ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Eighty years since the outbreak of World War II

இரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்

Bill Van Auken
31 August 2019

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 1, 1939 இல், ஜேர்மனியின் நாஜி அரசாங்கம் போலந்து மீது அதன் படையெடுப்பைத் தொடங்கியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர், பிரிட்டனும் பிரான்ஸும் ஜேர்மனி மீது போர் பிரகடனம் செய்தன. உலகெங்கிலும் விரிவடைந்து, 1945 இல் முடிவுறுவதற்கு முன்னர் ஆறு ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலக போர், கூறவியலாத கொடூரத்துடன் நடத்தப்பட்டது, அது வரலாற்றிலேயே மிகவும் காட்டுமிராண்டித்தனமான சம்பவமாக மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நினைவில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த போரின் போது மனிதகுலத்திற்கு எதிராக மிருகத்தனமான குற்றங்கள் நடத்தப்பட்டன. 70 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி கொண்ட அந்த போர், சண்டையிட்டோருக்கும் அப்பாவி மக்களுக்கும் இடையிலான எல்லா எல்லைக்கோடுகளையும் அழித்திருந்தது, போர்க்களத்தில் சிப்பாய்களின் எண்ணிக்கையை விட நிராயுதபாணியான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அண்மித்து இரண்டு மடங்கு அதிகமாக உயிரிழந்தார்கள்.

ஒட்டுமொத்த மக்களையும் பூண்டோடொழி அழிக்கும் திட்டமிட்ட முயற்சிகளோடு, நகரங்கள் மீது இடைவிடாது வீசப்பட்ட குண்டுவீச்சுகளும், அத்துடன் பொருளாதார இடையூறுகளால் உண்டான ஒட்டுமொத்த பசி பஞ்சங்களும், சேர்ந்திருந்தன.

செப்டம்பர் 1, 1939 இல், ஜேர்மனி, 2,000 இக்கும் அதிகமான போர்விமானங்கள் மற்றும் 2,500 டாங்கிகளுடன் சேர்ந்து 1.5 மில்லியன் துருப்புகளைப் போலந்து எல்லைக்குள் அனுப்புவதற்கு முன்னரே, போர் முனைவு ஏற்கனவே பாரியளவில் உயிர்களைப் பறித்திருந்தது. இத்தாலி 1935 இல் எத்தியோப்பியா மீது படையெடுத்த போது அது தேசங்களின் கழகத்தினது (League of Nations) திராணியின்மையை அம்பலப்படுத்தியது மற்றும் ஆறு ஆண்டுகளில் அண்மித்து 400,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஜப்பான் சீனா மீது படையெடுத்து ஆக்கிரமித்ததுடன், 1937-38 இல் ஈனத்தனமாக நான்ஜிங் கற்பழிப்பு சம்பவங்களை நடத்தியது. அதில் ஒரு நகரில் 300,000 வரையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த போர் முடிவதற்கு முன்னர், 15 மில்லியன் சீனர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இரண்டாம் உலக போர் உலகின் அரசியல் மற்றும் இராணுவ பேரகராதியில், மனிதப்படுகொலை (genocide), blitzkrieg என்ற அதிரடி யுத்தம், முற்றுமுழுமையான போர், யூத இன ஒழிப்பு (Holocaust), படுகொலை முகாம், இறுதி தீர்வு, சைக்லோன் பி (Zyclon B), அணுகுண்டு (A-bomb), காளான் கூட்டம் (mushroom cloud), துணைவிளைவுகள் (fallout), அவுஸ்விட்ச் (Auschwitz) மற்றும் ஹிரோஷிமா என்று ஈவிரக்கமற்ற புதிய வார்த்தைகளின் ஒரு தொகுப்பை அறிமுகம் செய்தது.

இரண்டாம் உலக போர் கொடூரங்களினூடாக பயணித்து வந்த பலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள். உயிர்பிழைத்தவர்களில், சிப்பாய்கள் மற்றும் அப்பாவி மக்கள் இரண்டு தரப்பினருமே, அவர்களின் எஞ்சிய வாழ்வில் உடல்ரீதியிலும், மனோரீதியிலும், உணர்வுரீதியிலும் வடுக்களைத் தாங்கியுள்ளனர். அவர்களின் குழந்தைகளது வாழ்வை வடிவமைப்பதிலும், போரை நோக்கிய பரந்த மக்களின் வெறுப்புணர்ச்சியை அவர்களுக்குள் உட்புகுத்துவதிலும் அவர்களின் அந்த கசப்பான அனுபவங்கள் அளப்பரிய பாத்திரம் வகித்தன.

அதுபோன்றவொரு உலக-வரலாற்று பிரளயத்தின் நினைவுதினம், 80 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களின் படிப்பினைகளை ஆராய்வதாகவும் மற்றும் மனித நாகரீகத்திற்கே முடிவு கட்டிவிடக்கூடிய மற்றொரு உலக போர் வெடிப்பதைத் தடுப்பது பற்றிய ஒரு தெளிவாக ஆய்விற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்வதாக இருக்க வேண்டும்.

உலகின் முதலாளித்துவ தலைவர்கள் இந்த நினைவாண்டின் அதிகாரபூர்வ நினைவுதின நிகழ்ச்சிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை வார்சோவில் ஒன்றுகூடுகின்ற நிலையில், அவர்களின் மனதில் இது கடைசி சிந்தனையாகவே இருக்கும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் போரின் தொடக்கத்தில் முதலிடத்தில் இருந்த மாதிரியான இராணுவவாதம் மற்றும் வலதுசாரி தேசியவாதத்தின் கொண்டாட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

1939 இல் முதல் குண்டுகள் முழங்கிய Gdansk நகரில் போலந்தின் எதிர்த்தரப்பினரின் தலைமையில் பாரம்பரியமாக நடத்தப்படும் நினைவுதின நிகழ்வுகளை, வலதுசாரி போலந்து தேசியவாதத்தின் நினைவு ஸ்தலமான வார்சோவின் Pilsudski சதுக்கத்திற்கு இடம் மாற்றுவதற்கு போலந்து ஜனாதிபதி ஆண்ட்ர்செஜ் துதா உத்தரவிட்டுள்ளார். அவரின் சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது ஒரு பாரியளவிலான தாக்குதலை நடத்தி உள்ளது மற்றும் யூத இன ஒழிப்பின் போது யூதர்களுக்கு எதிரான குற்றங்களில் போலாந்து உடந்தையாய் இருந்ததாக குறிப்பிட்டாலே கூட அது குற்றமாக ஆக்கும் அளவுக்குச் சென்று, வெளிநாட்டவர் விரோத வெறி மற்றும் யூத-எதிர்ப்புவாத பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அது நினைவுதின நிகழ்வுகளை போலாந்து இராணுவ "கதாநாயகர்களுக்கு" துதிபாடும் நிகழ்வுகளாக மாற்ற உத்தேசத்துள்ளது.

ட்ரம்பின் பாசிசவாத தேசியவாதம், புலம்பெயர்ந்தோர் விரோத பேரினவாதம் மற்றும் சர்வாதிகார அதிகாரங்களை ஏற்பதற்கான முயற்சிகளும் துதா மற்றும் PiS இன் அரசியலைப் பிரதிபலிக்கிறது, இவர் அமெரிக்காவை தாக்கவுள்ள டொரைன் சூறாவளி அணுகி வருவதைக் காரணங்காட்டி அந்நிகழ்வுகளுக்காக அவரின் வார்சோ பயணத்தை இரத்து செய்தார். அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அங்கே தோன்றுவார், போலந்தில் அவரை வரவேற்பவர்கள், அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 4,500 ஆக மேற்கொண்டு அதிகரிப்பதை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றனர். போலந்து அரசு அமெரிக்க சிப்பாய்களைத் தங்க வைப்பதற்கான ஓர் இராணுவத் தளத்திற்கு 2 பில்லியன் டாலர் செலவிட உடன்பட்டுள்ளது, அவர்கள் ஆரம்பத்தில் இந்த இடத்திற்கு "ட்ரம்ப் கோட்டை" என்று பெயரிட இருப்பதாக முன்மொழிந்திருந்தார்கள்.

அமெரிக்காவைப் பிரதிநிதித்துவம் செய்ய பென்ஸ் அங்கே இருப்பார், மற்றும் ஜேர்மனியைப் பிரதிநிதித்துவம் செய்ய சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் வார்சோவுக்கு செல்கிறார், அதேவேளை ரஷ்ய அரசு மற்றும் அதன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு எந்த அழைப்பிதழும் அனுப்பப்படவில்லை. நாஜி ஜேர்மனியை தோற்கடித்ததிலும் மற்றும் போலந்திலிருந்து ஹிட்லர் இராணுவத்தை வெளியே விரட்டியதிலும் சோவியத் ஒன்றியம் அளப்பரிய விலை கொடுத்துள்ள நிலையில், அந்த நினைவுதின நிகழ்வுகளில் இருந்து அதனை தவிர்த்தை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது.

ஆகஸ்ட் 23, 1939 இல் கையெழுத்தான ஸ்ராலின்-ஹிட்லரின் இழிவான தாக்குதல் தவிர்ப்பு உடன்படிக்கை போலந்து மீது நாஜி ஜேர்மனியின் படையெடுப்புக்கு அனுகூலமாக இருந்தது என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையாகும். அனைத்திற்கும் மேலாக, செப்டம்பர் 17, 1939 இல் சோவியத் ஆட்சி கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. இவை ஸ்ராலினிச ஆட்சியின் பிற்போக்குத்தனமான அரசியல் துரோக குணாம்சத்தின் நடவடிக்கைகளாக இருந்தன, அது போர் தொடங்குவதற்கு முன்னரே சோசலிசம் மற்றும் புரட்சிகர தொழிலாள வர்க்க சர்வதேசவாதத்தின் ஒவ்வொரு அடிப்படை கோட்பாட்டையும் காட்டிக் கொடுத்திருந்தது.

ஆனால் ஜூன் 22, 1941 இல் சோவியத் ஒன்றியம் மீது நாஜி படையெடுப்பு நடத்தப்பட்டு அதற்குப் பிந்தைய நான்காண்டுகளின் போது சுமார் 27 மில்லியன் சோவியத் மக்கள் அவர்களின் வாழ்வை இழந்தனர் என்பதும் உண்மையே. நிர்மூலமாக்கும் போராக நாஜி ஜேர்மனி நனவுப்பூர்வமாக எதை திட்டமிட்டதோ அந்த கொடுமைகளால் சோவியத் ஒன்றியம் துளைத்தெடுக்கப்பட்டது. இராணுவ உயிரிழப்புகளைப் பொறுத்த வரையில் மட்டுமே கூட, ஒவ்வொரு அமெரிக்க மரணங்களுக்கும் 80 சோவியத் சிப்பாய்கள் உயிரிழந்தனர். அனைத்திற்கும் மேலாக, சோவியத் ஒன்றியத்தின் தேசியமயப்படுத்தப்பட்ட தொழில்துறைகளின் போர் உற்பத்தியால் ஆதரவளிக்கப்பட்டிருந்த சோவியத் செம்படை, ஸ்ராலின்கிராட் மற்றும் குர்ஸ்க் போர்களில் ஹிட்லர் இராணுவத்தின் முதுகெலும்பை உடைத்து, ஹிட்லர் ஆயுதப்படைகளில் முக்கால்வாசி பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பாக இருந்தது.

எந்தவொரு நிகழ்வாக இருக்கட்டும், ரஷ்யாவை அழைப்பதில்லை என்ற முடிவு ஸ்ராலினிச குற்றங்களுக்கு விடையிறுப்பாக செய்யப்படவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்ட விருந்தினர்களாக வார்சோவில் இருப்பார்கள். போலந்து ஜனாதிபதி துதாவின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்: “அழைப்புகள் வரலாற்று உள்ளடக்கத்தில் அல்ல, சமகால சூழலுக்கேற்ப அனுப்பப்பட்டன,” என்றார்.

இந்த "சமகால சூழல்" என்ற இதில் ஒவ்வொரு பிரதான சக்தியும் போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன, ரஷ்யா மீதான ஆக்ரோஷமான அமெரிக்க-நேட்டோ சுற்றிவளைப்பில் போலந்து தன்னை முன்னிலையில் முன்னிறுத்தி உள்ளது.

வாஷிங்டன் 700 பில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை நிறைவேற்றி உள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற "வல்லரசுகளுக்கு" எதிரான போருக்குத் தயாரிப்பு செய்து வரும் அதன் மூலோபாய கொள்கையை அது அதிகாரபூர்வமாகவே பிரகடனப்படுத்தி உள்ளது. விண்வெளியை மற்றொரு புதிய போர்க்களமாக மாற்றுவதற்காக அர்பணிக்கப்பட்ட விண்வெளி கட்டளையகம் ஒன்றை ட்ரம்ப் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார், அவர் சமீபத்திய மாதங்களில் மூன்றாவது முறையாக, "10 மில்லியன் மக்களை கொல்வதன்" மூலமாக எவ்வாறு ஆப்கானிஸ்தான் போரை அவரால் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதை வெளிப்படுத்தி உள்ளார், இது வெளிப்படையாகவே ஹிட்லர் குற்றங்களுடன் போட்டியிடக்கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கக்கூடும்.

இரண்டாம் உலகப் போரை, முதலாவது போரை விட எந்தவொரு விதத்திலும், தனியொரு நாட்டின் நடவடிக்கைகளை கொண்டோ அல்லது அதை விட தனியொரு நபரின் கொடிய நடவடிக்கைகளைக் கொண்டோ விவரித்து விட முடியாது. இரண்டு தசாப்தங்களுக்கு சற்று அதிக கால இடைவெளியில் நடந்திருந்த அவ்விரு மோதல்களுக்கான வேர்கள் உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் தங்கியுள்ளன: அதாவது ஒருபுறம் உலக பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகள், மறுபுறம் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திக் கருவிகளின் தனிச்சொத்துடைமைக்கும் இடையிலான முரண்பாடுகளில் தங்கியுள்ளன.

எது எவ்வாறு இருப்பினும், இரண்டாம் உலக போர் வெடித்த சூழல்களும் மற்றும் அது எடுத்த வடிவமும் கேள்விக்கிடமின்றி முதல் எடுத்துக்காட்டில் நாஜி ஜேர்மனியின் போர் நோக்கங்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தன, அது தான் மனித வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத குற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்தது.

முற்றுமுழுமையான போர் கொள்கைகளில், அதாவது நிர்மூலமாக்கும் போர், மற்றும் "யூத பிரச்சினை" மீது ஹிட்லரின் "இறுதி தீர்வு" ஆகியவற்றில், உச்சத்தை எட்ட இருந்த அணுகுமுறைகள் ஏற்கனவே செப்டம்பர் 1939 இல் போலந்து மீதான படையெடுப்பில் வெளிப்பட்டிருந்தன.

போலந்து வரலாற்றாளர் ஒருவரின் கருத்துப்படி, செப்டம்பர் நடவடிக்கையின் போது அந்த படையெடுப்பு போலந்து நகரங்கள் மீது பரவலான குண்டுவீச்சு தாக்குதல்களைக் கண்டது, அங்கே ஏறக்குறைய நாளொன்று 15 பேர் கொல்லப்பட்டனர், இது சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களின் பாரிய நிர்மூலமாக்கலுக்கு முன்னறிகுறியாக இருந்தது. போலந்துக்கு உள்ளேயே கூட, சுமார் 3 மில்லியன் போலந்து யூதர்களும், அவர்களுடன் சேர்ந்து ஏறக்குறைய மற்றொரு 3 மில்லியன் யூதர்கள் அல்லாத போலந்தினர்களும், மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

நாஜிக்கள் நடத்திய குற்றங்களின் ஆழங்காணவியலாத அளவு ஒருபுறம் இருக்க, உண்மை என்னவென்றால் இன்று இத்தகைய குற்றங்களை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமாக ஆக்கவும் முயலும் கணிசமான அரசியல் சக்திகள் ஜேர்மனியில் உள்ளன என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரணகதியிலான எச்சரிக்கையை நிலைநிறுத்துகிறது.

இனவாத Alternative für Deutschland (AfD) இன் பிரதான தலைவர் சமீபத்தில் நாஜி அட்டூழியங்களைக் கொண்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் "பெருமைமிகு" ஜேர்மன் வரலாற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பக் கூடாது அது முக்கியத்துவமற்ற "பறவை எச்சம்" என்று ஒதுக்கித் தள்ளியதுடன், அக்கட்சி ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் (Bundestag) பிரதான எதிர்கட்சியாக மேலெழுந்துள்ளது. வலதுசாரி பயங்கரவாதிகள் ஜேர்மனியில் விதிவிலக்கீட்டுரிமையுடன் செயல்படுகின்றனர் என்பதோடு, அந்நாட்டின் உளவுத்துறை முகமைகளின் பாதுகாப்பையும் அனுபவித்து வருகின்றனர்.

ஹிட்லருக்கே புத்துயிரூட்டும் ஒரு நிகழ்முறை நடந்து வருகிறது. அந்நாட்டின் மிகவும் பிரபல மற்றும் அரசியல்ரீதியில் செல்வாக்கு மிக்க கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி நாஜி மிருகத்தனத்தைச் சாதாரணமாக ஆக்குவதற்காக வெளிப்படையாக பேசுகிறார். பெப்ரவரி 2014 இல் அவர் Der Spiegel இல் வெளியான ஒரு நேர்காணலில் குறிப்பிடுகையில், “ஹிட்லர் ஒரு மனநோயாளி கிடையாது. அவர் வக்கிரமானவரும் இல்லை. அவர் மேசையில் யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து செவிமடுக்கவும் கூட விரும்பவில்லை,” என்றார்.

இரண்டாம் உலக போர் போக்கின் போது ஹிட்லரிய பாசிசவாதத்திற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உழைக்கும் மக்களிடையே ஆழ்ந்த குரோதம் நிலவியதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களை ஒரு ஜனநாயக முறையீட்டுக்குப் பின்னால் மூடிமறைக்க முடிந்தது. இன்றோ, அண்மித்து மூன்று தசாப்த கால இடைவிடாத ஆக்கிரமிப்பு போர்களுக்குப் பின்னர், அது அதுபோன்ற எந்தவொரு முறையீட்டையும் நம்பத்தகுந்த முறையில் செய்ய முடியவில்லை மற்றும் வெளிநாட்டு இராணுவ தலையீடுகளுக்கு உள்நாட்டிலேயே அதிகரித்தளவில் மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

ஒரு புதிய உலக போரைத் தடுப்பது மீதான தீர்க்கமான கேள்வி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை பற்றிய கேள்வியாகும்.

இரண்டாம் உலக போர் எவ்வாறு தொடங்கியது என்பதை, சர்வதேச அளவில், குறிப்பாக ஜேர்மனியில், தொழிலாள வர்க்கத்தினுள் செல்வாக்கு செலுத்திய கட்சிகள் வகித்த பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை. ஹிட்லர் மற்றும் நாஜிக்களின் வளர்ச்சி என்பது, இறுதி பகுப்பாய்வில், ஜேர்மன் சமூக ஜனநாயகம் (SPD) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நடத்திய காட்டிக்கொடுப்புகளின் விளைவாகும், இவை மீண்டும் மீண்டும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வேட்கைகளை முடக்குவதற்காக செயல்பட்டன.

ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடாமல் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது மற்றும் ஸ்ராலின் தலைமையிலான மூன்றாம் அகிலம் அந்த வரலாற்று தோல்வி குறித்து விவாதிக்கவும் கூட மறுத்தமையும் தான், ஸ்ராலினிசத்திற்கு எதிராக தசாப்தங்களாக சமரசமின்றி போராடி வந்த லியோன் ட்ரொட்ஸ்கியை, சோசலிச புரட்சியின் நோக்கங்களை விட்டு மூன்றாம் அகிலம் மரணித்து விட்டது, ஒரு புதிய நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் மற்றும் சோசலிச புரட்சியின் உலக கட்சியாக அது கட்டமைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்க இட்டுச் சென்றது.

தீர்க்கவியலா பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி நிலைமைகள், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய இராணுவவாதம் ஆகியவை, மீண்டுமொருமுறை, அனைவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கட்டுப்பாடின்றி வெறியுடன் சண்டையாக வெடிக்க அச்சுறுத்துகிறது. அதே நேரத்தில், முதலாளித்துவ நெருக்கடி உலகந்தழுவிய வர்க்க போராட்டத்திற்குப் புத்துயிரைத் தூண்டிவிட்டு வருகிறது, முடிவில்லாத சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியோடு சேர்ந்து வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் திருப்பி தாக்கி வருகின்றனர்.

1914 மற்றும் 1939 ஐ போலவே, ஓர் உலகளாவிய ஏகாதிபத்திய மோதலின் அச்சுறுத்தல், மனிதகுலத்தின் முன் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற கேள்வியை முன்வைத்துள்ளது. ஒரு மூன்றாம் உலக போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறு 1945 இக்குப் பின்னர் எந்தவொரு காலத்தையும் விட இன்று மிகப் பெரியளவில் நிலவுகிறது. பெருந்திரளான மக்களிடையே ஏகாதிபத்திய சக்திகளைப் போருக்குள் உந்துகின்ற புவிசார் அரசியல் மோதல்களின் அளவு மற்றும் ஆழத்தைப் பற்றிய விழிப்புணர்வின்மையே தற்போதைய சூழ்நிலையின் மிகப்பெரிய ஆபத்துக்களில் ஒன்றாக உள்ளது. இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, அவை — ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கண்களை மூடிக்கொண்டு ஒரு பேரழிவை நோக்கி பாய்ந்தோடி கொண்டிருக்கின்றன. சர்வதேச மோதல்கள் ஒவ்வொரு நாடுகளுக்குள்ளேயே அதிகரித்து வரும் சமூக கொந்தளிப்புடன் குறுக்கிட்டு வருகையில், நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவ ஆட்சியோ அதிகரித்தளவில் போரை, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக முட்டுச்சந்திலிருந்து வெளி வருவதற்கான ஒரு வழியாக பார்க்கிறது.

1930 களில் போலவே, ஏகாதிபத்தியத்தின் தலைவர்களுக்குத் தார்மீக மற்றும் சமாதான முறையீடுகள் செய்வதன் மூலமாக போருக்கான பாதையைத் தடுக்க முடியாது. போருக்கான எதிர்ப்புக்கு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவது அவசியமாகிறது. இது தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முன்னெடுக்கும் முன்னோக்காகும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்
[18 February 2016]

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்
[3 January 2019]