ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands of UK university staff begin eight-day strike with support of students

ஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்

By Robert Stevens
26 November 2019

திங்களன்று 40,000 க்கும் அதிகமான பல்கலைக்கழக பணியாளர்கள் அவர்களின் சம்பளங்கள், நிலைமைகள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்க எட்டு-நாள் வேலைநிறுத்தம் ஒன்றை தொடங்கினர். விரிவுரையாளர்கள், மாணவர் உதவிக்கான சேவைப் பணியாளர்கள், தற்காலிக நியமன ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களையும் இந்நடவடிக்கை உள்ளடக்கி உள்ளது.

வேலைநிறுத்தம் செய்துவரும் நூற்றுக் கணக்கானவர்கள், பிரிட்டனைச் சுற்றி உள்ள 63 பயிலகங்களின் பல்கலைக்கழக வளாகங்களில் மறியல் அணிவகுப்பு நடத்தினர். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சங்கம் (UCU) குறிப்பிடுகையில், பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் (UUK) திட்டங்களை எதிர்க்க இரண்டு வெவ்வேறு வாக்குப்பதிவில் வாக்களித்த பின்னர், 43,600 உறுப்பினர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தது.

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி, கோல்ட்ஸ்மித் கல்லூரி, இலண்டன் இராணி மேரி பல்கலைக்கழகம், கோர்ட்டால்ட் கலைக் கல்லூரி, திறந்தவெளி பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், லீட்ஸ் பல்கலைக்கழகம், ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் கிளாஸ்கோவ் பல்கலைக்கழகம் உட்பட பிரிட்டனின் ஏறத்தாழ பாதி பல்கலைக்கழகங்களின் தொழிலாளர்கள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனர்.


மான்செஸ்டரில் ஐக்கியத்தை வெளிப்படுத்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் அணிவகுக்கின்றனர்

வேலைநிறுத்தக்காரர்களை பீதியூட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தால் அனைத்தும் செய்யப்பட்டது. பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, “பல்கலைக்கழக மண்ணில் மறியல் அணிவகுப்புகள் நடத்துவது விதி மீறி நுழைவதாக கருதப்படுமென பேர்மிங்காம் குறிப்பிட்டது.” வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பங்களிப்பு நிறுத்தப்படும் என்று சில பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன. பணியாளர்கள் மறியல் அணிவகுப்பிலிருந்து வெளியே வரவில்லை என்றால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமென, லான்செஸ்டர் மற்றும் ஸ்டெர்லிங் பல்கலைக்கழகங்களால், UCU உறுப்பினர்கள் அல்லாத சில பணியாளர்கள் உள்ளடங்கலாக, அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கடந்தாண்டின் வெகுவாக ஆதரிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை விட இந்த மறியல் அணிவகுப்புகள் பல நகரங்களில் இன்னும் மிகப் பெரியளவில் இருந்த நிலையில், பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் அமைப்பு கூறுகையில் பணியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வேலைநிறுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தது. மான்செஸ்டர், பிரிஸ்டல் மற்றும் நியூகாஸ்டல் உள்ளடங்கலாக பேரணிகள் நடத்தப்பட்டன, அவற்றில் நூற்றுக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், அவர்களில் பலரும் மறியல் அணிவகுப்புகள் மற்றும் பேரணிகளில் கல்வியாளர்களுக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏனைய பணியாளர்களினது மறியல் அணிவகுப்பைக் கடந்து வர மறுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இந்த வேலைநிறுத்தங்களுக்கு முந்தைய நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களை எச்சரித்தன. மறியல் அணிவகுப்பைக் கடந்து வராத வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் பயில்வதற்கான அவர்களின் நுழைவனுமதி முடக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்திக் கொள்வதாக லிவர்பூல் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை எச்சரித்தது.

மாணவர்கள் பயப்பட மறுத்ததுடன், பல இடங்களில் மறியல் அணிவகுப்பை மீறி வர மறுத்தது மட்டுமில்லாமல், மாறாக பகல் பொழுதில் நடத்தப்பட்ட அணிவகுப்புகளில் இணைந்தும் இருந்தனர் மற்றும் வேலைநிறுத்தக்காரர்கள் நடத்திய பேரணிகளுக்குப் பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பினர்.

லிவர்பூல் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுத்து, பல்கலைக்கழகத்தின் நீதி மற்றும் சமூக நீதி பயிலகத்தின் ஏழு வெளி ஆய்வாளர்கள் இராஜினாமா செய்தனர். இந்த அச்சுறுத்தல்கள் "பிரிட்டனின் புலம்பெயர்வு அமைப்புமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு" ஒப்பானது என்று கூறிய அவர்கள், ஒரு மறியல் அணிவகுப்பை மாணவர்கள் ஆதரிப்பது என்பது "முற்றிலும் சட்டபூர்வமானதே" என்று வலியுறுத்தினர்.

வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, உயர் கல்வி கண்காணிப்பு அமைப்பான மாணவர்களின் அலுவலகம் தெரிவிக்கையில், தங்களின் கல்வியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு "நுகர்வோர்களாக" மாணவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தது. ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட அவர்களுக்கு எதிராக ஒரு வலதுசாரி இயக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மாணவர்கள் அவர்களின் பல்கலைக்கழகங்களுடன் "ஒப்பந்த ஏற்பாடுகள்" செய்து கொண்டிருப்பதாக அது தெரிவித்தது. இவை மீறப்பட்டால், மாணவர்கள் "சட்ட வழிவகைகளைப் பயன்படுத்தலாம்" என்று குறிப்பிட்டது.

கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் தாக்குதலை எதிர்த்து போராட மறுத்த நீண்ட முன்வரலாறை UCU கொண்டுள்ளது, இது நிர்வாகத்தை இன்னும் கூடுதலாக தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே துணிவளித்துள்ளது.


பல்கலைக்கழக பணியாளர்களும் மாணவர்களும் UCL இல் மறியலில் ஈடுபட்டுள்ளனர்

கடந்தாண்டு 64 பயிலகங்களில் 50,000 விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழக பணியாளர்களின் தேசிய ஓய்வூதிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து —UGC முதலில் படுமோசமான ஓர் உடன்படிக்கையைத் திணிக்க முயன்று பின்னர் நிறுத்திக் கொண்டது— மற்றும் ஒட்டுமொத்த ஓய்வூதிய முறையையும் மறுபரிசீலனை செய்ய நிர்வாகம் அடையாள வாக்குறுதிகள் வழங்கிய பின்னரும், பணியாளர்கள் அவர்களின் சொந்த ஓய்வூதியங்களுக்கு நிதி ஒதுக்க அவர்களின் சம்பளத்திலிருந்து பத்தாயிரம் பவுண்டுகளைக் கூடுதலாக வழங்க வேண்டுமென பல்கலைக்கழகங்கள் வலியுறுத்தி வருகின்றன! பல்கலைக்கழகங்களின் ஓய்வுறு வயது திட்டத்தின் (Universities Superannuation Scheme - USS) ஒரு முன்மாதிரியான உறுப்பினரே கூட ஓய்வூ பெறுகையில் 240,000 பவுண்டை இழக்க வேண்டியிருக்கும் — இது ஓராண்டுக்கு முன்னர் சுமார் 200,000 பவுண்டு இழப்பாக இருந்தது.

நிர்வாகம் வேலைநிறுத்தக்காரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை UCU ஏற்றுக் கொண்டு, வேலைநிறுத்தத்தின் முதல் நாளிலேயே அவர்கள் மீண்டும் சரணடைந்தார்கள். அதுபோன்ற கடுமையான நகர்வுகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சம்பள முடக்கமும் ஒரு மாதத்திற்கு அதிகமாக செல்லக் கூடாது என்று UCU முன்மொழிந்தது.

உயர் கல்வி மற்றும் மேல்நிலை கல்வியில் உள்ள அதன் உறுப்பினர்களின் கூட்டு பலத்தை —இது இன்னும் 120,000 க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு வரும் என்ற நிலையில்—அவர்களை அணித்திரட்டுவதை எதிர்க்கும் UCU, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவும் UUK உடன் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பவும் நேரங்காலம் பாராமல் செலாற்றி வருகிறது. UCU, புதிய சுற்று பேரம்பேசல்களைத் தொடங்குமாறும், “பலமான" தந்திரோபாயங்களில் இருந்து பின்வாங்குமாறும் முதலாளிமார்களுக்கு அழைப்பு விடுத்தது. “பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதுடன் கூடுதல் தொந்தரவுகளை தவிர்க்கும் முயற்சியில் நல்லதொரு அறிவிப்புடன் எங்களிடம் திரும்ப வர வேண்டும் என்ற [தொழிற் கட்சியின் நிழலமைச்சரவை கல்விச் செயலர்] அங்கேலா ரேய்னெர் உடன் நாங்கள் உடன்படுகிறோம்,” என்று அச்சங்கம் திங்களன்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.

கல்வியை "சந்தைப்படுத்தும் முறையை" எதிர்ப்பதாக தொழிற் கட்சி வாதிடுகிறது, இந்த அபிவிருத்தியில் கோர்பினின் கட்சியே ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் பல பணியாளர்களும் இப்போது சகித்துக் கொண்டிருக்கும் தாங்கொணா நிலைமைகளை அதுதான் கொண்டு வந்தது. உயர் கல்வியின் சந்தைமயப்படுத்தல் 1998 மற்றும் 2004 இல் தொழிற் கட்சியால் கல்விக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மும்மடங்கு ஆக்கப்பட்டதுடன் தொடங்கியது.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினும் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெலும் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக அடையாளத்திற்கு ட்வீட் செய்திகளை வெளியிட்டனர். தொழிற்சங்க சபை தலைவர் பிரான்சிஸ் ஓ'கிராடியும் "கண்ணியமான சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் நிலைமைகளுக்காக எதிர்த்து நிற்கும்" பல்கலைக்கழக பணியாளர்களை ஆதரிப்பதாகவும், “எங்களின் ஒட்டுமொத்த இயக்கமும் உங்களுடன் நிற்கிறது,” என்றும் ட்வீட் செய்தார்.

மான்செஸ்டரில் வேலைநிறுத்தக்காரர்களின் பேரணியில் உரையாற்றுகையில், பதவி வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ட்ரெட்ஃபோர்ட் மற்றும் உர்ம்ஸ்டொனின் பெரிய மான்செஸ்டர் தொகுதியின் தொழிற் கட்சி வேட்பாளருமான கேட் க்ரீன், பல்கலைக்கழகங்கள் மற்ற உலகளாவிய பயிலகங்களுக்கு எதிராக போட்டியிட நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையுடன் தொழிற் கட்சி உடன்படுகிறது என்பதை அடிக்கோடிட்டு, ரேய்னெர், கோர்பின் மற்றும் மெக்டொன்னெலின் உயர்வுநவிழ்ச்சி பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழத்தை "உலகத் தரமான வெற்றியாக" விவரித்த க்ரீன், “நம் பல்கலைக்கழகத் துறை கடுமையான சர்வதேச போட்டியை முகங்கொடுத்து வருகிறது என்பதும், நமது பல்கலைக்கழக துறையின் மணிமகுடமாக விளங்கும் மான்செஸ்டர் போன்ற பல்கலைக்கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வரவிருக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உலகில் தலைசிறந்த இடங்களில் ஒன்றாக நமது இடத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வளர்ச்சியுற வேண்டும் என்பதும் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்,” என்றார்.


வேலைநிறுத்தக்காரர்களும் மாணவர்களும் ஒரு பேரணிக்காக ஆக்ஸ்ஃபோர்ட் சாலையில் அணிவகுக்க தயாராகி கொண்டிருக்கையில், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் டென்னிஸ் லீச்

சோசலிச சமத்துவக் கட்சியின் பொது தேர்தல் வேட்பாளர்கள் தோமஸ் ஸ்க்ரிப்ஸ் மற்றும் டென்னிஸ் லீச் இலண்டன் மற்றும் மான்செஸ்டரில் வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றினர்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், லீச் விவரித்தார், “கூலிகள் மற்றும் அவர்களின் வேலை நிலைமைகள் மீதான வெட்டுக்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக பிரிட்டன் எங்கிலும் நடவடிக்கை எடுத்து வரும் ஆயிரக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சி இன்று இங்கே நிற்கிறது. கடந்தாண்டு, பிரிட்டன் எங்கிலுமான UCU அங்கத்தவர்கள் தொழிற்சங்க தலைமையால் திணிக்கப்பட்ட ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையை நிராகரித்து வாக்களித்தனர். இந்த நிராகரிப்பு பிரிட்டன் எங்கிலும் பாரிய கூட்டங்களில் தொழிற்சங்க அங்கத்தவர்களிடம் இருந்து பாரிய ஆதரவைப் பெற்றிருந்தது.”

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ஸ்க்ரிப்ஸ் குறிப்பிட்டார், “இதுவொரு மிகப்பெரிய முக்கியமான வேலைநிறுத்தம். வேலைநிறுத்தத்தில் இருப்பவர்கள் உயர் கல்வியை சந்தைமயப்படுத்துவதற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்து வருகின்றனர், இது இந்த துறையை ஒரு பொதுச்சேவை என்பதில் இருந்து, உயர் விலை பட்டியல் மாணவர்களாக மாற்றியுள்ளது மற்றும் சொத்து ஊகவணிகமானது பாதுகாப்பற்ற, குறைவூதிய, நிச்சயமற்ற தொழிலாளர் சக்தியை ஸ்தாபித்துள்ளது.


இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் தோமஸ் ஸ்க்ரிப்ஸ்

“இந்தப் போராட்டத்தில் பிரதான பிரச்சினையே உயர் கல்வித்துறை சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் தான். ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கும், உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் மற்றும் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும் வழிவகுக்கும் வகையில், UCU, 2011, 2015 மற்றும் 2018 இல் வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.

“தொழிலாளர்கள் அவர்களின் பல்கலைக்கழகங்களில் சுயாதீனமான குழுக்களை உருவாக்குவதே இப்போது தொழிலாளர்களுக்கு இருக்கும் அதிமுக்கிய பிரச்சினையாகும். நிலைமைகள், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் விடயத்தில் தொழிலாளர்களுக்கு அவசியமானதையும், பாதுகாப்பான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான குடும்ப வாழ்வுக்காக உயர் கல்வி பணியாளர்களின் தேவைகளையும் குறித்து இத்தகைய குழுக்கள் முடிவெடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை குழுக்கள் அதுபோன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுடன் போராட்டத்தில் அவர்களின் ஆதரவுக்கு ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியையும் நோக்கி செல்ல வேண்டும்,” என்றார்.