ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: Far-right AfD’s party conference strengthens völkisch-nationalist “wing”

ஜேர்மனி: அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி (AfD) மாநாடு மக்கள்-தேசியவாத “பிரிவை” பலப்படுத்துகிறது

By Peter Schwarz
4 December 2019

பியோர்ன் ஹொக்க (Bjorn Hocke) மற்றும் ஆண்ட்ரியாஸ் கல்பிட்ஸ் (Andreas Kalbitz) ஆகியோரைச் சுற்றி இயங்கும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சியிலிருந்து தோன்றிய மக்கள்-தேசியவாத “The Wing” (Der Flugel) பிரிவு தேசிய கட்சி மாநாட்டின் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது, இது கடந்த வாரம் பிரவுன்ஸ்வைய்க்கில் (Braunschweig) நடைபெற்றது.

தங்கள் இனவெறி, நவ-நாஜி மற்றும் யூத-விரோத கருத்துக்களால் முன்னர் கிழக்கு ஜேர்மன் பிராந்திய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியவர்களான The Wing பிரிவின் பிரதிநிதிகள், இப்போது தேசிய கட்சியின் தலைமையுடன் உறுதியாக ஒருங்கிணைந்து அதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முந்தைய தலைமைக்கும் தீவிர தேசியவாத குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக புதிய கட்சியின் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. வலதுசாரி தீவிரவாதிகள் என அம்பலப்படுத்தப்பட்டவர்கள் தற்போது புதிய செயற்குழுவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், The Wing குழுவை விமர்சித்த பழைய தலைமை உறுப்பினர்கள் முடக்கப்பட்டுவிட்டனர்.

மூப்பின் காரணமாக தனது கட்சியின் இணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்த அலெக்சாண்டர் கவுலாண்டின் (Alexander Gauland) வாரிசாக 44 வயது ரினோ குருப்பலாவை (Tino Chrupalla) கட்சி காங்கிரஸ் பிரதிநிதிகள் 600 பேர் தேர்ந்தெடுத்தனர். சாக்ஸோனி  மாநிலத்தைச் சேர்ந்த சாயம் பூசுபவரும் அலங்கரிப்பாளருமான இவரை கவுலாண்ட் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார், என்றாலும் ஜேர்மன் பாராளுமன்ற பிரிவின் தலைவர்களான கல்பிட்ஸ், ஹொக்க மற்றும் அலீஸ் வெய்டல் ஆகியோரும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.  


மே 1, 2019 புதன்கிழமை, ஜேர்மனியின் ஏர்ஃபோர்ட்டில் நடந்த பேரணியில் ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சியின் தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்ட் பேசுகிறார் (AP Photo / Jens Meyer)

குருப்பலா, Der Flugel பிரிவில் உறுப்பினராக இல்லை என்றாலும், அதனுடனான நெருங்கிய தொடர்பை அவர் பேணுகிறார். அவர், The Wing பிரிவின் ஆதரவாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கிழக்கு ஜேர்மன் பிராந்திய அமைப்புகளின் ஆதரவைக் கொண்டிருந்தார். “கிழக்கிற்காக வலுவான குரல் கொடுப்பவராக” தான் இருக்க விரும்புவதாக குறிப்பிட்டு கட்சி மாநாட்டிற்கு தன்னை பரிந்துரைத்தார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரான குருப்பலா, புலம்பெயர்ந்தோர் மற்றும் ஊடகவியலாளர்களின் மீது தனது ஆக்கிரோஷமான தாக்குதல்களை நிகழ்த்தி கவனத்தை ஈர்த்தார். உதாரணமாக, தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில், “ஜனத்தொகையில் ஏற்படும் மாற்றத்திற்கு” எதிராக அவர் எச்சரித்தார். AfD இன் கோர்லிட்ஸ் (Gorlitz) மாவட்ட அமைப்புக்கு எழுதிய கடிதத்தில், ஊடக பிரதிநிதிகளை கண்டிக்க அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்: “நிச்சயமாக, ஊடகவியலாளர்களாக மாறியுள்ள கட்டுப்பாடில்லாத முகவர்கள் குறித்த பின்னணி தகவல்கள் எப்போதும் வரவேற்கத்தக்கவையே.”

கட்சியின் இணைத் தலைவர் பதவியை அவர் கைவிட்ட போதிலும், 78 வயதான கவுலாண்ட் தொடர்ந்து AfD இன் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருக்கிறார். கவுரவ தலைவர் பதவி குறிப்பாக அவருக்காகவே உருவாக்கப்பட்டது, என்றாலும் வைய்டலுடன் சேர்ந்து பாராளுமன்ற கன்னையை தொடர்ந்து அவர் வழிநடத்துகிறார்.

2015 முதல், கூட்டாக கட்சியை வழிநடத்திய ஜோர்க் மொய்தென் (Jorg Meuthen) – முதலில் ஃபிரவ்க்க பெட்ரியுடன் (Frauke Petry) பின்னர் கவுலாண்டுடன் - குருப்பல்லாவுடன் சேர்ந்து தெளிவான பெரும்பான்மை மூலம் பதவிக்கு உறுதிசெய்யப்பட்டார். பொருளாதார ரீதியான தாராளவாத பொருளாதார நிபுணரான இவர், ஊடகங்களால் ஒரு “மிதவாதி” என்று வர்ணிக்கப்பட்டாலும், ஹொக்க மற்றும் மக்கள் “பிரிவின்” மற்ற பிரதிநிதிகளுடன் நீண்ட காலமாக அவர் ஒத்துழைத்து வந்துள்ளார்.

The Wing பிரிவிலிருந்து தன்னை தொலைவில் வைத்துக்கொள்ள பயன்படுத்திய ஆலிஸ் வெய்டெல் (Alice Weidel) இப்போது மியூதெனுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார். செப்டம்பரில், ஷ்னெல்ரோடாவில் (Schnellroda) உள்ள அரசு கொள்கைக்கான நிறுவனத்திற்கு (Institute for State Policy) அவர் வந்திருந்தார். ஊடகவியலாளரான கோட்ஸ் குபிட்செக் (Gotz Kubitschek) இன் பரம-தேசியவாத சிந்தனைக் குழு, Der Flugel இன் கருத்தியல் மையமாக கருதப்படுகிறது. எதிர்க்கும் வேட்பாளர்கள் எவருமின்றி நிர்வாகக் குழு உறுப்பினராக வெய்டெல் இருப்பதை கட்சி உறுதிபடுத்தியது என்பதுடன், அவர் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆயினும், The Wing பிரிவை முன்னர் விமர்சித்த கட்சி நிர்வாகத்தின் பல உறுப்பினர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உதாரணமாக, பேர்லின் மற்றும் ரைன்லாண்ட்-பேலட்டினேட் (Rhineland-Palatinate) ஆகிய மாநிலங்களின் பிராந்திய தலைவர்களான ஜோர்ஜ் பாஸ்டெர்ஸ்கி (Georg Pazderski) மற்றும் ஊவ யுங்க (Uwe Junge) ஆகிய இரண்டு முன்னாள் ஜேர்மன் இராணுவ (Bundeswehr) அதிகாரிகள் புதிய செயற்குழுவில் அங்கம் வகிக்கவில்லை.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) முன்னாள் உறுப்பினரும், 2017 இல் மத்திய ஜனாதிபதி பதவிக்கான AfD இன் வேட்பாளருமான ஆல்பிரெக்ட் கிளாசர் (Albrecht Glaser), Der Flugel பிரிவின் ஆதரவாளரான ஸ்டீபன் பிராண்ட்னருக்கு (Stephn Brandner) துணை கூட்டாட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. பிராண்டனரின் யூத-விரோத மற்றும் இனவெறி அறிக்கைகளின் காரணமாகவே, ஜேர்மன் பாராளுமன்றத்தின் சட்ட விவகாரக் குழுவின் தலைவர் பதவிக்கு அவருக்கு மட்டுமே வாக்களிக்கப்பட்டது, இது போருக்கு பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் எழுபது ஆண்டு கால வரலாற்றில் முன்நிகழ்ந்திராத ஒரு நிகழ்வாகும்.   

AfD மாற்றத்தினால் அதன் முன்னணி நபர்கள் வலதிற்கு மாறுவதை கட்சி மாநாடு கண்டது, அதே நேரத்தில் ஒரு வார்த்தையளவில் மிதவாதநிலை வகிக்க அது முயன்றது. அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள AfD தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி கவுலாண்ட் தனது உரையை தொடங்கினார். மேலும், “CDU இற்கு ஒரேயொரு தேர்வு இருக்கும் ஒரு நாள் வரும், அது நாங்களே” என்று அவரது தொடக்க உரையிலேயே வலியுறுத்தினார். ஒத்துழைப்பை மிகவும் கடினமாக்கும் தேவையற்ற சாக்குப்போக்குகளை அதனால்தான் அது வழங்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

கவுலாண்டின் வாரிசான குருப்பலாவும் மிகவும் மிதமாக செயல்படும் படி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில், இது முற்றிலும் தந்திரோபாயமான சூழ்ச்சியாக இருந்தது என்று நயமற்ற வெளிப்படையான விதத்தில் அவர் விளக்கமளித்தார். “நம்பிக்கையளிக்கும் உள்ளடக்கத்துடன் மட்டுமே புதிய வாக்காளர்களை நம்மால் அணுக முடியும். கடுமையான மொழி பெரும்பாலும் எதிர்மாறானதை உருவாக்குகின்றது, குறிப்பாக பெண்கள் மத்தியில்,” என்றவர் கூறினார்.

கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அடங்கிய பெரும் கூட்டணி பெருமளவில் வாக்குகளை இழந்ததை கருத்தில் கொண்டு, 40 ஆண்டுகளாக தானே CDU இன் உயர்மட்ட அதிகாரியாக இருந்த கவுலாண்ட், CDU இன் பகுதிகளும், மேலும் சாத்தியமானால் SPD உம் விரைவில் அல்லது பின்னர் AfD க்கு திரும்பி அதனுடன் சேர்ந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் என உறுதியாக எதிர்பார்க்கிறார். துருங்கியாவை ஒரு சோதனை வழக்காகவே அவர் எடுத்துக் கொள்ளும் நிலையில், அக்டோபர் 28 மாநிலத் தேர்தல்களுக்குப் பின்னர் AfD இல்லாத ஒரு அரசாங்க பெரும்பான்மைக்கு அங்கு சாத்தியமில்லை என்று அவர் கருதுகிறார்.

Braunschweig இல் சமீபத்தில் நடந்த கட்சி மாநாடு, AfD இல் வலதுசாரி தீவிர பாசிச கட்சி ஒன்று உருவாகி வருவதை வெளிப்படுத்துகிறது, இது நாஜிக்களின் மரபுகளுடன் மேலும் மேலும் வெளிப்படையாக தன்னை இணைத்துக் கொள்கிறது. இதற்கான பொறுப்பு, ஸ்தாபகக் கட்சிகளிடமும் குறிப்பாக பெரும் கூட்டணியிடமும் உள்ளது. அதன் அகதிகளுக்கு எதிரான கொள்கை, அதன் பாரிய இராணுவ செலவினம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்கள் ஆகியவற்றுடன், AfD இன் திட்டத்தை இது நடைமுறைக்குக் கொண்டு வருகிறது, அதே நேரத்தில் தீவிர வலதுசாரி கட்சியை ஊக்குவிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது.

Verfassungsschutz (இரகசிய சேவை), AfD ஐ பாதுகாக்கின்ற மற்றும் அறிவுறுத்துகின்ற அதேவேளை, AfD இன் எதிரிகளை “இடதுசாரி தீவிரவாதிகள்” என தண்டிக்கின்றது. தங்கள் பல்கலைக்கழகத்திற்கே பேராசிரியராக திரும்பும் இந்த வலதுசாரி தீவிரவாத நிறுவன ஸ்தாபகர், பெர்ன்ட் லூக்கிற்கு (Bernd Lucke) எதிராக ஹம்பேர்க் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில், அது  “கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக” கூறி ஊடகங்கள் சீற்றமடைந்தன.

இராணுவவாதத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கும், அடக்குமுறைமிக்க அரசு அதிகாரத்துவங்களை முடுக்கிவிடுவதற்கும், மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு வலுதுசாரி பாசிச கட்சி தேவைப்படுகிறது. அதே காரணத்திற்காக, வலதுசாரி அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், நிதி அதிபர்களும், மற்றும் இராணுவமும் இணைந்து செய்த சதி, 1933 இல் ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இப்போது, ஜேர்மனியில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலிருந்து பிரேசில் முதல் கிழக்கு ஐரோப்பா வரையிலான உலகின் பல முதலாளித்துவ நாடுகளில் இதே மாதிரியான நிலை உள்ளது.