ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US puts new Sri Lankan president on notice

இலங்கையின் புதிய ஜனாதிபதியை அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது

By K. Ratnayake
20 November 2019

இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச வாழ்த்துச் செய்திகள் அனைத்தும், மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த தீவு புவி-அரசியல் போட்டிகளில் மூழ்கியுள்ளது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பிராந்தியம் முழுவதிலும் சீனவின் செல்வாக்கைக் கீழறுப்பதற்கும் அதற்கு எதிரான போர் தயாரிப்பதிலும் வாஷிங்டன் கொண்டுள்ள உறுதிப்பாட்டையே அந்தச் செய்திகள் மையமாகக் கொண்டுள்ளன.

முன்னாள் இராணுவ அதிகாரியும் பாதுகாப்புச் செயலாளருமான இராஜபக்ஷ, தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கையில் பெருகிவரும் வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் “தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை” வலுப்படுத்தும் ஒரு வலதுசாரி பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே அவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

தனது வாழ்த்துச் செய்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, புதிய ஜனாதிபதியுடன் வாஷிங்டன் "வேலை செய்யத் தயாராக உள்ளது" என்று அறிவித்தார். பொம்பியோ, "அனைத்து நாடுகளும் செழித்து வளரக்கூடிய நல்லாட்சியை பலப்படுத்தக் கூடிய, நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கின்ற ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதில்” ஒத்துழைக்குமாறு குறிப்பாக சுட்டிக் காட்டி இராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தார்.

"மனித உரிமைகள்" என்ற பதத்தில் பொம்பியோ தனது செய்தியை இராஜபக்ஷக்கு அனுப்பியுள்ள அதேவேளை, ​​புதிய ஜனாதிபதி இலங்கையை சீனா நோக்கி திருப்பிவிடுவாரா என்பதே வாஷிங்டனின் உண்மையான கவலையாகும். "ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பதற்கான" அழைப்பு, ஆசியா முழுவதும் சீனா சம்பந்தமாக தனது ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கான ஆக்கிரோஷமான நகர்வுகளை நியாயப்படுத்தும் அமெரிக்க பிரச்சாரத்தின் பிரசித்தமான-வாக்கியமாகும் ஆகும்.

"மனித உரிமைகள்" பற்றிய பொம்பியோவின் குறிப்பு, கோட்டாபய இராஜபக்ஷ பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக சென்றால் அவருக்கு எதிரான பிரச்சினைகளை வாஷங்டன் சுரண்டிக்கொள்ளும் என்பதற்கான அச்சுறுத்தலைக் குறிக்கிறது. அதாவது 2015 தேர்தலில் ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் அவரது சகோதரர் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்ற வாஷிங்டன் அவ்வாறே செயற்பட்டது.

இராஜபக்ஷ சகோதரர்கள் இருவரும் 2009 இல் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரின் போது இராணுவத்தால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக நேரடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள். எவ்வாறெனினும், அமெரிக்கா புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்ததுடன் இராஜபக்ஷ ஆட்சியின் குற்றங்கள் பற்றி மௌனமாக இருந்தது.

போர் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் பெய்ஜிங்கை நோக்கி ஒரு தெளிவான மாற்றத்தை எடுத்த பின்னரே, வாஷிங்டன் "மனித உரிமைகள்" பிரச்சினையைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியது. மஹிந்த இராஜபக்ஷவை எதிர்ப்பதற்காக, அமெரிக்கா அவரது உயர்மட்ட அமைச்சர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேனவின் வேட்புமனுவையும் வெற்றியையும் உறுதிப்படுத்த உதவியது. சிறிசேன அவரது பிரச்சாரத்தில் "நல்லாட்சி" மற்றும் "மனித உரிமைகளை" உறுதிப்படுத்துவதாகவும், வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் போலி வாக்குறுதிகளை கொடுத்தார்.

சிறிசேன ஆட்சிக்கு வந்தபின், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன், நாட்டின் வெளியுறவுக் கொள்கையை துரிதமாக அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

இலங்கை இராணுவம், குறிப்பாக அதன் கடற்படை, அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன் பெப்ரவரி மாதம், அமெரிக்க செனட் ஆயுத சேவைகள் குழுவிடம், இலங்கை "இந்தியப் பெருங்கடலில் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளதுடன், எங்கள் இராணுவங்களுக்கு இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெறுகிறது" என்று கூறினார்.

அமெரிக்க இராணுவப் படைகளை தீவுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கும் படை நிலைகொள்ளல் உடன்படிக்கையை (SOFA) புதுப்பிக்க ஜூலை மாதம் வாஷிங்டன் அழுத்தம் கொடுத்தது, ஆனால் அது பொதுமக்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சோஃபா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதானது சந்தேகத்திற்கு இடமின்றி புதிய ஜனாதிபதிக்கு வாஷிங்டன் வைக்கும் பிரதான சோதனையாக கருதப்படும்.

கோடாபய இராஜபக்ஷ தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை நன்கு அறிவார். திங்களன்று அவரது பதவியேற்பு விழாவில், "சக்திவாய்ந்த நாடுகளிடையே அதிகாரப் போராட்டங்களில் ஈடுபட விரும்பவில்லை" என்று அவர் அறிவித்தார். "நாங்கள் எங்கள் வெளிநாட்டு உறவுகளில் நடுநிலை வகிக்க விரும்புகிறோம், உலக சக்திகள் மத்தியில் மோதல்களில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம் என மேலும் கூறிய அவர், ”நாட்டின் ஒற்றையாட்சி தன்மை மற்றும் இறையாண்மையை மதிக்க அனைத்து நாடுகளுக்கும்” அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், இலங்கையை "நடுநிலை வகிக்க" அனுமதிக்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லாததோடு அமெரிக்க நட்பு நாடுகளின் பிராந்திய வலையமைப்பிலும், சீனாவுக்கு எதிரான மூலோபாய பங்காளிகளிலும் அது ஒருங்கிணைவதை உறுதிப்படுத்த தீவிரமாக முயற்சிக்கும். அதன் நலன்களுக்கு அச்சுறுத்தல் என்று கருதும் எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் படையெடுப்புகள் மற்றும் போர்கள் உட்பட நடவடிக்கைகள் மூலம் மீறுவதில் வாஷங்டன் நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளது.

அதன் பங்கிற்கு, சீனா அமெரிக்காவை எதிர்கொள்ள முயற்சிக்கும். புதிய இலங்கை ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தி, “எங்கள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்” என்று அறிவித்தார். “சீனா-இலங்கை மூலோபாய கூட்டுறவு பங்கான்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சியின் (Belt and Road Initiative BRI) கட்டமைப்பிற்குள் நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்த” அவர் அழைப்பு விடுத்தார்.”

சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சி என்பது யூரேசிய நிலப்பரப்பையும் ஆபிரிக்காவையும் இணைக்கும் ஒரு பரந்த உட்கட்டமைப்புத் திட்டமாகும், மற்றும் சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைப்பதற்கும் பொருளாதார ரீதியாக அதற்கு குழிபறிப்பதற்கும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவும் ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தினாலும், முந்தைய அரசாங்கம் அது தொடர்பான எந்தவொரு திட்டத்திலும் அல்லது ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை.

எவ்வாறாயினும், ஆரம்பத்தில் பெய்ஜிங்கிடமிருந்து முழுமையாக விலகிக்கொண்டிருந்த போதும், ​​மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், நிதி உதவிக்காக சீனாவை நோக்கி திரும்பியமை, வாஷிங்டன் மற்றும் புது டில்லியிலிருந்து விமர்சனங்களைத் தூண்டியது.

2017இல் குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கிய முடிவை அமெரிக்கா எதிர்த்தது. இந்த துறைமுகத்தை கட்ட சீனா வழங்கிய கடனை இலங்கையால் திருப்பி செலுத்த முடியாமல் உள்ளது. இந்த துறைமுகம் இலங்கையின் தெற்கு முனையில் அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருக்க உறுதிபூண்டிருக்கும் இந்து சமுத்திரத்தின் பிரதான கப்பல் பாதைக்கு அருகில் அமைந்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளை "கடன் பொறிக்குள்" இழுத்துவிடுவதாக பெய்ஜிங்கைத் தாக்கும் வாஷிங்டன், இலங்கை சீனாவை நிதி ரீதியாக அதிகம் நம்புவதைத் தடுக்க முயற்சிக்கும். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க நிறுவனமான மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் உள்கட்டமைப்பை மேம்படுத்த 480 மில்லியன் டாலர் மானியத்தை வழங்கியது.

சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளராகக் கருதி, அமெரிக்காவுடன் அணிவகுத்து நிற்கும் இந்தியா, இராஜபக்ஷவின் தேர்தலுக்கு விரைவாக பிரதிபலித்தது. பிரதமர் நரேந்திர மோடி புதிய இலங்கை ஜனாதிபதியை வாழ்த்தி ட்விட்டர் செய்தியை அனுப்பினார். “எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக” உறவுகளை ஆழமாக்குவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இராஜபக்ஷவைச் சந்திக்க இலங்கைக்கு பயணித்ததோடு நவம்பர் 29 அன்று மோடியைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார்.

திங்களன்று ஒரு அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியமும் இராஜபக்ஷவை வாழ்த்தியது. வாஷிங்டனை எதிரொலித்த அது, "அடிப்படை உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், ஆளுகை, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர்வதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்புகளை நிலைநிறுத்துவதற்கு" அவருடன் பணியாற்றுவதாக அறிவித்தது.

தெற்காசியாவில் தங்கள் சொந்த நலன்களைக் கொண்ட பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா தலைமையிலான “மனித உரிமைகள்” பிரச்சாரத்தை ஆதரித்தன. இதுவே 2015 இல் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்ற வழிவகுத்தது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வர்த்தக சலுகைகளை திரும்பப் பெற்றது. இது அதன் ஏற்றுமதியை, குறிப்பாக ஐரோப்பாவிற்கான ஆடைகள் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதியைப் பாதித்தது. சிறிசேனா ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த முடிவு மாற்றப்பட்டது.

திங்களன்று லண்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸில் ஒரு ஆசிரியர் தலையங்கம், “இராஜபக்ஷவின் வெற்றி இலங்கையை பின்னோக்கி சறுக்கு அபாயத்தை கொண்டுள்ளது” என்ற தலைப்பில் புதிய ஜனாதிபதிக்கான செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டியது. “உள்நாட்டுப் போரின்போது நடந்த கொடுமைகளுக்கு அவரது [முன்னாள் ஜனாதிபதியாக இருந்த] சகோதரர் மறுத்ததைமை மேற்குடனான உறவுகளை குழப்பியது," என அது குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், தலையங்கத்தின் முக்கிய அக்கறை என்னவென்றால், கோடபாய இராஜபக்ஷ பெய்ஜிங்கை நோக்கி திரும்புவார் என்பதே ஆகும். மற்றும் சீனாவின் நிதித் தூண்டுதல்களை எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த முயற்சிக்கு அது அழைப்பு விடுத்திருந்தது. "தனியான நாடுகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிறவற்றிலிருந்து மானியங்கள் மற்றும் கடன்களின் பெரும் ஒருங்கிணைப்பு - அரசியல் மாற்றத்தில் அதன் பங்கை தொடர்ந்து செய்யும் அதே வேளை- ​​சீன செலவினங்களை எதிர்த்து நிற்கக்கூடும்" என்று அது முன்மொழிந்தது.

இலங்கைத் தேர்தலுக்குப் பின்னர் புவிசார் அரசியல் போட்டிகள் விரைவாக தலைதூக்கி, சீனாவுடனான அமெரிக்கா தலைமையிலான மோதலின் முன்னேறியத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது இலங்கையை மட்டுமன்றி, முழு பிராந்தியத்தையும் மூலோபாய ஆதிக்கத்திற்கான போர்க்களமாக மாற்றி போர் ஆபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.