ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Mass outrage over Hindu supremacists’ violent assault on JNU students

இந்தியா: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் மீதான இந்து மேலாதிக்கவாதிகளின் வன்முறைமிக்க தாக்குதல் குறித்து பெரும் சீற்றம் வெடித்துள்ளது

By Wasantha Rupasinghe
10 January 2020

இந்தியாவின் உயர் கல்விக்கான முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான, புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) மாணவர்களுக்கு எதிராக ஞாயிறன்று முன்னரே திட்டமிடப்பட்டு இரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அந்நாடெங்கிலும் பெரும் சீற்றமும் வெறுப்பும் கொண்ட எதிர்ப்பு வெடித்து வருகிறது.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற வலதுசாரி மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், வெளியே இருந்த இந்து மேலாதிக்க அடியாட்களுடன் சேர்ந்து JNU பெண்கள் விடுதி உட்பட அதன் வளாகத்தை நோக்கி உள்புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், இரும்புத் தடிகள், மட்டைகள், செங்கற்கள் மற்றும் பெரும் சம்மட்டிகள் கொண்டு மாணவர்களையும் ஆசிரிய உறுப்பினர்களையும் அடித்து நொருக்கினர். அப்போது, மாணவர் ஆர்வலர்களும் மற்றும் தலைவர்களும் குறிப்பாக குறிவைத்து தாக்கப்பட்டனர். ஐம்பது அந்நிய முகமூடி தாக்குதல்காரர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டும், கால்கள் உடைந்தும் போன நிலையில், குறைந்தது 40 மாணவர்களையும், இரண்டு ஆசிரிய உறுப்பினர்களையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.

வளாகத்தின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்த இன்னும் தெளிவுபடுத்தப்படாத மின்தடையின் உதவியுடனேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ABVP என்பது இந்து தீவிரவாத துணை இராணுவ ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) மாணவர் பிரிவாகும், இது இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி (BJP) இந்த அமைப்பிலிருந்து தான் உருவெடுத்தது என்பதுடன், பிஜேபி இன் விவகாரங்களில் இன்னமும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.


ஞாயிற்றுக்கிழமை தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்

ஞாயிறு தாக்குதல், பல்கலைக்கழக நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை இருமடங்காக்கியதற்கு எதிராக JNU மாணவர்கள் நடத்தி வரும் மூன்று மாதகால ஆர்ப்பாட்டங்களினது  பின்னணியிலும் மற்றும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றத்தின் மூலமாக விரைந்து இயற்றப்பட்ட பிஜேபி அரசாங்கத்தின் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act-CAA) எதிராக இந்தியா எங்கிலும் வெடித்துள்ள பெரும் போராட்டங்களுக்கும் எதிராகவே நடத்தப்பட்டது.

குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி இன்றுவரை தாக்குதல்காரர்கள் எவரையும் பொலிசார் கைப்பற்றவில்லை.

இந்த பின்னடிப்பு வேண்டுமென்றே நடக்கிறது. பல பொலிஸ் உயர் அதிகாரிகள் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்திற்கும் இந்து மேலாதிக்க வலதிற்கும் அனுதாபம் காட்டுகின்றனர். மேலும், குண்டர் தாக்குதலுக்கு தில்லி பொலிஸ் இரகசியமாக ஒத்துழைத்ததற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன.

தாக்குதல் நடந்த இரவில், இந்து தீவிரவாத அடியாட்கள் தங்களது வெறியாட்டத்தை முடித்து தப்பியோடும் வரை வளாகத்திற்கு வெளியே வெளிப்படையாக 200 பொலிசார்கள்  கூடியிருந்தும் அதில் தலையிடவில்லை.

திங்கள் கிழமை முதல், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, சண்டிகர் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள பல நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள், JNU மாணவர்களுடனான தங்களது ஒற்றுமையை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தி பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இணைந்து கொண்டதுடன், ABVP அடியாட்களையும், மற்றும் பிஜேபி அரசாங்கத்தில் இருக்கும் அவர்களது அரசியல் ஆதரவாளர்களையும் கண்டித்தனர்.

பிஜேபி அரசாங்கத்தின் நேரடி உத்தரவின் பேரில் அல்லாமல், மறைமுக ஒத்துழைப்புடன் அது மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு அடையாளமாக, தாக்குதல் நடத்தப்பட்ட இடம் மற்றும் நேரத்தை கணக்கிட்டு பொலிஸூம் பல்கலைக்கழக நிர்வாகமும் பதிலிறுத்த விதம் அனைத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

பாரபட்சமான CAA க்கு எதிரான பெரும் எதிர்ப்பிற்கு மோடி அரசாங்கம் அடக்குமுறையாலும், கொலைவெறித்தனமான வன்முறையாலும் பதிலிறுத்துள்ளது.

டிசம்பர் 15 ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் தில்லி பொலிசார் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். CAA க்கு எதிரான ஆர்ப்பாட்ட அலைகளை தகர்த்தெறியும் இதேபோன்ற முயற்சியில், தில்லிக்கு தென்கிழக்கில் 80 மைல் அல்லது 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அலிகரில் உள்ள பொலிசார், அதே நாளில் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இதேபோன்ற தாக்குதலை நடத்தினர்.

JNU மாணவர்கள் மீது மோடி அரசாங்கம் நீண்டகாலமாக குறிவைத்துள்ளது, அதற்கு, இடதுசாரி அரசியலுடனான அவர்களது தொடர்பும், மற்றும் பிஜேபி இன் இந்து வகுப்புவாதத்தையும், மேலும் பிற்போக்குவாதம் மற்றும் மத வெறியை அது விதைப்பதையும் வலுவாக எதிர்ப்பது தான் காரணம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் இருந்து மோடி அரசாங்கம் பகிரங்கமாகவே தன்னை அன்னியப்படுத்திக் காட்டிக்கொண்டாலும், அதன் ஆரம்ப பிரதிபலிப்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை முற்றிலுமாக கண்டித்தது, என்றாலும் அனைத்து அமைப்புக்களும் அதற்கு ஆதரவளித்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை பிஜேபி இன் உத்தியோகபூர்வ வலைத் தளம் “JNU வன்முறைக்கு கண்டனம்” தெரிவித்து ட்வீட் செய்தது. “மாணவர்களை பீரங்கி தீவனமாகப் பயன்படுத்தி, தங்களது சுருங்கி வரும் அரசியல் தடத்தை விஸ்தரிப்பதற்கு அமைதியின்மையை உருவாக்க தீர்மானித்துள்ள, அராஜக சக்திகளால் எடுக்கப்பட்ட பொருந்தாத ஒரு முயற்சியாகும். பல்கலைக்கழகங்கள் கற்றலுக்கான மற்றும் கல்விக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று பிஜேபி அறிவித்தது.

மோடி அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் JNU மாணவர்களை “தேச விரோதிகள்” என்று பலமுறை குறிவைத்துள்ளனர், குறிப்பாக, 2011 இல் இந்திய பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட மர்மமான தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதி இந்திய அரசால் தவறாக குற்றம்சாட்டப்பட்டவரான அஃபஸல் குரு சட்ட ரீதியாக படுகொலை செய்யப்பட்டதற்கான ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 2016 இல் சில மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கியது முதல் அவர்கள் அவ்வாறு குறிவைக்கப்பட்டனர்.

2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி அரசாங்கம் JNU மற்றும் பிற கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள மாணவர்களைத் தாக்க ABVP ஐ அதன் அதிரடி துருப்புக்களாக பலமுறை பயன்படுத்தி வந்துள்ளது. தில்லி யூனியன் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயங்களில் பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ள உள்துறை அமைச்சகம் மூலம், JNU மாணவர்களை அடித்து நொருக்குவதற்கும், அவர்கள் மீது தேசத் துரோகம் உட்பட போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கும் என அது பலமுறை காவல்துறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் இரும்புத் தடிகளால் பலமுறை தானும் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயமுற்ற JNU மாணவர் சங்கத்தின் (JNUSU) தலைவியான செல்வி. ஆய்ஷே கோஷ், இன்னமும் தலை முழுவதுமான கட்டுக்களுடன் திங்களன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் JNU மாணவர்கள் மீது வன்முறை மிக்க தாக்குதல்களைத் தொடுக்க, RSS ஆதரவாளர்களாக உள்ள JNU பேராசிரியர்களின் ஒரு குழு கிளர்ச்சியூட்டியதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், JNU துணை வேந்தரான எம். ஜெகதீஷ் குமார் இராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார். மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது பலமுறை தாக்குதல் நடத்தி வந்துள்ள, பிஜேபி அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட குமார், காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்த அவரது வெறுப்புணர்வை காட்டியுள்ளார் என்பதுடன், கோஷ் மற்றும் பிற மாணவர் தலைவர்களும் தான் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டும் வகையில் மறைமுகமாக தலையீடு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பாக பொலிசார் எவரையும் கைது செய்யவில்லை என்றாலும், குமார் அளித்த புகாரின் பேரில், சனிக்கிழமை ஒரு கணினி சேவையகத்தை அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறி JNUSU தலைவர் கோஷ் மற்றும் 19 பிற மாணவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகளை (FIRs) தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று, JNU இன் துணை வேந்தரை உத்தியோகபூர்வமாக நியமித்த அதிகாரியான இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி மாணவர்கள் அணிவகுத்து செல்ல முயன்றபோது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை எதிர்த்த JNU மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தினர்.

திடீரென வெடித்த பரந்த எதிர்ப்பால் ஆட்டம் கண்டுள்ள மோடி அரசாங்கம் தான், JNU மாணவர்கள் மீதான பாசிச தாக்குதலுக்கு பின்னணியாக உள்ளது என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Hindu பத்திரிகையின் ஒரு தலையங்கம், “அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் JNU தாக்குதலை செயல்படுத்தியிருக்க முடியாது” என்று தெரிவிக்கிறது.

தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் தனது பங்கிற்கு, “மேலிடத்து உத்தரவை” சுட்டிக்காட்டி தில்லி காவல்துறையின் நடவடிக்கைகளை மன்னிக்க முயன்றார். மேலும், “தற்போது நடக்கும் நிகழ்வுகளின் சுழற்சி எதுவாக இருப்பினும் அது தில்லி காவல்துறையின் தவறு அல்ல” என்று கெஜ்ரிவால் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “பொலிஸ்காரர்களிடம் ‘வன்முறை நடக்கட்டும், உள்ளே நுழைய வேண்டாம், வெளியே இருங்கள்’ என்று சொன்னால், அவர்கள் எப்படி உள்ளே செல்ல முடியும்?”


JNU மாணவர்கள் மீதான குண்டர்களின் தாக்குதலுக்கு எதிராக கொல்கத்தாவில் நடக்கும் ஆர்ப்பாட்டம்

JNU மாணவர்கள் மீதான தாக்குதலை எதிர்க்கும் சென்னை மற்றும் கொல்கத்தா மாணவர்களிடம் உலக சோசலிச வலைத் தள நிரூபர்கள் உரையாடினர்.

சென்னையைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவியான விநோதினி இவ்வாறு தெரிவித்தார்: “JNU மாணவர்கள் மீதான இந்த தாக்குதல், அரசு மற்றும் பொலிஸின் ஆதரவுடன் RSS மற்றும் பிஜேபி ஆல் வழிநடத்தப்படும் இந்து வகுப்புவாத ABVP அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிருகத்தனமான செயலாகும். பிஜேபி அரசாங்கம் பாசிச ஆட்சி முறைகளைப் பயன்படுத்தி, முஸ்லீம்களையும் மற்றும் பிற சிறுபான்மையினரையும் அச்சுறுத்தவதற்கு முயன்று கொண்டிருக்கிறது.

“நீங்கள் விளக்கமளித்தது போல, கம்யூனிசத்தின் அவசியத்தை உண்மையில் நானும் உணர்கிறேன். இது வகுப்புவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான மோதல் அல்ல, மாறாக வகுப்புவாதத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலானது. மெக்சிகர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுப்பதற்கு ட்ரம்ப் முயல்வது போல, இந்த நாட்டிலோ அல்லது அந்த நாட்டிலோ நீங்கள் நுழையக்கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அனைவரும் உலகத்தின் குடிமக்களே. ஒரு மருத்துவ மாணவராக, பொது சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் தாக்கி வருவதாகவே நான் கருதுகிறேன். உலகளவிலான சோசலிசம் மற்றும் சர்தேச கம்யூனிசத்திற்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.”

இதே சென்னை போராட்டத்தில் கலந்து கொண்ட 30 வயது ஆசிரியரான ஹனிஷ் என்பவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “ABVP மற்றும் RSS இன் அடியாட்களால் நடத்தப்பட்ட JNU மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் அரசு ஆதரவு பெற்ற வன்முறை என்பதுடன், அரசு, காவல்துறை மற்றும் இந்து தீவிரவாதிகளுக்கு இடையிலான உறவை காட்டுகிறது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் தோல்வியடைகின்றன. இந்த முதலாளித்துவ சார்பு இந்துத்துவ திட்ட நிரலை எதிர்கொள்ள, அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.”

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவரான சுர்ஜோ முகர்ஜி, WSWS இடம் பின்வருமாறு தெரிவித்தார்: “18 மாணவர்கள் பலத்த காயமடையும் வகையில் ஏற்படுத்திய JNU இன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலையும் மற்றும் JNU இன் பெண்கள் விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல பொது பல்கலைக்கழகங்களில் கட்டணங்களை கடுமையாக உயர்த்தவும், அவற்றை தனியார்மயமாக்கவும் அரசாங்கம் விரும்புகின்றது என்பதை நாங்கள் அறிவோம், அதனால்தான் இதை நடைமுறைப்படுத்த அவர்கள் அடியாட்களை அனுப்புகிறார்கள்.”