ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Libya conference and the new scramble for Africa

லிபியா மாநாடும், ஆபிரிக்கா மீதான புதிய வேட்கையும்

Johannes Stern
18 January 2020

லிபியா சம்பந்தமாக ஒரு முக்கிய சர்வதேச மாநாடு ஞாயிறன்று பேர்லினில் ஒன்றுகூட உள்ளது. ஜேர்மனி சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அழைப்பில், ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்திகளின் மற்றும் அமெரிக்காவின் அரசு தலைவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டினதும் மற்றும் இறுதியில் ஒட்டுமொத்த அக்கண்டத்தினதும் தலைவிதியைத் தீர்மானிக்க ஒன்றுகூடுவார்கள். ரஷ்யா, சீனாவின் பிரதிநிதிகளும் மற்றும் எகிப்து, அல்ஜீரியா, துருக்கி உட்பட மிக முக்கிய பிராந்திய சக்திகளின் பிரதிநிதிகளும், இவர்களுடன் லிபியா உள்நாட்டு போரின் எதிர்ப்பு கன்னைகளது தலைவர்களும், பிரதம மந்திரி ஃபயெஜ் அல்-சராஜ் மற்றும் தளபதி கலிஃபா ஹஃப்தார், மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் அதில் இடம் பெற்றிருப்பார்கள்.

அதன் வடிவம் மற்றும் சந்திப்புக்குரிய இடம் இரண்டு விதத்திலும், அக்கூட்டம் இழிபெயர் பெற்ற காங்கோ மாநாட்டை நினைவூட்டுகிறது. அந்த மாநாடும், ஜேர்மன் சான்சிலர் பிஸ்மார்க் அழைப்பின் பேரில் நவம்பர் 15, 1884 இல் இருந்து பெப்ரவரி 26, 1885 வரையில் பேர்லினில் தான் நடத்தப்பட்டது. அதன் முடிவில் அமெரிக்கா, ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம், ஐரோப்பிய சக்திகள் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளால் "பேர்லின் மாநாட்டு பொதுச்சட்டம்" என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை, ஆபிரிக்காவை காலனித்துவ நாடுகளாக பிளவுபடுத்துவதை வேகப்படுத்தியதுடன் இறுதியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தீவிரப்படுத்தி, ஆகஸ்ட் 1914 இல் தொடங்கிய முதலாம் உலக போரில் பாரியளவில் மக்கள் கொல்லப்படுவதில் உச்சமடைந்தது.

காங்கோ மாநாட்டுக்கு முன்னரே கூட, ஏற்கனவே ஆபிரிக்கா மீதான நாட்டம் முழுவீச்சில் இருந்தது. பிரான்ஸ் 1881 இல் துனிசியாவையும், 1884 இல் கினேயாவையும் ஆக்கிரமித்தது. 1882 இல், பிரிட்டிஷ் துருப்புகள் எகிப்து மீது படையெடுத்தன, அந்நேரத்தில் அது உத்தியோகபூர்வமாக ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பாகமாக இருந்தது. இத்தாலி 1870 மற்றும் 1882 இல் எரித்திரியாவின் பாகங்களைக் கீழ்படுத்தியது. ஏப்ரல் 1884 இல், ஜேர்மன் ரைஹ் ஜேர்மன் தென்மேற்கு ஆபிரிக்காவை (இன்று நமீபியா) இணைத்துக் கொண்டதுடன், அதே ஆண்டு ஜூலையில் டோகோ மற்றும் காமரூனுக்குள் நகர்ந்தது.

காங்கோ மாநாட்டுடன், முன்னொருபோதும் அறியப்படாத அளவில் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் துணையுடன் ஆபிரிக்காவின் காலனித்துவ அடிபணிவு வேகமெடுத்தது. ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ஐரோப்பிய சக்திகள் நடைமுறையளவில் அந்த ஒட்டுமொத்த கண்டத்தையும் துண்டாடின. காங்கோ பெல்ஜியத்திடம் வீழ்ந்தது, சஹாராவின் பெரும்பகுதியும் மற்றும் சாஹெலும் பிரான்சிடம் வீழ்ந்தன, பேர்லின் ஜேர்மன் கிழக்கு ஆபிரிக்காவை (இன்றைய தான்சானியா, புரூன்டி மற்றும் ருவண்டா, அத்துடன் மொசாம்பிக்கின் சில பகுதிகளை) பெற்றது, பிரிட்டன் 1899 இன் இறுதியில் மஹ்திஸ்ட் கிளர்ச்சியை நசுக்கி சூடானைக் கைப்பற்றியது. இதை தொடர்ந்து (1899 இல் இருந்து 1902 வரை நடந்த) இரண்டாவது போயர் போரில் பிரிட்டனால் தென்னாபிரிக்காவும், பிரான்சால் மொரோக்காவின் சில பகுதிகளும் அடிபணிய செய்யப்பட்டன, 1912 இல் ஸ்பெயின் மற்றும் இத்தாலி லிபியாவைக் கைப்பற்றின.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், பிரதான சக்திகள் "இராஜாங்க நடவடிக்கைகள்" மற்றும் "சமாதானம்" என்ற சாக்குப்போக்கின் கீழ் அவற்றின் சூறையாடும் ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்ந்தன. இன்று, அவை அதே நோக்கங்களை எட்டுவதற்காக முன்பினும் அதிக அப்பட்டமாக செயல்படுகின்றன.

லிபியா மாநாடு மீதான ஒரு கருத்துரையில், நாளிதழ் Tagesspiegel மிகவும் அப்பட்டமாகவே குறிப்பிட்டது, “பொதுவாகவே நிச்சயமற்ற விளைவை ஏற்படுத்தும் ஒரு உள்நாட்டு போரில் சிப்பாய்களுக்கு அல்லது கூலிப்படைகளுக்கு முதலீடு செய்வதோ மற்றும் பில்லியன்களைச் செலவிடுவதோ மதிப்புடையதல்ல என்றாலும் கூட — ஏன் இவ்வளவு நாடுகள் அங்கே ஈடுபட விரும்புகிறார்கள் என்றால் லிபியாவின் மூலோபாய முக்கியத்துவமே அதற்கு காரணம். லிபியாவில் எண்ணெய் உள்ளது. லிபியாவை யார் கட்டுப்பாட்டில் கொள்கிறாரோ அவர் தற்போது ஐரோப்பாவுக்கான மிக முக்கிய புலம்பெயர்வு பாதையையும் கட்டுப்பாட்டில் பெறுகிறார்— அவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றியமையா பங்காளியாக ஆகிறார்.”

அதன் ஆசிரியர் Christoph von Marschall, ஜேர்மன் ரைஹின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களை தனது பிரபுத்துவ முன்னோடிகளாக கொண்ட இவர், பேர்லின் எந்த பாரம்பரியங்களுக்குத் திரும்பி வருகிறது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார். “ஜேர்மனிக்கு இப்போது யதார்த்தஅரசியல் (realpolitik) சம்பந்தமாக ஓட்டோ வொன் பிஸ்மார்க்கின் சிறந்த முன்னோக்கு அவசியப்படுகிறது. அது, அவரின் இராஜாங்க திறமைகளை ஒரு 'நேர்மையான தரகர்' என்று அழைக்கிறது. அந்த நேர்மையான தரகரின் பாத்திரம், "அவர் தன்னலமற்றவராக இருக்க வேண்டும் ஆனால் அவரின் சொந்த நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அர்த்தமல்ல. ஜேர்மனி பின்வருவதைக் கொண்டுள்ளது: கட்டுப்படுத்த முடியாத புலம்பெயர்வு மூலமாக ஐரோப்பா மீது விழும் அழுத்தத்தைக் குறைக்க, லிபியாவில் ஸ்திரப்பாடு.”

பின்னர், இப்போதைக்கு, அந்த "நேர்மையான தரகர்" உண்மையில் ஓர் ஏகாதிபத்திய கொள்ளையராக ஆகி, “சூரியனில் இடம்" தேட முயல்கிறார். லிபியா மீதான 2011 நேட்டோ குண்டுவீச்சில் ஜேர்மன் அரசாங்கம் பங்கெடுக்கவில்லை என்றாலும், அது 2013-14 வெளியுறவு கொள்கையில் அதன் உண்மையான முகத்தைக் காட்டியதற்குப் பின்னர் இருந்து ஆபிரிக்காவில் ஈடுபடுவதில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருகிறது. இப்போது, மாலியில் பிரெஞ்சு தலைமையிலான ஆக்கிரமிப்பில் ஜேர்மனி 1,000 க்கும் அதிகமான சிப்பாய்களை நிலைநிறுத்தி அதில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கு அண்டைநாடான நைஜரில் ஓர் இராணுவ முகாம் பேணுகிறது, அதிகரித்த ஆக்ரோஷத்தன்மையுடன் அக்கண்டம் எங்கிலும் அதன் ஏகாதிபத்திய நோக்கங்களை முன்னெடுத்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம், பேர்லின் முதலில் 2014 இல் நிறைவேற்றப்பட்ட அதன் "ஆபிரிக்கா கொள்கை நெறிமுறைகளை" மேம்படுத்தியது. இந்த திருத்தம் "ஜேர்மனி மற்றும் ஐரோப்போவிற்கு ஆபிரிக்காவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை" நினைவூட்டுகின்றன, இது ஏனென்றால், ஏனைய விடயங்களுக்கு மத்தியில், அதிகரித்தளவில் விரிவடைந்து வரும் அக்கண்டத்தின் பொருளாதாரம் மற்றும் "செழிப்பான இயற்கை வளங்களால்" ஆகும். இதனால் தான் அந்த அரசாங்கம் "முன்கூட்டியே, விரைவாக, தீர்க்கமாக மற்றும் குறிப்பிடத்தக்களவில்" நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் "பல துறைகளில் உள்ள அதன் ஆதார நபர்களின் ஒட்டுமொத்த அணியையும் நிலைநிறுத்தவும்" "ஜேர்மனியின் அரசியல், பாதுகாப்பையும் மற்றும் ஆபிரிக்காவில் கொள்கை பொறுப்பை படிப்படியாக இலக்கு வைத்து அபிவிருத்தி செய்வதை" பலப்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்தது.

ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் இதேபோன்ற நோக்கங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுடன் சமீபத்திய ஆண்டுகளில் அவை அக்கண்டத்தின் மீது அவற்றின் இராணுவ மற்றும் அரசியல் தலையீட்டையும் அதிகரித்துள்ளன. பிரான்ஸ் பாரியளவில் சாஹெல் (Sahel) பகுதியில் அதன் ஈடுபாட்டை விரிவாக்கி உள்ளது, அமெரிக்காவும் ஆபிரிக்காவில் குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக அதன் தலையீட்டைத் தீவிரப்படுத்தி வருகிறது. லிபியாவினது உள்கட்டமைப்பின் பெரும்பகுதிகளை இடிபாடுகளாக குறைத்து, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கும் காயமடைவதற்கும் விட்டு வைத்து, விசாரணையின்றி கர்னல் கடாபி குண்டர்களால் படுகொலை செய்யப்படுவதற்கும் இட்டுச் சென்ற லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சு நடத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நாடு மீண்டுமொருமுறை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை, முந்தைய போரின் போர்வெறியர்கள் அனைவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்து நிற்கின்ற நிலையில், கொள்ளையின் மீது கட்டுப்பாட்டை எடுப்பதற்கான சண்டையில், இன்னும் அதிகமானவை பயணத்தில் உள்ளன.

ரஷ்யா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் கூட்டு சேர்ந்து, கடந்தாண்டு பிரான்ஸ், குறைந்தபட்சம் உத்தியோகபூர்வமின்றியாவது, ஹஃப்தாரை ஆதரித்தது, அதேவேளையில் இத்தாலியும் கட்டாரும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அல்-சர்ராஜின் இடைக்கால அரசாங்கத்துடன் (GNA) நெருக்கமாக செயலாற்றின. ஹஃப்தாரின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக GNA ஐ பலப்படுத்துவதற்காக இந்தாண்டு ஜனவரி 5 இல் துருக்கி திரிப்போலிக்கு சிப்பாய்களை அனுப்ப தொடங்கியது. இந்த முடிவு, அத்தளபதியின் வெளிப்படையான கூட்டாளிகளால் மட்டும் விமர்சிக்கப்படவில்லை, மாறாக ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தாலும் விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக, போர்வெறியர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு வரவும் மற்றும் அதன் சொந்த செல்வாக்கை அதிகரிக்கவும், பேர்லின், லிபிய உள்நாட்டு போரில் எதிரெதிர் கன்னைகள் இரண்டுடனும் அதன் தொடர்புகளைப் பயன்படுத்த முயன்று வருகிறது.

திரைக்குப் பின்னால் பேர்லினும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு விரிவான இராணுவத் தலையீட்டுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன என்பதற்கு அங்கே பல அறிகுறிகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகாரங்களுக்கான ஆணையாளர் ஜோசப் போரெல், வெள்ளியன்று கூறுகையில், லிபியா மீது ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் தலையீட்டை நிராகரிக்கவில்லை. “எங்களின் நலன்களை நாங்கள் இன்னும் திடமாகவும், அவசியமானால், பலமாகவும் வலியுறுத்துவது மிக முக்கியமாக உள்ளது,” என்று Der Spiegel க்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்தார். “லிபியாவில் அங்கே போர்நிறுத்தம் இருந்தால், பின் ஐரோப்பிய ஒன்றியம் இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்க உதவவும்—அனேகமாக சிப்பாய்களைக் கொண்டும், சான்றாக ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கையின் பாகமாகவும், தயாரிப்பு செய்ய வேண்டும்,” என்றார்.

அதுபோன்றவொரு இராணுவ நடவடிக்கை ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான ஐரோப்பிய நலன்களை இன்னும் ஆக்ரோஷமாக முன்னெடுப்பதற்காக விரைவிலேயே வட ஆபிரிக்காவின் அதிக பாகங்களுக்கு விரிவாக்கப்படலாம் என்பதில் போரெல் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. “அதற்கு எதிர்விதமாக—சாஹெலின் நிலைமை சிறப்பாக இல்லை. கடந்தாண்டு, மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜரில் மட்டும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் 1,500 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.” அந்த ஒட்டுமொத்த பிரதேசமும் "ஒரு வெடி உலையாக" உள்ளது என்றார்.

ஆனால் ஐரோப்பாவுக்கு "அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் [உள்ளன]. நாங்கள் விருப்பமுற வேண்டும் அவ்வளவு தான். நான் இராணுவ பலத்தைக் குறித்து, குறைந்தபட்சம் அதை மட்டுமே, பேசவில்லை. புத்தாண்டு இப்போது தான் தொடங்கி உள்ளது, ஏறத்தாழ ஒவ்வொரு இடத்திலும் நெருக்கடிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. ஆகவே, நமது இலக்குகள் என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த இலக்குகள் நமது கூட்டாளிகளுக்கு எதிராக செல்கின்றன என்றாலும் கூட, அவசியமானால், இவற்றைப் பாதுகாக்க நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.

இந்த மாநாட்டுக்கு முந்தைய அச்சுறுத்தலான அறிகுறிகளுடன் சேர்ந்து, இந்த அதிகரித்து வரும் மோதல் நிலைமை, லெனின் அவரின் தொல்சீர் படைப்பான ஏகாதிபத்தியத்தில் வெளியிட்ட பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது: “... செல்வாக்கு மண்டலங்கள், நலன்கள், காலனிகள், இதர பிறவற்றை பிரித்துக் கொள்வதற்கு முதலாளித்துவத்தின் கீழ் உள்ள ஒரே கருதத்தக்க அடித்தளம், அதில் பங்கேற்பாளர்களின் பலம், அவற்றின் பொதுவான பொருளாதார, நிதியியல், இராணுவ பலம், இதர பிறவற்றைக் குறித்த ஒரு கணக்கீடாகும். பிரித்தெடுத்துக் கொள்வதில் பங்கெடுப்பவர்களின் பலம் சமமான அளவில் இருக்காது, வெவ்வேறு கையகப்படுத்தல்கள், அபிவிருத்திகள், தொழில்துறை பிரிவுகள், அல்லது நாடுகளின் சமச்சீரான வளர்ச்சி முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது.”

ஆகவே, லெனினின் கருத்துப்படி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான கூட்டணிகள் "அவை என்ன வடிவில் இருந்தாலும் சரி, ஓர் ஏகாதிபத்திய கூட்டணிக்கு எதிராக மற்றொன்று இருந்தாலும் சரி, அல்லது எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு பொதுவான கூட்டணியைத் தழுவி இருந்தாலும் சரி, அது போருக்கு இடைப்பட்ட காலத்தின் தவிர்க்கவியலாத ஓர் 'உடன்படிக்கை' என்பதற்கு கூடுதலாக ஒன்றுமில்லை. சமாதானமான இந்த கூட்டணிகள் போருக்கான அடித்தளத்தைத் தயார் செய்கின்றன, அவற்றின் முறை வரும் போது போருக்குள் இறங்குகின்றன; ஒன்று மற்றொன்றுக்கு நிபந்தனை விதிக்கிறது, உலக பொருளாதாரம் மற்றும் உலக அரசியலுக்குள் நிலவிய ஏகாதிபத்திய தொடர்புகள் மற்றும் உறவுகளின் அதே அடித்தளத்தில் சமாதானமான மற்றும் சமாதானமல்லாத போராட்டத்தின் மாற்று வடிவங்களை உருவாக்குகின்றன.”

ஒரு சர்வதேச சட்டமீறலாக தெஹ்ரானின் தளபதி காசிம் சுலைமானியின் படுகொலை மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் போர் தயாரிப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து, லிபியா மாநாடு ஓர் அச்சுறுத்தலை உள்ளடக்கி உள்ளது என்பதை தொழிலாளர்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான நெருக்கடி வல்லரசுகளை முன்பினும் ஆழமாக ஏகாதிபத்திய போர் மற்றும் காட்டுமிராண்டித்தன சுழலுக்குள் உந்தி வருகிறது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஆக்ரோஷமான புதிய நவ-காலனித்துவ போர்களுக்கான தயாரிப்பு, ஒரு மூன்றாம் உலக போர் அபாயத்தை முன்னிறுத்தும் நிலையில், இதை ஒரு சோசலிச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே தடுக்க முடியும்.