ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington’s rush to indict Iran over Saudi attacks

வாஷிங்டன், சவூதி மீதான தாக்குதல்களுக்கு ஈரானைக் குற்றஞ்சாட்ட விரைகிறது

Bill Van Auken
17 September 2019

அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை மீண்டுமொருமுறை உலகின் நீதிபதியாக, நீதி விசாரணைக் குழு தலைவராக மற்றும் தண்டிப்பவராக காட்டிக் கொண்டு, மத்தியக் கிழக்கில் பேரழிவுகரமான பாதிப்புகளைக் கொண்ட மற்றொரு போரை நோக்கி பொறுப்பின்றி சென்று கொண்டிருக்கிறது. வாஷிங்டன் இம்முறை, ஈரானுக்கு எதிரான போருக்கு சாக்குபோக்காக சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான சனிக்கிழமை தாக்குதல்களைக் கைப்பற்றி உள்ளது.

சவூதி முடியாட்சியின் எண்ணெய் உற்பத்தியை ஏறத்தாழ பாதியளவுக்கு வெட்டி, உலகளாவிய நாளாந்த உற்பத்தியில் சுமார் 6 சதவீதம் குறைத்துள்ள இந்த தாக்குதல்களுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் விடையிறுப்பில் இருந்த விசித்திரமான வார்த்தைகளைப் போலவே அதன் பரபரப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

“ஈரான் உலகின் எரிபொருள் வினியோகத்தின் மீது முன்னொருபோதும் இல்லாத ஒரு தாக்குதலை இப்போது தொடங்கி உள்ளது,” என்று சனியன்று ட்வீட் செய்த பொம்பியோ, “அந்த தாக்குதல்கள் யேமனில் இருந்து வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

கிழக்கு சவூதி அரேபியாவில் நாசமாக்கப்பட்ட இரண்டு எண்ணைய் ஆலைகளில் அடுத்தடுத்து தீ வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் மீது சுமத்தப்படும் குற்றப்பத்திரிகையானது, அவை யேமனால் நடத்தப்பட்டதற்கு "ஆதாரம் இல்லை" என்ற மழுப்பலான வலியுறுத்தலைத் தவிர, வேறெந்த ஆதரவான ஆதாரமும் இல்லாமல் வந்தது.

வெளியுறவுத்துறை செயலரின் வேட்டையாடுவதற்கான தர்க்கத்தின்படி, யேமனின் பெரும்பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அத்தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்கள் மற்றும் அத்தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு தெளிவான உள்நோக்கம் இருப்பதனாலும் —அந்த முடியாட்சி யேமன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு நெருக்கமான போர் நடத்தியுள்ள போதினும்— யேமனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாதாம். அமெரிக்க வெகுஜன ஊடகங்கள் மொத்தத்தில் பொம்பியோவின் குற்றச்சாட்டுக்களை முற்றுமுதலான உண்மையாக எதிரொலித்தன. ஐயத்திற்கிடமின்றி இந்த "ஆதாரம்", வியட்நாமின் டொன்கின் வளைகுடா மற்றும் ஈராக்கில் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" போல அதேயளவுக்கு நிர்பந்தத்திற்கு போதுமானதாக நிரூபணமாகலாம். இதே ஊடக நிறுவனங்கள் யேமனில் சவூதி நடத்திய குற்றங்களைக் குறித்து தோற்றப்பாட்டளவில் எதையும் குறிப்பிடவில்லை.

சவூதி அரேபியா, கடந்த நான்கரை ஆண்டுகளாக, மத்திய கிழக்கின் மிகவும் வறிய நாடான யேமனுக்கு எதிராக இனப்படுகொலைக்கு நெருக்கமான ஒரு போரை நடத்தி உள்ளது. அந்த வன்முறை ஒட்டுமொத்தமாக அண்மித்து 100,000 யேமன் மக்களின் வாழ்வைப் பறித்துள்ளது —அதுவும் இதில் பெரும் பங்கு அப்பாவி மக்களை இலக்கில் வைத்த ஈவிரக்கமற்ற குண்டுவீச்சு நடவடிக்கை மூலமாக நடத்தப்பட்டிருந்தது— அதேவேளை சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமானவர்களை அது பட்டினியின் விளிம்புக்கு தள்ளியது.

அதை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட போர்விமானங்கள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியும், அத்துடன் தளவாட பொருட்களை வினியோகித்தும், கடந்தாண்டு இறுதி வரையில் சவூதி குண்டுவீச்சு விமானங்கள் தடையின்றி அட்டூழியங்களை நடத்த அவற்றுக்கு வான்வழியிலேயே எரிபொருள் நிரப்பி அளித்தும், வாஷிங்டன் தான் இந்த இரத்தக்களரியில் நேரடியாக உடந்தையாக இருந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க கடற்படையோ, யேமனை உணவு மற்றும் மருந்துக்காக பட்டினியில் கிடத்தி உள்ள ஒரு முற்றுகையைப் பலப்படுத்த உதவியுள்ளது.

சவூதி ஆலைகளைத் தாக்க அவர்கள் சரமாரியாக 10 ஆயுதமேந்திய டிரோன்களை அனுப்பியதாக யேமன் ஹௌதியர்கள் கூறுவது உண்மையென்றால், பின்னர் இந்த நடவடிக்கை தெளிவாக தற்காப்பு நடவடிக்கையாக இருந்ததுடன், யேமனுக்கு எதிராக சவூதி ஆட்சி நடத்திய படுகொலை விகிதத்துடன் ஒப்பிட்டால் இது மிகச் சிறிய ஒன்று தான்.

இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபைக்கான வாஷிங்டனின் புதிய தூதர் கெல்லி கிராஃப்ட், திங்களன்று, யேமன் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் மீண்டும் ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தினார். இரண்டு நாட்களுக்கு முன்னர் பொம்பியோ வழங்கியதை விட வேறெந்த கூடுதல் ஆதாரமும் வழங்காமல், வெறுமனே "இத்தாக்குதல்களை யேமன் நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்ற சூத்திரத்தையே மீண்டும் வலியுறுத்திய அப்பெண்மணி, சவூதி எண்ணெய் ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் "ஆழமாக தொந்தரவூட்டுவதாக" விவரித்தார்.

அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தைப் போலவே, அந்த ஐ.நா. தூதரும் —இவர் கென்டக்கி நிலக்கரி ஜாம்பவான் பில்லியனர் ஜோ கிராப்டின் மனைவி மற்றும் குடியரசு கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளர்— தெளிவாக யேமனில் பத்தாயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை விட சவூதி முடியாட்சி சிந்திய எண்ணெய் மிகவும் அதிகளவில் நிலைகுலைப்பதாக காண்கிறார்.

சனிக்கிழமை இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுதாபம் தெரிவிக்கவும் மற்றும் ஈவிரக்கமற்ற ஒரு படுகொலையாளராக அம்பலமான ஒரு மனிதருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவும், அந்த முடியாட்சியின் நடப்பு ஆட்சியாளராக விளங்கும், அடுத்து மகுடம் சூடவிருக்கும் இளவரசர் மொஹமத் பின் சல்மானை அழைத்து பேசினார். இளவரசர் பின் சல்மான், சுமார் ஒராண்டுக்கு முன்னர் இஸ்தான்புல்லின் சவூதி தூதரகத்தில் வாஷிங்டனை மையமாக கொண்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைப் பயங்கரமாக துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்ததற்கு மட்டும் பொறுப்பானவர் இல்லை, இந்தாண்டின் முதல் பாதியில் மட்டுமே குறைந்தபட்சம் 134 பேரின் தலையைத் துண்டித்ததற்கும் பொறுப்பாவார், இவர்களில் 34 பேர் ஏப்ரல் 23 அன்று மக்கள் பார்வைக்கு முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட அரசியல் நடவடிக்கையாளர்கள் ஆவர்.

அதற்கடுத்து ட்ரம்ப், சவூதி எண்ணைய் ஆலை தாக்குதலுக்குப் பழிவாங்க இராணுவ பலத்துடன் அமெரிக்கா "உறுதியுடன் தயாராக" (locked and loaded) இருப்பதாக அறிவித்தார். (இது, ஜூன் மாதம் ஈரானிய வான்எல்லையில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவுபார்ப்பு டிரோனை ஈரான் சுட்டுவீழ்த்தியதும் அதன் மீது அவர் அழிவுகரமான தாக்குதல்களைத் தொடங்க, அவரின் சொந்த விபரங்கள்படி, 10 நிமிடங்களுக்குள் இருந்த போது, பென்டகன் "விறைப்பாக தயாராக" (cocked and loaded) இருப்பதாக அவர் கூறிய வலியுறுத்தலின் மாற்று வடிவமாக இருந்தது.)

வாஷிங்டன் வாதங்கள்படி பார்த்தால், அந்த தாக்குதல்கள் யேமனில் இருந்து நடத்தப்பட்டன என்பதற்கு “ஆதாரம் இல்லை” என்பதை, ஒருவர், பெரும் நியாயப்பாடுகளுக்கு அவசியமின்றி, இதே போல, அவற்றை அமெரிக்கா நடத்தவில்லை என்பதற்கோ அல்லது அப்பிராந்தியத்தில் அதன் பிரதான கூட்டாளி இஸ்ரேல் நடத்தவில்லை என்பதற்கும் கூட அங்கே “எந்த ஆதாரமும் இல்லையே” என்று சமன்படுத்த முடியும்.

யார் பொறுப்பாளி (Cui bono)? அல்லது யார் ஆதாயமடைகிறார்கள்? என்ற பழங்கால துப்பறியும் விதியிலிருந்து ஒருவர் தொடங்கினால், தெஹ்ரான் மிகக் குறைவாக சந்தேகப்படக்கூடியதாக உள்ளது. கண்ணுக்குப் புலனாவதை விட தீர்மானத்திற்கு வருவதற்காக வாஷிங்டன் முண்டியடிப்பது மிகவும் தெளிவாக உள்ளது.

சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல், ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போர் தொடுக்க தீர்மானகரமாக உள்ள அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் பிரதான பிரிவுகளும் மற்றும் அதன் இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரமும் விரும்பும் போர் அறிவிப்புக்கான ஒரு காரணத்தை வழங்குகிறது. அதுபோன்றவொரு போர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்க வீழ்ச்சியை, குறிப்பாக உலக எண்ணெய் வளங்கள் மீது தங்குதடையின்றி அமெரிக்க கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும் மற்றும் அதன் போட்டியாளர்களுக்கு அவற்றை வழங்க மறுப்பதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், இராணுவ வழிவகைகள் மூலமாக தலைகீழாக்க வாஷிங்டனின் நீடித்த முனைவில் சமீபத்திய பகுதியாக இருக்கக்கூடும்.

இந்த அடுக்குகளுக்குள் நிலவும் சிந்தனை, அமெரிக்க நிதி மூலதனத்தின் ஊதுகுழல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் திங்களன்று வெளியான ஒரு தலையங்கத்தில் வெளியிடப்பட்டது. ஈரான் "சவூதியர்களைச் செய்வதைப் போலவே அதேயளவுக்கு திரு. ட்ரம்பையும் துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவரின் 'அதிகபட்ச அழுத்த' நடவடிக்கையை நடத்துவதற்கான அவரின் உறுதிப்பாட்டை அவர்கள் பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் அதன் பலவீனத்தை உணர்ந்திருக்கிறார்கள்,” என்று ஜேர்னல் எச்சரித்தது. ஜூன் மாதம் அமெரிக்க டிரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்ப் வான்வழி தாக்குதல்கள் தொடுக்க தவறியதை மேற்கோளிட்டு அது அதன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஈரான் “ஆட்சியின் முதுகெலும்பை உடைக்க" ஈரானிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது குண்டுவீசுவதற்கு அழைப்பு விடுத்ததையும், "வெள்ளை மாளிகையின் பலவீனத்தை உணர்ந்துள்ள ஈரான் அதை ஆதாயமாக எடுத்துக் கொள்ளுமென மீண்டும் மீண்டும் எச்சரித்த ஜோன் போல்டனிடம்" ட்ரம்ப் "மன்னிப்புக் கோர" வேண்டும் என்று அறிவுறுத்தியதை ஜேர்னல் மனத்திருப்தியுடன் மேற்கோளிட்டது. ஈரான் மீது குண்டுவீசுவதற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தி வருகின்ற போல்டன், தெஹ்ரானை நோக்கிய கொள்கை மீதான கருத்துவேறுபாடுகளாலேயே கடந்த வாரம் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து இராஜனாமா செய்தார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல், மேற்கு ஐரோப்பிய சக்திகளை —பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை— அமெரிக்க போர் நோக்கங்களுக்குப் பின்னால் கட்டிவைப்பதற்கு வாஷிங்டனுக்கு ஒரு நிறைவேற்றும் சாதனமாக அமைகிறது. ட்ரம்ப் நிர்வாகம் கைதுறந்த ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள இந்த நாடுகள் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடரும் ஒரு முயற்சியில் வாஷிங்டனின் "அதிகபட்ச அழுத்த" தடையாணைகளை எதிர்ப்பதில் வலுக்குறைந்த தோரணைகளையே காட்டியுள்ளன. ஈரான் தான் பொறுப்பு என்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களை அவை இதுவரையில் ஏற்கவில்லை என்றாலும், சவூதி அரேபியா மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட வழிவகைகள் மூலமாக, அவை அமெரிக்க போர் முனைவின் பின்னால் அலைபாயக்கூடும்.

ஈரானுடன் போரைத் தூண்டும் நோக்கத்துடன் ஓர் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இஸ்ரேலும் மற்றும் நெருக்கடியில் சிக்கியுள்ள அதன் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகுவும் பெரும் உத்வேகத்தில் உள்ளனர். இன்றைய இஸ்ரேல் தேர்தல் சூழலில், ஈரான் உடனான ஒரு மிகப்பெரிய போர் அச்சுறுத்தல் நெத்தன்யாகுவின் அரசியல் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது, இவரின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் பிரிக்கவியலாதபடிக்கு மத்தியக் கிழக்கில் இராணுவ மோதலைத் தீவிரப்படுத்துவதுடன் பிணைந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஈரான் உடனான ஒரு மோதல் மீது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டினது ஆளும் முடியாட்சிகளின் விருப்பம் வெளிப்படையாக குறைந்து வருவதன் மீது இஸ்ரேலிய அரசு அதிகரித்தளவில் கவலை கொண்டுள்ளது.

Middle East Eye வலைத் தள தகவல்படி, ஈரானிய ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் ஈராக்கிய ஷியா போராளிகளுக்கு எதிரான சமீபத்திய டிரோன் தாக்குதல்கள், சிரியாவில் பிரதான அமெரிக்க பினாமி படைகளான சிரிய ஜனநாயக படைகள் (SDF) என்றழைக்கப்படுவதன் கட்டுப்பாட்டில் உள்ள தளத்திலிருந்து செலுத்தப்பட்ட இஸ்ரேலிய டிரோன்களால் நடத்தப்பட்டிருந்தது. இதுபோன்ற கோழைத்தனமான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுறவே கூட மிக எளிதாக சவூதி எண்ணெய் தளங்கள் மீதான தாக்குதலை உருவாக்கி இருக்கலாம்.

சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குரிய துல்லியமான சூழல்கள் என்னவாக இருந்தாலும், அவை அமெரிக்க மக்களையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் விரைவிலேயே ஒரு பிராந்திய அளவிலான மற்றும் உலகளாவிய மோதலாக கூட தீவிரமடையக் கூடிய ஒரு போருக்குள் இழுக்கும் நோக்கங்களுக்காக சுரண்டிக் கொள்ளப்படுகின்றன.

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி என்ற சாக்குப்போக்கின் கீழ் ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானிய எதிர்தாக்குதல்களைத் தூண்டும் என்பதோடு, அமெரிக்க போர்க்கப்பல்களை பாரசீக வளைகுடாவின் அடிவாரத்திற்கு அனுப்பி, அப்பிராந்தியம் எங்கிலுமான அமெரிக்க இராணுவ தளங்களை அது அழித்து நாசமாக்க முடியும்.

வாஷிங்டனின் சூழ்ச்சிகள் மற்றும் ஆக்ரோஷத்தின் விளைவாக உயிரிழந்து வரும் ஆயிரக் கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் மற்றும் மாலுமிகளுக்கான எதிர்கால திட்டம், அமெரிக்க அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை ஏற்கும் அச்சுறுத்தலையும், “தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட பொலிஸ்-அரசு நடவடிக்களை நடைமுறைப்படுத்தும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது.

இது, எந்த விதத்திலும், முன்உத்தேசிக்கப்படாத ஒரு விளைவாக இருக்காது. போருக்கான கட்டமைப்பு என்பது பெரிதும் அமெரிக்காவுக்கு உள்ளேயே சமூக பதட்டங்கள் மற்றும் வர்க்க போராட்டம் தீவிரமடைந்து வருவதால் உந்தப்படுகிறது, இவை ஜெனரல் மோட்டார்ஸ் இக்கு எதிராக 46,000 வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் புதிய வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. இந்த பதட்டங்களை இராணுவ மோதல் வெடிப்பில் வெளியே திசைதிருப்புவதும், அதேவேளையில் வெகுஜனங்கள் மீதான ஒடுக்குமுறைக்காக சாக்குபோக்குகளை உருவாக்குவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த ஊக்கமருந்தாக இருக்கும்.

ஒரு மூன்றாம் உலக போருக்கு வழி வகுத்து வரும் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் அச்சுறுத்தல், ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டவும் மற்றும் சமூகத்தை சோசலிச அடித்தளங்களில் மறுஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் நனவுபூர்வமான ஓர் அரசியல் தலையீட்டைக் கொண்டு பதிலளிக்கப்பட வேண்டும்.