ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chelsea Manning’s lawyer refutes conspiracy allegation against Julian Assange

ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான சதி குற்றச்சாட்டை செல்சியா மானிங்கின் வழக்கறிஞர் மறுக்கிறார்

By Mike Head 
25 July 2019

அமெரிக்கா மற்றும் உலகளவிலான அதன் கூட்டாளி நாடுகளின் போர்க் குற்றங்களையும் மற்றும் ஏனைய முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி 2010 இல் விக்கிலீக்ஸ் பிரசுரித்த ஆயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை பெறுவதற்கு விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ், மானிங்கை தன்பக்கம் ஈர்த்தார் அல்லது அவருடன் ஒத்துழைத்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கின் வழக்கறிஞர் நான்சி ஹோலண்டெர் இந்த வாரம் சந்தேகத்திற்கு இடமற்றவகையில் மறுத்தார்.


செல்சியா மானிங்

 

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “Four Corners” நிகழ்ச்சிக்கு ஹோலண்டெர் பேட்டியளிக்கையில், மானிங், பின்னர் 21 வயதான தனியார் அமெரிக்க இராணுவ உளவுத்துறை செய்தி வெளியீட்டாளராக, அவர் பெற்றிருந்த இழிவுகர தகவல்கள் பற்றி பெருநிறுவன ஊடகங்களுக்கு தெரிவிக்க அவற்றை அவர் அழைத்தபோது எந்தவொரு ஊடகமும் அவருக்கு பதிலளிக்காததன் பின்னரே, அவர் விக்கிலீக்ஸை தொடர்பு கொள்ளத் தொடங்கினார் என்று வலியுறுத்திக் கூறினார்.

இரண்டு பகுதிகள் கொண்ட “Four Corners” நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி அடுத்த திங்கள்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட பின்னர் அந்நிகழ்ச்சியை உலக சோசலிச வலைத் தளம் மீளாய்வு செய்யும். ஆனால் ஹோலண்டெரின் கூற்றுக்கள் கூட, அமெரிக்க உளவுத்துறைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் அசான்ஜை நாடு கடத்துவதற்கு முனைந்து வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் அசான்ஜிற்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட வழக்கின் ஒரு முக்கியமான வெளிப்பாட்டை உள்ளடக்கியது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அசான்ஜ் 175 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார்.

மானிங் கசியவிட்ட அணுகமுடியாத ஒரேமாதிரி சேமித்து வைக்கப்பட்ட பாரிய தகவல்களை —ஆப்கான் கோப்புகள், ஈராக் கோப்புகள் மற்றும் கேபிள்கேட் என்றறியப்பட்டவற்றை— அசான்ஜ் வெளியிட்டதற்காக மட்டுமல்லாமல், அந்த ஆவணங்களைப் பெற மானிங்குடன் சேர்ந்து அவர் தீவிரமாக சதி செய்தார் என்பது குறித்தும் தான் அவர் குற்றம்சாட்டப்பட்டார். ஆயினும், விக்கிலீக்ஸை தொடர்பு கொள்வதற்கு முன்னர், மானிங் ஏற்கனவே கோப்புகளை பதிவிறக்கம் செய்திருந்தார் என்று ஹோலண்டெர் விளக்கினார்.

மானிங் ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றாலும், ட்ரம்ப் வெள்ளை மாளிகை ஏன் அவரை மீண்டும் சிறையிலடைத்தது என்பதையும் ஹோலண்டெரின் நேர்காணல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அசான்ஜ் மீது ஆயுள் தண்டனையை அல்லது மரண தண்டனையை சுமத்துவதற்காக; ஒரு நடுவர் மன்றம் முன்பு அவருக்கு எதிராக பொய்யான சாட்சியமளிக்க மானிங்கை நிர்ப்பந்திக்கும் முயற்சியில் நீதிமன்ற குற்றச்சாட்டுக்களை அவர் அவமதித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு காலவரையற்ற தடுப்புக்காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

2010 இல், விக்கிலீக்ஸின் அநாமதேய தகவல் பெறும் பெட்டி –மூலத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்டது- வழியாக தற்போதைய மோசமான “கூட்டுக் கொலை” காணொளியை அசான்ஜ் முதன்முதலில் பெற்றார். அந்த காணொளியை பதிவேற்றம் செய்தது யார் அல்லது எங்கிருந்து அது வந்தது என்று விக்கிலீக்ஸில் உள்ள யாருக்கும் தெரியாது. அந்த காணொளி, அமெரிக்காவின் ஆயுதம்தாங்கிய ஹெலிகாஃப்டர் பாக்தாத் தெருவில் இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் உட்பட பொதுமக்களை சுட்டுக் கொல்வதைக் காட்டியது, இது மானிங்கை திகலடையச் செய்தது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞரான ஹோலண்டெர், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு பற்றி மானிங் “தான் கண்டதைக் கண்டு அவமானப்பட்டார்”, எனவே வகைபடுத்தப்பட்ட பெரும் எண்ணிக்கை கொண்ட கோப்புகளை அவர் இரகசியமாக பதிவிறக்கம் செய்ததுடன், அதை வெளியிடும் ஊடக வெளியீட்டு நிறுவனத்தைக் கண்டுபிடிக்கவும் அவர் முனைந்தார்.

“நல்லது, அவர் அதை அடைந்துவிட்டார். அவர் தகவல்களை அறிந்தார். அவர் பெற்ற தகவல்களைக் கண்டபோது திகலடைந்து போனார், அதை நம்மில் பலரும் தற்போது பார்த்திருக்கிறோம். மேலும், அதை வெளியே கொண்டுவர அவர் விரும்பினார். எனவே, நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிகைகளை அவர் அழைத்தார். ஒருவரும் அவரது அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. இந்நிலையில், விக்கிலீக்ஸை அவர் கண்டுபிடித்தார். அந்த நாட்களில் விக்கிலீக்ஸ் பற்றி உண்மையில் யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் அதை இணைய தளத்தில் கண்டுபிடித்தார்.”

ஸ்தாபக ஊடக ஆசிரியர்களைப் போலல்லாமல், அசான்ஜ் ஒரு உண்மையான புலனாய்வு ஊடகவியலாளராகவும் பதிப்பாசியராகவும் பதிலளித்தார். அவர் அடையாளம் தெரியாத மூலத்துடன் மறைகுறியாக்கப்பட்ட இணைய தள உரையாடலைத் தொடங்கியதுடன், முடிந்தவரை குற்றச்சாட்டுக்குரிய விடயங்களை பெறுவதற்கு முனைந்தார், அதேவேளையில் கசியவிடுபவரை கண்டுபிடிக்கவிடாமல் பாதுகாக்கவும் முயற்சி செய்தார்.

ஜாபர் இணைய தள அரட்டை சேவையில் மறைகுறியாக்கப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் தான் பின்னர் மானிங் மற்றும் அசான்ஜிற்கு எதிரான ஆதாரமாக சேகரிக்கப்படக்கூடியவையாக இருந்தன. “Four Corners” நிகழ்ச்சி டானியல் டோம்ஷீட்-பேர்க்கை நேர்காணல் செய்ய தேர்ந்தெடுத்தது, காரணம் என்னவென்றால், மானிங் கசியவிட்ட இரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் பிரசுரிக்க ஆரம்பித்த பின்னர், 2010 இல் விக்கிலீக்ஸில் இருந்து அவர் விலகியவராவார். இந்த அரட்டைப் பதிவு அசான்ஜ் பொறுப்பற்ற வகையில் “மூலத்திலிருந்து இரகசியங்களை கறப்பதை” காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஹோலண்டெர் இந்த கூற்றை மறுத்தார். “எந்த வகையிலும் செல்சியா விளையாடியதாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், “செல்சியா அவர் என்ன செய்தாரோ அது அவர் செய்தது, அதேபோல் ஜூலியனும் விக்கிலீக்ஸூம் என்ன செய்தனரோ அது அவர்கள் செய்தது. அவர்கள் இணைந்தனர். நான் அந்த படியாக்கங்களைப் பார்த்தேன், மேலும் இந்த தகவல்களுக்கான ஒரு வெளியீட்டு நிறுவனத்தை அவர் தேடிக் கொண்டிருக்கையில், அதை அவர் கண்டுபிடித்தார் என்று நான் நினைக்கிறேன். அந்த படியாக்கங்களில், யாரும் அவரை ஈர்க்கும் வகையில் எதையும் செய்வதாக நான் பார்க்கவில்லை. அவரிடம் தகவல் இருந்தது. அவர் அதை வெளியிட்டார்” என்றும் அவர் கூறினார்.

மானிங் விக்கிலீக்ஸை தொடர்பு கொண்டு எட்டு வாரங்களுக்குப் பின்னர் அவரைப் பற்றிய அடையாளம் மட்டுமே தெரிய வந்தது, ஏனென்றால், ஒரு இணைய தள செய்தியாளராக தனது பங்கை வெளிபடுத்துகையில்தான் அவர் சிக்கிக் கொண்டார். ஹோலண்டெர் விவரித்தபடி, அதனைத் தொடர்ந்து மானிங் விரைவாக தடுத்து வைக்கப்பட்டதுடன், குவைத்திற்கும், தொடர்ந்து வேர்ஜீனியாவில் உள்ள குவாண்டிகோ கடல் தளத்திற்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். “மேலும் அவரை அவர்கள் மிகவும் மோசமாக நடத்தினார்கள். முதலில், அவர் 11 மாதங்கள் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார், மேலும் அவரை நிர்வாணமான நிலையில் அவர்கள் நிற்க வைத்தார்கள்.”

அசான்ஜிற்கு எதிராக கொள்கை ரீதியாக சாட்சியமளிக்க மறுத்ததற்காக, மானிங் தற்போது கூட நான்கு மாதங்களுக்கும் மேலாக மீண்டும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தண்டனைக்குரிய அபராதங்களுக்கு ஆளாகி வருகிறார், தற்போது நாளொன்றுக்கு 1,000 டாலர் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஏற்கனவே மொத்தமாக சேர்ந்துள்ள அபராதம் 20,000 டாலரை விஞ்சிவிட்டது. அதன் விளைவாக, மானிங் அவரது குடியிருப்பை இழந்துவிட்டார் என்பதுடன், நடுவர் மன்றம் அதன் பதவிக் காலம் அக்டோபர் 2020 இல் முடிவதற்குள் இந்த வழக்கை விசாரிக்க அமருமானால் அவர் மீது 440,000 டாலருக்கு அதிகமான அபராதம் திணிக்கப்படுவதன் மூலம் அவரது நிதி நிலைமை இன்னும் சீர்குலைக்கப்படக் கூடும்.

ஒபாமா நிர்வாகம், பென்டகன், சிஐஏ மற்றும் உலகளவிலான கூட்டாளி அரசாங்கங்களைச் சேர்ந்த அவர்களது பங்காளர்கள் ஆகியோருக்கு பேரழிவு தருவதான மானிங்கும், விக்கிலீக்ஸூம் வெளியிட்ட தகவல்கள் சம அளவு தைரியத்துடன் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டது. தணிக்கை செய்யப்படாமலும், வடிகட்டப்படாமலும் கிடைத்த தகவல்கள் அப்படியே இணைய தளத்தில் பதிவிடப்பட்டன, இந்த ஆவணங்கள் அமெரிக்க தூண்டுதலிலான போர் ஆத்திரமூட்டல்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், இராஜதந்திர சதித்திட்டங்கள், வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களின் தொலைபேசி மோசடி மற்றும் வெகுஜனங்கள் மீதான உளவுபார்ப்பு ஆகியவை பற்றிய தகவல்களை வெளிப்படையாக கொண்டிருந்தன.

“Four Corners” நிகழ்ச்சி பதிவுகளின் படி, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளின்டனும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டும் அசான்ஜை ஒரு குற்றவாளி என கடுமையாக கண்டித்தனர் என்பதுடன், அவரை என்றென்றும் மவுனமாக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்காக உடனடியாக காவல்துறையையும் உளவுத்துறை முகமைகளையும் விசாரணைக்கு நியமித்தனர்.

இன்று, ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜையும் மானிங்கையும் கொடுமையாக துன்புறுத்தி வருவது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும், ஊடகங்கள் மற்றும் பொது ஆய்விலிருந்து தங்கள் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இன்னும் பெரியளவிலான குற்றங்களைச் செயல்படுத்துவதற்கு தயாராகியும் வருகிறார்கள். அமெரிக்காவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உதவி செய்து வருகிறது, இது ஏப்ரல் 11 அன்று அசான்ஜை கைது செய்து சிறையிலடைத்தது, மேலும் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜ் மீது போலியான குற்றங்களைச் சுமத்தி அவர் நாடுகடத்தப்படுவதை எதிர்க்க ஆஸ்திரேலிய அரசாங்கமும் மறுக்கிறது.

எனவே, அமெரிக்க தலைமையிலான போர் குறித்து பெருகிவரும் அபாயத்திற்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்பின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மீதான தீவிரமான தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டத்தின் முன்னணி விடயமாக மானிங்கையும் மற்றும் அசான்ஜையும் பாதுகாப்பது அவசியமாக உள்ளது.

அதனால்தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளாக உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும், உலக சோசலிச வலைத் தளமும் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்தவும், மேலும் அவர் மற்றும் மானிங்கின் நிபந்தனையற்ற விடுதலையை வென்றெடுக்கவும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியாக அணிதிரட்டும் வகையில் ஒரு உலகளாவிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

அமெரிக்காவின் அரசியல் கைதி செல்சியா மானிங்கிற்கு எதிரான பழிவாங்கும் பிரச்சாரம்

[18 July 2019]