ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NATO defense ministers meet in Brussels to call for new Middle East wars

புரூசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் புதிய மத்திய கிழக்கு போர்களுக்கு அழைப்பு விடுக்கிறது

By Alex Lantier
25 October 2019

நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று புரூசெல்ஸில் இரண்டு நாள் உச்சிமாநாட்டைத் தொடங்கியதுடன், சிரியாவில் அவர்களது எட்டு ஆண்டு கால பினாமிப் போரின் படுதோல்விக்கு மத்தியில், மத்திய கிழக்கில் புதிய இராணுவ விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் படைகளுடன் சேர்த்து ஈடுபடுத்தப்பட்டிருந்த 1,000 அமெரிக்கத் துருப்புக்களை ட்ரம்ப் திருப்பியழைத்தமை, குர்திஷ் படைகள் மீதான துருக்கிய தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக இருந்தது என்ற நிலையில், சிரியாவில் சூழ்நிலை வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டணி நாடுகளுக்கு எதிராக கூர்மையான மாற்றம் கண்டுள்ளது. ரஷ்யா, துருக்கி மற்றும் சிரிய ஆட்சி ஆகியவை போருக்கு முந்தைய எல்லைகளுக்கு திரும்ப ஒப்புக் கொண்டன, அதேவேளை குர்திஷ் ஆயுதக்குழுக்கள் மீது எல்லை கடந்த திடீர் தாக்குதல்களைத் தொடுக்க அனுமதிக்கின்றன. மேலும், நேட்டோ ஆதரவு பெற்ற “கிளர்ச்சி” படையினரின் கடைசி ஆக்கிரமிப்பு பகுதியான வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அல்கொய்தாவுடன் இணைந்த ஆயுதக்குழுக்களை தாக்க சிரிய துருப்புக்களும் அணிதிரண்டு கொண்டிருக்கின்றன.

இந்த தோல்வியிலிருந்து தள்ளாடிவெளிவரும், நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் யுரேசியா முழுவதும் போரை நடத்துவதற்கான அவர்களது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துக்கூற முடியும் என்பதுடன், மேலதிக இராணுவ விரிவாக்கத்திற்கான முரண்படும் திட்டங்களையும் வழங்க முனைவர். அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிராக மேலதிக இராணுவ ஈடுபாட்டிற்கு முன்மொழிந்த அதேவேளை, 30,000 முதல் 40,000 துருப்புக்கள் அடங்கிய ஐரோப்பிய “அமைதி காக்கும்” படையை வடகிழக்கு சிரியாவை ஆக்கிரமிப்பதற்கு பயன்படுத்த ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப்-காரன்பவர் அழைப்பு விடுத்தது பற்றி விவாதமும் அங்கு நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர் விடுக்கப்பட்ட ஒரு சுருக்க பொது அறிக்கையில், நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க், “பால்கன்கள் முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நேட்டோவின் அனைத்து பணிகளையும் செயல்பாடுகளையும்” பாராட்டினார். மேலும், ஐரோப்பா அதன் இராணுவ செலவினங்களை அதிகரிக்க இன்று இன்னும் அழுத்தம் கொடுப்பதற்கு அவர் உறுதி பூண்டார்: “இரு தரப்பும் செலவிட முன்வருகையில், சுமை பகிர்வு குறித்த முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நான் எடுத்துக்காட்டுவேன், என்றாலும் பங்களிப்புக்களும் திறன்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும், நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் டிசம்பரில் இலண்டனில் சந்திக்கும் போது அவர்களுக்காக ஒரு அறிக்கையை நான் தயார் செய்வேன்.”

நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை குறித்த ஜேர்மன் அரசாங்கத்தின் முதல் முன்மொழிவான, கிராம்ப்-காரன்பவரின் முன்மொழிவு பற்றி கேட்கப்பட்டபோது, ஸ்டோலென்பெர்க் அதை அங்கீகரித்தார்: “இந்த முன்மொழிவைப் பற்றி பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப்-காரன்பவருடன் நான் விவாதித்தேன். இந்த விடயத்தில், நாம் எப்படி முன்னேறிச் செல்வது என்பதற்கு நேட்டோ கூட்டணி நாடான ஜேர்மனி திட்டங்களையும் யோசனைகளையும் முன்வைப்பது சாதகமாக உள்ளது.”

அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை விரைவாக கொண்டு சேர்க்கும் பென்டகனின் திறமையை சோதிக்க Defender 2020 பயிற்சி நடத்தப்படுவது, மற்றும் ரஷ்யா உடனான போரை நோக்கி ஒட்டுமொத்த நேட்டோ அணிதிரள்வில் பங்கேற்பது உட்பட, பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கான நேட்டோவின் தயாரிப்புக்களை ஸ்டோலென்பெர்க் அடிக்கோடிட்டுக் காட்டினார். தென் சீனக் கடலில், சீன கடற்கரைப் பகுதிக்கான ஆத்திரமூட்டும் கடற்படை சூழ்ச்சிகளும் சேர்ந்து, பசிபிக் பகுதியிலும் இந்த பயிற்சி நடத்தப்படும். எவ்வாறாயினும், கிராம்ப்-காரன்பவுர் முன்மொழிந்த படி, சிரியாவில் நேட்டோ அல்லது ஐரோப்பிய படையெடுப்பு பற்றி உடனடியாக ஊகிக்க ஸ்டோலென்பெர்க் மறுத்துவிட்டார்.

மேலும், ஸ்டோலென்பெர்க், “சாத்தியமுள்ள மற்றும் சாத்தியமற்ற அனைத்து தேர்வுகளையும் பற்றி ஊகிக்க இப்போது நான் தொடங்கினால், நிச்சயமற்ற தன்மை பற்றி மட்டுமே நான் குறிப்பிடுவேன்… ஏனென்றால் வடகிழக்கு சிரியாவில் ஒரு நேட்டோ நடவடிக்கைக்கு அழைப்பு எதுவும் வரவில்லை” என்று சேர்த்துக் கூறினார்.

நேற்றைய கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களுக்கு ஒரு சுருக்கமான அறிக்கையை வழங்க ஸ்டோலென்பெர்க் மாலையில் மீண்டும் பிரசன்னமானார். அப்போது அவர், நேட்டோ கூட்டணி நாடுகளிடையே “மாறுபட்ட கருத்துக்கள்” இருப்பதாகவும், அவை “பகிரங்கமாக அறியப்பட்ட” மோதல்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். வடகிழக்கு சிரியாவின் நிலைமை “மிகவும் தீவிரமானது” என்று குறிப்பிடப்படும் அதேவேளை, இந்த பிராந்தியத்தில் “துருக்கிக்கு பாதுகாப்பு பற்றிய நியாயபூர்வமான கவலைகள் உள்ளன” என்பதை அவர் அங்கீகரித்ததாக தெரிவித்ததுடன், சிரியாவுக்கு ஜேர்மன் அல்லது ஐரோப்பிய துருப்புக்களை அனுப்ப துருக்கி ஒப்புக் கொள்ளுமா என்ற செய்தியாளர்களின் கேள்வியை அவர் தவிர்த்தார்.

கிராம்ப்-காரன்பவர் தனது சக நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களுக்கு பேர்லினின் முன்மொழிவு பற்றி சுருக்கமாக விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தாலும், அதை சுருக்கமாகச் சொல்ல முயற்சிப்பது “தவறு” என்று ஸ்டோலென்பெர்க் கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ தோல்வியும், மற்றும் மத்திய கிழக்கு மற்றும் நேட்டோ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் போரை மிகவும் குறைத்து மதிப்பிடுவதும் கூட்டணியை தடுமாறச் செய்துள்ளது. துருக்கி பற்றி வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இரண்டும் எழுப்பிய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, ட்ரம்பை குற்றம்சாட்டுவதற்கான உந்துதலுக்கு அடித்தளமாக உள்ள அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் உள்ள வெளியுறவுக் கொள்கை மோதல்கள் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கினரிடையே தெளிவான மோதல்கள் உள்ளன. எவ்வாறாயினும், அனைத்து பல்வேறு கன்னைகளும் அணுவாயுத சக்திகளுக்கு எதிரான இராணுவ விஸ்தரிப்புக்கான உத்திகளை முன்வைக்கின்றன என்றாலும், அவை தொழிலாளர்களுக்கு பேரழிவுகர விளைவுகளையே ஏற்படுத்தும்.

கிராம்ப்-காரன்பவரின் திட்டம் சிரியாவில் ரஷ்யா உடனான மோதலை நேட்டோ தொடங்குவதை உள்ளடக்கியிருக்கும் அதேவேளை, முதலில் சீனாவுடனான போருக்கு தயார் செய்வது குறித்து அமெரிக்க முதலாளித்துவத்தின் கன்னைகள் கவனம் செலுத்தியது பற்றி எஸ்பர் பேசினார். “நாங்கள் எங்களது முதன்மை கவனத்தை பெரும் வல்லரசு போட்டிக்கு மாற்றுகின்ற நிலையில், தேசிய பாதுகாப்பு மூலோபாயம் முதலில் சீனா, இரண்டாவது ரஷ்யா என்று முன்னுரிமை அளிக்கிறது,” என்று நேற்று புரூசெல்ஸில் ஜேர்மன் மார்ஷல் நிதி குறித்து உரையாற்றுகையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.   

இந்த அடிப்படையில், சிரியாவில் அடுத்தகட்ட போர்கள் பற்றி எஸ்பர் எதுவும் குறிப்பிடவில்லை, மாறாக ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாக இராணுவ விரிவாக்கத்தில் இணையுமாறு ஐரோப்பிய சக்திகளுக்கு அழைப்பு விடுத்தார். ஈரானுக்கு எதிரான இராணுவ தயாரிப்பின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் திட்டங்களை முன்வைத்து, அவர் இவ்வாறு கூறினார்: “ஈரானிய ஆக்கிரமிப்பை தடுக்க உதவுவதற்கு எங்கள் வழியை பின்பற்றும் படியும், அவர்களது சொந்த ஆதரவை வழங்கும் படியும், மேலும் அந்த பிராந்தியத்தில் ஸ்திரப்பாட்டை மேம்படுத்தவும், சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை பாதுகாக்கவும் ஐரோப்பாவில் உள்ள எங்களது கூட்டாளிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

மேலும், வடகிழக்கு சிரியாவில் குர்தியர்களை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போரை நடத்துவதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆர்வமின்மை குறித்த கூடுதல் அடையாளமாக, குர்திஷ் ஆயுதக்குழுக்களை தாக்கியதற்காக துருக்கி மீது திணித்திருந்த குறுகியகால பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை ட்ரம்ப் இரத்து செய்தார்.

ஆயினும், சிரியா குறித்து ரஷ்யாவுடன் மோதுவதற்கான அவரது திட்டத்துடன் மேலும் அழுத்தம் கொடுப்பதை கிராம்ப்-காரன்பவர் தொடர்ந்தார். பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த பின்னர், நேட்டோவிற்குள் தனது திட்டத்திற்கு இருக்கும் ஆதரவு “மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று கூறினார். என்றாலும், “இது இன்னும் நீண்ட செயல்முறையாகவும், கடினமான பாதையாகவும் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

ஆறு ஆண்டுகளாக ஜேர்மன் மறுஇராணுவமயமாக்கலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்த ஊடகங்களில் பல, கிராம்ப்-காரன்பவரின் திட்டத்தை அபிவிருத்தி செய்ய நேரம் தேவைப்படும் என்று குறிப்பிட்டன. அவரது திட்டம், “சர்வதேச உற்சாகத்தை தூண்டவில்லை – எதிர்வினைகள் கட்டுப்படுத்தப்பட்டன. புரூசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அவரது முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் எந்தவொரு நாடும் திட்டவட்டமாக ஆதரவளிக்க உறுதியளிக்கவில்லை” என்று மேர்க்கூர் எழுதினார்.

முனீச் பாதுகாப்பு குழு தலைவர் வொல்ஃப்காங் இசிங்கர், Der Spiegel வாராந்திர சஞ்சிகைக்கு, அவரது திட்டம் “எவ்வாறாயினும், இராணுவ ரீதியாக பொருத்தமான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென முன்னதாகவே தெரிவிக்கிறது. இதன் பின்னர், இது இப்போதைய நிலைமை போன்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

உண்மையில், கிராம்ப்-காரன்பவர் திட்டத்தை ஆராய்கையில், இது உடனடி இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் என்பதை விட, இது ஒரு இராணுவ கட்டமைப்பிற்கான அழைப்பு என்பதுடன், ஜேர்மனிக்குள் ஒரு இராணுவவாத சூழ்நிலைக்கு தூண்டுதலளிக்கும் என்று தோன்றுகிறது. மேலும் இது, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கொள்கையின் போக்கு பற்றிய எச்சரிக்கையாகும். ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் இராணுவத் திறன்களின் விரிவாக்கத்திற்கு பேர்லின் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது, இதன் விளைவாக பாரிய இராணுவ செலவு அதிகரிப்பும், மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் மீது பெரும் தாக்குதல்களும் நிகழும்.

ஆப்கானிஸ்தான் அல்லது ஈராக் போர்களில் ஆண்டுக்கு ஒரு சிப்பாய்க்கு ஒரு மில்லியன் டாலர் என்ற செலவில் நேட்டோ துருப்புக்களை ஈடுபடுத்துவது ஒருபுறமிருக்க, 40,000 ஐரோப்பிய துருப்புக்களை ஈடுபடுத்துவதற்கு ஆண்டிற்கு பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் அளவிற்கான வரவு செலவுத் திட்டத்துடன் கூடிய ஐரோப்பிய இராணுவ விரிவாக்கம் தேவைப்படும். இருப்பினும், சிரியாவில் அத்தகைய படையை சுயாதீனமாக ஈடுபடுத்தும் திறன் ஐரோப்பிய சக்திகளிடம் உள்ளதா இல்லையா என்பதும், அந்த நாட்டிலிருந்து அமெரிக்க பின்வாங்கலுக்கு மத்தியில் அதை மீண்டும் வழங்கவும், அத்தகைய சக்தி என்ன செய்யும் என்பது தெளிவாக இல்லை.

சிரியாவில் நேட்டோ பினாமி ஆயுதக்குழுக்களை தோற்கடித்த ரஷ்யாவுடன் கூட்டினை ஏற்படுத்தி ரஷ்ய போர்விமானம் மற்றும் விமானப்படை ஏவுகணைகளை பெற்ற கூட்டணி ஐரோப்பிய சக்தியை விட தீர்க்கமான ஒரு வலிமையான சக்தியாகும். இது சிரிய இராணுவத்தின் எஞ்சிய 200,000 இராணுவத்தினர் மற்றும் 80,000 சிரிய கூட்டணி அல்லாதவர்களை மட்டும் உள்ளடக்காமல், அதற்கு மாறாக, சிரியாவில் பணியாற்றிய சுமார் 40,000 ஈரானிய துருப்புக்கள், லெபனான் ஹெஸ்பொல்லா போராளிகளின் பல்லாயிரக்கணக்கான போராளிகள், மற்றும் சிரியாவில் பணியாற்றும் லிவா பாட்மியோன் போன்ற ஈரானிய சார்பு ஆப்கான், ஈராக் அல்லது பாகிஸ்தான் போராளிகளின் 20,000 உறுப்பினர்களை கொண்டது.

இதற்கு, ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மட்டுமல்லாது, சீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பிற்கு மத்தியில், நேட்டோவுடன் இணைந்த உய்குர் இஸ்லாமிய “கிளர்ச்சியாளர்களை” எதிர்த்துப் போராட சிரியாவுக்கு அனுப்பப்பட்ட சீன “நைட் டைகர்” சிறப்பு படைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

நேற்று, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிரியாவிற்கு அதிகமான வெளிநாட்டு துருப்புக்களை அனுப்புவது தொடர்பாக ரஷ்யாவின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். அவர், “சிரியாவில் அமெரிக்க சிப்பாய்களின் பிரசன்னத்தைப் பொறுத்தவரை, எங்களது நிலைப்பாடு நன்கு அறியப்பட்டது – சிரிய தலைமையின் அழைப்பின் பேரில் ரஷ்ய படைகள் மட்டுமே சிரியாவில் உள்ளன. நிச்சயமாக, இறுதி இலக்கு சிரிய அரபு குடியரசு பிரதேசத்திலிருந்து அனைத்து வெளிநாட்டு ஆயுதப்படைகளையும், வெளிநாட்டு இராணுவத்தையும் முழுமையாக மீளப்பெறுவதாகும்” என்று தெரிவித்தார்.

இத்தகைய சக்திகளை எதிர்கொள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான வாஷிங்டன் மற்றும் பேர்லினின் முடிவு உலகப் போர் குறித்த ஆபத்து அதிகரிப்பதற்கான மற்றொரு எச்சரிக்கையாக உள்ளது.