ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The way forward for the mass strike in France

பிரான்சில் பாரிய வேலைநிறுத்திற்கான முன்னோக்கிய பாதை

7 December 2019
Alex Lantier

வியாழக்கிழமை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுத்துறை தொழிலாளர்களும் இளைஞர்களும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் வேலைநிறுத்தம் மற்றும் பேரணி நடத்தினர். இரயில்வே துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் வெள்ளியன்றும் தொடர்ந்ததால், அது பெரும்பாலான பொது போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ததுடன், பல பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருந்தன.

இந்த சம்பவங்கள் வர்க்க போராட்டத்தின் சர்வதேச மீளெழுச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன. மீண்டுமொருமுறை, ஐரோப்பாவின் இதயத்தானத்தில், சமூகத்தின் அடிப்படை வர்க்க கோடுகள் வரையப்பட்டு வருகின்றன, தொழிலாள வர்க்கம் அதன் அளப்பரிய சமூக சக்தியை மற்றும் புரட்சிகர ஆற்றலை எடுத்துக்காட்டி வருகிறது. சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் பீதியுற்ற விடையிறுப்பு, “மக்ரோன் இலக்கில் வைத்து, பிரான்சில் ஒரு நாள் புரட்சி,” என்று வியாழக்கிழமை பாரிய வேலைநிறுத்தம் குறித்து நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்பு செய்தியால் எடுத்துக்காட்டப்பட்டது.


டிசம்பர் 5, 2019 வியாழக்கிழமை, மேற்கு பிரான்சின் ரென் நகரில் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். [AP புகைப்படம் / டேவிட் வின்சென்ட்]

சிலி, பொலிவியா, ஈக்வடோர், லெபனான் மற்றும் ஈராக்கில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், அமெரிக்கா மற்றும் மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் போலவே, பிரான்சிலும் அடிப்படை பிரச்சினை, முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கொடிய மட்டத்திலான சமூக சமத்துவமின்மையாகும்.

வர்க்கப் போராட்டத்தின் இந்த வெடிப்பு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மறுப்பதற்கும் மற்றும் சமூகத்தின் அடிப்படை பிளவு வர்க்கத்திற்கு மேலாக இனம் மற்றும் பாலினம் என்று உயர்த்திக் காட்டுவதற்குமான அனைத்து முயற்சிகளையும் அம்பலப்படுத்தி உள்ளது. பிரான்சில் இந்த ஆரம்ப இயக்கம் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டி உள்ளதைப் போல, தொழிலாளர்கள் போராட்டத்தில் நகரும் போது, அவர்கள் ஒரு வர்க்கமாக அதை செய்கிறார்கள்.

போராட்டத்தின் இந்த புதிய கட்டம், தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால் முக்கிய அரசியல் பிரச்சினைகளை உயர்த்துகிறது, மிகவும் மத்தியமாக, ஒரு புதிய சோசலிச தலைமையைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை உயர்த்துகிறது.

பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் வெடித்து ஓராண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், அந்த போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கைகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை: அதாவது சமத்துவம், நல்ல வாழ்க்கை முறைகளுக்காக மற்றும் சமூக அவலம், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவை. அதிகரித்து வரும் தொழிலாளர்களின் அடுக்குகள், நிதியியல் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இதுவே தருணம் என்ற முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பை இவ்வாறு தொகுத்தளிக்கலாம்: ஜனநாயகத்திற்கு இது மிகவும் மோசமானது! வியாழனன்று, மக்ரோன் பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் அணிவகுத்து கொண்டிருந்த வேலைநிறுத்தக்காரர்களை தாக்க கவச வாகனங்கள், நீர்பீய்ச்சிகள் மற்றும் கனரக ஆயுதமேந்திய கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்பினார். எந்தவித மக்கள் ஆதரவுமின்றி செயல்பட்டு வரும் ஓர் அரசாங்கம் மக்களின் 70 சதவீதத்தினர் எதிர்க்கும் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நசுக்க துணை இராணுவப் படை பொலிஸை அணித்திரட்டி வருகிறார்.

பிரான்சில், ஒவ்வொரு நாட்டையும் போலவே, முதலாளித்துவ அரசு, நிதியியல் உயரடுக்கின் மெல்லிய மூடிமறைப்பான சர்வாதிகாரமாக உள்ளது.

இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதன் அடிப்படையான தன்மை மற்றும் இயக்கவியல் குறித்த ஒரு சரியான அடையாளம் அவசியப்படுகிறது. பிரான்சின் தொழிலாளர்கள் வெறுமனே மக்ரோனை எதிர்த்து மட்டுமல்ல, மாறாக 1930 களுக்குப் பின்னர் ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ளதும் மற்றும் வர்க்க போராட்டத்தின் விரிவடைந்து வரும் மேலெழுச்சியையும் முகங்கொடுத்து வரும் உலக முதலாளித்துவத்தை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இன்னும் பரந்த அடுக்குகளை போராட்டத்திற்குள் இழுத்து வந்து, மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க போராடுவதே முன்னோக்கிய பாதையாகும்.

இதை எவ்வாறு செய்வது? ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீட்டை நிறுவ வேண்டும். செல்வந்தர்களின் ஜனாதிபதி, CGT உடன் புதிய கொள்கைகளுக்காக பேரம்பேசுவார் என்ற நம்பிக்கையில், மக்ரோன் அவரின் ஓய்வூதிய திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கோரிவிட்டு வேலைநிறுத்தங்களை நடத்துவதற்கு, ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பின் (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் முன்மொழிந்ததைப் போல, தொழிலாளர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. இது தோல்விக்கு மட்டுமே இட்டுச் செல்லும்.

1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் வழங்கிய புரட்சிகர சந்தர்ப்பத்தை கிரெனல் (Grenelle) உடன்படிக்கைகளின் கூலி உயர்வுகளுக்குப் பிரதியீடாக CGT விற்றுத் தள்ளிய போது, பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கு கடைசி குறிப்பிடத்தக்க சமூக விட்டுக்கொடுப்புகள் வழங்கப்பட்டதில் இருந்து ஓர் அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றோ, முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி இன்னும் ஆழமாக உள்ளது. அங்கே வர்க்க போராட்டத்திற்கு எந்த சீர்திருத்தவாத விளைவும் இருக்காது.


பாரீசில் ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் போக்குவரத்து விளக்கின் மீதேறி நிற்கிறார் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ Thibaud Camus]

மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்பு கட்சி (LRM) அது பின்வாங்காது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இலண்டனில் இவ்வார நேட்டோ உச்சி மாநாட்டில் இராணுவக் கொள்கை சம்பந்தமாக கடுமையான மோதல்கள் வெடித்த பின்னர், LRM, ஐரோப்பிய பாதுகாப்பையும் பிரெஞ்சு பொருளாதார போட்டித்தன்மையையும் மீளபலப்படுத்துவதற்காக, இராணுவம் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு நூறு பில்லியன் கணக்கான பணம் பாய்ச்ச தீர்மானகரமாக உள்ளது. மக்ரோன் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிப்பதற்காக, அவர் ஓய்வூதிய வெட்டுக்களைத் திரும்ப பெற்றாலும் கூட, அவர் சமூக எதிர்புரட்சியின் அடுத்த கட்டத்தைத் தயாரிப்பு செய்ய அவருக்கு நேரம் வழங்குவதாக மட்டுமே இருக்கும்.

CGT முன்வைத்த அதன் மூலோபாயம், இது புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) போன்ற குட்டி-முதலாளித்துவ குழுக்களால் எதிரொலிக்கப்பட்ட நிலையில், மோசடியானது.

இந்த வாரம் ஓய்வூதியங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க CGT முடிவெடுக்கவில்லை. “மஞ்சள் சீருடை" போராட்டங்களின் ஓராண்டு போக்கில், இவற்றைத் தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தி நவ-பாசிசவாதிகளாக கண்டித்திருந்த நிலையில், மக்ரோனின் திட்டமிட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் பாரியளவில் மக்கள் விரோதமானவை என்பதை முழுமையாக நன்கு அறிந்திருந்த CGT, அவரின் ஓய்வூதிய வெட்டுக்களைக் குறித்து அவரது அரசாங்கத்துடன் விவாதித்தது. தேசிய இரயில்வேயில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் போராட்டங்களுக்கு மத்தியில், எதிர்ப்பு அதன் கட்டுப்பாட்டை மீறி விடுமென அஞ்சி, CGT கடந்த மாதம் தான் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

தொழிலாளர்களைச் செயலழிக்க செய்து நோக்குநிலை பிறழச் செய்யவும் மற்றும் ஒரு விற்றுத் தள்ளலை திட்டமிடும் முயற்சியில் CGT அரசுடன் ஒத்துழைத்து வருகிறது. CGT இன் பாத்திரம் குறித்து ஆளும் வர்க்கத்திற்கு நன்கு தெரியும். வியாழக்கிழமை பாரீஸ், லியோன் மற்றும் பிற நகரங்களிலும் கலகம் ஒடுக்கும் பொலிஸ் வேலைநிறுத்தக்காரர்களைத் தாக்கிய அதேவேளையில், பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் கூறினார், “வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் திட்டமிட்டவாறு நடக்கின்றன.” “தொழிற்சங்கங்கள் அவற்றை வெற்றிகரமாக ஒழுங்கமைத்ததற்காக தொழிற்சங்களுக்கு நன்றி கூற" அவர் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டார்.

தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து போராட்டத்தை வெளியில் எடுப்பது தான் முன்னோக்கிய பாதையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளிடம் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கிறது. அதுபோன்ற அமைப்புகளில், தொழிலாளர்களும் இளைஞர்களும் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மீது சுதந்திரமாக வாக்களிக்க முடியும் திட்டமிட முடியும். மக்ரோன் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் அவை அவற்றின் சர்வதேச வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுக்கு முறையீடு செய்ய முடியும்.

“மஞ்சள் சீருடை" இயக்கம் மீது ICFI அதன் 2018 அறிக்கையில் விளங்கப்படுத்தியதைப் போல, உலகளாவிய நிதியியல் சந்தைகளின் கட்டளை மற்றும் தீவிரமடைந்து வரும் ஐரோப்பிய இராணுவ கட்டமைப்புக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த முறையீடு ஓர் அத்தியாவசிய உடனடியான அவசியமாக உள்ளது.

பிரெஞ்சு சம்பவங்களின் வெடிப்பார்ந்த தன்மை, 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய அண்மித்து மூன்று தசாப்தங்களில், அதுவும் குறிப்பாக 2008 பொறிவுக்குப் பிந்தைய தசாப்தத்தில் ஒன்று திரண்டுள்ள மிகப் பெரும் சமூக முரண்பாடுகளுக்குச் சாட்சியம் அளிக்கிறது. முதலாளித்துவமும் மற்றும் அது பிரான்சிலும் உலகெங்கிலும் உருவாக்கி உள்ள நிலைமைகள் மீதும்—மலைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டம், மக்கள்தொகையில் ஒரு சிறிய சதவீதத்தினர் செல்வவளத்தை முடிவின்றி திரட்டிக் கொண்டிருப்பது, முன்பினும் அதிகளவில் வறுமை மற்றும் அவலங்களின் மட்டங்கள் ஆகியவை மீது நிலவும் ஆழ்ந்த வெறுப்பு, அரசியல் வாழ்வின் மேற்புறத்திற்கு வெடித்து வந்து கொண்டிருக்கின்றன... பிரான்சில் என்ன அபிவிருத்தி அடைந்து வருகிறதோ அது இன்றியமையாதரீதியில் தேசியமயப்பட்டதல்ல, மாறாக உலகளாவிய நிலைமைகள் சம்பந்தப்பட்டதாகும்.

இந்த மதிப்பீடு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு பாரிய போராட்டங்கள் மற்றும் வர்க்க போராட்டங்களின் ஓர் உலகளாவிய வெடிப்பைக் கண்டுள்ளது. அவை 1968 இக்குப் பிந்தைய மாணவர் இயக்கத்திலிருந்து வெளிப்பட்ட நடுத்தர வர்க்க "இடது வெகுஜனவாதிகளின்" பின்நவீனத்துவ தத்துவங்களைத் தகர்த்தெறிந்துள்ளன, இத்தகைய தத்துவங்களின் நிலைப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக, தொழிலாள வர்க்கத்திற்கு பிரியாவிடை என்ற André Gorz இன் 1980 நூல் விளங்குகிறது. மெலொன்சோன், மக்களின் சகாப்தம் என்ற அவரின் 2014 நூலில், சோசலிசத்திற்கும் "அப்பால் செல்வது" அவசியம் என்று அறிவித்தார். இடது "மரணித்துவிட்டது" என்று கூறிய அவர், “இடது அரசியல் 'புரட்சிகர தொழிலாள வர்க்கம்' எடுத்திருந்த இடத்தை மக்கள் எடுத்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

இத்தகைய மதிப்பிழந்த சக்திகள் இப்போது தீர்க்கமாக வலதை நோக்கி திரும்பி வருகின்றன. இந்த வாரம், பெருந்திரளான மக்கள் அணிவகுத்த நிலையில், மெலொன்சோன் வேலைநிறுத்தத்தை ஆதரித்து நவ-பாசிசவாத மரீன் லு பென்னின் வெற்று அறிக்கையை ஊக்குவித்தும், அதை ஒரு "மனிதாபிமான" திசையில் "முன்னேற்றம்" என்று அழைத்தும் விடையிறுத்தார்.

உலகெங்கிலும் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் மீளெழுச்சியானது, முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாள வர்க்கமே தீர்க்கமான புரட்சிகர சக்தி என்பதையும், சோசலிசத்திற்கான புரட்சிகர போராட்டம் வரலாற்று திட்டநிரலில் உள்ளது என்பதையும் மீண்டுமொருமுறை எடுத்துக் காட்டி வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் முழுமையான தொழில்துறை சக்தியை அணித்திரட்டவும், ஆலைகள் மற்றும் வேலையிடங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் நிறுத்தவும், நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்யவும், தொழிலாளர்களின் குழுக்களைக் கட்டமைக்குமாறு PES அறிவுறுத்துகிறது. இது, அரசு அதிகாரத்தைக் கையிலெடுக்கவும் மற்றும் பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் அரசியல் மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும்.