ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையின் வடக்கில் மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் “பயங்கரவாதத்தின்” எழுச்சி குறித்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

By Subash Somachandran and S. Jayanth
15 March 2019

இலங்கையின் வடக்கில் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன், “பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில்”, கடந்த 18 அன்று இலங்கை இராணுவத்தால் கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரவு ஆஸ்பத்திரிக்கு கடமைக்கு வந்துகொண்டிருந்த போது ஆனையிறவு சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த ஒரு தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

விசாரணையின் போது அவரிடம் கிடைத்ததாக கூறப்படும் "தகவல்களின்" படி, சின்னமணி கனேஷ்வரன், ரத்தினம் கிருஷ்ணராசா, மோகனசுந்தரம் சின்னதுறை, வினாயகமூர்த்தி நெஜிலன், ரி. நிமல்ராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை கரந்தாய் பகுதியில் ஒரு பெரிய அளவிலான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆழிவலை கடலின் பாறைகள் மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் அடங்கிய மற்றொரு பொதியை கடற்படை கண்டு பிடித்துள்ளதாகவும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் குற்றச்சாட்டுக்களை சோடிப்பதிலும், சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று அதை சாட்சியாக நீதிமன்றத்தில முன்வைப்பதிலும் பேர் போனதாகும். புலிகளுக்கு எதிரான இனாத யுத்தத்தின் போது நூறுக்கணக்கான தமிழர்கள் அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இறையாகினர்.

சட்ட வைத்திய அதிகாரி சிவரூபனை கைது செய்யத பின்னர், அவருக்கு எதிராக மிகவும் துஸ்டத்தனமான ஒரு பிரச்சாரத்தை முதலாளித்துவ ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோடபய ராஜபக்ஷவை படுகொலை செய்ய ஒரு திட்டம் இருப்பதாக அவர் ஒப்புதல் வாக்குமூம் கொடுத்துள்ளார் என்ற ஒரு புணை கதையை ஊடகங்கள் வேண்டுமென்றே வெளியிட்டன. கோடாபய ராபக்ஷவை கொல்வதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்பு திட்டமிட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிவரூபன் கேட்டுக்கொண்டதாக சிலோன் டுடே பத்திரிகை குறிப்பிட்டது.

அத்தகைய ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை சிவரூபன் அல்லது கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களோ கொடுக்கவில்லை என்றும் அதை முற்றிலும் நிராகரிப்பதாகவும் வியாழக்கிழமை (29) பொலிஸ் பேச்சாளர் அறிவித்தார்.

முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் முன்னெடுத்த பொய் பிரச்சாரங்களுக்கு மத்தியில் குருணாகல் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சியாப்தீன் மொஹமட் சாஃபி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக சத்திர சிகிச்சை செய்து செல்வத்தை குவிக்கின்றார் மற்றும் சிங்களப் பெண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்குகின்றார் என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று குற்றவியல் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

டாக்டர் சிவரூபனைக் கைது செய்தமை, இனவாதப் போரின்போது இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளின் ஒரு கையாக பணியாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) செய்த சதி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த கைதானது கொடூரமான அதே போல் பரந்த வேலைத் திட்டத்தினது பாகம் என்பது, சிவரூபன் கைது செய்யப்பட்டுள்ள விதம் மற்றும் முழுப் பொய்யான ஊடக பிரச்சாரத்திலும் வெளிப்பட்டுள்ளது.

முழு அரசியல் ஸ்தாபகத்துக்கும், அதன் இனவாத கும்பல்களுக்கும், இராணுவத்துக்கும் மற்றும் பொலிசுக்கும் உள்ள நோக்கமானது மீண்டும் புலிகள் தலை தூக்குகின்றனர் என்ற பிரச்சாரத்தின் மூலம் இனவாதத்தை தூண்டி விடுவதும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதுமே ஆகும், மற்றும் கோடாபய ராஜபக்ஷவை படுகொலை செய்யும் சதி பற்றி கூச்சலிட்டு அவரைச் சூழ கட்டியெழுப்பப்பட உள்ள அதிதீவிர வலதுசாரி இயக்கத்தை பலப்படுத்துவதுமே ஆகும்.

வெறித்தனமான முஸ்லிம் விரோத பிரச்சாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ள தமிழர் விரோத பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம், போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கு இடம் கொடுக்காமல், அவர்களை பிளவுபடுத்தி பொலிஸ் ஆட்சிக்கு வழி அமைப்பதாகும். இவ்வாறு வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர் போராட்டத்தை நசுக்கவதற்காக சர்வதேச ரீதியில் பாசிச மற்றும் அதிவலது இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

சிவரூபன் 2009 மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையுடன் முடிவுக்கு வந்த பிரவினவாத புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தார் என ஆகஸ்ட் 20 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதரனின் தெரிவித்தார்.

“2009-2010 யுத்தம் முடிந்த காலப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இராணுவ, பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, விபத்தில் இறந்ததாக தெரிவித்து அந்த விதத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவரூபன், இதில் பல மரணங்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளன, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன, நவீன முறைகளைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளன என்ற விடயங்களை வெளிக்கொண்டு வந்ததுடன் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தினார். அவர் இரண்டு முறை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமும் அளித்துள்ளார்,” என ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

2006 இல் யாழ்ப்பாணத் தீவுப் பகுதியான அல்லைப்பிட்டியில் ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு, காயமடைந்த போது, அவர்களை அங்கிருந்து மீட்டு வருவதற்காக, நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுடன் இணைந்து சிவரூபன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அமெரிக்கா அவருக்கு விருதும் வழங்கியுள்ளதாக ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் செய்த அம்பலப்படுத்தலைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலையில், நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீதரனின் வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.

ஸ்ரீதரனின் உரை, தமிழர்களுக்கு எதிராக உக்கிரமாக்கப்பட்டிருக்கும் வேட்டையாடலுக்கு எதிரானது அல்ல. இராணுவத்துக்கும் அமெரிக்கச் சார்பு அரசாங்கத்துக்கும் முண்டுகோலாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபகீர்த்திக்கு உள்ளாகி உள்ள நிலைமையின் கீழ், இது மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக நிலவும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதாகும். தமிழ் கூட்டமைப்பு இந்த கைதுகளை ஆதரிப்பதால், அது எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

சிவரூபன் கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள், கடந்த 20 அன்று பளை ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்தியரை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மீண்டும் ஆகஸ்ட் 22 அன்று, பொது மக்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தி, சிவரூபனை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு ஒரு மஹஜரையும் அனுப்பி வைத்தனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடிய நோயாளர்கள், வைத்தியர் சிவரூபன், சமூக அக்கறைகொண்ட, நோயாளர்களுக்கு சிரத்தையுடன் வைத்திய சேவையை வழங்கும் ஒரு மனிதாபிமானம் மிக்க வைத்தியர் எனத் தெரிவிக்கின்றனர். சிவரூபனிடம் சிகிச்சைப் பெறவதற்காக பளைப் பிரதேச மக்கள் மட்டுமன்றி, வடமாராட்சி கிழக்கு உடுத்துறை, மருதங்கேணி, தாழையடி போன்ற தூரப் பிரதேச கிராமங்களில் இருந்தும் நோயாளர்கள் வருகின்றனர்.

தற்போது, வைத்தியசாலையின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு ஒரேயொரு வைத்தியரே சேவையில் இருக்கின்றார். சீவரூபன் இல்லாத காரணத்தினால் நோயாளர்களில் ஒரு பகுதியினர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

தற்போது கடமையில் இருக்கும் வைத்தியர் எஸ். பகீரதன் “சிவரூபன் சம்பந்தமாகவோ ஆஸ்பத்திரி சம்பந்தமாகவோ ஊடகங்களுக்கு கருத்துக் கூற முடியாத நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக” தெரிவித்தார். எனினும், “வைத்தியர் சிவரூபன் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கடமையில் ஈடுபட வேண்டும். அவர் இல்லாத காரணத்தினால் அதிகமான வேலைப் பழு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி பிரதான ஏ9 வீதியில் இருக்கின்றபடியினால் பல நோயாளர்களும் விபத்தில் சிக்கியவர்களும் எந்த நேரமும் வருவார்கள். ஆகவே இந்த ஆஸ்பத்திரி எந்நேரமும் உசாராக இருக்க வேண்டும். இப்போது அதைச் செய்ய முடியாமல் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

“நான் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்ட தூரம் பிரயாணம் செய்தே வரவேண்டியுள்ளது. இப்போது நடைபெற்ற இந்த அசம்பாவிதம் என்னைக் கூட மனதளவில் பாதித்துள்ளது. நிதானமாக எனது வாகனத்தைக் கூட செலுத்த முடியாமல் உள்ளது. நன்மை செய்பவர்களுக்கு கூட இவ்வாறான கஸ்ட்டங்கள் வருகின்றன,” என்றும் பகிரதன் கவலை தெரிவித்தார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளரான கா. வைகுந்தநாதன் கூறியதாவது: “நேர்மையான ஒரு வைத்தியரை திருடனைப் பிடித்தமாதிரி வழியில் வைத்து மடக்கிப் பிடிப்பதற்கான தேவை ஏன் இருந்தது என்று எமக்கு விளங்கவில்லை. அவர் மக்கள் நலனுக்காக மட்டுமே செயற்படக் கூடியவர். குற்றங்கள் செய்யக் கூடியவர் இல்லை. அவர் இல்லாமல் எமது ஆஸ்பத்திரியை இயக்க முடியாமல் உள்ளது. வேறு வைத்தியர்களையும் அரசாங்கம் தரததால் பற்றாக்குறை நிலவுகின்றது.

“சிகிச்சை நாட்களில் தினமும் 100 தொடக்கம் 200 பேர் வரை வருவார்கள். மூன்று வாட்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நேரகாலம் பார்க்காமல் கவனிக்க கூடிய ஒரு வைத்தியரை அரசாங்கம் கைது செய்திருப்பது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது, என்று அவர் மேலும் தெரிவித்தார்.”

பளையைச் சேர்ந்த க. ஐயாத்துரை, இந்த அரசாங்கம் ஒரு கெட்ட அரசாங்கம், யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டாது, என்றார். “ஊருக்கு சேவை செய்த வைத்தியரை கைது செய்து வைத்திருக்கின்றது. இது அநியாயம். யுத்தக் குற்றவாளியை தளபதியாக இராணுவத் தளபதியாக நியமித்துள்ளனர். கோட்டாபய எங்கள் மக்களைக் கொன்றவர் அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். அவர் மீண்டும் வந்து எங்களைக் கொல்வார். எமது மக்கள் அவருக்கு வாக்குப் போடமாட்டார்கள். தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இந்த ஆட்சியாளர்கள் அநியாயமே செய்து வருகின்றார்கள்,” எனத் தெரிவித்தார்.

சிவரூபன் கைது செய்யப்பட்டுள்ளமை யுத்தக் குற்றச் சாட்டுக்கள் பற்றி சாட்சியம் அளித்தவர்களுக்கும் அதைப் பற்றி மீண்டும் சாட்சி வழங்க முனைபவர்களுக்கும் ஒரு அச்சுறுத்தல் மட்டுமன்றி, அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனம் சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி அடையும் எதிர்ப்பை அடக்குவதற்கான கொடூரமான முயற்சியாகும்.

30 வருட கால நீண்ட யுத்தம் பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதோடு வடக்கில் உள்ள மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. பொது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கைப்பற்றிக்கொண்டுள்ள இராணுவம், பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே பௌத்த விகாரைகளை கட்டியும் சிங்கள மக்களை குடியேற்றியும் வருவதாக தமிழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் தங்கள் நிலங்களைத் திருப்பித் தருமாறும், போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகள் மீண்டும் தலை தூக்கியுள்ளதாக அரசாங்கம், பாதுகப்பு படை மற்றும் பொலிசும் முன்னெடுக்கும் பிச்சாரமானது இனவாதத்தை தூண்டி விடவும் அதன் மூலம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை பிளவுபடுத்தி தொழிலாளர்களை பலவீனப்படுத்தும் பிற்போக்கு நோக்கம் கொண்டதாகும்.