ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to American fascism! Build a mass movement to force Trump out!

அமெரிக்காவில் பாசிசம் வேண்டாம்! ட்ரம்பை பதவியிலிருந்து வெளியேற்ற ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்!

The Political Committee of the Socialist Equality Party
14 October 2019

காங்கிரஸ் இனால் தொடங்கி வைக்கப்பட்ட பதவிவிலக்கல் விசாரணைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் பிரதிபலிப்பு வெளிப்படையான பாசிச தன்மையுடன் இருந்தது. மின்னசோட்டா மாநிலத்தில் மின்னியாபொலிஸ் நகரத்திலும், மற்றும் லூசியானா மாநிலத்தில் லேக் சார்லெஸ் நகரத்திலும் சென்ற வாரம் ட்ரம்ப் ஆற்றிய உரையில், வெளிநாட்டவர் மீதான விரோதம், வகுப்புவாதம் மற்றும் யூத எதிர்ப்புவாதத்திற்கு வெளிப்படையாக முறையிட்டார். “அமெரிக்காவை வெறுக்கும்” “அதிதீவிர இடது” மற்றும் “சோசலிசவாத” அரசியல்வாதிகள் என்று அவர் கண்டிக்கும் அவரது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, அவரது கூட்ட பார்வையாளர்களான பொலிஸ் மற்றும் பிற வலதுசாரி சக்திகளை அவர் தூண்டிவிட்டார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னிகழ்ந்திராத வகையில், ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்க ட்ரம்ப் தனது ஜனாதிபதி அதிகாரத்துவத்தை பயன்படுத்த முனைந்து வருகிறார். மேலும், அனைத்து அரசியலைப்பு கட்டுப்பாடுகளையும் அவதூறாக பேசும் ட்ரம்ப், தொடர்ந்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள குற்றவியல் மற்றும் வன்முறை மிக்க முறைகளை பிரயோகிக்க தான் தயாராக இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மின்னியாபொலிஸில் வசைப்பேச்சுக்கள் நிரம்பிய அவரது உரையில், “இன்னும் 16 ஆண்டுகள்” தொடர்ந்து பதவியில் இருக்க அவர் உத்தேசித்திருப்பதாக முழங்கினார். இது அமெரிக்க அரசியலமைப்பை தூக்கிவீசாமல் சாத்தியமில்லை. அவரை அகற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் “உள்நாட்டுப் போருக்கு” வழிவகுக்கும் என்று அறிவித்து, ஒரு தனிநபர் சர்வாதிகாரம் குறித்த அவரது சட்டவிரோதமான கூற்றுக்களின் வன்முறைமிக்க தாக்கங்களை அவர் இரகசியமாக வைத்திருக்கவில்லை. மேலும், தனது அரசியல் எதிரிகள் “தேசத்துரோக” குற்றவாளிகள் என்று ட்ரம்ப் விடுத்த அறிக்கை கைதுகளினதும் கொலைகார தீர்ப்புக்களினதும் சாத்தியப்பாட்டை முன்கொண்டுவருகின்றது.

வியாழக்கிழமை அவரது உரையில் குறிப்பாக அச்சுறுத்தும் பத்தியில், “நாங்கள் படையினரை உள்நாட்டிற்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வேறு எதற்காவது அவர்களது தேவை இருக்கலாம் என்பதால், அவர்கள் தயாராக இருப்பார்கள்” என்று அறிவித்து, சிரியாவிலிருந்து துருப்புக்களை மீளப் பெறுவதற்கான தனது முடிவை ட்ரம்ப் பாதுகாத்தார். சர்வாதிகார அதிகாரங்களை அவர் வலியுறுத்தும் சூழலில், அமெரிக்காவிற்குள் எழும் உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தவிருப்பதற்கான ஒரு தெளிவான அச்சுறுத்தலாக இந்த “வேறு எதற்காவது” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. வெள்ளை மாளிகை, அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் புலம்பெயர்ந்தோர் மீது அதன் கொடூரமான தாக்குதல்களை செயல்படுத்த துருப்புக்களை அணிதிரட்டி இதை ஏற்கனவே செய்யத் தொடங்கியுள்ளது.

ட்ரம்பின் தலைமை, முற்றிலும் பாசிச குணாம்சங்களுடன் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நோக்கி விரைவாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை குறைத்து மதிப்பிடுவதும், மறுப்பதும், அரசியல் யதார்த்தத்தினை நோக்கி கண்ணை மூடிக்கொள்வது போன்றதாகும். “இது இங்கே நடக்காது” என்ற பழைய பல்லவி – அதாவது, அமெரிக்க ஜனநாயகம், பாசிச புற்றுநோய்க்கு நிரந்தரமாக தடுப்பாற்றலைக் கொண்டது என்பது நம்பிக்கையற்ற முறையில் காலாவதியாகிவிட்டது. ட்ரம்பைப் போன்ற ஒரு போக்கிரி வெள்ளை மாளிகைக்கு உயர்ந்திருப்பது தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்து வேரூன்றிய பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளின் விளைவாக உள்ளது. மக்கள்தொகையில் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் பெரும் செல்வம் குவிந்திருப்பது மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சமூக சமத்துவமின்மை ஆகியவை பாரம்பரிய ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக, அமெரிக்கா அதிகரித்தளவில் செல்வந்த தன்னலக்குழுவிற்கான சமூகமாக உருவெடுத்துள்ளது. பாரிய மக்கள் தொகையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட, மேலும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு கோரிக்கையையும் அதன் செல்வத்திற்கான அச்சுறுத்தலாகக் கருதும், செல்வந்த தன்னலக்குழு அதிகரித்தளவில் ஜனநாயகத்திற்கு விரோதமானதாக உள்ளது.

நியூயோர்க்கின் நிதி பாதாள உலகத்தின் விளைபொருளாகவுள்ள ட்ரம்பின் தேவையானளவு முரட்டுத்தனமும் அநாகரீகமான நடத்தையும் தன்னலக்குழுவின் சர்வாதிகார உந்துதல்களை வெளிப்படுத்திக்காட்டுகின்றது. சோசலிசம் மற்றும் கம்யூனிசம் மீதான அவரது வெறித்தனமான கண்டனங்கள், சமூக சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் தவிர்க்க முடியாமல் செல்வத்தின் பாரிய மறுபகிர்வுக்கு வழிவகுத்து, முதலாளித்துவ சொத்துக்களை அபகரிப்பதில் உச்சம் பெறும் என்பது போன்ற செல்வந்தர்களிடையே அதிகரித்து வரும் அச்சத்திற்காக குரல் கொடுக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து, ஜனநாயகத்தை மறுப்பதன் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறது. அவரது தலைமை ஆரம்பத்திலிருந்தே சட்டவிரோதமானது. கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வாக்குகளை அவர் இழந்த போதிலும், தேர்தல் பிரதிநிதிகள் முறையினால் ஜனநாயக-எதிர்ப்பு பொறிமுறை ஊடாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் சிறுபான்மை நிலையை ஒப்புக்கொள்வதற்கு மாறாக, ஒரு பாரிய வெற்றியுடன் அதிகாரத்திற்கு வந்தவர்போல் ட்ரம்ப் நடந்து கொள்கிறார். ஆனால் அவரது கொள்கைகள் – அவரது அனைத்து இழிவான ஜனரஞ்சக வாய்ச்சவடால்கள் - பெரும் மக்கள் எதிர்ப்பைத் தூண்டுகின்றன என்பதை அவர் நன்கறிவார்.

பொலிஸ், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் இராணுவத்தை உள்ளடக்கிய பார்வையாளர்கள் முன்னால் ட்ரம்பின் பிரசன்னங்கள், அத்துடன் அரசியல் ரீதியாக திசைதிருப்பப்பட்ட மற்றும் பின்தங்கிய கூறுகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கவனமாக நடத்தப்பட்ட அவரது பெரும் பேரணிகள் அனைத்தும், அமெரிக்க அரசியலமைப்பின் பாரம்பரிய சட்ட எல்லைகளுக்கு வெளியே செயல்படும் வகையிலான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு அவர் அடித்தளம் அமைப்பதற்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பை உருவாக்குவதற்காக கணக்கிடப்பட்ட முயற்சியின் பகுதிகளாக அவை உள்ளன.

அமெரிக்க ஜனநாயகம் ஒரு வரலாற்று முட்டுச்சந்துக்குள் வந்துள்ளது. ட்ரம்ப் தலைமை, அதிகாரத்தை தக்கவைக்க முனையும் நிலையில் அது அதிகரித்தளவில் சட்டவிரோத, சர்வாதிகார மற்றும் வன்முறை நிறைந்த குணாம்சத்தை கொண்டிருக்கும்.

இந்த நிர்வாகத்தை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவது என்பது ஒரு அரசியல் தேவை. ஆனால் எவரால், எந்த வழிமுறைகளால் இந்த நோக்கம் அடையப்பட முடியும் என்பது தான் ஒரு  வாழ்வா சாவா என்ற கேள்வியாக உள்ளது.

இப்போது வரை, ட்ரம்ப் மீதான உத்தியோகபூர்வ எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த பதவிவிலக்கல் விசாரணை என்பது, ஆளும் வர்க்கத்திற்குள் அதிகரித்தளவில் நிலவும் கசப்பான கன்னைப் போராட்டத்தின் விளைவாக உருவாகியுள்ளது. புலனாய்வு அமைப்புகள், இராணுவம் மற்றும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் அதிருப்தியுற்ற கன்னைகள் மீது தனது அடித்தளத்தை உருவாக்கி, ஜனநாயகக் கட்சி அரண்மனை பதவிக்கவிழ்ப்பு முறைகளை பிரயோகித்து வருகின்றது.

அரசு அமைப்பினுள் உள்ள ட்ரம்பின் எதிரிகள், அமெரிக்காவின் உலகளாவிய நிலைப்பாட்டின் நீண்டகால வீழ்ச்சியின் தாக்கங்கள் குறித்து கூர்மையான நனவுடன் இருக்கிறார்கள். ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை, அதிலும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய புவிசார் மூலோபாய அவசியங்களாக அவர்கள் கருதுபவை குறித்த மோதலில் ரஷ்யா மற்றும் சிரியா சம்பந்தப்பட்ட அதன் கொள்கை ஒழுங்கற்றும், முன்கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த காரணத்தினாலேயே அவர்கள் வெளியுறவுக் கொள்கை விடயங்களில் தமது எதிர்ப்பை மையமாகக் கொண்டுள்ளனர். இது, முதலில் ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்துடன் தொடங்கப்பட்டு, மேலும் இப்போது உக்ரேன் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியதை அடிப்படையாகக் கொண்டது.

அரசு அமைப்பினுள் ட்ரம்ப் எதிர்ப்பை ஊக்குவிக்கும் சமூக மற்றும் அரசியல் நலன்கள் தான் அவற்றின் வழிமுறைகளை தீர்மானிக்கின்றன. வலதுசாரி இயக்கத்தை வளர்த்தெடுக்க முனைவதன் மூலம் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதிலளிக்கும் அதேவேளை, ட்ரம்பிற்கு எதிராக மக்கள் சீற்றத்தை திரட்டும் எதையும் தவிர்ப்பதில் ஜனநாயகக் கட்சியினர் உறுதியாக உள்ளனர். இந்த அர்த்தத்தில், அமெரிக்காவிற்குள் வெடிக்கும் சமூக மோதல்களைத் தூண்டும் எதற்கும் அஞ்சி எப்போதும் தாம் வைக்கும் ஒவ்வொரு அடியையும் பின்னோக்கி பார்க்கும் தனது எதிரிகளை காட்டிலும் ட்ரம்ப், அரசியல் யதார்த்தங்களை மிக அதிகமாக உள்ளீர்த்துக் கொள்வதாக தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

இதனால்தான் இந்த பதவிவிலக்கல் குற்றச்சாட்டு விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் முற்றிலும் இரகசியமாக நடத்தப்பட்டு வருவதுடன், ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை குறித்த மோதல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது உள்நாட்டுக் கொள்கையின் முக்கியமான விடயங்கள் குறித்து ட்ரம்புடன் ஒத்துழைக்கையில், “தேசிய பாதுகாப்பை” இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி மீதான வெறித்தனமான கண்டனங்களுடனும், மற்றும் புட்டின் அரசாங்கத்தின் முகவராக செயல்படுவதாகவும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டுக்கள் மனச்சிதைவுற்ற பாசாங்குத்தனமான ஜனநாயகக் கட்சியினரின் நடத்தை பற்றியும் விவரிக்கிறது.

அவர்களது கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கசப்பானதாக இருப்பினும், ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளும், ஊதியங்கள் மற்றும் சலுகைகள் மீதான தாக்குதல், புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல், ஜனநாயக உரிமைகளை அழித்தல் மற்றும் பாரிய இராணுவ கட்டமைப்பு போன்ற சமூக திட்டங்களை அழிப்பதற்கு உடன்படுகின்றன. அவர்களது மோதல்களுக்கு மத்தியில், ஜனநாயகக் கட்சியினர் பாதுகாப்பு செலவினங்களுக்கான ட்ரம்பின் வரவு செலவுத் திட்ட மசோதாவை நிறைவேற்றியதுடன், செல்வந்தர்களுக்கான அவரது வரி வெட்டுக்களுக்கான வழியையும் எளிதாக்கினர்.

மோதல்கள் ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள பிளவுகளால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் வரை, அங்கு ஜனநாயக மற்றும் முற்போக்கான விளைவு என எதுவும் இருக்க முடியாது. ஜனநாயகக் கட்சியினரின் பதவிவிலக்கல் முயற்சி தோல்வியுறுமானால், அது ட்ரம்பின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பலம் சேர்க்கும். அது வெற்றி பெறுமானால், அது ட்ரம்பின் சக போட்டியாளரான மைக் பென்ஸை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தும். அதையும் தாண்டி, இந்த குற்றச்சாட்டு வெள்ளை மாளிகையில் CIA மற்றும் FBI இன் அரசியல் செல்வாக்கை உண்மையில் பலப்படுத்தும். மேலும் இது, அணுவாயுத சக்தியுடனான ஆபத்தான மோதலை நியாயப்படுத்தும் ரஷ்ய-எதிர்ப்பு வெறித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை நோக்கிச்செல்லும். இரண்டு விளைவுகளுமே தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கும்.

ஜனநாயகக் கட்சியின் ஆவேசம் மற்றும் பைடனுடன் செய்தி ஊடக நேர்காணல் மற்றும் உக்ரேன் ஜனாதிபதியுடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் ஆகியவை ஒரு திசைதிருப்புதலாகும். ட்ரம்பை நீக்குவதற்கான ஒரு பெரும் இயக்கத்திற்கு அவரது உண்மையான குற்றங்களை அடையாளம் காண வேண்டிய தேவை உள்ளது. மேலும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, மக்கள்தொகையில் பெரும் பெரும்பான்மையை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்துவதற்கான போராட்டத்துடன் தெளிவாக இணைக்கப்பட வேண்டும்.

பின்வரும் காரணங்களுக்காக ட்ரம்ப் பதவிநீக்கப்பட வேண்டும்:

· அரசியலமைப்பற்ற மற்றும் சட்டவிரோத சர்வாதிகாரத்தை உருவாக்க ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை ட்ரம்ப் பயன்படுத்துகிறார்

· எல்லைப்புற சுவர் எழுப்புவது உட்பட, தனது உள்நாட்டுக் கொள்கைகளை நிறைவேற்ற ட்ரம்ப் இராணுவத்தைப் பயன்படுத்துகிறார்.

· அரசியலமைப்பு ரீதியாக அதிகாரத்திற்குட்பட்ட கால வரம்புகளை மீறி அதிகாரத்தில் நீடிப்பதற்கு ட்ரம்ப் அச்சுறுத்துவதுடன், அவர் தனது தோல்விக்கு வழிவகுக்கும் தேர்தலை சட்டரீதியானது என ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

· ட்ரம்ப், தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி வருவதுடன் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் யூதர்களை பாரியளவில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்தும் பாசிசவாத தனிநபர்களையும் அரசியல் ரீதியாக தூண்டி வருகிறார்.

· அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் சித்திரவதை முகாம்களை நிறுவுவது உட்பட, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ட்ரம்ப் துன்புறுத்துகிறார்.

· ஒவ்வொரு வருடமும் 1,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களின் இறப்பிற்கு பொறுப்பாளியான பொலிஸின் வன்முறை நடவடிக்கைகளை ட்ரம்ப் ஊக்குவித்து வருகிறார்.

· அமெரிக்க கட்டளைகளை மறுக்கும் நாடுகளை சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டத்தை மீறி ட்ரம்ப் “நிர்மூலமாக்க” அச்சுறுத்துகிறார்.

· அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திரத்தை மீறி முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பை ட்ரம்ப் தேசத்துரோகத்துடன் ஒப்பிடுகிறார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டமும், மற்றும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும் முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக உள்ளது, இது முற்றிலும் சுயாதீனமாகவும், மேலும் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா ஒரு உலகளாவிய நெருக்கடியின் மையப்புள்ளியாக உள்ளது. எல்லா இடங்களிலும், ஜனநாயக ஆட்சி வடிவங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனியில், மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்கு 75 ஆண்டுகளுக்கு பின்னர், அங்கு பாசிசம் மீண்டும் ஒரு ஆபத்தான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரான்சில் வளர்ந்து வரும் சமூக அமைதியின்மைக்கு எதிராக சட்டங்கள் மூலம் இமானுவல் மக்ரோன் அரசாங்கம் அங்கு ஆட்சியை நிறுவியுள்ளது. பிரிட்டனை பாசிச போரிஸ் ஜோன்சன் ஆளுகிறார். மேலும், பிரேசில் மற்றும் இந்தியாவில், தீவிர வலதுசாரி மற்றும் தீவிர தேசியவாத அரசாங்கங்கள் ஆட்சியில் உள்ளன.

தீவிர சமத்துவமின்மை மற்றும் முடிவற்ற போரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்புமுறையோடு ஜனநாயக உரிமைகள் பொருந்தியிருக்காது. 1930 களின் படிப்பினைகள் என்னவென்றால், பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டம் என்பது, முதலாளித்துவ எதிர்ப்பையும் மற்றும் வெளிப்படையான சோசலிச வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த போராட்டத்திற்கு தேவையான முறைகள் வர்க்கப் போராட்டத்திற்கான முறைகளாக உள்ளன, மேலும், அதன் நோக்கம் செல்வத்தை தீவிரமாக மறுபகிர்வு செய்யும் வகையில் தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவது, பெரும் பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, மேலும் தனியார் இலாபத்திற்காக இல்லாது, சமூக தேவையின் அடிப்படையில் ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை செயல்படுத்துவது போன்றவையாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலக சோசலிச வலைத் தளம்,  அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும் என்ற அதன் அறிக்கையில் எழுதியது:

அமெரிக்காவில் பரந்த மக்கள் போராட்டங்கள் நிகழ்ச்சிநிரலில் இருக்கின்றன. ஆர்ப்பாட்ட பேரணிகளும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மற்றும் வேலைநிறுத்தங்களும் பொதுவான ஒரு தேசிய-அளவிலான தன்மையை பெறுவதற்கு முனையும். ட்ரம்புக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அத்தனைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் அதன் அரசுக்கும் எதிரான ஒரு அரசியல்மயமான வெகுஜன இயக்கத்தை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிலிருந்தும் சுயாதீனப்பட்டும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும், கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை முன்னினும் அவசரமான பணியாக முன்வைக்கும் என்பதே இந்த பகுப்பாய்வில் இருந்து பிறக்கக்கூடிய அரசியல் முடிவாகும்..

பெரும் போராட்டங்கள் இனி நீண்ட காலத்திற்கு “நிகழ்ச்சிநிரலில்” இருக்காது. அவை ஏற்கனவே தொடங்கப்பட்டு தீவிரமடைந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மக்கள் சீற்றத்தின் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் பல வெளிப்பாடுகள் காணப்படுகின்றன.

அமெரிக்காவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலையைத் தொடர்ந்து இந்த ஆண்டு 48,000 ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு மாத காலமாக நீடிக்கிறது, இது பல தசாப்தங்களில் வாகனத் தொழிலாளர்களின் மிக நீண்ட வேலைநிறுத்தமாக உள்ளது. ஜி.எம். வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த தொழிற்சங்கங்கள் முனைந்துள்ள நிலையில், பென்சில்வேனியா, மேரிலாந்து மற்றும் புளோரிடாவில் 3,500 மேக் ட்ரக் தொழிலாளர்களும், மேலும் அரிசோனா மற்றும் டெக்சாஸில் 2,000 சுரங்கத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும், சிகாக்கோவில் 20,000 க்கு அதிகமான ஆசிரியர்கள் இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம்.

ட்ரம்பை பதவி இறக்கக்கூடிய, மற்றும் அவரது பிற்போக்குத்தன வாய்ச்சவடாலை அம்பலப்படுத்தக்கூடிய சமூக சக்தி இங்குதான் உள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக, பெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொழிலாளர்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இந்த இயக்கத்தின் தர்க்கம் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்காக எழுப்பப்பட்ட நிலையில், இது அரசியல் அதிகாரம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. அத்தகைய இயக்கத்தின் ஒழுங்கமைப்பு, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைக்க, தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி நசுக்குவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக முக்கிய பணியிடங்கள் மற்றும் குடியிருப்பு குழுக்களின் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலைப்பின்னலை உருவாக்குவது அவசியம்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம், சமூக சமத்துவமின்மை, சமூக திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பின் அழிவு, வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல், இளைஞர்களின் ஒட்டுமொத்த தலைமுறையும் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொடூரமாக துன்புறுத்தப்படுவது, சுற்றுச்சூழல் சீரழிவு, மற்றும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் அச்சுறுத்துகின்ற முடிவற்ற மற்றும் விரிவடையும் போரின் விளைவுகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பு, அதே விதமான நலன்களை பகிர்ந்து கொண்டு அதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலான சமூக போராட்டங்களின் வெடிப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த புறநிலை இயக்கம், ஒரு நனவான சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு மூலம் வழிநடத்தப்பட வேண்டும். சோசலிசக் கட்சியும், மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் இந்த போராட்டத்தில் முன்னணி வகிக்கின்றன. இந்த முன்னோக்கிற்கு உடன்படும் அனைவரும், உலகெங்கிலுமுள்ள சோசலிச சமத்துவக் கட்சியுடனும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள அதன் சகோதரத்துவக் கட்சிகளுடனும் இணைவதற்கும் அவற்றை கட்டியெழுப்புவதற்குமான தீர்மானங்களை எடுக்க நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.