ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In Brexit crisis, Corbyn lines up with Tories and Blairites

பிரெக்ஸிட் நெருக்கடியில், கோர்பின் டோரிக்கள் மற்றும் பிளையரிசவாதிகளுடன் இணைகிறார்

Chris Marsden
5 September 2019

"இடது" என்பதாக ஜெர்மி கோர்பின் பெற்றிருந்த தகுதியற்ற மதிப்புத்தான், பிரெக்ஸிட் நெருக்கடியில் மிகப்பெரும் அரசியல் இழப்பாக உள்ளது.

ஆளும் வர்க்கத்தின் பிரெக்ஸிட் எதிர்ப்பு அணியின் முன்னணி பிரமுகராக மேலெழுவதில், கோர்பினிடம் தொழிலாளர்களுக்கு வழங்க எந்த சுயாதீனமான அரசியல் மாற்றீடும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி வருகிறார். அதற்கு பதிலாக அவர், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலை எதிர்க்கும் தொழிலாளர்களை, ஜோன்சனின் சொந்த கட்சிக்குள்ளேயே உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கன்னை உடனோ, வெறுக்கப்படும் பிளேயரிசவாதிகளுடன் உடனோ, ஒரு தசாப்தமாக அழிவுகரமான சமூக சிக்கன நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனோ கட்டிப்போட்டு வருகிறார்.

வெஸ்ட்மின்ஸ்டர் நடைமுறைகள் நேற்று கேலிக்கூத்தாக தரங்குறைந்தன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்படாவிட்டாலும் கூட அக்டோபர் 31 இல் பிரெக்ஸிட்டை முன்நகர்த்துவதற்காக, அடுத்த வியாழக்கிழமைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை அவர் ஒத்தி வைக்க இருப்பதாக ஜோன்சன் கடந்த வாரம் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 19 க்கு உள்ளாக ஒரு புதிய உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்காவிட்டாலோ அல்லது உடன்பாடு எட்டப்படாத வெளியேற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஜனவரி 31, 2020 வரையில் தாமதிக்க கோருவதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டுமென, வலதுசாரி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிலரி பென் கொண்டு வந்த அனைத்து கட்சி சட்டமசோதா ஒன்றில் வாக்களித்ததன் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்சனின் ஜனநாயக விரோத சூழ்ச்சிகளுக்கு விடையிறுத்தனர். செவ்வாயன்று ஏற்கனவே அவரின் பெரும்பான்மையை இழந்துவிட்டிருந்த ஜோன்சன், 21 பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியை முகங்கொடுத்தார். எதிர்பார்த்தவாறே, அவர் அக்டோபர் 15 இல் நடத்தப்படவிருக்கும் ஒரு முன்கூட்டிய பொது தேர்தலுக்கான தீர்மானத்தை முன்வைத்து விடையிறுத்தார்.

நைஜல் ஃபாராஜின் பிரெக்ஸிட் கட்சியுடன் அணிசேர்ந்து, பிரெக்ஸிட் ஆதரவு தேசியவாதத்தை முடுக்கி விடுவது பின்னர் பெருவணிகம் மற்றும் செல்வந்தர்களுக்கான அவரின் வரி வெட்டு திட்டநிரல்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது கண்மூடித்தனமான சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அவரால் நாடாளுமன்றத்தில் பெரும் பெரும்பான்மை பெற முடியுமென ஜோன்சன் கணக்கிடுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அவர் நகர்த்தும் எந்தவொரு நகர்வுக்கும், “எவ்வாறு ஜெயிப்பது என்று போரிஸிற்குத் தெரியும்,” என்று நேற்று ட்வீட் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முழு ஆதரவு இருக்கும் என்பதையும் அவர் அறிந்துள்ளார்.

ஓர் அரை நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முகங்கொடுத்து வரும் மிகப்பெரிய நெருக்கடி நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசியல்ரீதியில் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுப்பதில் கோர்பின் வகிக்கும் பாத்திரம் இல்லாமல், அரசியல்ரீதியில், இதில் எதுவுமே சாத்தியமாகாது. உடன்பாடு எட்டாமல் பிரிட்டன் வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று உத்தரவாதம் வழங்காவிட்டால் தொழிற் கட்சி தேர்தலுக்கு எதிராக வாக்களிக்கும் என்று கோர்பின் அறிவித்தபோது, அது நேற்று புதிய சரிவை எட்டியது.

நாடாளுமன்ற கால வரம்பு சட்டத்தின் கீழ், ஓர் அரசாங்கத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகிறது, இதன் அர்த்தம் ஜோன்சனின் தீர்மானம் தோல்வியடையும் என்பதாகும். “நாட்டின் மாட்சியமை பொருந்திய அரசாங்கத்தின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையைக் காட்டி வாக்களித்திருப்பது இதுவே வரலாற்றில் முதல்முறையாகும்,” என்று அறிவித்து அவர் விடையிறுத்தார்.

பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் நிழலமைச்சரவை செயலர் கெர் ஸ்டார்மர், அத்துடன் கோர்பினின் முக்கிய கூட்டாளியான நிழலமைச்சரவையின் சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் உட்பட முன்னணி பிளேயரிசவாதிகளுடன், தொழிற் கட்சி எப்போது ஒரு பொது தேர்தலை ஆதரிக்க நகரும் என்பதற்கு அங்கே இன்னமும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை, அதாவது பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் ஒரு நீடிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொள்ளும் வரையில் ஒரு முன்கூட்டிய தேர்தல் பரிசீலிக்கப்படாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

தங்கியிருப்பதை ஆதரிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் கன்னைக்கு எதிராக எந்த சுயாதீனமான முன்னோக்கையும் முன்னெடுக்காமல், எப்போது ஒரு தேர்தல் நடந்தாலும், கோர்பின் தொழிலாள வர்க்கத்திற்கு எதுவும் கிடைக்காத முடிவை உறுதிப்படுத்தி வைக்க முயன்று வருகிறார்.

மில்லியன் கணக்கானவர்கள் அதிகரித்து வரும் சமூக சிக்கல்களை முகங்கொடுக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் டோரி சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்ற நிலைமைகளின் கீழ் நடத்தப்படும் ஒரு பொது தேர்தல், அதுவும் ஜோன்சன் வெஸ்ட்மின்ஸ்டர் உயரடுக்குக்கு எதிராக "மக்கள் விருப்பத்தின்" பாதுகாவலராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார் என்ற நிலையில், அது பிரெக்ஸிட் மீது ஏற்புடைய ஒரு கருத்து வாக்கெடுப்புக்காக நடக்க போவதில்லை. பிரெக்ஸிட் மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்புகளும் சரமாரியாக பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு அது தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்திற்குள் அபாயகரமான பிளவை ஆழப்படுத்தும்.

ஓர் இடது மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக கோர்பினின் பாசாங்குத்தனம், பிரெக்ஸிட் சம்பந்தமாக ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு பக்கவாட்டில் அம்பலமாகி வருகிறது. பிளேயர் மற்றும் ப்ரௌனின் வணிக-ஆதரவு, போர்-ஆதரவு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைத்து, மிகப் பெரும்பான்மையுடன் கோர்பின் தொழிற் கட்சி தலைவராக செப்டம்பர் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஏற்கனவே அவரது கட்சிக்குள் நிலவிய கடுமையான பிளவுகளைக் கடந்து வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புநாடாக இருப்பதன் மீது ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்த சூளுரைத்திருந்தார்.

இதற்கு பதிலாக கோர்பின், அவரின் கட்சி தலைமை குறித்து பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பயப்பட வேண்டியதில்லை என்பதை நிரூபித்துக் காட்டும் விதத்தில் பிளேயரிசவாதிகளின் செல்வாக்கைத் தக்க வைப்பதில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

பிரிட்டனின் பெருநிறுவன உயரடுக்கின் பெரும்பான்மை, சர்வதேச அளவில் அவர்களின் போட்டித்திறனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடு அந்தஸ்து இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தில், ஜூன் 2016 கருத்து வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரித்தது. பிரிட்டன் வெளியேறுவது ஐரோப்பிய ஒன்றியமே உடைவதற்கு வினையூக்கியாக ஆகிவிடும் மற்றும் நேட்டோ கூட்டணியை கூட நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற கவலையில், ஒபாமா நிர்வாகமும் மற்றும் அனைத்து பிரதான ஐரோப்பிய சக்திகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதை ஆதரித்தன. டோரி கட்சி உள்நாட்டு போர் நிலையில் இருப்பதால், கோர்பினின் கீழ் தொழிற் கட்சி தங்கியிருப்பதை ஆதரிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சி விவரித்ததைப் போல, "வெளியேறும் பிரச்சாரத்தின் இழிவார்ந்த பேரினவாதத்தை எதிர்ப்பவர்களைப் பெரிதும் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியில், கோர்பின், தொழில்ரீதியிலான ஒரு பொய்யராக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வக்காலத்து வாங்குப்பவராக முன் வந்துள்ளார்.”

“ஐரோப்பிய ஒன்றியம் தான் செல்வவளம் மற்றும் வேலைகளுக்கு ஆதாரம் என்றும், ஒரு 'சோசலிச ஐரோப்பாவாக' அதை சீர்திருத்த முடியும் என்ற கோர்பினின் வாதங்கள், “கிரீஸ், அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில்... ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய சமூக குற்றங்களைப் பற்றி வாய்மூடி" இருப்பதில் கடந்து சென்றுவிடுகின்றன என்று SEP தொடர்ந்து குறிப்பிட்டது.

கேமரூன், கோர்பின் மற்றும் பலரும் புரூசெல்ஸ் உட்பட அரசியல் உயரடுக்கில் இருந்து உழைக்கும் மக்கள் பாரியளவில் அன்னியப்பட்டிருப்பதைப் பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் சாதகமாக்கி கொள்வார்கள் என்பதைக் கணக்கில் எடுக்கவில்லை என்பதால் அந்த கருத்து வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.

பிரெக்ஸிட் மீது பிளவுபட்டிருந்த ஆனால் சமூக மாற்றம் மீதான அவர்களின் அபிலாஷைகளில் ஒன்றுபட்டிருந்த பிளேயரிசவாதிகள் கோர்பினை நீக்க கோரி விடையிறுத்தனர், ஆனால் தொழிற் கட்சிக்குள் பாய்ந்தோடி வந்த நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் ஜூன் 2016 இல் கோர்பின் முன்பினும் அதிக பெரும்பான்மையோடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது.

கேமரூன் அந்த கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் தெரேசா மே க்கு வழிவிட்டு இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார் — அப்போதும் கோர்பின் போராட்டத்தை தொடுக்க மறுத்தார். 2017 இல், தொழிற் கட்சியில் ஒருதலைபட்சமான உள்நாட்டு போர் டோரிக்கு ஆதாயமாக இருக்கும் என கணக்கிட்டு, மே ஒரு முன்கூட்டிய பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அது தொழிற் கட்சி ஆதரவில் அதிகரிப்பை உருவாக்கியதுடன், டோரிக்களை ஒரு சிறுபான்மை அரசாங்கமாக குறுக்கியது. “இடது யூத-எதிர்ப்புவாதம்" என்ற பொய் கூற்றுக்களுக்கு மத்தியில் கோர்பினின் ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்ட போதும் கூட பிளேயரிசவாதிகளின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளை எதிர்த்து, அவர் மற்றொரு பின்வாங்கலுடன் விடையிறுத்தார்.

ஏப்ரலில் பிரெக்ஸிட் விவகாரத்தில் மே அரசாங்கம் பொறிவின் விளிம்புக்குக் கொண்டு வரப்பட்ட போது, கோர்பின் ஒரு பொது தேர்தலுக்கான அழைப்புகளைக் கைவிட்டு, “தேசிய நலனை" எவ்வாறு பாதுகாப்பது என்று வாரக் கணக்கில் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்று அப்பெண்மணியை மீட்பதற்கு முன் வந்தார். எவ்வாறிருப்பினும் மே பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார், ஆனால் கடுமையாக பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் கன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இரண்டாவது டோரி பிரதம மந்திரியாக ஜோன்சனைக் கொண்டு அப்பெண்மணியைப் பிரதியீடு செய்தது.

போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிகவும் வலதுசாரி அரசாங்கம் உருவாவதற்கு உதவியுள்ள கோர்பின், ஜோன்சனுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் டோரிக்களின் கூட்டணியுடன், தங்கியிருப்பதை ஆதரிக்கும் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க, ஒரு "காபந்து அரசாங்கத்திற்கு" தலைமை வகிக்க முன்மொழிந்ததன் மூலமாக பெருவணிகங்களுக்கு முன்னால் தரந்தாழ்வதில் அடுத்தப்படியை எடுத்தார், அது பிரெக்ஸிட்டைத் தாமதித்து பின்னர் ஒரு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறது. இது நிராகரிக்கப்பட்ட போதும் கூட, அவர் பென்னின் சட்டமசோதாவுக்கு ஆதரிக்கும் விதத்தில் ஜோன்சனுக்கு எதிராக அவர் முன்மொழிந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிலுவையில் போட உடன்பட்டார் — இது "பொறுப்பாக நடந்து" கொண்டதற்காகவும் மற்றும் "நாட்டை முதலிடத்தில் நிறுத்தியதற்காகவும்" டோனி பிளேயரிடம் இருந்து அவருக்குப் பாராட்டுக்களை ஈட்டித் தந்தது.

தொழிலாள வர்க்கம் கோர்பின் மற்றும் தொழிற் கட்சியுடன் முறித்துக் கொள்ள வேண்டும்.

பூகோளரீதியில் ஒழுங்கமைந்த முதலாளித்துவ நிலைமைகளின் கீழ், தேசிய பொருளாதார நெறிமுறைகளின் அடிப்படையில், கோர்பின் வாக்களித்தவாறு ஒரு சீர்திருத்தவாத கடந்த காலத்திற்கு மீண்டும் திரும்புவது சாத்தியமில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைக்கு ஒரு பதிலாக தேசியவாதத்தை நோக்கிய எந்த திருப்பமோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தையே சீர்திருத்துவதற்கான அழைப்புகளோ, இன்னும் ஆழமான சமூக தாக்குதல்கள், பாதுகாப்புவாத வர்த்தக போர் நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தை மட்டுமே அர்த்தப்படுத்தும் — அது புலம்பெயர்ந்தோர் விரோத வெறித்தனத்தை மற்றும் அதிவலதின் வளர்ச்சியைத் தூண்டிவிடும்.

பிரெக்ஸிட் நிலைமையை உருவாக்கிய தேசியப் பதட்டங்கள், உலகின் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களின் உலகளாவிய வெடிப்பின் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும். சவாலின்றி விடப்பட்டு, இத்தகைய பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் எதேச்சதிகார ஆட்சி, வர்த்தகம் மற்றும் இராணுவ போரை நோக்கி இட்டுச் செல்கின்றன.

ஆனால் இதே பகைமைகள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்திக்கும் புறநிலை தூண்டுதலை வழங்குகின்றன. உலகளவில் போட்டித்தன்மையில் இருக்க முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களது முயற்சிகள், ஒவ்வொரு நாட்டிலும் வேலைகள், கூலிகள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான ஒரு தாக்குதலைக் கோருகிறது.

வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதற்காக சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்து வரும் முயற்சிகளை எதிர்த்து, தொழிலாள வர்க்கம் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையைக் கொண்டு விடையிறுத்துள்ளது. இந்த போராட்டங்கள், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த சமூக மற்றும் அரசியல் இயக்கத்தில், எல்லா தேசிய எல்லைகளையும் கடந்து பொதுவான முதலாளித்துவ எதிரிக்கு எதிராக, நனவுபூர்வமாக ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட வேண்டும்.