ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indo-Pakistani conflict sharpens with New Delhi’s assault on Kashmir

காஷ்மீர் மீதான புது டெல்லியின் தாக்குதலுடன் இந்திய-பாகிஸ்தான் மோதல் கூர்மையடைகிறது

By Keith Jones
9 August 2019

சர்ச்சைக்குரிய காஷ்மீர் மீது இந்தியா அதன் கட்டுப்பாட்டை இறுக்குவதற்கான அதன் ஆக்ரோஷமான மற்றும் அப்பட்டமான சட்டவிரோத நகர்வுகளுக்கு விடையிறுப்பதில், பாகிஸ்தான் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், போர் அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

இஸ்லாமாபாத் ஒரு “இணைப்பாக" ஆக முத்திரை இடும் இந்நகர்வுகளுடன் சேர்ந்து இந்திய வசமுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்கண்டிராத முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இணையம், கேபிள் தொலைக்காட்சி, தரைவழி மற்றும் செல்பேசி சேவை அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன், பள்ளிகள் மூடப்பட்டு, நான்கு நபர்களுக்கு அதிகமானவர்கள் ஒன்றுகூடுவது சட்டவிரோதமாக்கப்பட்டது,  பத்தாயிரக் கணக்கான இந்திய சிப்பாய்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு படைகளால் அமல்படுத்தப்பட்ட ஓர் ஊரடங்கு உத்தரவின் கீழ் மொத்த மக்கள் நடமாட்டமும் கடுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், நான்காவது நாளாக நேற்றும் அப்பிராந்தியம் வெளி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் உத்தரவிட்ட "அடைப்பின்" பாகமாக 500 இக்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று அகில-இந்திய அரசு வானொலி அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்களும் மற்றும் அப்பிரதேசத்தின் முஸ்லீம் உயரடுக்கினது இந்திய ஆதரவு பிரிவின் ஏனைய தலைவர்களும் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் உள்ளடங்குவர்.

இந்திய தூதரக உயர் ஆணையர் அஜய் பிசாரியாவை வெளியேற்றுவதாகவும், இருதரப்பு வர்த்தகம் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்படுவதாகவும் இஸ்லாமாபாத் அறிவித்ததுடன், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSC) புதன்கிழமை கூட்டத்தைத் தொடர்ந்து புது டெல்லி உடனான இருதரப்பு உடன்படிக்கைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் மேலாளுமை கொண்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் தலைமை வகிக்கிறார்.

அதற்கு ஒரு நாள் முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிடும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் ஒரு வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாத அரசாங்கத்திற்குத் தலைமை கொடுக்கும் கான், பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தின் ஒரு அவசர கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் ஒரு பகுதி எச்சரிக்கையாகவும் இன்னொரு பகுதி  மிரட்டலாகவும் இருந்தது. இந்தியா அதன் தற்போதைய போக்கைத் தொடர்ந்தால், தெற்காசியாவின் பகையான அணுஆயுத சக்திகள் விரைவில் முற்றுமுதலான போருக்குள் செல்லும் ஒரு சூழலை கான் சித்தரித்தார்.

பிஜேபி அரசாங்கம், எந்தவொரு பொது விவாதமோ அல்லது கலந்தாலோசனையோ செய்யவில்லை என்பது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை அறிவிப்பு கூட இல்லாமல், திங்களன்று, இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒரு பாதி தன்னாட்சி பகுதியாக விளங்கிய ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. பின்னர் அது இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்ததை இரு கூறாக்கி உருவாக்கப்பட்ட பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது, அதாவது நடைமுறையளவில் காலவரையையின்றி அது மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்தியாவின் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் உயரதிகாரிகளுடன் இரகசியமாக தயாரிப்பு செய்து நடத்தப்பட்ட இந்த அரசியலமைப்பு சதி, ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் தசாப்த காலமாக நடந்து வரும் பாகிஸ்தான் ஆதரவிலான இந்திய-விரோத கிளர்ச்சியை விரைவாக இரத்தக்களரியுடன் பலவந்தமாக முடிவுக்குக் கொண்டு வருவது; பாகிஸ்தானுக்கு எதிராகவும் மற்றும் இப்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் கிழக்கில் எல்லைகளைக் கொண்டுள்ள சீனாவுக்கு எதிராகவும் புது டெல்லியின் கரங்களைப் பலப்படுத்துவது மற்றும் இந்திய அரசியலை இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்த்துவதற்காக போர்வெறி கொண்ட இந்திய தேசியவாதம் மற்றும் இந்து வகுப்புவாதத்தைத் தூண்டுவது ஆகியவை அதன் நோக்கங்களில் உள்ளடங்கி உள்ளன.

ஜம்மு-காஷ்மீரை இந்திய ஒன்றியத்துடன் "முழுமையாக ஒருங்கிணைப்பது" நீண்டகாலமாகவே பிஜேபி மற்றும் இந்து மேலாதிக்க வலதின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்துள்ளது, இது RSS உடனும் மற்றும் அப்பிரதேசத்தில் வழிவழியாக மேலாதிக்கம் கொண்டிருந்த இந்து நிலச்சுவான்தார்களுடனும் இணைந்து 1950 களின் தொடக்கத்தில் இந்து மகாசபை மற்றும் ஜன் சங்கின் முன்னாள் தலைவர் ஷ்யாம பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட ஒரு கிளர்ச்சி வரையில் நீள்கிறது.

பாகிஸ்தான் ஜனாதிபதி, தெற்காசியா எவ்வாறு அணுஆயுத போருக்குள் சிக்கும் என்பதை மேலோட்டமாக விவரிக்கிறார்

செவ்வாயன்று நாடாளுமன்ற உரையில் கான் கூறுகையில், பெப்ரவரி 14 இல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணைஇராணுவப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு "போன்ற சம்பவங்கள்" “மீண்டும் நிகழக்கூடும்", அவர்கள் அதை செய்கையில் இந்தியா "மீண்டும் நம்மை தாக்கக்கூடும்,” என்பதையே காஷ்மீர் மீதான இந்தியாவின் தாக்குதல் அர்த்தப்படுத்துகின்றது என்றார். இது அச்சம்பவத்தை அடுத்து நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் பாகிஸ்தானுக்குள் ஆழமாக ஊடுருவி விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு உத்தரவிட்டதைக் குறித்த ஒரு குறிப்பாகும், இதற்கு கானும் பாகிஸ்தானிய இராணுவமும் ஜம்மு-காஷ்மீர் மீது அவர்களின் சொந்த வான்வழி வேட்டையாடலைக் கொண்டு விடையிறுத்தனர், அது தெற்காசியாவை ஒரு பேரழிவுகரமான போரின் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்தது.

“இது நடக்கும் என்பதை என்னால் ஏற்கனவே அனுமானிக்க முடிந்தது,” என்று தெரிவித்த கான், “அவர்கள் மீண்டும் நம்மீது பழி போட முயல்வார்கள். அவர்கள் மீண்டும் நம்மை தாக்குவார்கள், நாம் திருப்பி தாக்குவோம்,” என்றார்.

“பின்னர் என்ன நடக்கும்? அவர்கள் நம்மை தாக்குவார்கள், நாம் விடையிறுப்போம், இரண்டு வழியிலும் போர் நடக்கலாம்,” “நமது கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரையில்" சாத்தியமானளவுக்கு அது தொடரும் என்றார். எதேனும் மிகப்பெரிய இந்திய உந்துதலை பாகிஸ்தான் முகங்கொடுக்கையில் விரைவாக அணுஆயுதங்களை நாடுவதற்கான பாகிஸ்தானிய இராணுவ மூலோபாய அழைப்புகளை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில், கான், அவர் கருத்துக்கள் இப்போதைய களத்தின் இராணுவ மூலோபாய நகர்வுகள் மீதான ஒரு மென்மையான மதிப்பீடு மட்டுந்தான் என்று கூறுமளவுக்குச் சென்றார். “இது அணுஆயுத மிரட்டல் இல்லை,” என்று பாகிஸ்தான் பிரதம மந்திரி வலியுறுத்தினார்.

இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளால் விரைவுபடுத்தப்பட்டுள்ள இந்த நெருக்கடியானது அங்கே "மட்டுப்படுத்தப்பட்ட வழக்கமான போராகவோ அல்லது காஷ்மீர் பிரச்சினையை ஒரேயடியாக முற்றுமுழுதாக தீர்ப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாகவோ ஆவதற்கு 50/50 வாய்ப்பு" இருப்பதாக நேற்று பாகிஸ்தான் ஊடக பிரதிநிதிகளுடனான ஒரு கூட்டத்தில் கான் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

பாகிஸ்தான், "காஷ்மீர் மீறல்கள் மீது மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைச் செயலூக்கத்துடன் திடமாக்கும்" என்றும், இந்தியாவின் நடவடிக்கைகள் சர்வதேச விதிமீறல்கள் என்ற அதன் வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் கொண்டு வரும் என்றும் கூடுதலாக கான் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் வாஷிங்டனும் ஏனைய மேற்கத்திய சக்திகளும் "பிஜேபி இன் அங்கியில் மறைந்துள்ள பாசிசத்தை" சமாதானப்படுத்த தேர்ந்தெடுக்கலாம் என்று கான் கவலை வெளியிட்டார்.

பிஜேபி அரசியலமைப்பு சதிக்குச் சர்வதேச எதிர்வினை இல்லாதிருப்பதன் மீது பாகிஸ்தானுக்குள் அதிருப்தி நிலவுகின்ற நிலையில், காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தாறுமாறாக மிதித்து நசுக்கி செல்லும் அந்நடவடிக்கை, வேண்டுமென்றே பாகிஸ்தானுடனான உறவுகளைக் கொதிப்பேற்றி, எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய ஒரு முக்கிய படியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

கானின் முதலாளித்துவ அரசியல் எதிர்ப்பாளர்கள், "காஷ்மீரி மக்களின் உரிமைகளை" தாங்கிப்பிடிக்க சூளுரைப்பதில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அதேவேளையில், அவர்கள் மோடி மற்றும் அவரின் அரசாங்கத்துடன் முன்னதாக அவர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்காக அவரைக் கண்டிக்கின்றனர்.

இந்தியாவில் போலவே, அங்கேயும் இந்திய-பாகிஸ்தான் மோதலானது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு முக்கிய இயங்கமைப்பாக  நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதுடன், அது சமூக பதட்டங்களைத் திசைதிருப்பவும் அவற்றை போர்வெறி கொண்ட தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்திற்குப் பின்னால் வழிநடத்தவும், அத்துடன் அதிகாரத்திற்கான அவர்களின் உள்கட்சி மோதல்களைத் தொடுக்க ஆளும் வர்க்கத்தின் போட்டி கன்னைகளுக்கான வழிவகையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மிகவும் மோசமடைந்துள்ள அமெரிக்க-பாகிஸ்தானிய இராணுவ-மூலோபாய பங்காண்மையின் பிரதான தூணாக பாரம்பரியமாக சேவையாற்றி உள்ள பாகிஸ்தானிய இராணுவம், இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதில் அது அந்நாட்டின் "வாளின் கைப்பிடியாக" இருந்துள்ளது என்ற அடித்தளத்தில், அது அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தின் பெரும் பங்கில் உரிமைகோரல்களை வைக்கிறது.

இந்திய-பாகிஸ்தானிய மூலோபாய போட்டியும், காஷ்மீர் மக்களின் தலைவிதியும்

காஷ்மீர் மோதலும் பரந்த இந்திய-பாகிஸ்தானிய மூலோபாய போட்டியும், வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெருவாரியாக இந்து இந்தியா என்று பிரிக்கப்பட்ட தெற்காசியாவின் 1947-48 இல் வகுப்புவாத பிரிவினையில் வேரூன்றி உள்ளது.

இந்திய வசமிருக்கும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் ஆசாத் காஷ்மீர் என்று பிரிவினையின் விளைவாக பிளவுபடுத்தப்பட்ட காஷ்மீரி மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் மீது இந்திய முதலாளித்துவமும் பாகிஸ்தான் முதலாளித்துவமும் இரண்டுமே ஏறி மிதித்து, திட்டமிட்டு சூழ்ச்சிகளைக் கையாண்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி, பிஜேபி அல்லது பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகள் மற்றும் "மூன்றாவது அணி" தலைமைகளின் கீழ் அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள், பல தசாப்தங்களாக கிளர்ச்சியை நசுக்குவதற்காக, ஓர் "கொடூரமான போரை" நடத்தி வந்துள்ளது, அந்த கிளர்ச்சி, 1987 இல் ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல்கள் சீர்குலைக்கப்பட்டதை எதிர்த்து மிகப்பெருமளவில் வெடித்த போராட்டங்களை புது டெல்லி அலட்சியப்படுத்தி ஒடுக்கியதற்குப் பின்னர் எழுச்சி கண்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பை சாதகமாக திசைதிருப்ப முனைந்ததுடன், ஜம்மு-காஷ்மீரில் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினர் மீது மீண்டும் மீண்டும் வகுப்புவாத தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்லாமிய காஷ்மீரி பிரிவினைவாத குழுக்களை ஊக்குவித்ததன் மூலமாக, அதன் சொந்த சூறையாடும் நோக்கங்களை அது பலப்படுத்த முயன்றது.

இந்திய ஆளும் உயரடுக்கு, காஷ்மீர் மீதான பிஜேபி அரசாங்கத்தின் தாக்குதல் ஓர் உயர்-அபாய சூதாட்டம் என்பதை உணர்ந்திருந்த போதிலும், அதையொரு அவசியமான படியாக அரவணைத்துக் கொண்டது. அந்த “அசாதாரண நடவடிக்கைகளுக்கு" ஆதரவு வழங்குவதை அதிகப்படுத்துவதற்கான காரணம் என்னவென்றால், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்ற மற்றும் தீவிரமடைந்து வருகின்ற பூகோளரீதியான புவிசார்அரசியல் மோதல் நிலைமைகளின் கீழ், இந்தியா தன்னை ஒரு வளர்ந்து வரும் உலக சக்தியாக நிலைநாட்டுவதற்கான "வாய்ப்பின் ஜன்னல்கள்" வேகமாக மூடி வருகிறது என்ற இந்தியாவின் ஆளும் உயரடுக்கின் அச்சம் தான்.

பிஜேபி இன் காஷ்மீர் அதிகார ஆட்டத்தை பாதுகாப்பதில், பல இந்திய பத்திரிகை விமர்சகர்கள், அதை இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான சமீபத்திய சமரசத்திற்கு ஒரு விடையிறுப்பாக வாதிட்டு வருகின்றனர், கடந்த மாதம் கானின் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடனான சந்திப்பும், 18 ஆண்டுகால ஆப்கான் போருக்கான ஓர் "அரசியல்உடன்பாடு" குறித்து பாகிஸ்தான் உதவியுடன் நடந்து வரும் அமெரிக்க-தாலிபான் பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா கழற்றிவிடப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.

இது முட்டாள்தனமானது. திங்கட்கிழமை சதி வெறுமனே நீண்டகால பிஜேபி கொள்கையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அது மோடி அரசாங்கம் 2014 இல் பதவிக்கு வந்ததற்குப் பின்னர் இருந்து காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக பின்பற்றி வந்த "கடுமையான மூலோபாயத்தின்" தோல்வியிலிருந்து எழுகிறது.

மிக அதிகபட்சமாக, அமெரிக்க-பாகிஸ்தானிய உறவுகள் தற்காலிகமாக மிக சுமூகமாக வளர்ச்சி அடைவது குறித்த தாக்கம் மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யவோ அல்லது ஒரு தீர்வை வழங்குவதற்கோ கூட என்னால் உதவ முடியும் என்ற ட்ரம்பின் ஆலோசனை குறித்த கவலைகள், ஜம்மு-காஷ்மீர் மீதான புது டெல்லி தாக்குதலின் நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

எவ்வாறாயினும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் புது டெல்லி முன்பினும் ஆழமாக ஒருங்கிணைப்பதற்கான சமரச உடன்பாடாக காஷ்மீரில் இந்தியாவின் கரத்தைச் சுதந்திரமாக வாஷிங்டன் விட்டு வைக்கும் என்ற கணிப்பை மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அடித்தளமாக கொண்டிருந்தன.

புதன்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைப்பு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதை இந்திய மத்திய அரசின் நிரந்தர பொறுப்பாண்மையின் கீழ் நிறுத்துவதற்கான புது டெல்லியின் திட்டங்கள் குறித்து வாஷிங்டன் முன்கூட்டியே அறிந்திருந்தது என்பதை மறுத்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

“பத்திரிகை செய்திகளுக்கு முரண்பட்ட விதத்தில், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (IOK) சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்க நகர்வதற்கு முன்னதாக இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசுடன் கலந்தாலோசிக்கவும் இல்லை அல்லது தகவல் அளிக்கவும் இல்லை,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நடத்தப்படவிருந்த நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகஸ்ட் 1இல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்த போது தெரிவித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் வாதிடுகின்றன. புது டெல்லி அதுபோன்றவொரு நகர்வுக்கு திட்டமிட்டு வருவதாக அது பல சந்தர்ப்பங்களில் வாஷிங்டனுக்குத் தெரிவித்திருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் அவரின் அமெரிக்க சம அந்தஸ்திலுள்ள ஜோன் போல்டனுடன் பேசிய சந்தர்ப்பமும் அதில் உள்ளடங்கும் என்று இந்திய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

அந்த உரையாடலுக்குப் பின்னர், போல்டன், வாஷிங்டன் "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு உரிமையை" வாஷிங்டன் ஆதரிப்பதாக அறிவித்து, அதற்கடுத்து நடத்தப்பட்ட பாகிஸ்தான் மீதான இந்திய வான்வழி தாக்குதலுக்குப் பகிரங்கமாகவே பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

மேலதிக வாசிப்புகளுக்கு

திங்கட்கிழமை அரசியலமைப்பு சதியை நடைமுறைப்படுத்த, இந்தியா காஷ்மீரில் வியத்தகு முறையில் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துகிறது [PDF]

8 August 2019

இந்தியாவின் இந்து மேலாதிக்க அரசாங்கம் காஷ்மீரின் சுய அதிகாரத்தை நீக்குகிறது [PDF]

6 August 2019

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அழிவுகரமான போரை நோக்கி சறுக்கிச் செல்கின்றன [PDF]

2 March 2019

அணுவாயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுப் போருக்கான விளிம்பில் நிற்கின்றன

28 February 2019