ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Julian has reached a point where he may die”—Assange’s father John Shipton speaks with the WSWS

“ஜூலியன் இறக்கக்கூடிய நிலையை அடைந்துவிட்டார்” — அசான்ஜின் தந்தையான ஜோன் ஷிப்டன் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினார்

By Johannes Stern
5 October 2019

இலண்டனில் அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜூலியன் அசான்ஜின் நிலைமை பற்றி பேசுவதற்கு அவரது தந்தை ஜோன் ஷிப்டனை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் வியாழனன்று பேர்லினில் சந்தித்தனர். அதற்கு முந்தைய தினம், தனது மகனை சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைத்திருப்பது பற்றியும் அவரை விடுதலை செய்யும்படி கோருவதற்கும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஷிப்டன் பேசியதுடன், பேர்லினில் “மெழுகுவர்த்தி 4 அசான்ஜ்” என்ற வாராந்திர பேரணியில் உரையாற்றினார்.

மிகவும் இதயபூர்வமான மற்றும் தைரியமுள்ள மனிதரான ஷிப்டன் உடன் நடத்தப்பட்ட நேர்காணல் சுவராஸ்யமான மற்றும் சர்ச்சைக்குரிய அரை மணிநேர விவாதத்துடன் தொடங்கியது. மார்க்சிசம், சோசலிசம் மற்றும் ஒரு புரட்சிகர முன்னோக்கு மீதான நம்பகத்தன்மை தொடர்பாக அடிப்படை வரலாற்று மற்றும் தத்துவார்த்த ரீதியான பிரச்சினைகள் பற்றி கேள்வியை அவர் எழுப்பினார். ஆயினும், அமெரிக்காவிற்கு அசான்ஜ் கையளிக்கப்படுவதை தடுப்பதற்கும், அவரது சுதந்திரத்தை பாதுகாப்பதற்குமான ஒரு சக்திவாய்ந்த, சர்வதேச பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவது மட்டும்தான் நம் கையில் இருக்கும் பணி என்பதை இறுதியில் அவர் ஒப்புக்கொண்டார்.


பேர்லினில் “மெழுகுவர்த்தி 4 அசான்ஜ்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோன் ஷிப்டன்

பேர்லினுக்கு புறப்படுவதற்கு சற்று முன்பு தனது மகனை சந்தித்த ஷிப்டன், பெல்மார்ஷில் அவர் எதிர்கொள்ளும் பயங்கரமான சூழ்நிலை பற்றி விவரித்தார்.

“சிறு வரம்பு மீறல் நடவடிக்கைகள் குறித்து ஜூலியனுக்கு 50 வார கால சிறைதண்டனை விதிக்கப்பட்டு நாளொன்றுக்கு 22 முதல் 23 மணித்தியாலங்கள் வரையிலான கடும் தனிமைச் சிறைவாசம் உட்பட அதிகூடிய பாதுகாப்புள்ள சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், நாளொன்றுக்கு இரண்டு பொது நபர்கள் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அவரை சந்திக்கலாம் என்ற வரம்பும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இரண்டு மணிநேரங்கள் என்பது மிக மிக விலைமதிப்பற்ற விடயமாக உள்ளதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அதாவது பெல்மார்ஷ் சிறை முற்றிலும் பாதுகாப்பானது என்ற நிலையில் அங்குள்ள ஒருவரைச் சந்திக்க பதிவு செய்வதற்கான தேவைகள் அதிக சிக்கலானவை. இதுதான் அவரது தினசரி நிலைமையாக உள்ளது.”

தனது மகன் எந்தவொரு தகவலையும் அணுக முடியாத நிலையில் இருப்பதை ஷிப்டன் விளக்கினார். “நூலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கணினிகளை அவர் அணுவதற்கு அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவரது வழக்கை எதிர்கொள்ள அவர் தயாராவதற்கு நூலகம், கணினிகள் மற்றும் இணைய வசதி என எதையும் அவர் அணுக முடிவதில்லை. மேலும் எந்தவித தகவலையும் அவர் அணுக முடிவதில்லை.”

அசான்ஜின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதால் — பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தனது மகன் 15 கிலோ எடையை இழந்திருப்பதாக ஷிப்டன் தெரிவித்தார். சிறையிலுள்ள மருத்துவப் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

“நாளொன்றுக்கு 23 மணித்தியாலங்கள் இன்னமும் அவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார், என்றாலும் தற்போது கூட வாரத்திற்கு மூன்று பார்வையாளர்களை மட்டுமே அவர் சந்திக்க முடியும். இது ஏதோ முன்னேற்றமாக இருந்தாலும், இன்னமும் அது A தர அதிகபட்ச பாதுகாப்புள்ள சிறையாகத்தான் உள்ளது. ஆனால் ஜூலியன் B தர கைதி. இந்நிலையில், அவரது உடல்நலம் மிகவும் குன்றி வருவதுடன், இறந்து போகக்கூடிய ஒரு நிலையை அவர் அடைந்துள்ளார். அதிலும், எதுவும் செய்யாத ஒரு மனிதன். ஜூலியனும் உங்களைப் போன்ற ஒரு ஊடகவியலாளர் தான். உலகளவில் பத்திரிகை துறைக்கு தனது மகத்தான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். விக்கிலீக்ஸூம் மகத்தான மற்றும் எவரும் வெல்ல முடியாத பங்களிப்புகளை வழங்கியுள்ளது.”

விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல்களில், பாக்தாத் பொதுமக்களையும் மற்றும் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களையும் வேண்டுமென்றே கொன்றதை ஆவணப்படுத்திய மிகவும் இழிவான “கூட்டுக்கொலை” காணொளியும் ஒன்றாகும்.

உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இணைத்தூதரகங்களின் சதித்திட்டங்கள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் நூறாயிரக்கணக்கான அமெரிக்க இராஜதந்திர சதி வேலைகள் பற்றியும் நாங்கள் சுருக்கமாக பேசினோம். அப்போது, ஏகாதிபத்திய ஆதரவுள்ள சர்வாதிகாரங்களுக்கு எதிராக புரட்சி செய்வதற்கு துனிசியா மற்றும் எகிப்தில் உள்ள மக்களை ஊக்குவிப்பதில் 2011 இல் விக்கிலீக்ஸின் வெளியீடுகள் ஆற்றிய பங்கு பற்றி நான் குறிப்பிட்டேன்.

ஷிப்டன் பின்வரும் விடயங்களை ஒப்புக்கொண்டார்: “அங்கேலா மேர்க்கெலின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் ஏதோவொரு அமெரிக்க உளவுபார்ப்பு நிறுவனத்தால் ஒட்டுக் கேட்கப்படுவது பற்றி அம்பலப்படுத்தப்பட்டதும் இருந்தது. இதுவொரு அதிர்ச்சியூட்டும் விடயமாகும் என்ற நிலையில், நாடுகளுக்கு இடையிலான விதிமுறைகள் அனைத்து வகைகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை ஜேர்மன் மக்கள் உறுதி செய்வார்கள் என நான் நம்புகிறேன். குறிப்பாக ஜூலியன் விடயத்தில் தஞ்சம் கோருவது தொடர்பான சர்வதேச மரபுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் தான் கையெழுத்திட்ட சர்வதேச மரபுகளுக்கு அது கீழ்படிந்தால் அது ஐக்கிய இராஜ்ய மக்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும்.”

பிணை சட்டத்தை மீறியதாகக் கூறி தனது மகன் அதிகூடிய பாதுகாப்புள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற கருத்தை ஷிப்டன் கண்டித்தார். “பிணை மீறலுக்காக ஜூலியனை குற்றம்சாட்ட முடியாது, ஏனென்றால் அவர் அடைக்கலம் புகுந்தவர் என்ற நிலையில் ஒவ்வொரு அடைக்கலதாரியும் பிரிட்டிஷ் கையெழுத்திட்ட மரபுகளின் கீழ் வருவர். அதுவும் ஜூலியன் ஒரு ஊடகவியலாளர்.”

மேலும் அவர், “ஒவ்வொரு ஊடகவியலாளரும் தினமும் ஜூலியனின் உண்மை நிலைமை பற்றிய தகவல்களை தங்களது ஆசிரியர்கள் முன்பு வைக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். செய்தித்தாள்கள் அசான்ஜ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் செய்தி வெளயிடுவதற்கான மற்றும் விசாரிப்பதற்கான அவர்களது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் என்பதுடன் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் மற்றும் பிற தேடுபொறிகளால் உலக சோசலிச வலைத் தள தேடல் போக்குவரத்து 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு வருகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது பேச்சு சுதந்திரம் மீதான அடக்குமுறையாகும். இது, ஜூலியன் சுதந்திரமாக இருப்பதை நாமும், செய்தித்தாள்களும் மற்றும் ஊடக அமைப்புகளும் உறுதி செய்வதைப் பற்றியது. மேலும் இது செய்தி வெளியீட்டு சுதந்திரம் பற்றியது” என்றும் சேர்த்துக் கூறினார்.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அவருக்கிருக்கும் ஆதரவு பற்றி அவரது மகன் எந்தளவிற்கு அறிந்திருக்கிறார் என்று கேட்கப்பட்ட போது, ஷிப்டன் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதரவு பற்றி அவர் அறிந்திருக்கிறார். அடுத்த முறை அக்டோபர் 8 அன்று அவரைப் பார்க்கும்போது எனது இந்த அனுபவம் பற்றி அவருக்கு தெரிவிப்பேன். ஜேர்மனியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் அவருக்கு கிடைக்கும் ஆதரவின் ஆழத்தை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இங்கு அவருக்கு மிக மிக வலுவான ஆதரவு உள்ளது.”

“ஜூலியனின் கஷ்டங்களுக்கான பதில், உடன்படிக்கைகளும் சட்டங்களும் பின்பற்றப்படுவதையும், ஜூலியனுக்கு செய்தித்தாள்கள் ஆதரவளிப்பதிலும், ஐரோப்பாவின் பொதுமக்கள் ஒன்றிணைந்து உறுதி செய்வதிலிருந்து கிடைக்கும் என நான் கருதுகிறேன். மேலும், ஜூலியனின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங்கங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று ஐரோப்பாவில் வலியுறுத்தும் மக்கள் மத்தியில் இதற்கான பதில் இருப்பதாகவும் நான் நினைக்கிறேன்.”

நேர்காணலின் முடிவில், 1920 மற்றும் 1930 களில் ஜேர்மனியில் மிகவும் பிரபலமான போர்-எதிர்ப்பு ஊடகவியலாளர்களில் ஒருவரான கார்ல் வொன் ஒசியெட்ஸ்கியைப் பற்றி சுருக்கமாக நாங்கள் பேசினோம். அசான்ஜைப் போலவே, ஜேர்மன் இராணுவத்தின் சட்டவிரோத இராணுவ ஆயுதமயமாக்கல் பற்றியும் தேசிய பாதுகாப்பு இரகசியங்களையும் அம்பலப்படுத்தியதற்காக அவர் 1931 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் 1932 இல் அவர் விடுவிக்கப்பட்டார், என்றாலும் பின்னர் நாஜிக்களால் கைது செய்யப்பட்டார், அவர்கள் அவரை சித்திரவதை செய்தனர், இது 1938 இல் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.

“இவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை என்னால் பார்க்க முடிகிறது,” “என்றாலும், இது குறித்து நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை, ஏனென்றால் கிராம்சியைப் போல [இத்தாலிய பாசிச எதிர்ப்பு மார்க்சிஸ்ட்] அவர் ஒரு கசப்பான முடிவை எதிர்கொண்டார். அது மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இது நமது பணி. மேலும் நாம் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்” என்று ஜோன் ஷிப்டன் கூறினார்.