ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Suleimani assassination, imperialist strategy and the crisis of the Iranian regime

சுலைமானி படுகொலையும், ஏகாதிபத்திய மூலோபாயமும், ஈரானிய ஆட்சியின் நெருக்கடியும்

Keith Jones
16 January 2020

உலக புவிசார் அரசியலின் எந்தவொரு திடீர் திருப்பத்தையும் போலவே, ஈரானிய புரட்சிப்படை தளபதி காசிம் சுலைமானியை வாஷிங்டன் குற்றகரமாக படுகொலை செய்ததன் உண்மையான உத்தேசமும் முழுமையான உள்நோக்கங்களும் காலம் நகர்கையில் மேலெழுந்து வருகின்றன.

அந்த படுகொலை அமெரிக்கர்களின் வாழ்வுக்கு இருந்த ஓர் உடனடி அச்சுறுத்தலுக்கு விடையிறுப்பு என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் வாதங்கள் அப்பட்டமான பொய்களாக அம்பலமாகி உள்ளன. சுலைமானியின் படுகொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டிருந்தது என்பதுடன் நீண்டகாலத்திற்கு முன்னரே சிஐஏ தலைவர் ஜினா ஹாஸ்பெல், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ மற்றும் முன்னாள் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் உட்பட அமெரிக்க இராணுவ-வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் முக்கிய பிரமுகர்களால் அது அறிவுறுத்தப்பட்டு வந்திருந்தது.

ஈரானின் அதிகார கட்டமைப்பில் உயர்மட்ட தலைவர் அயெத்துல்லா காமெனிக்கு அடுத்து இரண்டாவது தலைவராக பரவலாக பார்க்கப்பட்ட அந்த இராணுவத் தலைவரின் படுகொலையானது, ஈரான் மீதான "அதிகபட்ச அழுத்தத்திற்கான" ட்ரம்ப் நிர்வாக நடவடிக்கையில் கடுமையான தீவிரப்பாட்டை உண்டாக்கி உள்ளது. இந்த நடவடிக்கை நாசகரமான பொருளாதார தடையாணைகளுடன் இடைவிடாத இராஜாங்க மற்றும் இராணுவ அழுத்தத்தைக் கொண்டுள்ளது—இவையே கூட இணையவழி போர்முறை மற்றும் ஏனைய "சிறப்பு தெரிவுகளின்" ஒரு போர் நடவடிக்கைக்கு ஒத்ததாக உள்ளன.


ஈரானிய ஜனாதிபதி அலுவலக உத்தியோகப்பூர்வ வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தில், ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி ஜனவரி 15, 2020, புதன்கிழமை, ஈரானின் தெஹ்ரானில் மந்திரிசபை கூட்டத்தில் பேசுகிறார். (புகைப்படம்: அசோசியேடெட் பிரஸ் வழியாக ஈரானிய ஜனாதிபதி அலுவலகம்)

ஷாவின் இரத்தந்தோய்ந்த கால் நூற்றாண்டு கால சர்வாதிகாரத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததைப் போலவே அதேவிதத்தில், ஈரானை "மீண்டும்" —ஈரானின் ஷியா மதகுருமார்கள் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சியை மறுகட்டமைப்பு செய்வதன் மூலமாகவோ அல்லது அதை முற்றுமுதலாக தூக்கிவீசுவதன் மூலமாகவோ— அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்படியும் ஓர் அரசாங்கத்தைத் தெஹ்ரானில் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதே அதன் நோக்கமாக உள்ளது.

ஈரான் நீண்டகாலமாகவே அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளால் யுரேஷியா எங்கிலும் அதன் மேலாதிக்க முனைவைப் பாதுகாப்பதற்கு மையமாக பார்க்கப்பட்டு வந்துள்ளது. இது ஏனென்றால் அதன் பரந்த எண்ணெய் வளம் மற்றும் அது மூன்று கண்டங்களின் சங்கமத்திற்கு அருகாமையில் அமைந்து, உலகின் இரண்டு மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பிரதேசங்களான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை பங்குப் போட்டு கொள்கிறது என்பதால் ஆகும்.

இராஜாங்க வார்த்தைகளில் கூறுவதானால், ஈரானை நவ-காலனித்துவத்திற்கு கீழ்படிய நிர்பந்திப்பதற்கான அமெரிக்க முனைவானது, "குறைபாடுள்ள" ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை தெஹ்ரான் ஒரு பிரதியீடாக பேரம்பேசுமாறு ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் கோரிக்கையில் வெளிப்படுகிறது — இந்த "ட்ரம்ப் உடன்படிக்கை" கடுமையாக ஈரானின் இராணுவத்தை மட்டுப்படுத்தும் என்பதுடன், மத்திய கிழக்கு எங்கிலும் அதன் செல்வாக்கிற்குப் "பின்னடைவை" ஏற்படுத்தும், மற்றும் அணுஆயுதம் அல்லாத அணுசக்தி திட்டங்களை மேற்கொள்வதில் இருந்தும் அதை நிரந்தரமாக தடுக்கும்.

ஈரானுக்கு எதிராக வாஷிங்டனின் "அதிகபட்ச அழுத்த" நடவடிக்கை "நம்பத்தகுந்த" முற்றுமுதலான போர் அச்சுறுத்தல் மீது அமைந்துள்ளதுடன், உள்ளார்ந்த விதத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் "மூலோபாய மோதலுக்கான" அதன் தயாரிப்புகளுடனும் பிணைந்துள்ளது. அது விரைவிலேயே ஈரானை ஒரு பேரழிவுகரமான போருக்குள் இழுத்து, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையே சுற்றி வளைத்து, ஏனைய வல்லரசுகளையும் உள்ளீர்க்கக்கூடும்.

ஆனால் ஈரான் வெளியிலிருந்து முன்பினும் தீவிரமாக்கப்பட்டு வருகின்ற அழுத்தத்தை முகங்கொடுத்து வருகிறது என்பது மட்டுமல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாரிய சமூக எதிர்ப்பையும் முகங்கொடுத்து வரும் நிலைமைகளின் கீழ், நெருக்கடியில் சிக்கிய மற்றும் ஆழமாக பிளவுபட்டுள்ள ஈரானிய முதலாளித்துவத்திடம் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் சாதகமான ஒரு "பிரமாண்ட பேரம்பேசலை" பலவந்தமாக பெற முடியும் என்ற கணக்கீட்டால் அது உயிரூட்டப்பட்டுள்ளது.

ஈரானிய ஆட்சி 2018 இன் தொடக்கத்தில் இருந்தே, சிக்கன நடவடிக்கை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான மக்கள் கோபத்தின் ஒரு வெடிப்பால் உலுக்கப்பட்டது. கடந்த நவம்பரில், எரிவாயு விலை உயர்வுகள் 100 க்கும் அதிகமான நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்ட போது, அவற்றில் சில வன்முறையாகவும் இருந்த நிலையில், ஈரானிய அரசாங்கம் மீண்டும் மூர்க்கமாக பெரும் ஒடுக்குமுறையைக் கொண்டும் மற்றும் செய்திகளில் வெளியானவாறு பல போராட்டக்காரர்களைக் கொன்றும் விடையிறுத்தது.

சுலைமானியின் படுகொலையே கூட தெளிவாக "வெறும்" அச்சுறுத்தல் என்பதற்கும் கூடுதலாக, அந்த இஸ்லாமிய குடியரசை நிலைகுலைப்பதை இலக்கில் வைத்தது. ஈரானிய ஆட்சியின் உள் இயக்கவியலை மாற்றுவது அதன் நோக்கமாக இருந்தது. அது, வெளிநாட்டு போராளிகள் குழுக்களினது வலையமைப்புகள் மூலமாக, அவற்றில் பல ஷியா மக்களை அடிப்படையாக கொண்டவை என்ற நிலையில், அவற்றைக் கொண்டு அமெரிக்க அழுத்தத்திற்கு எதிர்நடவடிக்கை எடுக்கும் ஈரானின் முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்பான இராணுவ தலைவரை இல்லாது ஆக்கியது. அனைத்திற்கும் மேலாக, சுலைமானி, அவர் படுகொலையை அடுத்த பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, ஒரு பரந்த மக்கள் ஆதரவின் அடித்தளத்தைப் பெற்றிருந்த ஒரு தலைவராக இருந்தார்.

தெள்ளத்தெளிவாக அவருக்கான பாதுகாப்பு குறைபாடு உட்பட சுலைமானி கொல்லப்பட்ட விதத்தைக் கொண்டு பார்க்கையில், ஈரானிய அரசுக்குள்ளேயே எதிர்தரப்பு கன்னை அவர் படுகொலைக்கு உதவியதா என்று கேட்பதும் கூட நியாயமாக உள்ளது.

எது சர்ச்சைக்கிடமின்றி உள்ளது என்னவென்றால், அவரது படுகொலையை அடுத்து நடந்த கொந்தளிப்பான சம்பவங்களாகும், கன்னைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது, ஈரானிய புரட்சிப்படை ஏவுகணையால் உக்ரேனிய சர்வதேச விமானம் கடந்த வாரம் கவனக்குறைவாக சுட்டுவீழ்த்தப்பட்டதில் அது உச்சத்தை அடைந்தது, அதன் மூடிமறைப்பு, அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் ஒடுக்குமுறையைக் கண்டித்து மாணவர் ஆர்ப்பாட்டங்களின் வெடித்தன.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனும் மற்றும் வாஷிங்டனுடனும் நல்லிணக்கத்திற்கு அழுத்தமளிப்பதில் முன்னிலையில் நின்ற (இது JCPOA இல் போய் முடிந்தது) ஜனாதிபதி ஹாசன் ருஹானி, பயணியர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக இராணுவம் "மன்னிப்பு" கேட்க தவறியதற்காக நேற்று அதை கண்டித்தார். இப்போது பதவியிலிருக்கும் பல நாடாளுமன்றவாதிகளை வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் சமீபத்திய முடிவையும் அவர் விமர்சித்தார். அவர் "தேசிய நல்லிணக்கத்திற்கு" அழைப்பு விடுத்தார் — இந்தவொரு கோஷம், ஏகாதிபத்திய ஆதரவு பெற்றுள்ள, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி பிரிவுகளை அடிப்படையாக கொண்ட, 2009 ஜனாதிபதி தேர்தலின் முடிவை சர்ச்சைக்கு உட்படுத்திய, ஓர் இயக்கமான பசுமை கட்சி ஆதரவாளர்களால் நீண்டகாலமாக எழுப்பப்பட்ட கோஷமாகும்.

இதற்கிடையே, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி உடனான அவரது சந்திப்புக்காக புது டெல்லிக்கு விஜயம் செய்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜாரீஃப், ஒரு முக்கிய அமெரிக்க கூட்டாளியான இந்திய அரசாங்கம் "வளைகுடாவில் தீவிரமடைந்து வரும் பதட்டங்களைக் குறைப்பதில்" ஒரு முக்கிய "பாத்திரம் வகிக்க முடியுமென அறிவித்தார்.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை —ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்— 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை மறுத்தளிப்பதில் வாஷிங்டனுடன் இணைய செய்வதில் தாஜா செய்வதே, ஈரானிய ஆட்சியின் நெருக்கடியையும் மற்றும் அதற்குள் நீண்டகாலமாக இருந்து வரும் பிளவுகளையும் ஊக்குவிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் ஒரு முக்கிய அம்சமாக இருந்துள்ளது.

அந்த உடன்படிக்கையின் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் இயங்குமுறையைத் தொடங்குவதன் மூலம், அவ்விதத்தில் ஈரானிய பொருளாதாரத்தை முடமாக்கி வரும் தடையாணைகளைக் கண்காணிப்பதிலும் திணிப்பதிலும் வாஷிங்டனுடன் கூட்டு சேர்வதற்கான ஒரு விரைவு பாதையில் தங்களை நிறுத்திக் கொள்வதற்காக, செவ்வாய்கிழமை, அந்த திசையில் E-3 என்றழைக்கப்படுவது ஒரு பெரிய அடியை எடுத்து வைத்தது.

அணுசக்தி உடன்படிக்கையைத் தூக்கி வீசிய வாஷிங்டன் தான் ஈரானுக்கு எதிராக "அதிகபட்ச ஆக்ரோஷத்தை" பின்தொடர்ந்து வருகிறது. உலக நிதியியல் அமைப்புமுறை மீதான அதன் மேலாதிக்கத்தின் மூலமாக, அது ஈரான் உடனான உலக வர்த்தகத்தை வெற்றிகரமாக நிறுத்தி உள்ளது, அவ்விதத்தில் அந்த உடன்படிக்கையில் அடியிலிருக்கும் சமரச உடன்பாடுகளை —அதாவது, அணுஆயுதங்கள் அல்லாத ஈரானின் அணுசக்தி திட்டங்களில் பெரும்பாலானவற்றை கைவிடுவதற்கு கைமாறாக தடையாணைகளை நீக்குவதை— பயனற்றதாக செய்துள்ளது.

எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் காதுகளில் மெல்லிசையாக விழக்கூடிய ஒரு விடயமாக, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டனும் பல்வேறு JCPOA ஒப்பந்தங்களை மீறியதன் மூலம் தெஹ்ரான் ஆதாயமடைய முயல்வதாக எரிச்சலூட்டும் விதத்தில் மேற்கோளிட்டும் மற்றும் ஈரான் அணுஆயுதங்கள் பெற முயன்று வருவதாக குற்றஞ்சாட்டியும், உடன்படிக்கையை மீறுவதாக ஈரான் மீது பழி சுமத்தி வருகின்றன.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் நலன்களைக் குறுக்காக வெட்டும் ஆத்திரமூட்டும் ஒருதலைபட்சமான அமெரிக்க நடவடிக்கைகளால் கதிகலங்கி உள்ளன. சுலைமானியின் படுகொலை வெறுமனே சமீபத்திய மூர்க்கமான அதிர்ச்சியாக மட்டுமே இருந்தது.

ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கும் ஆக்ரோஷம் ஒரு முற்றுமுதலான போரைத் தூண்டிவிடும் என்றும், அது உடனடியாக ரஷ்யா மற்றும் சீனாவை உள்ளிழுக்கவில்லை என்றாலும் கூட அது தங்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக போய் விளையும் என்றும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகள் அஞ்சுகின்றன. ஒரு போரானது எண்ணெய் விலைகளை அதிகரிக்கும், ஐரோப்பிய பொருளாதாரத்தில் குழப்பமேற்படுத்தும், பாரியளவில் மற்றொரு அகதிகள் நெருக்கடியைத் தூண்டிவிடும் என்பதோடு அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்-தாக்குதலை கூடுதலாக தீவிரமயப்படுத்தும்.

ஐரோப்பியர்கள் "ட்ரம்பைக் கட்டுப்படுத்த" விரும்பினால், ஒரு மிகப்பெரிய மோதலைத் தவிர்க்குமாறும் மத்தியக் கிழக்கில் மேலாளுமையைத் தக்க வைக்குமாறும், அவர்கள் வாஷிங்டனுக்குப் பின்னாலும் மற்றும் அதன் "அதிகபட்ச அழுத்த" நடவடிக்கைக்குப் பின்னாலும் அணித்திரளுமாறும் பொம்பியோவும் ஏனையவர்களும் ஐரோப்பியர்களுக்கு தெரிவித்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“பல நாட்களுக்கு முன்னரே அணுசக்தி உடன்படிக்கை மீறல்கள் மீது ஐரோப்பியர்கள் ஈரானை எச்சரித்தனர், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் ஐரோப்பிய வாகனத்துறை மீது 25 சதவீத வரிவிதிக்க ட்ரம்ப் இரகசியமாக அச்சுறுத்தினார்,” என்ற தலைப்பின் கீழ் வாஷிங்டன் போஸ்ட் நேற்று பிரசுரித்த ஓர் செய்தியின்படி, இத்தகைய நம்ப முடியாத தூண்டுதல்களுடன், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வர்த்தகப் போர் அச்சுறுத்தலையும் சேர்த்திருந்தது.

அதாவது, ஈரானிய முதலாளித்துவ ஆட்சியின் குணாம்சமும் மற்றும் அதிலிருந்து வெளிப்படும் நெருக்கடியும், வாஷிங்டனின் விடயத்தைப் போலவே, ஐரோப்பியர்களினது கணக்கீடுகளிலும் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது.

தெளிவாக சுலைமானியின் படுகொலைக்கு ஈரானிய ஆட்சியின் விடையிறுப்பாலும், அதுவும் அதுவொரு மட்டுப்படுத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலாக இருந்ததுடன், அது குறித்து முன்கூட்டியே பென்டகன் எச்சரிக்கப்பட்டிருந்தது, அதில் யாரொருவரும் பாதிக்கப்படவில்லை, மற்றும் உக்ரேனிய பயணியர் விமானம் 752 ஐ சுட்டு வீழ்த்தியதில் அதன் பொறுப்பை மூடிமறைப்பதற்கான அதன் அருவருக்கத்தக்க முயற்சியினாலும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் துணிவு பெற்றுள்ளன.

அதன் அனைத்து அமெரிக்க எதிர்ப்பு வார்த்தைகள் இருந்தபோதிலும், ஈரானிய ஆட்சியானது ஒரு முதலாளித்துவ தேசியவாத ஆட்சியாகும். அது வாஷிங்டனுடன் மோதலுக்கு வந்த அளவிற்கு, அது எப்போதுமே தொழிலாள வர்க்க சுரண்டலுக்கான அதன் சொந்த சாத்தியக்கூறுகளை அதிகரித்துக் கொள்ளும் விதத்திலும் மற்றும் அதன் பிராந்திய மேலாளுமையை வலுப்படுத்தும் நிலைப்பாட்டிலும் எப்போதும் இருந்து வருகிறது.

தொழிலாள வர்க்கத்திலிருந்து அதிகரித்து வரும் எதிர்ப்பானது, குறைந்தபட்சம் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் நிர்வாகம் காலத்திலிருந்து ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகத்துடனும் சமரசம் செய்து கொள்வதற்கான தசாப்த கால முயற்சியாக இருந்ததைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே ஈரானைத் தள்ளுகிறது.

அவர்களால் முடிந்தால், இஸ்லாமிய குடியரசின் உயரடுக்கு அல்லது அதன் பிரிவுகள், பெருந்திரளான மக்களை விலை கொடுத்தாவது ஏகாதிபத்தியத்துடன் ஓர் உடன்படிக்கையை எட்டுவார்கள். 2014 இல் ருஹானி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே கூட ஒரு திட்டத்தில் கூடுதல் தனியார்மயமாக்கல்கள், மானிய வெட்டுக்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளுடன் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவை நோக்கி நட்புடன் அணுகும் விதத்தில், ஈரானிய ஆட்சி தடையாணைகளை நீக்குவதன் மீது ஒபாமா நிர்வாகத்துடன் திரைமறைவு பேச்சுவார்தைகளில் ஈடுப்பட்டிருந்தது.

இதேபோன்ற பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் நடக்கலாம் அல்லது இப்போதுமே கூட பின்புலத்தில் நடந்து கொண்டிருக்கலாம். வட கொரியாவைக் கையாள்வதில் இதுபோன்ற இரட்டை-வழி கொள்கையைப் பின்பற்றுவதில் தான் வல்லவர் என்பதை ட்ரம்ப் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஈரானின் "கடும் நிலைப்பாட்டாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களைப் பொறுத்த வரையில், அவர்களும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக இருப்பதில் அவர்களின் எதிர்தரப்பு கன்னைகளுக்குக் குறைந்தவர்கள் இல்லை, ஏனென்றால் இது 1980 களுக்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு ஈரானிய அரசாங்கத்தாலும் நவ-தாராளவாத "சீர்திருத்த" நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதிலும் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரும் எந்தவொரு சவாலையும் நசுக்க அவர்களின் எதிர்தரப்பு கன்னைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அவர்கள் தயாராக இருந்ததிலும் நிரூபிக்கப்பட்டது.

இறுதியாக, “கடும் நிலைப்பாட்டாளர்கள்" அணுசக்தி உடன்படிக்கையை ஆதரித்ததுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளையும் தொடர்ந்தனர். இன்னும் கூட மிக முக்கியமாக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளைக் கோரும் அடிப்படையில் வாஷிங்டனை எதிர்ப்பதற்கான, மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் ஆதரவை அணித்திரட்டுவதற்காக ஷியா ஜனரஞ்சகவாதம் மற்றும் பிராந்திய பிரிவினைவாதத்தைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் மூலோபாயம், அப்பிராந்தியத்தையும் உலகையும் ஒரு மோதலுக்குள் மூழ்கடிக்கும் அபாயங்களைக் கொண்ட ஒரு முட்டுச்சந்தாக உள்ளது.

உலகளவில் சிக்கன நடவடிக்கைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியை அடிப்படையாக கொண்டு, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் தலைமையைக் கொண்டு அதை ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டம் மட்டுமே ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடல்களை எதிர்ப்பதற்கான ஒரே நம்பகமான மூலோபாயமாகும்.

ஈரானின் தொழிலாளர்களும் இளைஞர்களும், அனைத்து மதக் குறுங்குழுவாதம் மற்றும் இன நிலைப்பாடுகளைக் கடந்து, ஏகாதிபத்தியம் மற்றும் திவாலான அனைத்து முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு எங்கிலும் பெருந்திரளான மக்களை ஒருங்கிணைக்க போராடும் ஒரு சோசலிச தொழிலாளர் குடியரசுக்கான போராட்டத்தை இந்த முதலாளித்துவ இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக எதிர்நிறுத்த வேண்டும்.

"ஈரான் மீது கை வைக்காதே" என்பதே வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் தாரக மந்திரமாக ஆக வேண்டும். ஈரானுக்கு எதிரான அனைத்து பொருளாதாரத் தடைகள், சூழ்ச்சிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் போர் தயாரிப்புகளுக்களை நாம் எதிர்க்க வேண்டும். ஏகாதிபத்திய போருக்கும் அதன் மூலமாக இருக்கும் நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக, ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தை கட்டமைப்பதில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.