ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former US Secretary of State Kissinger points to danger of “catastrophic” conflict between US and China

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

By Nick Beams
16 November 2019

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஹென்றி கிஸ்ஸிங்கர், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே, சாத்தியமான "பேரழிவுகரமான" விளைவுடன் ஒரு தவிர்க்கவியலாத "மோதல்" குறித்து எச்சரித்துள்ளார்.

வியாழக்கிழமை நியூ யோர்க்கில் அமெரிக்கா-சீன உறவுகளுக்கான தேசியக் குழு ஒழுங்கமைத்திருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில், கிஸ்ஸிங்கர் அமெரிக்கா-சீனா உறவில் "உலகத்தின் எதிர்காலம் தங்கியிருப்பதாக" தெரிவித்தார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (வலது) மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் மக்கள் மாமன்றத்தில் ஒரு வரவேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர் [புகைப்படம்: அசோசியேடெட் பிரஸ்/ஆண்டி வொங்]

“ஐயத்திற்கிடமின்றி சீன பரிணாமத்தின் பல அம்சங்கள் அமெரிக்காவுக்குச் சவால் விடுத்து வருகின்றன,” என்று கூறிய அவர், “இன்றியமையாதது என்னவென்றால், அவற்றுக்கு இடையே ஒரு நிரந்த மோதலில் ஒருவரும் ஜெயிக்க முடியாது என்பதை இரண்டு நாடுகளும் புரிந்து கொள்ளவேண்டும். அது ஒரு நிரந்தர மோதலுக்கு இட்டுச் சென்றால் அங்கே ஒரு பேரழிவுகரமான விளைவு ஏற்படும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றால், நிகழவிருக்கும் மோதல் "ஐரோப்பிய நாகரீகத்தையே நாசப்படுத்திய உலகப் போர்களை விட படுமோசமானதாக இருக்கும்,” என்றார்.

“ஒரு தரப்பு மற்றொன்றை ஆதிக்கம்செலுத்த முடியும் என்று சிந்திப்பது இனி சாத்தியமே இல்லை,” என்று கூறிய அவர், “அவர்களுக்கு இடையே அவ்வாறான போட்டித்தன்மையை இருக்கின்றது என்ற உண்மைக்கு அவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்,” என்றார்.

இருதரப்பின் தலைவர்களும் பணயத்தில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து கொள்வார்கள் என்பதில் அவருக்கு "நம்பிக்கை" இருப்பதாக  கிஸ்ஸிங்கர் தெரிவித்தார். வரலாற்று அனுபவம் வேறுவிதமான இருக்கின்றது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.

செப்டம்பரில் ஆசியாவுக்கு விஜயம் செய்திருந்த முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல். மார்க் மில்லெ, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் "வல்லரசு போட்டிக்கு" மத்தியில், ஆசிய பிராந்தியம் அமெரிக்க இராணுவத்தின் முன்னுரிமையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கிஸ்ஸிங்கர் 2012 இல் பிரசுரிக்கப்பட்ட On China என்ற அவரது நூலில், பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான உறவுகளை ஆய்வு செய்ய பொறுப்பேற்றிருந்த பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அதிகாரி Eyre Crowe ஆல் 1907 இல் பிரசுரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

ஜேர்மன் ஆட்சியாளர்களின் உத்தேசங்கள் என்னவாக இருந்தாலும், அதன் பொருளாதார வளர்ச்சி மோதல் தவிர்க்க இயலாதது என்பதை அர்த்தப்படுத்தியது என்று Crowe நிறைவு செய்திருந்தார். கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டவாறு, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் ஏழாண்டுகளில் மோதல் வெடித்தது.

சீன-அமெரிக்க உறவுகள் இதே திசையில், அதே விளைவுகளை நோக்கி, முன்நகர்ந்து வருவதைக் குறித்து எச்சரிக்க கிஸ்ஸிங்கர் இந்த அனுபவத்தை அவரது நூலில் மேற்கோளிட்டிருந்தார். ஆனால் அதற்கு பின்னர் இருந்து இந்த காலக்கட்டத்தில், பதட்டங்கள் சீராக அதிகரித்துள்ளன. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்ற கண்ணோட்டம், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கி, இராணுவ-உளவுத்துறை மற்றும் அரசியல் ஸ்தாபகங்கள் இரண்டிலும் ஒரே சீராக அபிவிருத்தி அடைந்துள்ளது.

இவ்விதத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரித்தளவிலான விரோதப்போக்கும் பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற வர்த்தகப் போரும், அமெரிக்க அரசின் அஸ்திவாரங்களின் ஆழத்திலிருந்து வெளிப்படும் சக்திகளின் வெளிப்பாட்டை எடுத்துக்காட்டி வருகிறது.

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

1989 தியானென்மன் சதுக்க படுகொலைகள் மற்றும் சீன ஆட்சி தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கியதன் மூலமாக ஈவிரக்கமின்றி முதலாளித்துவ மீட்சிக்குத் திரும்பிய காலத்தை அடுத்து, 1990 களில், சீனாவின் மலிவு உழைப்பு ஆதாரவளங்கள் திறந்து விடப்படுவது அமெரிக்க முதலாளித்துவத்திற்கு மிகப்பெரியளவில் ஆதாயங்களை வழங்கும் என்ற அடிப்படையில் இந்த ஒத்திசைவு தொடரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது.

இது கிளிண்டன் நிர்வாகத்தால் சீனா உலக வர்த்தக அமைப்புக்குள் கொண்டு வருவதை ஊக்குவிக்க இட்டுச் சென்று, 2001 இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் இறுதி செய்யப்பட்டது. சீனாவில் "சுதந்திர சந்தை" முதலாளித்துவம் மீட்டமைக்கப்படுவதும் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் அது முதலாளித்துவ உலக சந்தைக்குள் ஒருங்கிணைக்கப்படுவதும் அமெரிக்க நலன்களுக்கு அதனை அடிபணிய வைக்க தயாரிப்பு செய்யப்பட்ட ஒரு சீனா ஆட்சியின் உருவாக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்ற அடிப்படையில் அது நடத்தப்பட்டது.

ஆனால் கடந்தாண்டுகளில், முக்கியமாக சீன அரசின் தலைமையில் ஜி ஜின்பிங் முன்னேறியதில் இருந்து, அங்கே அமெரிக்க மூலோபாய நோக்குநிலையில் ஓர் அடிப்படை மாற்றம் இருந்துள்ளது.

“ஒத்திசைவு" என்பது, இம்மாத தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்ட, “சீனாவுடன் மாபெரும் மோதல்" என்பதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டது.

அமெரிக்க கொள்கை மாற்றத்தை விவரித்து, அக்கட்டுரை குறிப்பிடுகையில், “2005 இல் அப்போதைய துணை வெளியுறவுத்துறை செயலர் Robert Zoellick குறிப்பிட்டவாறு, சீனக் கட்சி-அரசு சர்வதேச அமைப்புமுறையின் 'பொறுப்பான பங்குதாரராக' மாறுமென நீண்டகாலமாக நம்பிக்கை" நிலவுவதாக குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீன முதலாளித்துவம் உயர் தொழில்நுட்ப பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எந்த விதத்திலும் சவால் விடுக்காமல், உற்பத்திக்கான மலிவு உழைப்பு வினியோகஸ்தராகவும் நுகர்வு பொருள் மற்றும் மின்னணு பண்டங்களின் உற்பத்தியாளராகவும், அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபத் திரட்சிக்கு ஆதரவழித்து தொடர்ந்து செயல்படவேண்டும்.

ஆனால், எதிர்கால புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதன் மூலமாக சீனப் பொருளாதாரத்தை மதிப்பு சங்கிலியை விட உயர்த்துவதை நோக்கமாக கொண்ட, ஜி இன் "சீனாவில் உற்பத்தி 2025” திட்டத்தின் கீழ் அபிவிருத்தியானது, அமெரிக்க மூலோபாய நோக்குநிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏனென்றால் இதுபோன்றவொரு அபிவிருத்தி அமெரிக்க "தேசிய பாதுகாப்புக்கு", அதாவது அதன் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்திற்கு, உயிர்வாழ்வுக்கான ஓர் அச்சுறுத்தலாகவும், மற்றும் சாத்தியமான எல்லா வழிவகைகளையும் கொண்டு —இறக்குமதி வரி விதிப்புகள், ஹூவாய் போன்ற சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தடைகள், மற்றும் அவசியமானால், இராணுவ பலத்தைக் கொண்டு— தடுக்கப்பட வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறது.

அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளாலும் ஆதரிக்கப்பட்ட இந்த புதிய அமெரிக்க நோக்குநிலை —ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சியினர் சீனாவுக்கு எதிராக அதிக ஆக்ரோஷமாக உள்ளனர்— வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியாவின் கருத்துக்களில் விவரிக்கப்பட்டது, இதை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அதன் "மாபெரும் எதிர்கொள்ளல்" என்ற கட்டுரையில் மேற்கோளிட்டது.

இம்மாத ஆரம்பத்தில் ஹட்சன் பயிலக இரவு உணவு விருந்தில் பேசுகையில், அவர் குறிப்பிட்டார்: “நமது இரண்டு அமைப்புமுறைகளுக்கு இடையிலான அடிப்படை கருத்து வேறுபாடுகளையும், மற்றும் அந்த அமைப்புமுறைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மீது ஏற்படுத்தும் … தாக்கத்தையும் புறக்கணிப்பது இனியும் யதார்த்தமாக இருக்காது.” அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், சீனத் தலைமை, "போராட்டம் மற்றும் சர்வதேச ஆக்கிரமிப்பு மீது கவனம்செலுத்தும்" ஒரு அமைப்புமுறையைச் சார்ந்தது என்றவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

கிஸ்ஸிங்கரின் கருத்துக்களும் எச்சரிக்கைகளும் மிகப்பெரும் போர் அபாயங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் அதுபோன்றவொரு பெரும் மோதலினால் ஏற்படக்கூடிய மனித நாகரீகத்திற்கான அச்சுறுத்தலைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக இந்த அச்சுறுத்தலை தடுக்க முடியும் என்ற அவரது "நம்பிக்கை" அடித்தளமற்றது. முதலாம் உலகப் போரிலும் சரி இரண்டாம் உலகப் போரிலும் சரி பேரழிவுகளினால் ஏகாதிபத்திய சக்திகள் பின்வாங்கி விடவில்லை. மாறாக, அவை முன் நகர்ந்தன, அத்துடன் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா இரண்டு அணு குண்டுகளை வீசியது.

அதிகரித்து வரும் அபாயத்திற்கு ஒரு மாற்று மருந்தாக, போட்டி மற்றும் எதிர்விரோதத்தை ஒப்புக் கொள்வதற்கான அவரின் அழைப்பும் இதே போல வெறுமையாக உள்ளது. ஏனென்றால் இப்போதிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் அதிக கால பூகோளமயப்பட்ட உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் மேலாதிக்க பார்வையில் அதுபோன்ற போட்டி எவ்வளவு காலத்திற்குத் தொடர்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடம் தொடர்ந்து பலவீனமடையும், ஆகவே தாமதமின்றி விரைவிலேயே செயல்பட வேண்டியது அவசியம் என்பதாக பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான தந்திரோபாய மாற்றங்களும் உபாயங்களும் எடுக்கப்படும் என்றாலும், ஆளும் வர்க்கத்திடம் முறையிடும் எந்த முறையீடும் போருக்கான அடிப்படை முனைவைத் தடுத்து விடும் என்று பார்ப்பதற்கு அங்கே எந்த "அறிவார்ந்த காரணமும்" இல்லை, ஏனென்றால் போர், முதலாளித்துவத்தின் இலாபம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் புறநிலைரீதியான முரண்பாடுகளில் இருந்து எழுகிறது.

மேலதிக வாசிப்புக்கு,

அதிகரித்து வரும் சமத்துவமின்மையால் சமூக புரட்சியின் ஆபத்து, தனியார் முதலீட்டு நிறுவன தலைவர் எச்சரிக்கிறார் [PDF]

உலகளாவிய இளைஞர்களின் தீவிரப்படலும், சோசலிசத்திற்கான போராட்டமும் [PDF]