ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

1.5 million march, tens of thousands strike in France against austerity and inequality

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக பிரன்சில் 1.5 மில்லியன் பேர் பேரணி, பத்தாயிரக் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம்

By Anthony Torres and Alex Lantier
6 December 2019

பல பத்தாண்டுகளில் பிரான்சில் நடத்தப்பட்ட இதுபோன்ற தொழில்துறை நடவடிக்கைகளிலேயே மிகப் பெரிய நடவடிக்கையாக, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஓய்வூதியங்களை வெட்டும் திட்டங்களுக்கு எதிராக நேற்று பத்தாயிரக் கணக்கான இரயில்வே தொழிலாளர்களும், அரசு மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், 1.5 மில்லியன் பேர் பேரணியில் கலந்துகொண்டனர் அல்லது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.


பேரணியின் ஒரு பகுதியினர்

இந்த வேலைநிறுத்தம் சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் ஒரு பரந்த சர்வதேச மீளெழுச்சியின் பாகமாக உள்ளது.

பிரான்சில் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஈராக், லெபனான், சிலி, கொலம்பியா, ஹாங்காங், அல்ஜீரியாவின் பாரிய போராட்ட இயக்கங்களுடனும் மற்றும் அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின், அத்துடன் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுடனும் இணைந்துள்ளனர். நேற்று பிரான்சில், தேசிய இரயில்வே (SNCF) தொழிலாளர்களும், ஆசிரியர்களும் மற்றும் பாரீசின் பொது போக்குவரத்து, மருத்துவமனைகள், விமான நிலையங்கள், எரிசக்தி, துறைமுகங்களின் தொழிலாளர்களும், அத்துடன் மாணவர்களும் வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து அணிவகுத்தனர்.


ஹாங்காங், ஈராக், சிலி, லெபனான் உலகப் புரட்சி

இந்த வேலைநிறுத்தமானது போராட்டத்தில் அணிதிரண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்ட சமூக சக்தியை எடுத்துக்காட்டியது. பிரான்ஸ் எங்கிலும் இரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டது, வெறும் 10 இல் ஒரு அதிவிரைவு இரயில்கள் (TGV) மற்றும் 3 இல் இருந்து 5 சதவீத பிராந்திய விரைவு இரயில்கள் மட்டுமே ஓடின. SNCF நிர்வாகத்தின் தகவல்படி, இரயில் ஓட்டுனர்களில் 85.7 சதவீதத்தினர் மற்றும் இரயில்வே கட்டுப்பாட்டாளர்களில் 73.3 சதவீதத்தினர் அவர்கள் வேலைநிறுத்தத்தில் இணைவதாக அறிவித்தனர்.

பாரீசில், பொதுப் போக்குவரத்தும் நடைமுறையளவில் நின்று போயிருந்தது. சுயாட்சி பாரீஸ் போக்குவரத்து ஆணையம் (RATP) 11 இல் இருந்து 16 மெட்ரோ வழித்தடங்கள் நிறுத்தப்பட்டதாகவும், மற்ற வழித்தடங்களில் வெறும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே செயல்பட்டதாகவும் அறிவித்தது.

வேலைநிறுத்தக்காரர்கள் எரிபொருள் சேமிப்பு நிலையங்களை முடக்கினர், பிரான்சின் 8 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 7 இன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர், இது நாடெங்கிலும் நீண்ட காலத்திற்கு எரிபொருள் பற்றாக்குறையை உண்டாக்க அச்சுறுத்தியது.

பொதுச் சேவைக்கான துணை அமைச்சர் Olivier Dussopt வழங்கிய விபரங்களின்படி, கல்வித்துறை, தபால் நிலையம், மற்றும் முன்னாள் பிரான்ஸ் தொலைதொடர்பு தொழிலாளர்கள் உட்பட பொதுச்சேவைத்துறை தொழிலாளர்களில் 32.5 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்தில் இணைந்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் 51.15 சதவீதத்தினரும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 42.32 சதவீதத்தினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரும்பான்மை குழந்தைகள் வீடுகளில் இருக்க தள்ளப்பட்டனர், அல்லது நகர ஆணையங்களால் செயல்படுத்தப்படும் அவசரகால சேவை மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


பேரணியின் மற்ரொரு பகுதியினர்

தெற்கில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு பிரிவு தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதால், பிரதான பாரீஸ் விமான நிலையமும், நீஸ், மார்சைய், லியோன், துலூஸ் மற்றும் போர்த்தோ விமானங்களும் உட்பட மிக முக்கிய பல பிரெஞ்சு விமான நிலையங்கள் வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்தம் வரவிருக்கும் நாட்களில் பல்வேறு தொழில்துறைகளில் தொடரவுள்ளது. திங்கட்கிழமை வரையில் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்குமென தொழிற்சங்க ஆதார நபர்கள் தெரிவித்தனர், வெள்ளிக்கிழமை வரையில் 20 சதவீத விமானங்களை இரத்து செய்யவிருப்பதாக விமானச் சேவை நிறுவனங்கள் தெரிவித்தன. இன்று பல ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்குவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. பாரவூர்தி ஓட்டுனர்களின் ஓர் அமைப்பான lOTRE, எரிபொருள் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் வரி உயர்வுகளுக்கு எதிராக போராடுவதற்கு இன்று அது 15 மறியல்களை மேற்கொள்ள இருப்பதாக நேற்றிரவு அறிவித்தது.

வேலைநிறுத்தக்காரர்கள் பிரான்ஸ் எங்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்களில் நூறாயிரக் கணக்கில் அணிவகுத்தனர். பாரீசில் 250,000 போராட்டக்காரர்கள், மார்சைய்யில் 150,000, துலூசில் 100,000, லீல் 40,000 மற்றும் மொன்பெலியே, போர்த்தோ, நாந்தேரில் பத்தாயிரக் கணக்கானோர், அத்துடன் அண்மித்து 40 ஏனைய நகரங்களில் ஒட்டுமொத்தமாக 285,000 போராட்டக்காரர்கள் இருந்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. பல நகரங்களில், பேரணிகளில் எத்தனை பேர் கலந்துகொண்டிருந்தனர் என்ற புள்ளிவிபரங்களை அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு வழங்க மறுத்தனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படாத, நன்கறியப்பட்ட "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களான Éric Drouet, Priscilla Ludosky மற்றும் Maxime Nicolle உள்ளடங்கலாக, போராட்டங்களில் இணையுமாறு அவர்களின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

லியோன், நாந்தேர், ரென் மற்றும் பாரீஸ் உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பாரீசில் பேரணி நகர்வதிலிருந்து அதன் பெரும் பிரிவினரைப் பாதுகாப்பு படையினர் தடுத்தனர், பின்னர் முதலில் குடியரசு சதுக்கத்திலும் (place de la République) அதன் பின்னர் தேசிய சதுக்கத்திலும் (place de la Nation) அவர்களைத் தாக்கினர்.

கடந்த டிசம்பரில் மிகப் பெரிய “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்ட பொலிஸ் நிலைநிறுத்தலுடன் ஒப்பிடுகையில், மக்ரோன் அரசாங்கம் மிகப் பாரியளவில் பொலிஸ் நிலைநிறுத்தலைச் செய்திருந்தது, அது தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகப் போராட்டத்திற்கு முற்றிலும் முன்னோடியில்லாததாக இருந்தது.

L’Express பத்திரிகை அறிவித்தது, “மொத்தம், பிரான்ஸ் எங்கிலும் 108 பாதுகாப்பு தலையீட்டு பிரிவுகள் நிலைநிறுத்தப்படும்: 60.5 வாகன ரோந்து இராணுவ பொலிஸ் மற்றும் 47.5 கலகம் ஒடுக்கும் பொலிஸ். பாரீஸ் பகுதிக்கு அப்பாற்பட்டு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு வரையில், சற்றே குறைவான எண்ணிக்கையில் உள்ள மேற்கு மற்றும் தென்மேற்கு வரையிலும் பெருவாரியாக அவர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள். வன்முறை நடவடிக்கையை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுகள் (BRAV) இன் 180 மோட்டார் வாகன குழுக்களும் நிலைநிறுத்தப்படும். தொழில்நுட்ப அடிப்படையில், ஆறு நீர்பீய்ச்சிகள் நடவடிக்கைக்காக தயாராக வைக்கப்படும், மூன்று டிரோன்கள் பாரீஸ் மீது பறந்து கொண்டிருக்கும்,” என்றது.


பேரணியின் இன்னுமொரு பகுதியினர்

பெயர் வெளியிடாத ஓர் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், அவர் பாரீஸ் போராட்டம் குறித்து "மிகவும் கவலை" கொண்டிருப்பதாக கூறியதுடன், “நாம் கிளர்ச்சிக்கு முந்தைய நிலைமையில் உள்ளோம்,” என வெளிப்படையாக தெரிவித்தார்.

பாரீசில், பாதுகாப்பு படைகள் கவச வாகனங்களையும், நீர் பீய்ச்சிகள் அத்துடன் எலிசே ஜனாதிபதி மாளிகை மற்றும் இதர அரசு கட்டிடங்களுக்கு காவல் இருக்க சிப்பாய்கள் மற்றும் தாக்கும் துப்பாக்கிகள் ஏந்திய கலகம் ஒடுக்கும் பொலிஸ் ஆகியோரை அணித்திரட்டியது. 6,000 இல் இருந்து 8,500 க்கு இடையே கலகம் ஒடுக்கும் பொலிஸ் அணிதிரட்டப்பட்டிருந்தது. 11,490 பேர் முன்னெச்சரிக்கையாக பிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு கூடுதலாக, 71 பேர் முன்னெச்சரிக்கையாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது உட்பட மாலை 8 மணி வரையில் அங்கே 90 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த டிசம்பர் 5 வேலைநிறுத்தம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடுக்குகள் அதிகரித்தளவில் தீவிரப்பட்டு வரும் நிலையில், வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தின் விளைபொருளாகும். SNCF தனியார்மயமாக்கல் அத்துடன் கூலி வெட்டுக்கள் மற்றும் இரண்டு அடுக்கு வேலை முறையின் அறிமுகம் ஆகியவற்றுக்கு எதிராக, இந்த இலையுதிர் காலத்தில் இரண்டு மிகப் பெரிய தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் இந்த இலையுதிர் காலத்தில் இரயில்வே துறையை உலுக்கிய பின்னர், தொழிற்சங்கங்கள் அவை கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்று கவலைக் கொண்டிருந்த நிலையில் தான், SNCF ஆல் இந்த வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே, தொழிலாளர்களின் இன்னும் பல பிரிவுகளும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேலைநிறுத்தத்தில் இணைய இந்த சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொள்ள முயன்றன.

இந்த அணித்திரள்வு ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளுக்கு —பொதுத்துறை கூலிகளை உறைய வைப்பது மற்றும் ஓய்வூதியங்கள் மற்றும் பிற சமூக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலுக்கு— பரந்தளவில் எதிர்ப்பு அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. மக்ரோன் பல்வேறு சிறப்பு ஓய்வூதிய நிதித்திட்டங்களை நீக்கி வருவதுடன், எந்த முன்-நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதிய பணமும் வழங்காமல் "புள்ளிகளின்" அடிப்படையில் ஓய்வு பெறுவதை நோக்கி நகர்ந்து வருகிறார். அதிக சமூக சமத்துவம் மற்றும் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளுக்கான அபிலாஷைகளை, அரசு அவமதிப்புடன் நிராகரித்துள்ளது, அதற்கு பதிலாக அது ஓய்வூதியங்கள், மருத்துவக் கவனிப்பு மற்றும் பிற முக்கிய வேலைத்திட்டங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைத் திட்டமிடுகிறது.


நீண்ட காலம் வாழ்வது என்பது மரணம் வரை வேலை செய்வதல்ல

தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பு, இந்த முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கும் அதேபோல் மக்ரோனுடன் வெட்டுக்களைப் பேரம்பேசி வரும் தொழிற்சங்கங்களின் சட்டபூர்வத்தன்மை மீதுமான தெளிவான எதிர்ப்பாக உள்ளது. 2017 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், இதுவரையில் அவருக்கு எதிராக எந்த பெரிய வேலைநிறுத்தத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருக்கவில்லை.

மிகவும் பரந்தளவில், நேற்றைய வேலைநிறுத்தத்திற்கு உந்திய எந்த பிரச்சினைகளுமே ஒரு தேசிய தன்மையைக் கொண்டிருக்கவில்லை; குறைந்த கூலிகள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகள், வேலையிடங்களில் குறைந்த பணியாளர்களைக் கொண்டு தொழிலாளர்கள் மீதான மோசமான சுரண்டல், சமூக சமத்துவமின்மை, வங்கிகளின் கட்டளைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்புக்கும் இராணுவ பொலிஸ் ஒடுக்குமுறை என இவை அனைத்துமே, இந்தாண்டு சர்வதேச அளவில் பத்து அல்லது நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஒன்றாக அணிதிரட்டி இருந்த சர்வதேச பிரச்சினைகளாகும். இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, சர்வதேச நிதியியல் சந்தைகள் மூலமாக பொருளாதார வாழ்வில் மேலாதிக்கம் செலுத்தும் பில்லியனிய நிதியியல் பிரபுத்துவத்தைப் பறிமுதல் செய்வது அவசியமாக உள்ளது.

இதற்கு தொழிலாளர்கள் தேசியளவில் அடித்தளத்தைக் கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் முறித்துக் கொண்டு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும், அவ்விதத்தில் தான் அவை போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுத்து உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளின் போராட்டங்களுடன் அதை பிணைக்க முடியும்.


மே 68 அல்ல எங்களுக்கு 1871 வேண்டும்

தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள், முதலாளிமார்களின் குழுக்கள் மற்றும் பிரான்சின் அரசுக்கு இடையே நடந்துள்ள "சமூக பேச்சுவார்த்தை" என்பது தொழிலாள வர்க்கத்தின் மீது சமூக பிற்போக்குத்தனத்தைத் திணிப்பதற்கு மட்டுமே சேவையாற்றி உள்ளது. உண்மையில், உயர்மட்ட மக்ரோன் அரசாங்க அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தின் போது தொழிற்சங்கங்களை ஊக்குவிக்க விரைந்ததுடன், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்த ஓய்வூதிய வெட்டுகளை ஏற்கவும், மக்ரோனுக்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கவும் விரும்புகின்றன என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதைத் தெளிவுபடுத்தினர்.

தேசிய நாடாளுமன்றத்தில் மக்ரோனின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் Gilles Legendre கூறுகையில், “(அவர்) விட்டு கொடுப்பார் என்று எந்த தொழிற்சங்கங்களும் ஆழமாக நினைத்தும் பார்க்கவில்லை,” என்றார். அதாவது, உண்மையில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிப்பதற்காக அரசு மற்றும் முதலாளிமார்களினது குழுக்களுடன் ஓர் அழுகிய சமரசத்தை எதிர்நோக்குகின்றன, இதில் மக்ரோனால் வரையப்பட்ட வெட்டுக்கள் அனைத்தும் நடைமுறையில் அளவில் உள்ளடங்கி இருக்கும்.

போக்குவரத்து அமைச்சகத்தில் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் அமைத்த போர்கால அறையில் இருந்து அவர் அறிவிக்கையில், “மொத்தத்தில் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் திட்டமிட்டவாறு நடக்கின்றன. பிரான்சில் இன்று பல போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன, பெரும்பாலானவை சிறப்பாக நடந்து வருகின்றன. … தொழிற்சங்கங்கள் இவற்றை வெற்றிகரமாக ஒழுங்கமைத்தமைக்காக அவற்றுக்கு என் மரியாதைகளைச் செலுத்துகிறேன்,” என்றார்.


சர்வாதிகார மொழி
கூடிய பங்களிப்பு செய்யுங்கள் குறைந்த உரிமையை பெறுங்கள்

இதுபோன்ற கருத்துக்கள், போராட்டத்தை வழிநடத்துவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்புகளையும் மற்றும் எச்சரிக்கைகளையும் ஊர்ஜிதப்படுத்துக்கின்றன. அரசாங்கத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் கட்டுப்படுத்தப்படும், முற்றிலும் ஒரு தேசிய கட்டமைப்புக்குள் நடத்தப்படும் போராட்டத்திலிருந்து தொழிலாளர்கள் எதையும் பெறப்போவதில்லை. தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர முன்னோக்கை நோக்கி திருப்புவதற்கு போராட்டத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுப்பதே முன்னோக்கி செல்லும் பாதையாகும்.