ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers must adopt a socialist internationalist program to oppose Sri Lanka’s authoritarian, communalist Rajapakse regime

இலங்கையின் எதேச்சதிகார, இனவாத இராஜபக்ஷ ஆட்சியை எதிர்க்க தொழிலாளர்கள் சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக்கொள்ள வேண்டும்

By the Socialist Equality Party (Sri Lanka)
7 December 2019

இலங்கையில் நவம்பர் 16 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து, அரசாங்க அதிகாரத்தை தனது கைகளில் குவித்துக்கொள்வதற்காக கோடாபய இராஜபக்ஷ மிக அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) பிரதமரை இராஜனாமா செய்யுமாறு நெருக்கியதோடு, பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) சிறுபான்மை அரசாங்கத்தின் தலைவராக தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த இராஜபக்ஷவை நியமித்ததுள்ளார்.

அவர் ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் இந்த வார ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைத்தார். இராஜபக்ஷ, பேரம் பேசல்கள் மற்றும் வெளிப்படையான கையூட்டல்கள் ஊடாகவேனும் பெரும்பான்மையை ஒன்றிணைக்க முடியும்வரை, குறைந்த பட்சம் பாராளுமன்றத்தைக் கலைக்க அரசியலமைப்பு அதிகாரத்தைப் பெற்று, மார்ச் மாதம் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் வரை, பாராளுமன்றத்தை அநேக காலத்துக்கு மூடிவைக்க எண்ணுகின்றார். அவர் வெளிப்படையாகக் கூறியது போல், ஒரு முக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து, ஜனாதிபதிக்கு எதேச்சதிகார அதிகாரங்களை வழங்குவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதே அவரது நோக்கமாகும்.

இந்த ஜனநாயக விரோத நகர்வுகள், வெறுமனே இலங்கையின் கசப்பாக பிளவுபட்டுள்ள, நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ உயரடுக்கிற்குள் உள்ள இராஜபக்ஷவின் போட்டியாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டவை அல்ல. அவர்களின் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும்.

இலங்கை முதலாளித்துவம் ஒரு சமூக வெடிகுண்டின் மேல் அமர்ந்திருப்பதை இராஜபக்ஷ நன்கு அறிவார். அது ஏற்கனவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 18 மாதங்களும் மிக முக்கியமான வேலைநிறுத்த அலைகளை கண்டன. ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் "திறந்த சந்தை", "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகளுக்கு மாறியதற்கு எதிராக, 1980 இல் வெடித்த பொது வேலைநிறுத்தத்தை அந்த அரசாங்கம் நசுக்கிய பின்னர், இந்த வேலை நிறுத்தங்கள் வெடித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதைக் காரணமாகக் காட்டி வேலைநிறுத்தங்களை நிறுத்துவதில் ​​தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்றன. ஆனால், கோடாபய இராஜபக்ஷ ஜனாதிபதி ஆகி 10 நாட்கள் ஆவதற்கு முன்பே, வறிய மட்ட ஊதியத்திற்கும் மற்றும் வேலைச் சுமை அதிகரிப்புக்கும் எதிராக ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த ஆரம்ப போராட்டங்களானவை விலைவாசி உயர்வு, வெகுஜன வேலையின்மை, நிரந்தரத தொழிலின்மை, தனியார்மயமாக்கல் மற்றும் பொது சேவைகள் சீரிழந்து வருவது சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்திற்குள் பல ஆண்டுகளாக வளர்ச்சிகண்டுவருகின்ற கோபத்தை சுட்டிக்காட்டுகின்றன.

சமூக செலவுகளை அதிகரிப்பதாக இராஜபக்ஷ தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும், சரிந்து வரும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்றுமதி வீழ்ச்சியும் மற்றும் பெருகிவரும் கூட்டுத்தாபன கடன்களும் அரசாங்க கடன்களுமே ஜனாதிபதியையும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தையும் இயக்கவுள்ளன. இதனால் அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீதான தாக்குதலை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஏற்கனவே கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஆயினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருக்கும் இந்த ஆண்டின் நிதிப் பற்றாக்குறையை, 2020 இல் 3.5 சதவீதமாகக் குறைப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு கொழும்பு உறுதியளித்துள்ளது.

முந்தைய சிறிசேன-விக்ரமசிங்கவின் “தேசிய ஐக்கிய” அரசாங்கத்தை மட்டுமன்றி, முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளையும் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு தள்ளிச் செல்கின்ற முதலாளித்துவ ஆட்சியின் பரந்த நெருக்கடியில், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பு மிக முக்கியமான அங்கம் ஆகும்.

மேலும் மேலும் கூர்மையடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்கள், கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தையும் சிதைத்துள்ளது. இலங்கை மிக முக்கியமான இந்தியப் பெருங்கடலின் கப்பல் பாதைக்கு அருகில் அமைந்திருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதலில் தீவை ஒரு முன்நிலை அரசாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது – இந்த தாக்குதலின் தர்க்கம் ஒரு அணு ஆயுத யுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அந்த நோக்கத்திற்காக, இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் கன்னை மோதலில் வாஷிங்டன் மீண்டும் மீண்டும் தலையிட்டுள்ளது. குறிப்பாக, 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அது உதவியது.

"சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதில்" இலங்கை இணைந்துகொள்ள வேண்டுமென வாஷிங்டன் எதிர்பார்க்கிறது, என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ ஏற்கனவே கோடாபயவுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அது பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான ஒரு சொற்றொடர் ஆகும். இதில் நிலுவையில் உள்ள அமெரிக்க-இலங்கை படை நிலைகொள்ளல் ஒப்பந்தத்தை (சோஃபா) தாமதமின்றி கையெழுத்திடுவதும் செயல்படுத்தப்படுவதும் உள்ளடங்கும் என்பதில் சந்தேகமில்லை. சோஃபா ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளங்களை நிறுவுவதற்கும் அனைத்து அமெரிக்க பணியாளர்களும் தீவில் தடையின்றி செயற்படுவதற்கும் அனுமதியளிக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 30 ஆண்டுகால தமிழர்-விரோத உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

தனது சகோதரர் ஜனாதிபதியக இருந்த போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோடாபய இராஜபக்ஷ, 2009 ஏப்ரல்-மே மாதங்களில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலைக்கு தலைமை தாங்கியிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர் வெட்கமின்றி பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவித்த அதேவேளை, போர் அட்டூழியங்களில் சிக்கியுள்ள இராணுவ "வீரர்களை" பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பவராக தன்னைக் காட்டிக் கொண்டார். இராஜபக்ஷ, தனது முதல் ஜனாதிபதி உரையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒரு மறைமுக அச்சுறுத்தலை விடுத்தார். அவர், தான் "நல்லிணக்கத்திற்காக" முன்நிற்பதாக கூறிய அதேவேளை, தேர்தலில் வெற்றிபெற தனக்கு சிறுபான்மை வாக்குகள் தேவைப்பட்டிருக்கவில்லை என்றார்.

இதற்கிடையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் சாம்பலிலிருந்து தலைதூக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், சிங்கள ஆதிக்க ஸ்தாபகத்திற்குள் இராஜபக்ஷவின் போட்டியாளர்களுக்குப் பின்னால் தமிழ் மக்களை முடிந்துவிட முயன்றன. உச்சபட்ச “அதிகாரப் பகிர்வுக்கான”, அதாவது அதிகாரத்திற்கும் சலுகைக்குமான வாய்ப்பை திறந்துவிடுமாறு தாம் விடுக்கும் அறைகூவல்களுக்கு வாஷிங்டன் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய உறவுக்கு காத்திரமாக குரல் கொடுக்கும் வக்கீல்களாக தமிழ் கட்சிகள் உருவெடுத்துள்ளன.

கோடாபய இராஜபக்ஷவின் 6.9 மில்லியன் வாக்குகள் (52 சதவீதம்) ஒரு “பாரிய மக்கள் ஆணை” என்று கூட்டுத்தாபன ஊடகங்கள் கூறிக்கொள்கின்றன. இது ஒரு பொய்யாகும் - இது தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அச்சுறுத்துவதற்கும், அரசாங்கம் வெகுஜன எதிர்ப்பை சந்திக்கும்போது அது அரச அடக்குமுறையை நாடுவதை நியாயப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரம் ஆகும்.

கோடாபய இராஜபக்ஷவுக்கான வாக்குகள், பெருமளவில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும், குறிப்பாக கிராமப்புற தெற்கில் வாழும் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் வலதுசாரி நிர்வாகத்திற்கு எதிராக அளித்த வாக்குகளாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் பரவலான வெறுப்புக்கு உள்ளாகி இருந்தது.

இந்த தேர்தல் முடிவுகள், தொழிலாள வர்க்கம் தீவரிமான தலைமை மற்றும் முன்னோக்கு நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதையே காட்டுகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை ஊக்குவிக்கும் போராட்டங்கள் மேலும் மேலும் குவிந்து வரும் நிலைமையின் மத்தியில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் தேர்தல் நேரத்தில் அரசியல் ஸ்தாபகத்தின் இரு பிரதான பிற்போக்கு முகாம்களில் ஏதாவது ஒன்றுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

ஐ.தே.க., இனவாதத்தில் மூழ்கிப் போன ஒரு கட்சியாகும். அது தமிழர்-விரோத உள்நாட்டுப் போரைத் தொடங்கி வைத்ததோடு இலங்கையின் ஆளும் கட்சியாக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக யுத்தத்தை முன்னெடுத்திருந்தது. ஆயினும்கூட, பெரும்பாலான சிறுபான்மை வாக்காளர்கள், பேர்போன முன்னாள் சிங்கள பேரினவாத இலங்கை ஜனாதிபதியின் மகனான, ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவை, ஒரு "குறைந்த தீமை" எனக் கருதி அவருக்கு வாக்களித்தனர்.

தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் விரைவில் இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்துடன் கடுமையான மோதலில் இறங்குவர்.

அவை வெற்றிபெற வேண்டுமானால், தொழிலாளர்கள் வஞ்சக வலதுசாரி, இனவாதத்தால் பின்னப்பட்டுள்ள முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பிலிருந்தும் "கண்டன வாக்குகள்" மற்றும் "குறைந்த தீமை" அரசியலில் இருந்தும் விடுபட வேண்டும்.

முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது ஒருபுறமிருக்க, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதனையும் அக்கறையுடன் அணுகக் கூட முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையானது ஒரு சிறிய முதலாளித்துவ தன்னலக்குழுவின் சொத்துக் குவிப்புகளுக்காக அனைத்து சமூகத் தேவைகளையும் அடிபணியச் செய்கின்ற, சந்தைகள், வளங்கள் மற்றும் மூலோபாய நலன்களுக்காக ஏகாதிபத்தியங்ளும் பெரும் வல்லரசுகளும் போட்டியிடுகின்ற நிலையில், ஒரு உலகப் போருடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகின்ற, ஒரு காலாவதியான சமூக-பொருளாதார கட்டமைப்பாகும்.

இலங்கை முதலாளித்துவம் நெருக்கடியில் மூழ்கியுள்ளதுடன் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியால் தெளிவாக அதிர்ந்துபோயுள்ளது. ஆனால், அது பொருளாதாரத்தையும் ஒரு பெரிய அடக்குமுறை அரசு எந்திரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளதோடு, தனது ஆட்சியைத் தக்கவைக்க புது தில்லி மற்றும் வாஷிங்டனின் ஆதரவில் தங்கியிருக்கக் கூடும். தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக உருவாக்கிக்கொண்டு, தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தில் அதன் பின்னால் உழைப்பாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொள்ளாவிட்டால் மற்றும் அணிதிரட்டிக்கொள்ளும் வரை, இலங்கை கைக்கூலி முதலாளித்துவ வர்க்கம் அதனது வர்க்கப் போர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்லக் கூடும். இது அரசியல் சூழ்ச்சிகள், அரச அடக்குமுறை மற்றும் இனவாதத் தூண்டல்களையும் பயன்படுத்துவதோடு, சமூக எதிர்ப்பைத் தணிக்கவும் அதை முதலாளித்துவ தேர்தல் மற்றும் கண்டன அரசியல் போன்ற மலட்டு கட்டமைப்பிற்குள் திருப்பிவிடவும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முதல் நவ சம சமாஜக் கட்சி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி வரையுமான பல்வேறு “இடது” கட்சிகளை தீர்க்கமாகப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.

தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காகவும் சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைப்பதற்குமான அரசியல் எதிர்ச் சக்தியாக மாறுவதற்கு, தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தையும் புரட்சிகர அரசியல் தலைமைத்துவத்தையும் உழைக்கும் மக்களின் ஆரம்ப நிலையில் உள்ள வெகுஜன இயக்கத்திற்கு வழங்குவதை நிச்சயமான குறிக்கோளாகக் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சி அதனது வேட்பாளராக பாணி விஜேசிறிவர்தனவை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் தலையிட்டது.

மஹிந்தவிலிருந்து கோடாபய இராஜபக்ஷ வரை: சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் படிப்பினைகள்

கடந்த ஐந்து ஆண்டுகளின் அனுபவத்தை விமர்சன ரீதியாக ஆராய வேண்டியது, கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்துடன் வரவிருக்கும் மோதலுக்கான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தயாரிப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்: சிறிசேன-விக்ரமசிங்கவின் “தேசிய ஐக்கிய” அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த சக்திகள் யாவை; ஆட்சியில் இருந்தபோது அதன் சாதனைகள் என்ன; அதன் சிக்கன நடவடிக்கைகள், அதே போல் இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீன-விரோத போர் உந்துதலுக்குள் இணைத்துக்கொள்வது சம்பந்தமான வெகுஜன கோபத்தை இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும் அரசியல் ரீதியாக சுரண்டிக்கொள்ள முடிந்தது எப்படி.

2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், வாஷிங்டன், அதன் நெருங்கிய நட்பு நாடான இந்தியா மற்றும் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க உடனும் இணைந்து திட்டமிட்டு, மஹிந்த இராஜபக்ஷவின் நீண்டகால விசுவாசியான சிறிசேனவை அரசாங்கத்திலிருந்து விலக்கி, அவரது நீண்டகால எஜமானுக்கு எதிரான ஒரு "பொது எதிர்க்கட்சி" வேட்பாளராக நிறுத்தியது.

இராஜபக்ஷ சீனாவுடன் மிக நெருக்கமாகனவராகவும், அதனால், இலங்கையை இந்தியப் பெருங்கடலில் ஒரு “விமானத் தளமாக” பயன்படுத்தும் வாஷிங்டனின் திட்டங்களுக்கு அவர் ஒரு தடையாக இப்பதாகவும் கருதப்பட்டதால், அவரை விட்டு விலகுவதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. ஐ.தே.க. தலைவரும், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவருமான ரணில் விக்ரமசிங்க, வாஷிங்டனின் விருப்பங்களை இட்டு நிரப்ப ஆர்வமாக இருந்த போதிலும், பெருவணிகத்துடனான அவரது நெருங்கிய உறவுகளாலும் அவரது வலதுசாரி சாதனைகள் காரணமாகவும் அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்று கருதப்பட்டது. இதுவே சிறிசேனவை அணுகுவதற்கு வழி வகுத்ததோடு, இறுதியில் 1950 களில் இருந்து இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ.ல.சு.க.வை சிதறடிக்கும் சம்பவங்களையும் உருவாக்கிவிட்டது.

அவசரமாக ஒழுங்கமைக்கப்பட்ட, அமெரிக்காவால்-திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கை, இரண்டு காரணங்களுக்காக வெற்றி பெற்றது.

முதலாவதாக, மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் பரவலாக மதிப்பிழந்து போயிருந்தது. உள்நாட்டுப் போரின் முடிவில் "சமாதானத்தை பகிர்வதாக" அவர் அளித்த வாக்குறுதி ஒரு கொடூரமான மோசடி என்பது நிரூபிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதல்களை உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட அதே நேரம், அரசாங்கம் பாரிய இராணுவ செலவுகளை பேணியது.

இரண்டாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏராளமான அரச சார்பற்ற நிறுவனங்கள், பல தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அரசியல் கட்சிகள் அனைத்தும், பல ஆண்டுகளாக இராஜபக்ஷவுக்காக கைதூக்கி வந்த சிறிசேனவையும் அவரது புதிய கூட்டாளியான அமெரிக்க-வாடிக்கையாளர் விக்ரமசிங்கவையும், ஜனநாயக எழுச்சியின் தலைவர்களாக தூக்கிப் பிடித்து மாலை அணிவிக்க விரைந்தனர். நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்ரம்பாகு கருணாரட்ன, அந்த ஆட்சி மாற்றத்தை ஒரு "ஜனநாயகப் புரட்சி" என்று கூட அறிவித்தார்.

நவ சம சமாஜக் கட்சி போன்ற சில போலி-இடது குழுக்களும் சிறிசேனவின் தேர்தலை வெளிப்படையாக ஆதரித்தன. ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி போன்ற ஏனையவை, இராஜபக்ஷவின் "சர்வாதிகார ஆட்சியை" தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலம் மறைமுகமான ஆதரவை வழங்கியதுடன், பின்னர் "ஜனநாயக இடைவெளி" திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பாராட்டின.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) எச்சரித்தவாறு, சிறிசேன-விக்ரமசிங்கவின் “தேசிய ஐக்கிய” அரசாங்கத்தின் “ஜனநாயகம்,” தமிழர்களுடனான “நல்லிணக்கம்” மற்றும் “நல்லாட்சி” பற்றிய வாக்குறுதிகள், இராஜபக்ஷவின் “சமாதான பகிர்வு” என்ற மோசடியை விட எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. அது வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் ஆதரவாக தீவின் வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக மீண்டும் அணிசேர்த்ததுடன், இலங்கை இராணுவத்தை, குறிப்பாக கடற்படையை, சீனாவிற்கு எதிரான பென்டகனின் முன்னணி படையான அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையத்துடன் நெருக்கமாக இணைத்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக, அது கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியதுடன் நலன்புரி திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான செலவுகளை மேலும் குறைத்தது.

அது பிரதானமாக தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பைப் பராமரித்ததுடன் பெய்ஜிங்குடனான உறவுகளைத் துண்டிக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதற்காக வாஷிங்டன் முன்னர் ஒரு பொறிமுறையாகப் பயன்படுத்திய போர்க்குற்ற விசாரணைகளையும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உதவியுடன் நசுக்கியது.

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வந்த வெகுஜன எதிர்ப்பு, 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாட்டைக் கண்டன. அந்த தேர்தலில் இராஜபக்ஷவின் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் வாகனமான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.

விரைவில், ஒரு வேலைநிறுத்த அலை தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை தொடர்ந்த அந்த அலை, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரை உள்ளடக்கி இருந்தது. கடந்த 18 மாதங்களில், இரயில்வே தொழிலாளர்கள், சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பல்கலைக்கழக ஊழியர்கள், மின்சாரம், பெட்ரோலியம், தபால் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சில சுதந்திர வர்த்தக வலய நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் தீவிரமடைந்தன.

முதலாளித்துவ அரசு மற்றும் இலாப நோக்கு அமைப்பு முறைக்கு அடிபணிந்து, பெரும்பாலும் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தலைமையில் செயற்படும் தொழிற்சங்கங்கள், தொடர்ச்சியாக இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களை திணறடிக்கவும் தனிமைப்படுத்தவும், பின்னர் அவற்றை நிறுத்திவிடவும் முயற்சித்தன.

தமிழ் தேசியவாதிகள், ஜே.வி.பி. மற்றும் போலி-இடது அமைப்புகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க செயற்பட்டதுடன், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு விரோதமான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் சவாலையும் எதிர்த்ததோடு, அதன் மூலம் இராஜபக்ஷக்களும் அவர்களின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும் வஞ்சத்தனமாக தங்களை ஒரே எதிர்க் கட்சியாக காட்டிக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

2018 அக்டோபரில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக மஹிந்த இராஜபக்ஷவை நியமித்து, சிறிசேன செய்த அரசியல் யாப்புக்கு விரோதமான அரசியல் சதிக்கு பிரதிபலித்த முன்நிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, ந.ச.ச.க. ஆகியவை, ஐ.தே.க.வின் "ஜனநாயகத்துக்கான" போலி பிரச்சாரத்தை சூழ அணிதிரண்டன.

இரண்டு போட்டி முதலாளித்துவ கன்னைகளுக்கு எதிராக, அந்த அரசியல் நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையிட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே போராடியது. இரு தரப்பும் சர்வாதிகார நடவடிக்கைகளை நோக்கி திரும்புவதாக சோ.ச.க. எச்சரித்ததோடு விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாஷிங்டனின் அப்பட்டமான தலையீட்டையும் அம்பலப்படுத்தியது. (பார்க்க: “இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராடு”).

ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு கொண்ட குழு ஒன்று, 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் பற்றி அரசாங்கத்துக்கும் புலணாய்வுத்துறைக்கும் முன்னறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவை தடுக்காமல் அதை நடத்த அனுமதித்தபோது,​​ எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிப்படையாக ஒரே வரிசையில் அணிதிரண்டன. கடுமையான அவசரகால விதிகளை சுமத்துவதற்கும் நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் ஒரு மோசமான முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கும் சிறிசேன இந்த தாக்குதலை பயன்படுத்திக்கொண்டார். எதிர்க் கட்சிகள் - ஜே.வி.பி., தமிழ் கூட்டமைப்பு மற்றும் போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் ந.ச.ச.க. உட்பட- அனைத்தும் அவசரகால விதிகளையும் "பயங்கரவாதத்திற்கு" எதிரான போராட்டம் ஒரு தேசிய முன்னுரிமை என அறிவிக்கப்பட்டதையும் மற்றும் அனைத்து வேலைநிறுத்தங்களையும் தொழிற்சங்கங்கள் உடனடியாக நிறுத்திக்கொண்டதையும் ஆதரித்தன.

அவ்வாறு செய்ததன் மூலம், ​​கோடாபய இராஜபக்ஷ ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொண்டு இராணுவவாத மற்றும் இனவாத வாய்ச்சவடால்களை விடுப்பதற்கும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை "பலவீனப்படுத்தியதற்காக" அரசாங்கத்தை கண்டிக்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் உதவினார்கள்.

அவர்கள் 2015 இல் செய்ததைப் போலவே, 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், ​​தமிழ் தேசியவாதிகளும் “இடது” என கூறிக்கொள்ளும் கட்சிகளும் உழைக்கும் மக்களை ஐ.தே.க.வுக்குப் பின்னால் முடிந்துவிட முயன்றன. சிலர் இதை வெளிப்படையாக செய்தனர். முன்நிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற ஏனையவை, "இராஜபக்ஷவின் பாசிசத்திற்கு" எதிராக எனக் கூறிக்கொண்டு மறைமுகமாக அதைச் செய்த அதே நேரம், ஐ.தே.க.வின் இனவாதம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் அதன் நீண்ட பதிவு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான முகவராக அதன் பங்கு பற்றியும் மௌனமாக இருந்தன.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அடக்குவதன் மூலமும் அதை வலதுசாரி ஐ.தே.க. உடன் பிணைத்து விடுவதன் மூலமும் தமிழ் தேசியவாதிகளும் பெயரளவிலான “இடது” கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமான வெகுஜன கோபத்திற்கு வாய்ச்சவடால் அறைகூவல் விடுக்க இராஜபக்ஷவுக்கு கதவைத் திறந்து விட்டன. சீனாவிற்கு எதிரான அதன் சூழ்ச்சிகளில் இலங்கை ஒரு கையாளாக செயற்பட வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கைகள் மீதான வெகுஜன எதிர்ப்பை கூட சுரண்டிக்கொள்ள தனது சிங்களப் பேரினவாத மற்றும் பௌத்த கூட்டாளிகள் ஊடாக இராஜபக்ஷ முயன்றார்.

அவ்வாறு செய்த அதேவேளை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய, எடுக்கவுள்ள ஒரு பலம்வாய்ந்த மனிதனாக தன்னை காட்டிக்கொண்டு, முதலாளித்துவ மற்றும் இராணுவ எந்திரத்தின் ஆதரவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தனது குறிக்கோள்களை வெளிப்படையாக அறிவித்த கோடாபய இராஜபக்ஷ, வெளிநாட்டு மூலதனம் கோருகின்ற "ஸ்திரத்தன்மையை" வழங்குவதற்காக ஜனாதிபதிக்கு எதேச்சதிகார அதிகாரங்களை வழங்கக் கூடியவாறு அரசியலமைப்பை உடனடியாக திருத்துவதில் தான் உறுதியாக இருப்பதாக இந்த வாரம் அறிவித்தார். "ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்," என்று அவர் பிரகடனம் செய்தார்.

தொழிலாள வர்க்கம் முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை

இராஜபக்ஷ-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் மீது உழைக்கும் மக்கள் மத்தியில் எத்தகைய மாயைகள் இருந்தாலும், அவை விரைவில் கலைந்துவிடும். எவ்வாறாயினும், வரவிருக்கும் வெகுஜன போராட்டங்களுக்கு வழிகாட்டுவதற்குத் தேவையான மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டம் எது என்பதே முக்கியமான கேள்வி.

தனது வர்க்க நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ள, தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச சர்வதேசவாத மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு அதைக் குறிக்கோளாகக் கொண்ட புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையானது உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியின் ஒரு பகுதியாகும். இந்த எழுச்சி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெகுஜன வேலைநிறுத்தங்களையும், பிரான்சில் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான “மஞ்சள் சீருடை” இயக்கம் மற்றும் சிலி மற்றும் ஈக்வடார் முதல் அல்ஜீரியா மற்றும் லெபனான் வரை உலகெங்கிலும் பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கண்டது. முதலாளித்துவத்தில், தொழிலாள வர்க்கம் உலகளாவிய எதிரியை எதிர்கொள்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கிலும் அதிக முதலீட்டாளர் வருவாயைத் தேடுகின்ற அதேவேளை, 1930 களில் செய்ததைப் போலவே, பெரிய முதலாளித்துவ சக்திகள் வர்த்தகப் போர்களையும் ஆட்சி மாற்றப் போர்களையும் முன்னெடுப்பதோடு மூர்க்கத்தனமாக மறு ஆயுதபாணியாகின்றன.

உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்தை தோற்கடிக்க, தொழிலாள வர்க்கம் தேசிய எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து அதன் போராட்டங்களை ஒன்றிணைத்து ஒத்துழைக்க ஒரு சர்வதேச மூலோபாயத்தை பின்பற்ற வேண்டும்.

கிளர்ச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவம் எதேச்சதிகார ஆட்சி முறைகளின் பக்கம் திரும்பி, தீவிர வலதுசாரி தேசியவாத மற்றும் இனவாத சக்திகளை வளர்த்துவிடுகின்றன. வெள்ளை மாளிகையில் ஒரு பாசிச கோடீஸ்வரர் அமர்ந்திருக்கும் அமெரிக்காவிலும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி இருக்கும் ஜேர்மனியிலும், நரேந்திர மோடியையும் அவரது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியையும் முதலாளித்துவம் அரவனைத்துக்கொண்டுள்ள இந்தியாவிலும் மற்றும் இலங்கையிலும் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரள்வதும், "ஜனநாயகத்தை பாதுகாத்தல்" என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தை ஐ.தே.க. போன்ற முதலாளித்துவத்தின் ஏதாவதொரு கன்னையுடன் முடிச்சுப் போட்டுவிடும் அனைவருக்கும் எதிரான இரக்கமற்ற போராட வேண்டியதும் அவசியமாகும்.

தற்போதைய வேலைநிறுத்த அலைகளில் வெளிப்படுத்தப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் புறநிலை ஒற்றுமையை, ஒரு நனவான அரசியல் மூலோபாயமாக மாற்றுவதற்காகப் போராடுவதே ஜனாதிபதித் தேர்தலில் சோ.ச.க. மேற்கொண்ட தலையீட்டின் மையமாகும்.

இனவாதம் மற்றும் தேசியவாத விஷத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பல தசாப்தங்களாக, உழைக்கும் மக்களை அவர்களது வர்க்க எதிரிகளுடன் பிணைத்து வைக்கவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் சிங்கள ஜனரஞ்சகவாதம் ஆளும் வர்க்கத்தின் பிரதான கருத்தியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதலாளித்துவத்தின் தமிழ் தேசியவாத முன்னோக்கு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒரு முட்டுச் சந்துக்குள் இட்டுச் சென்றது. தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் ஆதரவையும் அதன் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவையும் பெறுவதை அதன் மூலோபாயத்துக்கான அடிப்படையாகக் கொண்டது. இதில், அதன் அடிச்சுவடுகளையே தமிழ் கூட்டமைப்பும் பின்பற்றுகிறது.

முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசி, சோசலிசத்திற்கான உலகப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும், தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாகவும், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே தமிழ் மற்றும் முஸ்லீம் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

சோ.ச.க. அதன் போராட்டத்தை நிரந்தர புரட்சி மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கின்றது. 1917 ரஷ்ய புரட்சிக்கு உயிரோட்டத்தை கொடுத்ததும் தொழிலாள வர்க்கத்திற்கான பூகோள புரட்சிகர மூலோபாயத்தை விரிவுபடுத்தியதும் நிரந்தரப் புரட்சி தத்துவமே ஆகும். முதலாளித்துவ வளர்ச்சி காலங்கடந்த நாடுகளில், தொழிலாள வர்க்கத் தலைமையிலான சோசலிச புரட்சியின் மூலம் மட்டுமே அடிப்படை ஜனநாயக பணிகளை யதார்த்தமாக்க முடியும் என்பதே .நிரந்தர புரட்சியின் ஒரு பிரதான கொள்கை ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமே கிராமப்புற உழைப்பாளர்களை பெருவணிகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை வழங்கும், இதன் மூலம் சிங்கள ஜனரஞ்சகவாதிகள் மற்றும் தமிழ் தேசியவாதிகளின் போலி அறைகூவல்கள் தகர்த்தெறியப்படும்.

போருக்கு எதிரான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு திருப்புமுனையாகும். இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தீவை அதன் போர் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கான அமெரிக்க உந்துதலை கடுமையாக எதிர்க்க வேண்டும். உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக தெற்காசியா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எபோட்ஸிலி தோட்டத் தொழிலாளர்களின் வழியைப் பின்பற்றி, பெருவணிகங்களதும் அரசினதும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை அணிதிரட்டுவதற்காக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதோடு ஒரு தொழிலாள வர்க்க அரசியல் எதிர்த் தாக்குதலுக்குள் உழைக்கும் மக்களின் பன்மடங்கு போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கும் எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயற்சிக்கின்ற மற்றும் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களின் மூலோபாய படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்ட, ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாகும். அந்தக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியுமே ஆகும்.