ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK Labour Party manifesto: A blueprint to save capitalism

இங்கிலாந்து தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்: முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான மாதிரி திட்டம்

By Robert Stevens
22 November 2019

வியாழக்கிழமை, “இது உண்மையான மாற்றத்திற்கான நேரம்” என்று குறிப்பிடும் தொழிற் கட்சியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் வெளியிட்டார்.

“ஒரு தலைமுறையில் மிகுந்த மிகவும் இடதுசாரித்தன்மையான அறிக்கை” போன்று உள்ளது என்று Financial Times பத்திரிகை இந்த ஆவணம் குறித்து கண்டித்தது. ரூப்பர்ட் மூர்டோக் இன் Times நாளிதழ், இது, “பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகுந்த செலவுகூடிய விடயங்களை” பரிந்துரைக்கிறது எனக் கூறியது. மேலும், Guardian பத்திரிகை, “பல தசாப்த காலங்களில் மிகவும் தீவிரமான தொழிற் கட்சி அறிக்கை” என்று இதுபற்றி குறிப்பிட்டது.


ஜெர்மி கோர்பின்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ அரசியலின் இத்தகைய வலதுசாரி திருப்பத்திற்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தவாத நடவடிக்கைகளை நயமாக முன்வைப்பதும் கூட இப்போது ஆபத்தான "இடதுசாரி" நடவடிக்கைகளாக உள்ளது.

ஊடகங்கள் அத்தகைய கூற்றுக்களை “தலைமுறைக்கு” உரியது என காட்ட மட்டுமே முடியும். தலைமுறை என்ற இந்த மேற்கோள், முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை உழைக்கும் மக்களிடமிருந்து பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுவதற்கு கூட்டாக தலைமை தாங்கிய, மார்க்ரெட் தாட்சர் மற்றும் ஜோன் மேஜர், தொழிற் கட்சியின் டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரவுண், மேலும் டேவிட் கேமரூன் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஆகியோரின் வலதுசாரி டோரி அரசாங்கங்களை உள்ளடக்கியது.

இந்த விஞ்ஞாபனம் பின்வரும் முன்மொழிவுகளையும் உள்ளடக்கியுள்ளது:

*அதன் முதல் பதவிக் காலத்தின் முடிவில், ஒரு வருடத்தில் 100,000 அரச உதவியுடனான வீடுகளையும் மற்றும் 50,000 வீடுகளை கூட்டு வீட்டுவசதி சபைகளால் நிர்வகிக்கப்படுவதையும் கட்டமைப்பது.

* தனியார்மயமாக்கப்பட்ட இரயில் வலைப்பின்னல், தபால் சேவை, நீர் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை மீண்டும் அரச கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.

* ஒரு “உண்மையான வாழ்க்கை ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 10 பவுண்டுகளை” நிர்ணயிப்பது.

* ஏப்ரல் 2020 முதல் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 5 சதவிகிதத்துடன் கூடிய ஒட்டுமொத்த ஊதிய உயர்வு, அதாவது சராசரியாக 1,643 பவுண்டுகள் வரை வழங்குவது.

* தேசிய சுகாதார சேவை, சமூக பாதுகாப்பு (“சுகாதாரத் துறை முழுவதிலுமான செலவினங்களை ஆண்டுக்கு சராசரியாக 4.3 சதவிகிதம் அதிகரிப்பது”) மற்றும் பள்ளிகளுக்கான கூடுதல் உதவித்தொகையை வழங்குவது.

* பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை நீக்குதல், இலவச அதிவேக இணைய அணுகல், இலவச பல் சோதனைகள் (சிகிச்சைகள் அல்ல), 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி மற்றும் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தொலைக்காட்சி உரிமங்கள் வழங்குதல்.

* “கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள், வரி ஏய்ப்பாளர்கள், மோசமான முதலாளிகள் மற்றும் பெரும் மாசுபடுத்துவர்கள் என அனைவரும் பழமைவாத கட்சிக்கு சொந்தமானவர்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு சொந்தமில்லை. அவர்களுக்கு தொழிற் கட்சியும் சொந்தமில்லை. மக்கள் தான் தொழிற் கட்சிக்கு சொந்தமானவர்கள். அதனால்தான் கோடீஸ்வரர்கள் எங்களைத் தாக்குகிறார்கள்” என்று கோர்பின் அறிவித்தார்.

தொழிலாளர்கள் இத்தகைய மிகைப்படுத்திக் கூறல்களை கடந்து பார்க்க வேண்டும்.

13 ஆண்டு கால தொழிற் கட்சி அரசாங்கங்கள் உட்பட கடந்த நான்கு தசாப்தங்களாக முதலாளித்துவ "தடையற்ற சந்தைக்கு" "மாற்று இல்லை" என்ற தாட்சரின் மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தின. இந்த காலகட்டம், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாட்டின் மீது தொடர்ச்சியான தாக்குதலையும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கால போராட்டத்தில் திரட்டப்பட்ட தேட்டங்களின் அழிக்கப்படுவதையும் கண்டிருக்கிறது.

ஆயினும்கூட இந்த சமூக எதிர் புரட்சிக்கு கோர்பின் பதில் ஒரு சில சிறியளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டுள்ளது. அவரது வரிகுறைப்பு நடவடிக்கைகள் உண்மையான சோசலிச வேலைத்திட்டத்துடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. உண்மையான சோசலிச வேலைத்திட்டத்திற்கு, பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் செல்வத்தை பறிமுதல் செய்வதையும், தொழிலாளர் அரசாங்கத்தின் மூலம் சமூகத்தின் மீதான அவர்களின் பிடியை இறுதியாக முடிவிற்கு கொண்டுவருவதும் அவசியமாகிறது.

மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஒரு சோசலிச மாற்றீட்டை நாடுகின்ற நிலைமைகளின் கீழ், கோர்பினின் முன்னுரையிலோ அல்லது 107 பக்க ஆவணத்தின் தற்போதைய உள்ளடக்கத்திலோ “சோசலிசம்” என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை என்பது அசாதாரணமானது. அது தொடர்பாக ஒரு புள்ளியில் ஒரேஒரு இடத்தில் தேசிய சுகாதார சேவையை "செயலில் சோசலிசம்" என்று விவரிக்கின்றது.

கோடீஸ்வரர்களை எதிர்ப்பது மற்றும் அவர்களின் விரோதத்தை வரவேற்பது பற்றிய அனைத்து பேச்சுக்களும் மிகவும் வெற்றுக்கூற்றுக்களாகும். “தீவிரவாதம்” பற்றிய அனைத்து கூற்றுக்களுக்கான மறுப்பு இந்த அறிக்கையிலேயே உள்ளடங்கியுள்ளது. “நமது பொருளாதாரம், வேலைகளின் உருவாக்கம், செல்வம் மற்றும் புதுமைகள் ஆகியவற்றின் இதயத்துடிப்பாக வணிகங்கள் உள்ளன” என்று விஞ்ஞாபனம் அறிவிக்கிறது. மேலும் அது, கோடீஸ்வரர்களிடமிருந்து செல்வங்கள் பறிக்கப்படுவதைக் காட்டிலும், பிளேயர் குறிப்பிடக்கூடிய மொழியில், “சமூக நீதி என்பது, சிறு மற்றும் பெரு வணிகங்களுக்கு இடையிலான போட்டிநிலைமைகளை சமன் செய்வதாகும்” என்று குறிப்பிடுகிறது.

கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழிற் கட்சி, “ஒரு சிறந்த வரி விதிப்பு முறையை உருவாக்குவது, பெரும் பணக்காரர்களிடமிருந்து இன்னும் சற்று அதிக வரியை கேட்பது, மற்றும் அனைவரும் தாங்கள் கொண்டிருக்கும் செல்வத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதை உறுதி செய்வது ஆகியவற்றின்” மூலம் பொது சேவைகளுக்கு செலவு செய்யும்” எனக் குறிப்பிடுகிறது.

“டோரிகளின் பெருநிறுவனங்களுக்கான வரிவெட்டுக்கள் சிலவற்றை நாங்கள் மாற்றுவோம், அதே நேரத்தில் 2010 ஐ விட விகிதங்களை குறைவாக வைத்திருப்போம்.” இது, ஐரோப்பாவில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாக, பெருநிறுவன வரியை 26 சதவிகிதமாக்கும்.

விஞ்ஞாபனம், “அனைவருக்குமான தேசிய காப்பீடு மற்றும் வருமான வரி விகிதங்கள் முடக்கப்படும் அதேவேளை, ஆண்டுக்கு 80,000 பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வருமான வரியை செலுத்துமாறு நாங்கள் கேட்போம்,” [எங்களது வலியுறுத்தல்] என்று தொடர்கிறது.

Winter Palace ஐ தாக்குவதற்கு சமமானதாக காட்டும் வகையில், வலதுசாரி ஊடகங்கள் அதாவது, பிரிட்டனை தளமாகக் கொண்ட வட கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் மீது 11 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிடப்பட்ட ஒரே வரிக்கான முன்மொழிவை தனியாக எடுத்துக் காட்டின. என்றாலும், நிறுவனங்களால் எவ்வளவு செலுத்த முடியும் என்றும் எத்தனை ஆண்டுகளில் செலுத்த முடியும் என்றும் அவற்றுடன் ஆலோசிக்கப்படும். முந்தைய தொழிற் கட்சி மற்றும் டோரி அரசாங்கங்களால் வழங்கப்பட்ட பரந்த வரி விலக்குகளுடன் ஒப்பிடும்போது இந்த வரி ஒரு சிறிய தொகையாகும். Financial Times, “1992 முதல் இன்று வரை வட கடல் நாடுகளால் வசூலிக்கப்பட்ட சராசரி வரி விகிதத்தைப் போலவே இங்கிலாந்து அதே பயனுள்ள வரி விகதத்தை வசூலித்திருந்தால், அது கூடுதலாக 117 பில்லியன் பவுண்டுகள் வரியை வசூலித்திருக்கும்” என்பதான தொழிற் கட்சி அதிகாரி ஒருவரின் விளக்கத்தை மேற்கோள்காட்டியது.

பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய 100 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வருடத்திற்கு சராசரியாக 3.5 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக பெறுகின்றனர் (அதாவது இங்கிலாந்தின் முழுநேர ஊழியர் பெறும் சராசரி சம்பளத்தைக் காட்டிலும் 117 மடங்கு இது அதிகமானது) என்றாலும், பெருநிறுவன அதிகாரிகள் தனியார் துறையில் மில்லியன் கணக்கான ஊதியம் பெறுவதற்கு எந்த தடையும் இருக்காது. பொதுத்துறையில், அரசாங்க ஒப்பந்தங்களுக்காக நிறுவனங்கள் ஏலத்திற்கு எடுக்கப்படுகின்ற போது டோரி பிரதமர் டேவிட் கேமரூன் முதலில் முன்வைத்த கொள்கையின் படி “அதிகபட்ச ஊதிய விகிதங்களாக 20:1” என்பதை செயல்படுத்த இந்த அறிக்கை உறுதியளிக்கிறது. தொழிற் கட்சியின் “உண்மையான வாழ்வூதியம்” என்பதன் கீழ், ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு வெறும் 16,000 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்க முடியும் என்ற பொதுத்துறை முதலாளிகளின் கொள்கைக்கு தொழிற் கட்சி உறுதியளித்துள்ளது, அதே நேரத்தில் அவர்களோ ஆண்டுக்கு அதிகபட்சமாக 350,000 பவுண்டுகள் வரை சம்பாதிக்கின்றனர்.

“முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவது” தான் அவர்களது நோக்கம் என்று கோர்பினின் நிழல் சான்சிலரான ஜோன் மெக்டோனல் 2017 ஆம் ஆண்டில் அளித்த மறுஉத்திரவாதங்களின் படி தான் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்தும் உள்ளது. 2017 பொதுத் தேர்தலில் தெரசா மே இன் நெருக்கடி நிறைந்த டோரி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர், மெக்டோனல் இலண்டன் நகரத்தின் பெரு முதலாளிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி தெரிவித்தார்: “சில வழிகளில், இது ஒரு வினோதமான சூழ்நிலை, வீழ்ச்சியடைந்து வரும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மறுஉத்தரவாதம் அளிப்பதற்காக அவர்கள் எங்களிடம் வருகிறார்கள், ஜெர்மி கோர்பினும் நானும் முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துபவர்களாக இருக்கிறோம்”.

இந்த விஞ்ஞாபனம், எதிர்வரும் கொந்தளிப்பான காலங்களில் ஆளும் உயரடுக்கின் நலன்களை பாதுகாக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நம்பகரமான ஒரு கட்சி வழங்கும் சலுகையாக உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கோர்பின் தனது கட்சியின் பிளையரிச வலதுசாரிகளுக்கு அடிபணிவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. தொழிற் கட்சியின் 2017 அறிக்கையில், நேட்டோவையும், இங்கிலாந்தின் மும்முனை ஏவுகணை அமைப்பு மற்றும் பாதுகாப்புத்துறை புதுப்பிக்கப்படுவதையும் எதிர்ப்பதற்கான எந்தவொரு பாசாங்கையும் கோர்பினும் மெக்டோனலும் கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

2019 விஞ்ஞாபனம், ஜோன்சனின் அரசாங்கம் புட்டினின் கைகளில் இருப்பதை குறிக்கின்ற வகையில், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கு ஏகாதிபத்திய சக்திகளின் போர் உந்துதலின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு இராணுவவாத திட்ட நிரலை பெருமையுடன் வலியுறுத்துகிறது.

“பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் மீதான ரஷ்யாவின் வெளிநாட்டு தலையீடு குறித்து அறிக்கை வெளியிட” மறுத்தமைக்காக ஜோன்சனை விஞ்ஞாபனம் தாக்குகிறது. அது, “புதிய வடிவிலான இணைய மற்றும் தொலைதூரப் போர் உட்பட பிரிட்டன் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை மதிப்பிடுவதற்கு தொழிற் கட்சி அரசாங்கம் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மறுஆய்வை மேற்கொள்ளும்” என்று அறிவிக்கிறது.

விஞ்ஞாபனம், டோரிகளின் கீழ், “பயிற்சி பெற்ற இராணுவத்தினர் எண்ணிக்கை 102,000 இலிருந்து 74,000 க்கு சற்று கூடுதலாக குறைக்கப்பட்டுள்ள” சூழ்நிலையை பகிரங்கமாக கண்டிக்கிறது. தொழிற் கட்சி “நேட்டோவிற்கான எங்களது கடமைப்பாட்டையும் மற்றும் எங்களது ஐரோப்பிய பங்காளிகளுடனான நெருங்கிய உறவையும் பராமரிக்கும்” என்பதுடன், “எங்கள் ஆயுதப்படைகள் பன்முகத் திறமை கொண்டவை மேலும் முழு அளவில் தமது பங்கையும் கடமைகளையும் நிறைவேற்றும் திறன் கொண்டவை” என்று உத்தரவாதம் அளிக்கும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2 சதவிகிதத்தை பாதுகாப்புக்காக செலவிடும். மேலும் விஞ்ஞாபனம், “நாங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு எல்லைகள் கிடையாது என்பது தெரிந்ததே என்றும், ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியை 100 மில்லியன் பவுண்டுகளாக தொழிற் கட்சி அதிகரிக்கும்” என்றும் எச்சரிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் நாடுகளுக்கிடையே நகரும் சுதந்திரம் “பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படும்,” அதாவது, முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று இந்த விஞ்ஞாபனம் தெரிவிக்கிறது. இதை “புள்ளிகள் அடிப்படையிலான” புலம்பெயர்வு திட்டமுறை என்று வரையறுக்காமல், அனைத்து புலம்பெயர்வுகளும் பொருளாதாரத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞாபனம் கூறுகிறது: “எங்கள் பணி, தேவைப்படும் எந்தவொரு விஷேடதிறன்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையையும் குடிவரவு அனுமதி திட்டமுறையால் நிரப்ப வேண்டும்.”

சோசலிசம் என்பது பெரிதும் குறிப்பிடப்பட முடியாதது என்றாலும், அறிக்கையின் பக்கங்கள் “பொலிஸ் மற்றும் பாதுகாப்பை” பலப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டவை. பொலிஸ் பற்றி அதில் 28 இற்கு குறைவில்லாது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞாபனம், “பழமைவாதிகள் எங்களது தெருக்களில் இருந்து 21,000 பொலிஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்றனர்” என்று புகார் கூறியதுடன், “ஒட்டுமொத்த பொலிஸ் படையையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம், மேலும் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சமூக ஆதரவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ்களை நியமிப்போம் என்றும், பழமைவாதிகள் திட்டமிட்டதைக் காட்டிலும் நகர்ப்புறக் காவலை மறுஸ்தாபகம் செய்வோம் என்பதுடன், 2,000 முன்னணி அதிகாரிகளை நியமிப்போம்” என்றும் உறுதிபூணுகிறது.

இந்த விஞ்ஞாபனம் இரட்டைநாக்கு தன்மைக்கான ஒரு பயிற்சியாக உள்ளது. பணியிடத்தில் “இரகசிய செய்தி வெளியீட்டாளர்களின் பாதுகாப்புகளை பலப்படுத்துவதற்கான” மற்றும் “ஊடகவியலாளர்களுக்கான பொது நலன் பாதுகாப்பிற்கான சட்டபூர்வ உரிமையை” ஆதரிப்பதற்கான அதன் அழைப்புக்களால் அது சுருக்கப்பட்டுள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் ஊடகவியலாளருமான ஜூலியன் அசான்ஜ் இங்கிலாந்தில் ஒரு தசாப்த காலமாக தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி அது குறிப்பிடவேயில்லை.

ஏகாதிபத்திய சக்திகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக 175 ஆண்டுகள் வரையிலான ஆயுள் தண்டனையை அமெரிக்காவில் அசான்ஜ் எதிர்கொள்ளும் வகையில் அவர் நாடுகடத்தப்படுவதை பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு செயலாற்றுகின்ற நிலையில், இலண்டனின் அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் தனிமையில் அடைத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே உழைக்கும் மக்களின் நலன்களை பரிந்துரைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் 2019 பொதுத் தேர்தலில் தலையிடுகிறது. எங்களது பிரச்சாரத்தின் மையக் கோரிக்கையாக ஜூலியன் அசான்ஜின் விடுதலை உள்ளது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது: சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்!

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!

[6 November 2019]