ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mercedes-Benz to cut more than 10,000 jobs

மெர்சிடெஸ்-பென்ஸ் 10,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்ட உள்ளது

By K. Nesan
30 November 2019

உலகில் விலை உயர்ந்த ஆடம்பர வாகனங்களின் மிகப்பெரும் விற்பனை ரகமாக விளங்கும் மெர்சிடெஸ்-பென்ஸ், அடுத்த இரண்டாண்டுகளில் 10,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்ட இருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

டைம்லெர் நிறுவனத்தின் தொழிலாளர் தொடர்பு பிரிவின் இயக்குனரும் நிர்வாக குழுவின் உறுப்பினருமான வில்ஃப்ரீட் ஃபோர்த் அறிவிக்கையில், “உலகெங்கிலும் மொத்த எண்ணிக்கை ஐந்து இலக்கங்களில் இருக்கும்,” என்றார். ஊடகங்களுடனான தொலைத்தொடர்பு வழி கலந்துரைடாலில், ஃபோர்த் குறிப்பிடுகையில், பணியாளர் குறைப்பு நிகழ்ச்சிப்போக்கு 2022 இன் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக வலியுறுத்தினார்.

இந்த பாரிய வேலைநீக்க அறிவிப்பானது, இலண்டனில் முதலீட்டாளர்களின் பலத்த கரகோஷத்துடன் தலைமைச் செயலதிகாரி Ola Källenius, அந்நிறுவனம் 1.4 பில்லியன் யூரோ அளவில் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க சிக்கன நடவடிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வருகிறது. சமீபத்திய மாதங்களில் இலாபத்தின் மீது இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பின்னர், Källenius பங்குதாரர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் குறிப்பிடுகையில், அவர்களின் இலாபங்களை அதிகரிக்க அவர் அவசியான அனைத்தும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

ஸ்ருட்கார்டில் 1928 இல் நிறுவப்பட்ட மெர்சிடெஸ்-பென்ஸ் இல் உலகெங்கிலும் 300,000 பேரும், ஜேர்மனியில் 180,000 பேரும் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக ஜேர்மன் கார் தொழில்துறையின் மையமாக விளங்கும் தென்மேற்கு ஜேர்மனி மாநிலமான பாடன் வூட்டெம்பேர்க், இந்த நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் Bosch போன்ற கார் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் வாகன உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, பாடன் வூட்டெம்பேர்க்கில் மட்டும் கார் உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளில் சுமார் 460,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.


டைம்லெர் நிறுவன தலைமை அலுவலகம்

 

இந்த அறிவிப்பு ஜேர்மன் மற்றும் சர்வதேச வாகனத்துறையில் வேலைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலின் பாகமாக உள்ளது. இந்தாண்டு மட்டும், இந்தியா மற்றும் சீனாவில் 570,000 வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. செவ்வாயன்று, ஜேர்மன் கார் உற்பத்தி நிறுவனமும், வோல்ஸ்வாகனின் துணை-நிறுவனமுமான அவுடி, அடுத்த ஐந்தாண்டுகளில் 9,500 வேலைகள் அழிக்கப்பட இருப்பதாக அறிவித்தது. 2022 ஆம் ஆண்டுக்குள் 12 பில்லியன் யூரோவுக்கும் (13.23 பில்லியன் டாலர்) அதிகமாக வெட்டுக்கள் செய்யவிருப்பதாக புதன்கிழமை BMW அறிவித்தது, வியாழக்கிழமை Bosch அறிவிக்கையில் Reutlingen நகரில் இன்னும் 500 வேலைகளை வெட்ட இருப்பதாக அறிவித்தது.

கடந்த மூன்றாண்டுகளில் வோல்ஸ்வாகன் 30,000 வேலைகளை நீக்கியுள்ளது. ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகளவில் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருவதுடன், 8,000 வேலைகளை வெட்டுகிறது.

உலகெங்கிலும் அதிகரித்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இத்தகைய தாக்குதல்களை எதிர்க்கின்றனர். மெக்சிகோவின் மத்தாமோரொஸில் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழில்துறையில் பெரியளவில் சுரண்டப்படும் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர் இந்தாண்டு தொடக்கத்தில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டிற்கும் எதிராக பல வாரங்கள் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவில், 48,000 ஜிஎம் வாகனத்துறை தொழிலாளர்கள் 50 ஆண்டுகளில் மிக நீண்ட வாகனத்துறை வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். இந்தியா, சீனா, ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளிலும் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.

ஆனால் எங்கெல்லாம் இத்தகைய போர்குணமிக்க போராட்டங்கள் வெடிக்கின்றனவோ, அவை அவற்றை தனிமைப்படுத்தி விற்றுத் தள்ளிவரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் உடனடியாக மோதலுக்கு வருகின்றன. ஜேர்மனியின் IG Metall, அமெரிக்காவின் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) மற்றும் பிற சங்கங்களும் நீண்டகாலமாக சமூக மேம்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களுக்காக போராடும் தொழிலாளர்கள் அமைப்புகள் என்பதிலிருந்து முடிவுக்கு வந்துள்ளன. அதற்கு பதிலாக, அவை நிர்வாகத்தின் கோரிக்கைகளை திணிப்பதற்காக பணிக்கப்பட்ட, ஆலைகளில் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் படையாக செயல்படுகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் உலகளவில் விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதைக் காட்டி வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலையும், மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களின் அறிமுகத்தைக் காட்டி உலகளாவிய வாகனத் தொழில்துறையின் மறுகட்டமைப்பையும் நியாயப்படுத்துகின்றன. ஓர் அறிக்கையில் டைம்லெர் அறிவித்ததாவது, “வாகனத் தொழில்துறை அதன் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தின் மத்தியில் உள்ளது. கார்பன் டை ஆக்சைடு வெளியிடாத வாகனங்களை நோக்கிய அபிவிருத்திக்கு மிகப்பெரிய முதலீடுகள் அவசியப்படுகின்றன.”

நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வைச் சீரழிக்கும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள், IG Metall சங்கம் மற்றும் தொழிற்சாலை கவுன்சில்களால் முழுமையாக ஆதரிக்கப்பட்டுள்ளதுடன், அவை தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் வேலைநீக்கங்கள் பற்றிய விபரங்களைத் தொகுக்க நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வருகின்றன. டைம்லெர் வேலை வெட்டுக்கள் குறித்து போர்த் அறிவித்த போது, “இப்போது தொழிற்சாலை குழுவின் உடன்பாட்டுடன் நிறுவனம் முக்கிய விடயங்களைச் சீர்படுத்தி வருவதால், நம்மால் 2022 இறுதிக்குள் இந்த இலக்கை எட்ட முடியும்,” என்று அவர் பெருமைபீற்றினார்.

IG Metall மற்றும் தொழிற்சாலை குழு உடனான உடன்படிக்கை மீது போர்த் கூடுதல் விபரங்களை வழங்க மறுத்தார். முக்கிய அம்சங்கள் எவ்வாறு துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது வரவிருக்கும் வாரங்களில் தீர்மானிக்கப்படும் என்றார்.

ஆனால் ஊடக செய்திகளின்படி, சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, டைம்லெரும் தொழிற்சாலை குழுவும் கூடுதலாக தொழிலாளர் செலவு குறைப்புகளைச் செய்ய உடன்பட்டுள்ளன. ஏனைய விடயங்களுடன் சேர்ந்து, தொழிலாளர்களின் வாராந்தர வேலை நேரங்களைக் குறைப்பதற்கும் முதலாளிமார்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட உள்ளது. வாரத்திற்கு 40 மணி நேரத்துடன் தொழிலாளர்கள் குறைந்த நஷ்டஈட்டுடன் குறைந்த மணி நேரங்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். நிறுவனம் நிர்வாகத்தில் உள்ள தற்காலிக பணியாளர்களின் காலாவதியாகும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை மிகவும் கடுமையான வரையறை செய்யப்பட்ட அடிப்படையில் மட்டுமே நீடிக்கும். நிரந்த பணியாளர்களுக்கான 40 மணி நேர நிலையான வரையறை ஒப்பந்தங்களும் இதேயளவுக்கு கடுமையான வரையறை செய்யப்பட்டதாக இருக்கும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய இரண்டு டைம்லெர் தொழிலாளர்கள் கூறுகையில், அவர்களுக்கு ஊடகங்கள் மூலமாக மட்டுமே வெட்டுக்கள் குறித்து தெரிய வந்ததாக தெரிவித்தனர். நிர்வாகத்திற்கும் IG Metall க்கும் இடையிலான ஆழ்ந்த பேரம்பேசல்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் Källenius தலைமை செயலதிகாரியாக ஆனதில் இருந்தே நடந்து வருவதாக இருவரும் தெரிவித்தனர். தொழிற்சாலைகளில் தொழிலாளர் அமைதியின்மையை தவிர்ப்பதற்காகவே வெட்டுக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட நிறுவனம் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்ததாக தொழிலாளர்கள் கருதுகின்றனர். ஸ்ருட்கார்டின் மிகப் பெரிய ஆலைகளில் ஒன்றான Schillerhalle இல் திங்கட்கிழமை தொழிலாளர்களின் ஒரு கூட்டத்திற்கு IG Metall அழைப்பு விடுத்துள்ளது.


Sindelfingen இன் மெர்சிடெஸ்-பென்ஸ் ஆலையில் WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழ் பிரச்சாரகர்கள்

டைம்லெர் அதன் திட்டங்களை முன்நகர்த்துவதற்கு IG Metall இன் சேவைகளைச் சார்ந்துள்ளது. தொழிற்சங்கம் மற்றும் அதன் தொழிற்சாலை குழுக்களை அதிகரித்தளவில் கண்டித்து வரும் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்க, கடந்த வெள்ளிக்கிழமை, IG Metall ஸ்ருட்கார்டின் மையத்தில் Schlossplatz இல் நடவடிக்கை நாள் என்றழைக்கப்பட்ட ஒன்றை ஏற்பாடு செய்தது. ஆனால் இந்த தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் நிறுவனத்துடன் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் சக-சதிகாரர்களாக செயல்படுகிறார்கள் என்ற உண்மையை அங்கே அவர்களாலும் கூட மறைக்க முடியவில்லை.

IG Metall இன் பிராந்திய இயக்குனர் Roman Zitzelsberger, “எல்லா முதலாளிமார்களும் தெரிந்து கொள்ள வேண்டும்: ஒருங்கிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்,” என்று அறிவித்து தொழிற்சங்கத்துடனான கூட்டுறவை முன்மொழிந்தார். அவர் தொடர்ந்து கூறினார், “மாற்றம் வருகிறது, நம் தலையை நாம் மண்ணில் புதைத்து வைத்து கொண்டிருக்கக் கூடாது,” என்றார்.

கடந்தாண்டு 213,700 யூரோ வருமானத்துடன் டைம்லெர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான Zitzelsberger, செலவுக் குறைப்பு திட்டங்கள் மீதும் மற்றும் பாடன் வூட்டெம்பேர்க்கில் 160 உலோகத்துறை நிறுவனங்களில் பணியாளர்கள் குறைப்பு சம்பந்தமாகவும் முதலாளிமார்களின் அமைப்பான Industrieverband Südwestmetal அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் தற்போது IG Metall க்கான தலைமை பேச்சுவார்த்தையாளராக உள்ளார்.

பொது தொழிற்சாலை குழுவின் துணைத் தலைவர் Ergun Lümali, தொழிற்சங்கம் பாரிய வேலைநீக்கங்களை முழுமையாக ஆதரிக்கிறது என்பதையும், மறுகட்டமைப்பு முடிந்தளவுக்கு நடைமுறைக்கு உகந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் கவலை என்பதையும் தெளிவுபடுத்தினார்: “வெறுமனே நாங்கள் தனிநபர்களைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. தொழிலாளர்களின் செலவு குறைப்பு மீது ஒருங்குவிவது, மேம்படுத்தும் நிகழ்ச்சிப்போக்காக இருக்க வேண்டும் மற்றும் வேலை நடந்து கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

டைம்லெரில் பாரிய வேலைநீக்கங்களும் இத்தகைய தாக்குதல்களைத் திணிப்பதில் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரமும், சர்வதேச வாகனத் தொழில்துறையில் இந்த வேலை அழிப்புகளுக்கு விடையிறுப்பாக தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சுயாதீனமான விடையிறுப்பை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியத்தையே மீண்டுமொருமுறை அடிக்கோடிடுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய முன்னோக்கில் நாம் எழுதினோம்: “தொழிலாளர்களின் வேலைகள், வேலையிட நிலைமைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலை எதிர்க்க அவர்களுக்கு ஒரு சர்வதேசவாத முன்னோக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டமும் அவசியப்படுகிறது என்பதை இந்த அபிவிருத்திகள் தெளிவுபடுத்துகின்றன. தொழிலாளர்கள், உலகளவில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பில்லியனிய பங்குதாரர்களை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக வெட்டுக்களைச் செய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை குழுக்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய காசுக்காக பேரம் பேசும் எந்திரங்களிடம் இருந்து முறித்துக் கொள்ளாமல், தங்களின் போராட்டங்களை சர்வதேசரீதியில் ஒருங்கிணைப்பதற்குச் சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை ஸ்தாபிக்காமல், ஒரேயொரு வேலையைக் கூட பாதுகாக்க முடியாது.”

மெர்சிடெஸ்-பென்ஸ் இன் அபிவிருத்திகள் இந்த முன்னோக்கின் சரியானத்தன்மையை கூர்மையான விதத்தில் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. இப்போது ஒவ்வொன்றும் தொழிலாளர்களின் சுயாதீனமான முன்முயற்சிகளையும் அமைப்பையும் சார்ந்துள்ளன.