ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ගවරවිල වත්තේ කම්කරුවන් අතර ආදායම් බෙදීමේ ක්‍රමයට එරෙහිව විරෝධය වර්ධනය වෙයි

இலங்கை கவுரவில தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வருமான பங்கீட்டு முறைக்கு  எதிரான எதிர்ப்பு அதிகரிக்கின்றது

By M. Thevarajah
26 August 2019

தொழிலாளர் மேல் சுரண்டலை தீவிரப்படுத்தும் வருமான பங்கீடு முறைமையை திணிப்பதை எதிர்த்து மஸ்கெலியா, சாமிமலை கவுரவில தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கவுரவில தோட்டம் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. அத்தோட்டத்தின் பரப்பளவு சுமார் 300 ஹெக்டேர் ஆகும். கடந்த ஆண்டு அதன் பாகிரோ  பிரிவில் இந்த முறைமை முதன்முதலில் அமுல்படுத்தப்பட்டதுடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சோழங்கந்தை மற்றும் கவுரவில பிரிவில் இதை செயல்படுத்தியுள்ளனர். தொழிலாளர்கள் இதனை எதிர்த்தபோது, ​​தோட்ட நிர்வாகம் அவர்களை அச்சுறுத்தியுள்ளது.

2017 இல், மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வலப்பனை மஹா உவா தோட்டத்தில் முதலில் வருமானப் பங்கீடு முறைமை அமுல்படுத்தப்பட்டது. 2018ம் ஆண்டில்   களனிவலி பெரும்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான டிக்கொயாவில் உள்ள படல்கல, சலங்கந்தை, சாஞ்சிமலை ஆகிய தோட்டங்களிலும், வட்டவளை மற்றும் ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான டிக்கோயா, டன்பார், எபோட்ஸ்லி ஆகிய தோட்டங்களிலும்  அறிமுகப்படுத்தப்பட்டது. கடுமையான வேலை நிலைமைகளைத் தாங்க முடியாமல், எபோட்ஸ்லி மற்றும் சாஞ்சிமலை கீழ் பிரிவில் உள்ள தோட்டத் இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு கிடைத்த தேயிலை செடிகளை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுவதுடன், அவர்கள் ஊழியர் சேம லாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மருத்துவம், சிறுவர் பராமரிப்பு போன்ற சமூக நலனகளை இழக்கின்றனர். தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி அதை செயல்படுத்த தோட்ட தொழிற்சங்கங்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் 1,000 ரூபா நாட் சம்பள போராட்டத்தை காட்டிக் கொடுத்தன. இ.தொ.கா. மற்றும் LJEWU தோட்டக் கம்பனிகளுடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் வருமானப் பங்கீட்டு முறைமையை அமுல்படுத்தும் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது.

கம்பனிகளும், அரசாங்கமும் இணைந்தவாறு தங்கள் உரிமைகளை வெட்டுவதற்கும் மோசமான வேலை நிலைமைகளை சுமத்துவதற்கும் ஆதரவு கொடுக்கன்ற தொழிற்சங்கங்களின்  இந்த துரோக நடவடிக்கையை  கணடனம் செய்த தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தளத்திற்கு பின்வருமாறு தெரிவித்தனர்.

கவுரவல தோட்டத் தொழிலாளியான கே.ஏ. ராணி, 49. கூறியதாவது: “வருமானப் பங்கீட்டு முறைமையின் கீழ் மலையில் ஒருபகுதி தேயிலைக் கன்றுகள் பிரித்துக் கொடுக்கப்பட்ட பின்னர், பெயருக்கு (நாள் சம்பளத்திற்கு) வேலை செய்யும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சம்பளத்திலும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியிலும் வீழ்சி ஏற்பட்டுள்ளது. எனக்கு 500 தேயிலைக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மலை எனது வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் வழமையான வேலை 4,30 க்கு முடிந்த பின்னர், வீட்டுக்கு வராமல் காணிக்கு போக வேண்டிய நிலை உள்ளது. ​​இதனால் அந்த வேலையும் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு மாலை 6.00 -  6.30 ஆக இருக்கும். எனவே குழந்தைகளை கவனிப்பது மிகவும் கடினம் இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

“முன்பு நாளொன்றுக்கு 16 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். அது இப்பொழுது  18 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு முறையும் நிறுக்கும்  போது பையின் எடையை சாட்டாக வைத்து 3 கிலோ குறைக்கப்படுகின்றது. நாளொன்றுக்கு மூன்று முறை நிறுப்பதன் மூலம் 9 கிலோ வெட்டப்படுகின்றது. இதனால் மேலதிக கொழுந்துக்குரிய சம்பளத்தை இழக்கின்றோம். தொழிற்சங்கங்களுக்கு நாம் மாதா மாதம் சந்தாப் பணம் கொடுக்கின்றோம் ஆனால் எதனையும் தட்டிக் கேட்பதில்லை. அண்மையில் இ.தொ.கா. தொழிற்சங்கம் தனது சந்தா பணத்தை 150 ரூபாவிலிருந்து 233 ரூபாவாக அதிகரித்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.

அதே தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளயின் 30 வயது தாயான அம்பிகாவதியின் கணவர் புற்று நோயாள் இறந்துவிட்டார். “எனக்கு 510 தேயிலை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. களையெடுத்தல், உரமிடுதல், கொழுந்து பறித்தல் உள்ளிட்ட எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும். என் கணவரின் தந்தை உதவுகிறார். ஆனால் இப்போது அவருக்கு 70 வயதாகிவிட்டதால், அவரால் அதிகம் வேலை செய்ய முடியாது,” என அவர் கூறினார்.

“தோட்டத்தின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த மாதத்தில் இன்றுவரை (ஆகஸ்ட் 19) எங்களுக்கு 8 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த லயன் அறைகளிலேயே இப்பொழுதும் நாம் வாழ்கின்றோம். இங்கு முறையான  தண்ணீர் வசதி இல்லை, கழிப்பறைகள் இல்லை. தொழிற்சங்கங்கள் இதுபற்றி கவனிப்பது இல்லை,” என அம்பிகாவதி மேலும் தெரிவித்தார்.

கவுரவல பிரிவை சேர்ந்த எஸ். ரத்தினம் கூறியதாவது: "ஆரம்பத்தில் நாம் வருமானப் பங்கீட்டு முறைமையை எதிர்த்தோம் அதனால் தோட்ட நிர்வாகம் பல அழுத்தங்களை எங்கள் மீது திணித்தது.  சில நேரங்களில் அவர்கள் எங்களை மிரட்டினர். அவர்கள் எங்களை பழிவாங்கும் நோக்கில் நல்ல  கொழுந்து பறிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். இதனால் ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்து  ஆற்றில் வீசப்பட்டன.

“நாங்கள் ஒவ்வொரு நாளும் 18 கிலோ தேயிலை கொழுந்தை பறிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். 13 கிலோவுக்கும் குறைவாக பறித்தால் அரை நாள் வேலையா பதிவு செய்வார்கள்.  எனவே சுமார் 10 தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் அரை நாள் ஊதியம் பெறுகிறார்கள். சமீபத்தில் முடிவடைந்த கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிலாளர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. தொழிற்சங்கங்கள் எங்களைப் பாதுகாக்காததால் எங்கள் பிரிவில் தொழிலாளர்கள் இந்த முறைமையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் பிரிவில் ஒரு தொழிலாளிக்கு 700 கன்றுகள்  கொடுத்தள்ளனர்,” என்று அவர் கூறினார்.

தோட்டத்தின் சுகாதார வசதிகள் எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் விளக்கினார். "எங்கள் தோட்ட மருந்தகத்தில் இப்போது ஒரு மருத்துவர் இல்லை, மருத்துவருக்கு உதவிய தொழிலாளியே வேலை செய்கிறார் அவர்தான் மருந்தும் கொடுக்கிறார். தோட்டத்திலிருந்த நோயாளர் ஊர்தி தோட்ட நிர்வாகத்தால் விற்கப்பட்டுள்ளது. ஐந்து படுக்கைகளுடன் ஒரு மகப்பேறு வாட்டு இருந்தது. இது இப்போது மூடப்பட்டுள்ளது. உண்மையான தலைமை இல்லாததால் தொழிலாளர்கள் பிளவுபட்டுள்ளனர்” எனக் கூறிய அவர், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்மொழியும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கும், கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கும் செயற்படவதா கூறினார்.

சோ.ச.க. இன் வழிகாட்டுதலின் கீழ், ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தின் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பிற்கு  எதிராக ஒரு தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை அமைத்தனர். தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தில், அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வர்க்க நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கப் போராடி, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

கவுரவில தோட்டத்தின் ஓய்வுபெற்ற தொழிலாளி ஆசிர்வாதம், தன் மகனுக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தேயிலை செடிகளை சுற்றியுள்ள  புற்களைப் பிடுங்கிவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு வந்தார். “அதை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. என் மகனால் தனியாக அதை செய்ய முடியாது என்பதால் நான் அவருக்கு உதவுகிறேன். நான் ஒருபோதும் பாடசாலைக்கு  போகவில்லை. 40 வருடம் ஒரு சிறந்த தொழிலாளியாக தோட்டத்தில் வேலை செய்த அணுபவத்தில் கூறுகின்றேன், தேயிலைச் செடிகளை பிரித்துக் கொடுக்கும் வருமானப் பங்கீட்டு முறைமை மிகவும் பயங்கரமானது. இது பெற்றோர், குழந்தைகள் உட்பட ஒரு தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சகலரினதும் உழைப்பை சுரண்டி தோட்ட உரிமையாளர்கள் லாபத்தை கொள்ளையடிக்கும் முறைமையாகும்,” என அவர் விளக்கினார்.

ஆசிரியரின் பரிந்துரை:

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகாரமான ஊதிய வெட்டு திணிக்கப்படுகின்றது

W.A. சுனில்
12 ஏப்பிரல் 2019