன், கியூப அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட விருந்தினர் பட்டியல் தயாரிக்கப்பட்டமையும் சேர்ந்து, இக் கூடலின் நோக்கம், அரசியல் தெளிவூட்டலுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆளும் உயர் அடுக்கு என்றுமில்லாவாறு உறுதியாக வலதுபுறத்திற்கு திரும்புகையில், ஒரு தீங்கில்லாத இடது கல்வியாளர் முகமூடியை வழங்குவதில் இது அரசாங்கத்தின் நலன்களுக்கு சேவைசெய்கிறது.

மாநாட்டின் தன்மை, யார் பங்கேற்க அழைக்கப்பட்டனர் யார் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டனர் என்பதால் தீர்மானிக்கப்பட்டது.

போலி இடதுகள் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதிகளைக் கொண்ட ஒரு திரட்டு, விளக்க உரைகளை வழங்குவதற்காக ஹவானாவிற்கு கொண்டு வரப்பட்டமை ஒரு முக்கிய பணியைக் கொண்டிருந்தது:  ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை நசுக்குவது மற்றும் வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் பங்கை, கியூப ஆளும் செல்வந்த தட்டின் நலன்களுக்கு அனுசரித்துப் போகும் வண்ணம் சித்தரிப்பது.

தங்களை கல்வியாளர்கள் என்று முன்வைக்கையில், பல்கலைக்கழக பதவியை மேற்கோள்காட்டினாலும் சரி அல்லது தம்மை சுதந்திரமான ஆய்வாளர்கள் என்று காட்டினாலும் சரி, உண்மையில் அங்கே வருகை தந்திருந்த கிட்டத்தட்ட அனைவருமே,  குட்டிமுதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்துக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக, 1963ல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திலிருந்து பிளவுபட்டுக் கொண்ட, உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தை கலைக்கும் செயலை நடத்துகின்ற அரசியல் பாரம்பரியத்தை கொண்டவர்களாவர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தடுக்கப்பட்டது

முற்றிலும் மோசமான அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து தடைசெய்யப்பட்டது, பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய  நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும், அது ஆய்வுக் கட்டுரையும் முன்வைக்க முடியாது நிகழ்வுக்கு வருகைதரவும் கூட முடியாது, அது வருகை தருவது “இந்நிகழ்வு யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த கியூப பொதுமக்களின் பங்கேற்கும் அளவைக் குறைத்துவிடக் கூடும்” என அதனிடம் கூறப்பட்டது.

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் மாநாட்டின் முடிவில் ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டவாறு, அரிதாக ஒரு சில கியூபர்களே மாநாட்டிற்கு வருகை தந்தனர். அவர்களுள், மாநாடு விருப்பத்திற்கு மாறான விடயங்களை நோக்கி செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக கியூப அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட “கண்காணிப்பாளர்கள்” இருந்தனர்.

யாரை அழைக்க வேண்டும் யாரைத் தவிர்க்க வேண்டும் என்பதை கியூப அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளை பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் 1963 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே ஏற்பட்ட பிளவால் முன்வைக்கப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளையும் மற்றும் கியூப புரட்சியின் தாக்கங்கள் குறித்த கடும் வேறுபாடுகளையும் அவர்கள் எழுப்பியிருப்பார்கள் என்பதில் அது மிகவும் நனவாக இருந்தது.

நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதில் மையப் பாத்திரம், அலன் வூட்ஸ் ஆல் தலைமை தாங்கப்படும் சர்வதேச மார்க்சிசப் போக்குக்கான (IMT) ஒரு முன்னணியான “Centro de Estudios Socialistas Carlos Marx,” ஆல் வகிக்கப்பட்டது. கியூப ஒழுங்கமைப்பாளர், “Centro” க்கு பாராட்டுரை வழங்கினார், மாநாட்டின் முடிவு அறிக்கையை வூட்ஸ் காணொளி மூலம் இலண்டனிலிருந்து வழங்கினார்.

மாநாட்டைப் பற்றிய அதன் அறிக்கையில், IMT பின்வரும் எடுத்துக்காட்டும் பத்தியை உள்ளடக்கி இருந்தது: “லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் அதன் சொந்த ஒளியால் பிரகாசிக்கின்றன. ஆனால் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கு இது பொருத்தமானது என்று கூறமுடியாது, அவர்கள் உண்மையில் குறுகிய மற்றும் குறுங்குழுவாத எண்ணம் கொண்ட குழுக்கள். … கருத்தரங்கு கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடும் ஒரு கடுமையான ஆபத்து அங்கு இருந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த தடைகளை சரியான முறையில் கையாண்டார்கள்.”

தெளிவாகவே, பிரதானமான தடை ட்ரொட்ஸ்கியின் போராட்டத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை மாநாட்டிலிருந்து தவிர்த்துவிட்டதாகும். இந்த முடிவு வேண்டுமென்றே, நேர்மையின்றி மற்றும் கெட்ட நம்பிக்கையுடன் எடுக்கப்பட்டதாகும். காஸ்ட்ரோயிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் அடிபணிந்த பப்லோவாத திருத்தல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மட்டும் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

காணொளிக் காட்சி வழியாக வூட்ஸ் முன்வைத்த அவரது சொந்த முன்வைப்பு, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு முந்திய ஆண்டுகளில் அவர் தனிமைப்படுத்தப்பட்டதை வலியுறுத்தியது. வூட்ஸ் அவரை “உலகத்திற்கு எதிராக தனியொரு மனிதராக” குறிப்பிட்டார். “லியோன் ட்ரொட்ஸ்கியின் மாபெரும் சிந்தனைகள் எமது எண்ணங்களில், எமது இதயங்களில் மற்றும் எது ஆன்மாக்களில் வாழ்கின்றன” என்று அவர் அறிவித்தார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான அவரது போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி .நான்காம் அகிலத்தை உலக புரட்சிகர கட்சியாக அவர் ஸ்தாபித்தது தொடர்ந்து ஒரு மூடப்பட்ட புத்தகமாக உள்ளது.

பிற முன்வைப்புக்களும் பெரும்பாலும் இந்தக் கண்ணோட்டத்தைத்தான் பின்பற்றின. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் என்ற அமைப்புக்குச் சென்ற முன்னாள் பப்லோவாதி சுசான் வைய்ஸ்மன், விக்டர் சேர்ஜைப் பற்றி பேசினார், அவரை ட்ரொட்ஸ்கியுடன் ஒப்பிட்டார். வைய்ஸ்மன் ட்ரொட்ஸ்கியை, நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கான அவரது போராட்டத்தின் போது, நம்பிக்கையற்ற முறையில் தனிமைப்படுத்தப்பட்டவர் மற்றும் போல்ஷிவிசத்தின் “பொது அறிவார்ந்த தன்மையில்” இருந்து துண்டிக்கப்பட்டவர் என சித்தரித்தார்.

மற்றவர்கள், ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினுக்கு எதிராக விவசாயிகளது செல்வாக்கையும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சிக்கான அச்சுறுத்தலையும் எதிரொலித்த தேசியவாதப் போக்கான புக்காரினின் வலது எதிர்ப்போடு ஐக்கியப்படாததால் ஒரு அரசியல் தவறைச் செய்திருந்தார் என்ற வாதத்தை முன்னெடுத்தனர்.

ஏர்னஸ்ட் டேட்டின் பாத்திரம்

குறிப்பாக மோசமான மற்றும் பிற்போக்குத்தனமாக இருந்தது, மூத்த கனேடிய பப்லோவாதியும் 1966ல் நான்காம் அகிலத்திற்கு எதிராகவும் அப்போதைய பிரித்தானிய பகுதியான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவராக இருந்த ஜெர்ரி ஹீலிக்கு எதிராகவும் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டதில் நன்கு அறியப்பட்டவருமான ஏர்னஸ்ட் டேட் (Ernest Tate) ஆல் வழங்கப்பட்ட முன்வைப்பாகும்.

பிரிட்டனில் பப்லோவாத ஐக்கிய செயலகம் மற்றும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இன் கையாளாக செயல்பட்ட டேட், ஹங்கேரியப் புரட்சியின் பத்தாம் ஆண்டுவிழா மீதான SLL ஒழுங்கமைத்த கூட்டத்திற்கு வெளியே அவரும் மற்றவர்களும் அரசியல் வெளியீடுகளை விற்கும்போது நுழைவாயிலை அவர்கள் மறிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பொழுது வேண்டுமென்றே ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்றவர்கள் ஒதுங்கிப் போகையில், டேட் மட்டும் மறுத்து SLL தோழர்களுடன் சரீர ரீதியான மோதலில் ஈடுபட முன்முயற்சி செய்தார்.

உடனடியாக, டேட் இங்கிலாந்தில் உள்ள இடது பத்திரிகையிடம் அந்நிழ்வைப் பற்றிய பொய்கணக்கைக் கூறி, SLL ஐ “வன்முறையானது” என்று கண்டனம் செய்து, ஹீலியை பிரித்தானிய பாசிஸ்ட் ஓஸ்வால்ட் மோஸ்லி (Oswald Mosley) உடன் ஒப்பிட்டு, அவரும் SLL உம் பேச்சு சுதந்திரத்தை நசுக்குகிறார்கள் என்றும் கூறிக் கொண்டார்.


ஜெர்ரி ஹீலி

SWP மற்றும் சர்வதேச செயலகத்துடனான நெருக்கமான ஒத்துழைப்புடன், ICFI மற்றும் SLL ஐ பழிசுமத்துவதற்காகவும் கியூபா மற்றும் பப்லோவாத கலைப்புவாதம் மீதான வேறுபாடுகளைப் பற்றிய எந்தவிதமான கலந்துரையாடலையும் தடுக்கும் நோக்கத்திற்காகவே முழு ஆத்திரமூட்டலும் நடாத்தப்பட்டது.

டேட்டின் அவதூறுகளை அச்சிட்டவர்கள், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலின் கீழ் தமது கருத்தை பின்வாங்கவும் ஹீலியும் SLL உம் “வன்முறையை மேற்கொண்டனர் அல்லது பேச்சு சுதந்திரத்தைத் தடுக்க முயற்சித்தனர்” என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு வெளியிடுவதற்கும் நிர்பந்திக்கப்பட்டனர்.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றி, டேட் கியூபாவில் மேம்போக்காக குறிப்பிட்டார். ஆயினும், அனைத்திற்கும் மேலாக ஒரு மார்க்சிச சர்வதேச கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரமான அணிதிரளலை முன்வைக்கும் ட்ரொட்ஸ்கியின் தத்துவத்தை, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின், முதலும் முக்கியமானதுமாக கியூபாவில் காஸ்ட்ரோயிசம் சார்பாக ஒற்றுமைக்கான பிரச்சாரத்தை நடத்துவதற்கான ஒரு கையேடாக அவர் மாற்ற முனைந்தார்.

நிரந்தரப் புரட்சி தத்துவம், காலனித்துவ உலகில் விடுதலைப் போராட்டங்களுடனான “ஐக்கியத்தை” குவிமையப்படுத்துவதாக கூறப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டாக, ட்ரொட்ஸ்கியின் “முதலாளித்துவத்தின் மரண ஓலமும் தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்” “இடைமருவு வேலைத்திட்டம்” என்றும்கூட நன்கு அறியப்பட்டதுமானதை டேட் மேற்கோள் காட்டினார்.

அவர் இடைமருவு வேலைத்திட்டத்திலிருந்து பின்வருமாறு மேற்கோள் காட்டினார்: “ஆனால் உலகின் அனைத்து நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகள் அல்ல. மாறாக, பெரும்பான்மையானவை ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டவை.  காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளில் சில சந்தேகத்திற்கிடமின்றி அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கும். அவர்களது போர் ஏகாதிபத்தியத் தன்மையானதல்ல மாறாக விடுதலைப் போராக இருக்கும். ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவது சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் கடமை ஆகும்.”

டேட் வேண்டுமென்றே அதனைத் தொடர்ந்து பின்வருவதை திட்டமிட்டு புறக்கணிக்கிறார், எவ்வாறாயினும் அக்கோரிக்கையானது நிபந்தனைக்குட்பட்டதாகும், “ஒரு யுத்தத்தில்…. காலனித்துவ நாட்டை ஆதரிக்கையில், பாட்டாளி வர்க்கமானது காலனித்துவ நாட்டின் முதலாளித்துவ அரசாங்கத்துடன்…… சிறிதளவேனும் ஐக்கியப்பட்டுவிடக் கூடாது…. நியாயமான மற்றும் முற்போக்கான போரில் உதவி வழங்குவதன் மூலம், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் காலனிகளில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுக்கிறது… அங்கு, நான்காம் அகிலத்தின் ஆளுமை மற்றும் செல்வாக்கை பலப்படுத்துகிறது மற்றும் காலனித்துவ நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கு உதவுவதற்கான அதன் திறனையும் அதிகரிக்கிறது”.

நான்காம் அகிலத்திற்குள்ளேயான போராட்டத்தில் கியூப புரட்சியின் முக்கியத்துவம் குறித்த பொய்யான கணக்கை வைப்பதற்கு, குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கியூபாவைப் பாதுகாப்பதை அமெரிக்காவில் அப்போது ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக இருந்த சோசலிசத் தொழிலாளர் கட்சியின் “மைய அரசியல் முன்னுரிமை” யாக செய்வதில், FBI முகவரும் தகவல் கொடுப்பவருமான ஜோசப் ஹான்சனின் பாத்திரத்தை புகழ்வதில் டேட்டின் முன்வைப்பு சென்றது.


ஜோசப் ஹான்சன்

ஒரு மோசமான சிஐஏ முன்னணி அமைப்பான, Fair Play for Cuba Committee என்பதில் SWP இன் தலையீட்டினைக் கவனிக்குமாறு அழைத்தார், அதனை, “முற்றிலும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவ வெளிச்சத்தில்” மற்றும் “…. பின்னாளில் அறுபது மற்றும் எழுபதுகளின் தசாப்தங்களில் மூன்றாம் உலக மக்களுக்கான ஆதரவை ஒழுங்கு செய்வதற்காக உருவாக்கப்பட்ட வார்ப்புரு” எனப் புகழ்ந்தார்.

இந்த விவரிப்பு, கியூபப் புரட்சி தொடர்பாக நான்காம் அகிலத்திற்குள்ளே இடம்பெற்ற போராட்டத்தை எந்த கியூப பார்வையாளர்களிடமிருந்தும் திட்டமிட்டே மறைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கத்தால் தொடுக்கப்பட்ட கெரில்லா யுத்தத்தின் விளைவாக ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்தது, ஹான்சனின் கீழான SWP தலைமையால் அவர்கள் யாருடன் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முறித்துக் கொண்டார்களோ அந்த பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியத்திற்கு செல்வதற்கான அடிப்படையாக பற்றிக்கொள்ளப்பட்டது.

இந்த மறு ஐக்கியத்தின் நோக்கமானது, நான்காம் அகிலத்தை இடது நடுத்தர வர்க்க அரசியற் சதுப்பு நிலத்திற்குள் கலைத்து விடுவதாக இருந்தது. மார்க்சிச தத்துவ அடிப்படையிலும், அக்டோபர் புரட்சியின் காட்டிக் கொடுப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் மரபியத்தால் அரசியல் ரீதியாக வழிநடத்தப்பட்ட அடிப்படையிலும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டுவதற்கான முயற்சிகள் கைவிடப்பட இருந்தன. சோசலிசப் புரட்சியின் தலைவிதியானது, சோவியத் அதிகாரத்துவத்தின் ஏதாவதொரு வகையைச் சார்ந்த அல்லது கூட்டு வைத்த முதலாளித்துவ தேசியவாதிகள் அல்லது குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கினரின் ஒரு வரிசைக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஒரு தேசியவாத கொரில்லா இயக்கத்தின் தலைமையில் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்தது, சோசலிசத்திற்கான புதிய பாதையை திறந்துவிட்டிருந்ததாக பப்லோவாதிகள் பறைசாற்றினர், அது புரட்சிகர மார்க்சிச கட்சிகளை கட்டத் தேவையில்லாத ஒன்று, தொழிலாள வர்க்கத்தின் நனவு பூர்வமான மற்றும் சுயாதீனமான தலையீட்டைப் பற்றியோ சொல்லவும் வேண்டாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக கியூபாவை கொள்கை ரீதியாக பாதுகாப்பதை முன்னெடுத்துக் கொண்டிருந்த அதேவேளை, காஸ்ட்ரோயிசம் பற்றிய அதன் ஆய்வை, ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவ தேசியவாதத்தின் பங்கு பற்றிய பரந்த மதிப்பீட்டின் உள்ளடக்கத்தில் செய்திருந்தது.

கியூபாவும் நிரந்தரப் புரட்சி தத்துவமும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பல ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் கியூபாவிலும் நிகழ்வுகள் எதிர்மறையான வழியில் என்றாலும் நிரந்தர புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்தின. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாதநிலையில், அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமையை வழங்கத் திராணியற்ற நிலையில்; தேசிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் அந்த வெற்றிடத்தை நிரப்பவும், அவற்றின் சொந்த தீர்வை செயல்படுத்தவும் முடிந்தது. நாசர், நேரு, பெரோன், பென் பெல்லா, சுகர்னோ, பாத்திஸ்டுகள் மற்றும் பின்னர் ஈரானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் நிக்கரகுவாவில் உள்ள சாண்டினிஸ்டாக்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கின் எடுத்துக்காட்டுகளாக இருந்தனர்.

குட்டி முதலாளித்துவ தேசியவாத தலைவர்களை ஹான்சன் போற்றுவதை, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தெளிவான வார்த்தைகளில் விமர்சித்தனர். 1961 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாத்தனர்:

SLL எழுதியது, "அத்தகைய தேசியவாத தலைவர்களின் பங்கை அதிகரிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலை அல்ல. சமூக ஜனநாயகம் மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தால் தலைமை காட்டிக்கொடுக்கப்பட்டதால் மட்டுமே அவர்கள் மக்களின் ஆதரவை வழிநடத்த முடிந்தது, மற்றும் இந்த வழியில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளர்கள் விவசாயிகளைக் கொண்ட வெகுஜனங்களுக்கும் இடையில் ஒரு இடைத்டைகளாக ஆனார்கள்.  பெரும்பாலும் சோவியத் ஒன்றியத்திலிருந்து கிடைத்த பொருளாதார உதவியின் சாத்தியம் ஏகாதிபத்தியவாதிகளுடன் கடுமையான பேரம் பேசலுக்கு அவர்களுக்கு உதவுகிறது, முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமைகளின் மத்தியில் உள்ள இன்னும் தீவிரப் போக்குடையோரை ஏகாதிபத்திய இருப்புக்களைத் தாக்கக் கூடியவர்களாகவும் கூட ஆக்கியது மற்றும் வெகு ஜனங்களிடமிருந்து மேலும் ஆதரவைப் பெறக் கூடியதாகவும் ஆக்கியது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எங்கள் கருத்தில், தேசியவாத தலைமை சோசலிஸ்டுகளாக மாறுவார்கள் என்பதற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பதிலீடு அல்ல. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளர்களின் பணியாகும்”.


1963ல்  காஸ்ட்ரோவும் குருஷ்சேவும்

“இடைமருவு வேலைத்திட்டத்தில்” ட்ரொட்ஸ்கி, “முற்றிலும் விதிவிலக்கான சூழ்நிலைமைகளின் செல்வாக்கின் கீழ், ஸ்ராலினிஸ்டுகள் உள்ளடங்கலாக குட்டி முதலாளித்துவக் கட்சிகள் [...] முதலாளித்துவத்துடன் முறித்துக் கொள்ளும் பாதையில் தாங்கள் போகவிரும்புவதைக் காட்டிலும் மேலும் முன்னேறக்கூடும்" என்ற வாய்ப்பை முன்னெதிர்பார்த்திருந்தார்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணம் அதன் பகுதிகளின் பணியாக வலியுறுத்துவது, “சுயாதீனமான அரசியல், இவ்வகை அரசியலின் வர்க்கத் தன்மையை ஆழப்படுத்துல், சீர்திருத்தவாத மற்றும் அமைதிவாத பிரமைகளை அழித்தல், வெகுஜனங்களுடன் முன்னணிப்படையின் தொடர்பை வலிமைப்படுத்தல் மற்றும் அதிகாரத்தைப் புரட்சிகரமாய் வென்றெடுக்கத் தயாரித்தல், இவற்றுக்கான தொழிலாளர்களின் முயற்சிக்கு உதவுதல்” என்று வலியுறுத்திச் செல்கிறது.

கியூபாவைப் பொறுத்தவரை, பப்லோவாதிகள் துல்லியமாக எதிர் போக்கையே பின்பற்றினர், காஸ்ட்ரோவின் குட்டி முதலாளித்துவ தேசியவாத தலைமை குறித்து பிரமைகளை விதைக்கவும், தொழிலாளர்களை காஸ்ட்ரோ ஆட்சிக்கு அடிபணிய செய்வதற்கும் முயன்றனர்.

காஸ்ட்ரோயிசம் சோசலிசத்திற்கான புதிய பாதையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக 1960களில் முன்னாள் காலனித்துவ நாடுகள் பலவற்றில் அதிகாரத்துக்கு வந்த முதலாளித்துவ தேசியவாதத்தின் மிகத் தீவிரப் போக்குடைய வகைகளில் ஒன்றாகும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. இந்த ஆட்சிகளில் பல, பரந்த அளவில் தேசியமயமாக்கலை மேற்கொண்டன.

காஸ்ட்ரோவின் குட்டிமுதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேசியமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டு கியூபாவை “தொழிலாளர் அரசு” என பப்லோவாதிகள் பிரகடனம் செய்ததில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரளல் சம்பந்தப்படவில்லை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைகளின் மீதாக தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் எந்த வடிவமும் சம்பந்தப்படவில்லை என்பது, முற்றிலும் மார்க்சிசத்துக்கு நேரமாறானதாகும்.

ட்ரொட்ஸ்கி, கியூபப் புரட்சிக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே, குட்டிமுதலாளித்துவ சக்திகளால் முன்னெடுக்கப்படும் தேசியமயமாக்கலை சோசலிசப் புரட்சியோடு மேலோட்டமாக இனங்காணுவதை வெளிப்படையாகவே நிராகரித்திருந்தார். (ஹிட்லருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு) 1939ல் ஸ்ராலினிச கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் போலந்து படையெடுப்பின்போது அதனால் மேற்கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் குறித்து ட்ரொட்ஸ்கி எழுதினார்: “எம்மைப் பொறுத்தவரை முதன்மை அரசியல் அளவுகோல், இந்த அந்த பகுதிகளில் சொத்தை மாற்றுவது அல்ல, ஆயினும் அவைதாமே எவ்வளவு முக்கியமாக இருப்பினும், மாறாக இன்னும் சொல்லப்போனால் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவிலும் அமைப்பிலும் ஏற்படுகின்ற மாற்றம், கடந்தகால வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் புதியனவற்றை அடைவதற்கும் அதன் திறனை உயர்த்தலும் ஆகும்.”

பப்லோவாத முன்னோக்கை எதிர்த்துப் போரிடுகையில், அனைத்துலகக் குழுவானது, சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் மைய மற்றும் முன்னணிப் பாத்திரத்தை நிராகரிப்பது குறித்தும், மற்றும் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு தேவையான மட்டத்திற்கு நனவை வள்ர்த்தெடுப்பதற்காக தொழிலாள வர்க்கதிற்குள்ளே ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டுவதற்கான தேவை மீதான அதன் நிராகரிப்பு புதிய காட்டிக்கொடுப்புகளுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பது குறித்தும் எச்சரித்தது. பப்லோவாதிகள் கூறுவதுபோல, கியூபாவில் அத்தகைய கட்சி அவசியமில்லை எனில், உலகில் வேறெங்கும் அது ஏன் அவசியப்படும்?

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடித்ளமாக கொண்ட அனைத்துலகக் குழுவானது, காலனித்துவ மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே வெல்ல முடியும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுத்து, புரட்சியை சர்வதேச ரீதியாக விஸ்தரிப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று வலியுறுத்தியது. இந்த முன்னோக்கிலிருந்து ஊற்றெடுக்கும் முதன்மையான பணி, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச்செய்யும் அனைத்துப் போக்குகளின் பிடியிலிருந்து உடைத்துக் கொள்வதற்கான அயராத ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டி எழுப்புவதாகும் என்றது.

காஸ்ட்ரோயிசம் “சோசலிசத்துக்கான ஒரு புதிய பாதை”: ஒரு இருப்பு நிலைக்குறிப்பு

சோசலிசப் புரட்சிக்கான ஒரு புதிய மாதிரியாக காஸ்ட்ரோயிசம் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது, இது சர்வதேச குழுவின் எச்சரிக்கைகளை துன்பகரமாக உறுதிப்படுத்தியது. இந்த பகுதியில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமைக்காக போராடுவதை கைவிடுமாறும், அதற்கு பதிலாக கிராமப்புறங்களில் "ஆயுதப் போராட்டத்திற்கு" "தொழில்நுட்ப தயாரிப்புகளை" செய்யுமாறும் பப்லோவாதிகள் தங்கள் சொந்த ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த முன்னோக்கின் விளைவுதான் என்ன? மிகவும் தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்களும் இளம் தொழிலாளர்களும் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்திலிருந்து திசைதிருப்பப்பட்டனர், இது ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் முதலாளித்துவ-தேசியவாத அதிகாரத்துவங்களின் எதிர்ப் புரட்சிகர பிடியை வலுப்படுத்தியது. இளைஞர்கள், இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசுகளின் இராணுவப் படைகளோடு தற்கொலை போருக்கு அனுப்பப்பட்டனர், அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். தோல்வியுற்ற கெரில்லா சாகசங்கள், நாட்டுக்குபின் நாடாக பாசிச இராணுவ சர்வாதிகாரங்களை திணிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை இரக்கமின்றி அடக்குவதற்கும் ஒரு சாக்குப்போக்காக இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டன.

பொலிவியாவில் 1967 அக்டோபரில் அவரைக் கைப்பற்றி கொலை செய்ய வழிவகுத்த கொடிய சாகசத்தை மேற்கொண்ட சே குவேராவின் தலைவிதி, காஸ்ட்ரோயிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பேரழிவுகரமான விளைவுகளின் துன்பகரமான எதிர்பார்ப்பாக இருந்தது.


சி.ஐ.ஏ மற்றும் பொலிவிய இராணுவத்தின் கைகளில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சே குவேரா

சோசலிசத்திற்கான புதிய பாதையைக் காட்டுவதற்கு அப்பால், காஸ்ட்ரோ அரசாங்கமானது சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கத்தைய நாடுகளுடனான அதன் நெருங்கிய உறவின் மூலம் மட்டுமே அது தப்பிப்பிழைத்திருந்தது. அதேவேளை, சே குவாராவின் கெரில்லா போராட்டத்தின் ஆதரவாளர்களை தூக்கியெறிய விரும்பிய இலத்தீன் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுடன் அவர் நடைமுறையில் உறவுகளை ஏற்படுத்தினார். சிலியில், காஸ்ட்ரோ “சோசலிசத்திற்கான பாராளுமன்ற பாதையை” புகழ்ந்தார், இராணுவம் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த வேளையிலும், அலண்டே அரசாங்கத்திற்கு கீழ்ப்படியுமாறு தொழிலாளர்களிடம் கூறினார். அவர் ஈக்குவடோர் மற்றும் பெருவிலுள்ள இராணுவ ஆட்சிகளை அரவணைத்தார் மற்றும் 1968 இல் மெக்சிக்கோவில் மாணவ எதிர்ப்பாளர்களை படுகொலை செய்ததை தொடர்ந்து, உடனடியாக மெக்சிக்கன் ஆளும் கட்சியான PRI இன் ஊழல் எந்திரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.


1971 இல் காஸ்ட்ரோ மற்றும் சிலியின் சர்வாதிகாரியான ஜெனரல் அகுஸ்டோ பினோசே

இந்த தீர்க்கமான மூலோபாய அனுபவங்களைப் பற்றியும் நான்காம் அகிலத்திற்குள் வெடித்த போராட்டம் பற்றியுமான அறிவு இல்லாமல், கியூபாவில் மட்டுமல்ல, இலத்தின் அமெரிக்கா முழுவதிலுமுள்ள இன்றைய நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், ஏர்னஸ்ட் டேட் இவை அனைத்தையும் மௌனமாக கடந்து சென்று, கியூபா மற்றும் நான்காம் அகிலம் பற்றிய கேள்வியை ஒரு குட்டிமுதலாளித்துவ தீவிர ஐக்கியத்திற்கான பிரச்சாரமாக குறைத்தார்.

இந்த நடவடிக்கைகளுக்காக, அவர் முன்மாதிரியாக ஹான்சனையும் Fair Play for Cuba Committee இனையும் தேர்ந்து எடுத்தது அதுவே தன்னை மிகவும் வெளிப்படுத்துகிறது.

1940 லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைமைகளை ஆய்வதற்கு நான்கம் அகிலமும் பாதுகாப்பும் என்ற தலைப்பின் கீழ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட புலனாய்வு விசாரணையானது, நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவி அதனை நாசம் செய்வதற்கு ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் உளவு அமைப்பு முகவாண்மைகள் எடுத்த தசாப்தகால முயற்சிகளை நிலைநாட்டியது. புலன் விசாரணையானது வெளிக்கொண்டு வந்த மற்றவைகளில், ஜோசப் ஹான்சன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே அரசின் முகவராக செயற்பட்டார் என்பதற்கு எங்கள் விசாரணை உறுதியான ஆதாரங்களை அளித்தது.

Fair Play for Cuba Committee (FPCC) என்பதைப் பொறுத்தவரை, SWP இன் அரசியல் பயணப்பாதையில் அது வகித்த சிடுமூஞ்சித்தனமான பங்கை டேட் அலட்சியம் செய்கிறார். இந்த குழுவின் கூட்டு நிறுவனர்களில் ஒருவரான ஆலன் சாக்னர் (Alan Sagner), ஸ்தாபகத்தின் பிரமுகர் ஆவார், இவர் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரின் தேசியக் குழுவின் அறங்காவலர், நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி துறைமுக ஆணையத்தின் தலைவர், மற்றும் பொது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதேபோல தேசிய பாதுகாப்புக்கான வணிக அதிகாரிகளின் வாரிய உறுப்பினர் ஆக இருந்தார்.


1961ல் Fair Play for Cuba Committee இன் கூட்டு நிறுவனரான ஆலன் சாக்னர் இஸ்ரேலிய படைத்தளபதியாக இருந்த மோசே தயான் உடன்

FPCC ஆனது, FBI முகவர்கள் மற்றும் தகவல்தெரிவிப்பவர்களால் கையாளப்படுவதில் நிறைந்திருந்தது. மின்னசோட்டாவில் உள்ள ஒரு சிறிய தாராளவாத கலைப் பள்ளியான கார்ல்டன் கல்லூரியைச் (Carleton College) இலிருந்து 12 மாணவர்களைக் கொண்ட குழு SWP க்குள் நுழையும் வழியாக சேவை செய்தது, எனினும் SWP அக்கல்லூரியில் எந்த வேலையும் முன்னெடுத்திருக்கவில்லை. ஜாக் பார்ன்ஸ் (ஃபோர்ட் அறக்கட்டளை கூட்டுறவுக்காக கியூபாவுக்குச் சென்ற குடியரசுக் கட்சிக்காரர்) ஆல் தலைமை தாங்கப்பட்ட இந்தக் கும்பல், SWP தலைமையைக் கைப்பற்றியது —அதன் அரசியற் குழுவில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது— மற்றும் நூற்றுக்கணக்கான முதுபெரும் SWP உறுப்பினர்களை வெளியேற்றியது.

பப்லோவாத திருத்தல்வாதத்தின் காட்டிக் கொடுப்புக்களின் இந்த வரலாற்றை, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடைதல் என முன்வைக்கையில், டேட், ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர மரபுரிமைகளிலிருந்தும் நான்காம் அகிலத்தின் போராட்டத்தில் அதன் தொடர்ச்சியிலிருந்தும் எந்த கியூப பார்வையாளர்களையும் வேண்டுமென்றே தடுப்பதற்கு முயன்றார்.

எது சர்வதேச மார்க்சிச குழு (IMG), ஆனது, எதனுடன் அவர் ஐக்கியம் கொண்டுள்ளார் மற்றும் அவரது அறிக்கையில் பிரிட்டனில் யாருடைய அரசியலை அவர் புகழ்ந்தார் என்பதை எல்லாம் அவரது பார்வையாளர்களுக்கு விவரிக்க வேண்டியது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஒரு பொலீஸ் ஆத்திரமூட்டலை ஒன்றன் பின் ஒன்றாக நடத்திய பின்னர், 1981ல் அவ்வமைப்பு தன்னைத்தானே கலைத்துக்கொண்டது, வலதுபுறம் நகரும் தொழிற் கட்சியில் நுழைவதற்கு முயற்சிக்கிறது.

துருக்கிய புரட்சிகர தொழிலாளர் கட்சியின் (Devrimci İşçi Partisi, DİP) பங்கேற்பு குறித்தும் குறிப்பிடப்பட வேண்டும். அவர் தனது அறிக்கையில் ஒரு “தொழிலாளர் அரசில்” பாதங்களை பதித்திருப்பதையிட்டு பெருமிதம் கொண்டார் மற்றும் அவர் சே குவேராவை நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மிகச்சிறந்த பிரதிநிதி என்றும் புகழ்ந்தார்.

கோர்கே அல்தமிரா இன் ஆர்ஜென்டினிய Partido Obrero (தொழிலாளர் கட்சி - PO) மற்றும் சவாஸ் மிஷேல் இன் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK) உடன் DİP உம் சேர்ந்து, நான்காம் அகிலத்தை மீள கட்டியமைப்பதற்கான (Coordinating Committee for the Refoundation of the Fourth International - CRFI) ஒத்துழைப்புக் குழுவின் பகுதியாக உள்ளது. இது ஸ்ராலினிசத்துடனான கூட்டில் நான்காம் அகிலத்தை “மீள ஸ்தாபிப்பதற்காக” செயற்பட்டு வந்திருக்கிறது. இப்பொழுது இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, கியூபாவிலுள்ள காஸ்ட்ரோ அரசாங்கத்திற்கும் நீள்கிறது.

ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரினதும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரினதும் வரலாற்று மரபுகளை இழிவுபடுத்தவும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தை குழிதோண்டிப் புதைக்கவும் கருத்துக்களை முன்வைப்பதற்காக ஹவானாவிற்குச் சென்ற இந்தப் போக்குகளோ அவர்களது பிரதிநிதிகளோ கியூப புரட்சியின் எந்த இருப்பு நிலைக் குறிப்பையும் வரைவதற்கு அக்கறை காட்டவில்லை, காஸ்ட்ரோவை ஒரு “இயற்கை மார்க்சிஸ்ட்”, கியூபாவை ஒரு “தொழிலாளர் அரசு”, மற்றும் குட்டிமுதலாளித்துவ கெரில்லாவாதம் சோசலிசத்திற்கான புதிய பாதை என பறைசாற்றுவதில் உள்ள அவர்களின் சொந்த பதிவுச்சான்றே மிகக் கூடுதலானதாக இருந்தது.

காஸ்ட்ரோயிசத்தை தழுவிக்கொண்ட இந்த வகை வடிவங்கள் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் முற்றிலும் நிரூபணமாகி இருக்கிறது.

சோசலிசத்திற்கு புதிய பாதையை வழங்குவதிலிருந்து அப்பால், காஸ்ட்ரோயிச இயக்கமானது, கியூப சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திராணியற்றுது என்பதை நிரூபித்தது. காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்து ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, அத்தீவின் பொருளாதாரமானது அதிகரித்த அளவில் தொடர்ந்து சுற்றுலாத் துறையையும் குடியேறியவர்கள் அனுப்பும் பணத்திலும் தங்கி உள்ளது. 1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் USSR ஐ கலைத்ததை அடுத்து சோவியத் உதவிக் கொடைகள் முடிவுக்கு வந்தமை மற்றும் நெருக்கடி பீடித்துள்ள வெனிசுலாவிலிருந்து மலிவு விலை எண்ணெய் இறக்குமதிகளில் ஏற்பட்ட கடும் குறைவு ஆகியன, மில்லியன் கணக்கான கியூப தொழிலாளர்களை வறுமையில் விட்டிருக்கும் அதேவேளை, தீவின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையையும் சார்ந்திருக்கும் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.

காஸ்ட்ரோவின் எழுச்சிக்குப் 60 ஆண்டுகளுக்கு பின்னர், அங்கே கியூப தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்புகள் என எதுவும் இல்லை, அதன் அதிகாரத்திற்கான எவ்வித உறுப்புகளும் கூட இருக்கவில்லை. 2016ல் ஃபிடல் காஸ்ட்ரோ இறந்த பின்னர், அவரது 88 வயதான சகோதரர் ராவுல் நாட்டின் ஆளும் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.

பாரிய உழைக்கும் மக்கள் போரின் அச்சுறுத்தலையும் அத்தோடு சேர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களையும் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையையும் எதிர்கொள்கையில், ஆளும் அடுக்கானது வெளிநாட்டு மூலதனத்தோடு என்றுமிரா அளவு நெருக்கமான உறவுகளின் மூலமாக தமது சலுகைகளை பாதுகாக்க முயற்சிக்கிறது. பப்லோவாதிகளால் கியூபா ஒரு “தொழிலாளர் அரசு” எனச் சித்தரிக்கப்படும் முயற்சிகளை, நாட்டின் பொருளாதாரத்தை முதலாளித்துவம் என்றுமிரா அதிகரித்த வகையில் தெளிவாகவே மேலாதிக்கம் செய்து வருவது முற்றிலும் அம்பலப்படுத்துகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால், அதன் திருத்தல்வாத எதிராளிகள் அனைவருக்கும் எதிராக புரட்சிகர சோசலிச சர்வதேசிய முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் பாதுகாப்பதற்கு அதனால் நடத்தப்பட்ட போராட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தொடர்ச்சியை அவர்கள் அறிந்து கொண்டால் மட்டுமே, கியூப தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கியின் போராட்டம் பற்றிய உண்மையான புரிதலுக்கான பாதையைக் கண்டுகொள்வார்கள்.

The author also recommends:

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளி்த்துவ தேசியவாத அரசியலும்

[7 January 1998]

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்

[10 November 2015]