ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US to ring China with missiles in nuclear arms race

அணுஆயுத போட்டியில் அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு சீனாவை இறுக்க உள்ளது

By Andre Damon
5 August 2019

உலகின் மிக முக்கிய அணுஆயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய ஒருசில மணி நேரங்களுக்குள், துரிதமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற அணுஆயுத போட்டிக்கு மத்தியில், பென்டகன், அது ஏவுகணைகளைக் கொண்டு சீனாவை இறுக்க உத்தேசித்திருப்பதை தெளிவுபடுத்தியது.


டைட்டன் II அணுஆயுத ஏவுகணை (படம்: அமெரிக்க பாதுகாப்புத்துறை]

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பெர் ஆஸ்திரேலியாவுக்கான ஒரு பயணத்தின் போது செய்தியாளர்களுடன் உரையாடுகையில், அந்த உடன்படிக்கையின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த ஏவுகணைகளை பென்டகன் "தாமதமின்றி விரைவில்" நிலைநிறுத்தும் என்றார்.

“ஒரு சில மாதங்களில் என்பதே என் விருப்பம்,” எஸ்பெர் தெரிவித்தார்.

மத்திய தூர ஏவுகணைகளைப் பசிபிக்கில் நிலைநிறுத்துவது சீன கடற்பகுதிகளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பசிபிக் தீவுகளையும் ஓர் அணுஆயுத போர்முகப்பாக மாற்றிவிடும் என்பதுடன், சீனா, கொரியா, ஜப்பான், தாய்வான் மற்றும் பரந்த அப்பிராந்தியத்தின் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அபாயத்தில் நிறுத்தும்.

1987 இல் ஜனாதிபதி ரோனால்ட் ரீகனுக்கும் அவரின் சோவியத் சமபலம் மிக்கையில் கோர்பசேவ்வுக்கும் இடையே கையெழுத்தான INF உடன்படிக்கை, 500 மற்றும் 5,000 கிலோமீட்டருக்கு இடையிலான தூரம் செல்லும் ஏவுகணைகள் அபிவிருத்தி செய்வதிலிருந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைத் தடுத்தது, அதாவது ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் பசிபிக்கின் பெருமளவிலான பகுதிகளுக்குள் அணுஆயுத ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படுவதை அது தடுத்தது என்பதே அதன் அர்த்தமாகும்.


ஜனாதிபதி ரோனால்ட் ரீகனும் சோவியத் ஒன்றிய பொது செயலர் மிக்கையில் கோர்பச்சேவும் டிசம்பர் 8, 1987 இல் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் மீதான உடன்படிக்கையில் கையெழுத்திடுகின்றனர் [படம்: வெள்ளை மாளிகை]

ஆனால், தொழில்நுட்ப போக்குகள் இராணுவ சமநிலைகளை மாற்றியதுடன் அமெரிக்கா சீனாவுடனான அதன் மோதலை தீவிரப்படுத்திய நிலையில், அதிகரித்தளவில் அந்த பனிப்போர் சகாப்த உடன்படிக்கையானது, அதில் கையெழுத்திட்டிராத பெய்ஜிங்கை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அதன் நோக்கத்திற்கு முரண்பாடாக இருப்பதாக வாஷிங்டன் பார்த்தது.

சீனப் பெருநிலத்திலிருந்து வான்வழியில் வெறும் ஒருசில நிமிட நேரங்களில் எட்டக்கூடிய வகையில் அமெரிக்க அணுஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்தும் சாத்தியக்கூறுடன், அப்பிராந்தியத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அணுஆயுத நிர்மூலமாக்கல் பேராபத்தின் கீழ் வாழ விடப்பட்டு, பதட்டங்கள் மயிரிழையில் தூண்டிவிடப்படலாம்.

மத்திய தூர அணுஆயுத தளவாடங்களுக்கான உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கு விடையிறுத்து, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கையில், “உலகம், அணுஆயுத போர் மீதான ஒரு மதிப்பில்லா கட்டுப்பாட்டு விசையை இழக்கும்,” என்றார்.

ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குனர் டார்ய்ல் கிம்பால் கூறுகையில், ட்ரம்ப் "ஓர் அபாயகரமான ஆயுதப் போட்டிக்கான நிலைமைகளை உருவாக்கும் ஒரு மூலோபாயத்தைப் பின்தொடர்ந்து" கொண்டிருக்கிறார் என்றார். அதே தொனியில், ட்ரம்ப் "அணுஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டிவிடுகிறார்" என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது.

அமெரிக்காவிலிருந்து ஆயிரமாயிரம் மைல்கள் தொலைவில் மக்கள் நெருக்கமான பகுதியில் ஏவுகணைகளை நிறுத்துவதற்கான அவரின் முடிவை பாதுகாப்பதில், எஸ்பெர் "சூறையாடும் பொருளாதாரங்களைப் பயன்படுத்தி பொதுவாக உலகையே ஆயுதமயப்படுத்துவதாக" சீனாவைக் குற்றஞ்சாட்டினார்.

வேறு வார்த்தைகளில், அமைதியான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக, சீனா, அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது, ஆகவே இராணுவ நிர்மூலமாக்கல் அச்சுறுத்தலைக் கொண்டு அது எதிர்க்கப்பட வேண்டும் என்றாகிறது.

“எந்தவொரு நாடும் இந்தோ-பசிபிக்கில் மேலாதிக்கம் செலுத்த முடியாது அல்லது கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று எஸ்பெர் தெரிவித்தார், இவர் பிரதிநிதித்துவம் செய்யும் நாடு தான், ஒரு காலத்தில் பசிபிக்கை வெற்றி கொள்வதற்கான அதன் போரில் நூறாயிரக் கணக்கான ஜப்பானிய அப்பாவி மக்களை (விமானப்படை தளபதி கர்டிஸ் லெமேயின் வார்த்தைகளில் கூறுவதானால்) “மரணம் வரையில் வாட்டிவதைத்து கொதிக்கவிட்டு அவித்தெடுத்தது."

எஸ்பெர் உடன் அவரது ஆஸ்திரேலிய பயணத்தில் உடனிருக்கும் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அதனை அடுத்து கருத்துரைக்கையில், சீனா முன்னிறுத்தும் "அபாயம்" சம்பந்தமாக அமெரிக்கா "அலட்சியமாக" இருந்துவிட்டது என்றார்.

பின்னர் அவர், சீனாவின் அமைதியான பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு ஓர் இராணுவ அச்சுறுத்தலை உள்ளடக்கி இருப்பதாக எஸ்பெரின் அறிவிப்பையே மீளவலியுறுத்தினார்.

“வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தேசிய பாதுகாப்பில் இருந்து தனியாக பிரித்து பேசுவதை நான் செவியுறுகிறேன்,” என்று கூறிய பொம்பியோ, “துல்லியமாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அதை செய்வதற்கான சீனாவின் ஆற்றல், மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆற்றல், அவர்கள் கட்டமைத்துள்ள வர்த்தக உறவுகளின் நேரடி விளைவாகும், இதில் நாம் பிழை செய்துவிடக்கூடாது,” என்றார்.

“அவர்கள் பல்வேறு நேர்மையற்ற வர்த்தக விதிகளின் பின்புலத்தில் அவர்களின் நாட்டை வளர்த்தெடுத்தார்கள். ஆகவே தான் அவர்களால் மிக வேகமான விகிதத்தில் அவர்களின் பொருளாதாரத்தை வளர்க்க முடிந்தது,” என்று பொம்பியோ தெரிவித்தார்.

“அதை சரி செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் ஒருமுனைப்பட்டிருக்கும் இந்த பொருளாதார கருவிகள் தான், அவர்களின் இராணுவத்தைக் கொண்டு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அந்த மொத்த விடயங்களைச் செய்வதற்கும் சீனாவுக்கு உதவுகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமைதியாக இணக்கமாக இருப்பதையும் மற்றும் இராணுவ மோதலையும் பிரிக்கும் எந்த கோடும் அங்கே இல்லை. பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் ஆகியவையே கூட இராணுவ அச்சுறுத்தல்களாக பார்க்கப்படுகின்றன என்பதுடன், வர்த்தக மோதலில் இருந்து இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் முழு அளவிலான போர் வரையில் எதைக் கொண்டும் வாஷிங்டன் எதிர்கொள்ளக்கூடும்.

பொம்பியோவின் வார்த்தைகள், கடந்தாண்டு பென்டகன் ஏற்றுக் கொண்ட ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வல்லரசு போட்டிக்கான கோட்பாட்டுக்கு ஒத்திருக்கின்றன. “பயங்கரவாதம் அல்ல, வல்லரசு போட்டி தான், இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான குவிமையம்,” என்று அது அறிவித்தது.

அதுபோன்ற மோதல்களைத் தொடுப்பதற்கு "ஒட்டுமொத்த சமூக" அணுகுமுறை அவசியப்படும், இதை பென்டகன் மிகவும் சம்பிரதாயமாக முழுமையான போர் என்றழைக்கப்படுவதாக அறிவித்தது.


ஜேர்மனியில் BGM-109G க்ரிப்பான் (Gryphon) ஏவுகணைகளுக்கான ஒரு ஏவுகளம், நவம்பர் 18, 1983. மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் உடன்படிக்கையால் அகற்றப்பட்டிருந்த பல வகையான ஏவுகணைகளில் க்ரிப்பான் ஏவுகணையும் ஒன்று. [படம்: விமானப்படை தொழில்நுட்ப வல்லுனர் சார்ஜென்ட் ரோப் மார்ஷல்]

வெள்ளியன்று INF உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்குக் கூடுதலாக, அமெரிக்கா கடந்த வாரம் சீனாவுடனான அதன் மோதலில் மூன்று பக்கவாட்டு தாக்குதல்களைத் தொடுத்தது.

இந்த நடவடிக்கைகள் எதுவுமே ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்படவோ அல்லது கலந்துரையாடப்படவோ இல்லை, ஏனென்றால் சீனாவுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதற்கான அவசியம் மீது ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்புக்கும் இடையே அங்கே உடன்பாடு நிலவுகிறது. இதை முன்னாள் ட்ரம்ப் பிரச்சாரக் குழு தலைவர் ஸ்டீவ் பானன் குறிப்பிட்டவாறு, “இந்த தேர்தலை ஜெயிப்பவர், அது ஜனநாயகக் கட்சியாளராக இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், அவர் டொனால்ட் ட்ரம்பை விட பெரிய அல்லது மிகப்பெரிய போர்வெறியராக இருப்பார்... ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரைப் போலவே அதேயளவுக்கு கடுமையாக தான் இருக்கிறார்கள்.”

ஏதோ வழியில், ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் மொழியில் இன்னும் அதிக ஆக்ரோஷமாக இருக்கிறார்கள். ஒரேயொரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டுமானால், ஜூனில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் Pete Buttigieg சீனா உடனான ஒரு மோதல்தான் "தேசிய ஒற்றுமைக்கான" அடித்தளத்தை வழங்குகிறது என்று அறிவித்தார்.

“புதிய சீனச் சவால் நாம் அரசியல் பிளவைக் கடந்து வர நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று கூறிய அவர், “குறைந்தபட்சம் போரின் பாதி உள்நாட்டில் நிலவுகிறது,” என்றார்.