ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US assassinates top Iranian general as 4,000 troops readied for Iraq intervention

ஈராக்கிய தலையீட்டுக்கு 4,000 துருப்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா உயர்மட்ட ஈரானிய தளபதியை படுகொலை செய்கிறது

By Bill Van Auken
3 January 2020

வெள்ளியன்று அதிகாலை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினரின் (IRGC) கூத்ஸ் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குவாசெம் சுலைமானி இலக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே படிப்படியாக அதிகரித்து வரும் மோதலைக் கூர்மையாக தீவிரப்படுத்தி இருப்பதுடன், மத்திய கிழக்கில் ஒரு பேரழிவுகரமான புதிய போர் வெடிப்பை மயிரிழையில் நிறுத்தி உள்ளது.

ஈராக் மற்றும் லெபனான் ஊடகங்களும், அத்துடன் ஈராக்கின் ஷியா போராளிகள் குழு இயக்கத்தின் அதிகாரிகளும், சிரியா அல்லது லெபனானில் இருந்து ஈராக்கிற்கு சுலைமானியை அழைத்து வந்திருந்த விமானத்திலிருந்து அவர் தரையிறங்கியதும் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் அவரைக் கொன்றதாக அறிவித்தன. ஈராக்கிய ஷியா போராளிகள் குழுவின் சக்தி வாய்ந்த கூட்டணியான மக்கள் அணிதிரள்வு படையின் (PMF) கட்டளையகத்தினது இரண்டாவது அந்தஸ்து அதிகாரி அபு மஹ்தி அல்-முஹன்திஸ் (Abu Mahdi al-Muhandis) உம் அத்தாக்குதலில் உயிரிழந்தார்.


இப்படத்தில் நடுவில் நின்றிருக்கும் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி குவாசெம் சுலைமானி ஈரானின் தெஹ்ரானில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுத்த படம் (படம்: அசோசியேடெட் பிரஸ் மூலமாக ஈரானிய உயர்மட்ட தலைவர் அலுவலகம்)

இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்று பென்டகன் ஓர் அறிக்கை வெளியிட்டது: “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா முத்திரை குத்தியுள்ள ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையினது கூத்ஸ் படைப்பிரிவின் தலைவர் குவாசெம் சுலைமானியை படுகொலை செய்ததன் மூலமாக, வெளிநாடுகளில் அமெரிக்க சிப்பாய்களை பாதுகாப்பதற்கு அமெரிக்க இராணுவம் தீர்க்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.”

ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை, அதன் பங்கிற்கு, “மதிப்பிற்குரிய உயர்மட்ட தளபதி இஸ்லாம் சுலைமானி அமெரிக்க ஹெலிகாப்டர்களின் தாக்குதலில் வீரமரணமடைந்தார் என்று ஈரானிய ஊடகங்களுக்குத் தெரிவித்து, அப்படுகொலையை உறுதிப்படுத்தியது.

1980-88 ஈரான்-ஈராக் போருக்குப் பின்னர் இருந்து சுலைமானி ஈரானிய இராணுவத்தினுள் ஒரு முக்கிய பிரமுகராக இருந்துள்ளார். கூத்ஸ் படையின் தலைவராக இருந்து, அவர் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிரான வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட அமெரிக்க-பின்புல ஆதரவு பெற்ற அல் கொய்தா தொடர்பு போராளிகள் குழுக்களை தோற்கடித்ததில் ஒரு மத்திய பாத்திரம் வகித்தார், அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசை (ISIS) விரட்டுவதில் ஈராக்கிய போராளிகள் படைகளை வழிநடத்துவதற்குத் தலைமை கொடுத்தார். அவர் ஈரானிய ஜனாதிபதி வேட்பாளராக ஆகக்கூடும் என்று குறிப்பிடப்பட்ட வேளையில், ஒரு சிப்பாயாக இருந்து அவர் நாட்டுக்குச் சேவை செய்ய இருப்பதாக கூறி, எந்தவொரு அதிகாரப் போட்டியையையும் அவர் நிராகரித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் 2001 அமெரிக்க படையெடுப்பில் வாஷிங்டன் உடனான தெஹ்ரானின் ஒத்துழைப்புக்குப் பின்னர் இருந்து பின்புல தொடர்புகள் மூலமாக ஈரானிய தளபதிகளுடன் தகவல்தொடர்பில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு அவர் நன்கறியப்பட்டவராக இருந்தார்.

பென்டகன் மத்திய கிழக்கில் இன்னும் கூடுதலாக 750 அமெரிக்க துணை துருப்புகளை அனுப்பு உள்ள நிலையில், அதேவேளையில் 4,000 க்கும் அதிகமானவர்கள் அப்பிராந்தியத்தில் உயர் எச்சரிக்கையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வேளையில், இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது.

ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களால் அமெரிக்காவின் பாக்தாத் தூதரகம் இவ்வாரம் அடித்து நொருக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலைநிறுத்தல் மேற்கொள்ளப்பட்டது, அமெரிக்க இராணுவவாதம் மீதான மக்களின் கோபமான ஒரு நடவடிக்கைக்கு வாஷிங்டன் ஈரான் மீது பழிச்சுமத்தியது.


அமெரிக்க கடற்படை குவைத்தில் இருந்து நிலைநிறுத்தப்பட தயாராகிறது (படம்: அசோசியேடெட் பிரஸ் மூலமாக சார்ஜென்ட் ரோபர்ட் ஜி. கவல்டனின் அமெரிக்க கடற்படை பிரிவினரின் புகைப்படங்கள்)

அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் மீதோ அல்லது அதன் நலன்கள் மீதோ ஈரான் "கூடுதல் தாக்குதல்களுக்கு" திட்டமிட்டு வருகிறது என்பதற்கு "அங்கே அறிகுறிகள்" இருப்பதாகவும், மற்றும் ஏதேனும் "தாக்குதல்கள் குறித்த வார்த்தையோ அல்லது ஏதேனும் விதமான அறிகுறியோ" கிடைத்தால் வாஷிங்டன் "முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க" தயாராக இருக்கிறது என்றும் வியாழக்கிழமை பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்தார்.

“ஆட்டம் மாறிவிட்டது,” என்று தெரிவித்த எஸ்பர், “அவர்கள் ஏதேனும் செய்வார்கள் என்று நான் நினைக்கலாமா? ஆம், அவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்,” என்றார்.

இவ்விதத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் படுகொலைகளை நடத்துவதற்கான "உரிமையை" மட்டுமல்ல, மாறாக மத்திய கிழக்கில் ஈரானிய "பினாமி" ஆக வாஷிங்டன் ஏதேனும் அமைப்பைக் கருதினாலும் அதிலிருந்து வரும் வதந்திகள் அல்லது இட்டுக்கட்டப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் கூட அது "முன்கூட்டியே" நடவடிக்கை எடுக்கும் என்ற கூற்றின் அடிப்படையில் ஈரான் மீது நாசகரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தவும் அது தனக்குத்தானே "உரிமையை" சுவீகரித்துக் கொள்கிறது. இந்த வகைப்பாடு, ஈராக்கிய ஷியா போராளிகள் குழுவில் இருந்து லெபனானில் ஹெஸ்புல்லா வெகுஜன அரசியல் மற்றும் போராளிகள் குழு இயக்கம் வரையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு காசா எல்லையில் ஆட்சி செலுத்தும் இஸ்லாமிய கட்சியான ஹமாஸ் வரையில் நீள்கிறது.

ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் உள்ள ஈராக்கிய ஷியா போராளிகள் குழு Kata’ib Hizbullah இன் முகாம்கள் மீது நடத்தப்பட்ட டிசம்பர் 29 அமெரிக்க விமானத் தாக்குதல்கள் மீது சீற்றமடைந்த ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்களால், செவ்வாயன்று, பாக்தாத் அமெரிக்க தூதரகம் முற்றுகையின் கீழ் வந்தது. அமெரிக்க F-15E ரக போர் விமானங்களால் நடத்தப்பட்ட இந்த குண்டுவீச்சில் போராளிகள் குழுவின் 25 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தபட்சம் 55 ஏனையவர்கள் காயமடைந்தனர்.

ஓர் அமெரிக்க இராணுவம் சாராத ஒப்பந்ததாரர் கொல்லப்பட்ட கிர்குக் வெளியே ஈராக்கின் K-1 இராணுவ முகாம் மீதான ஓர் ஏவுகணை தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டது. அந்த தாக்குதலுக்காக வாஷிங்டன் Kata’ib Hizbullah மீது பழி சுமத்திய போதும், அது அதற்கு பொறுப்பான எந்த ஆதாரமும் வழங்கவில்லை.

போராளிகள் குழுவின் பல உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட, போராட்டக்காரர்கள், ஈராக்கிய தலைநகரின் வீதிகளில் ஆயிரக் கணக்கானவர்கள் அணிதிரண்ட மறைந்த போராளிகளினது இறுதி சடங்குகளுக்குப் பின்னர், பாக்தாத்தில் பலமான பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள தூதரத்தை நோக்கி அணிவகுத்தனர்.

அவர்கள் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியிருந்த சுவரை அளந்து, எரிபொருள் கொண்ட போத்தல்கள் மற்றும் பாறைகளை நிரப்பி, அதை முற்றுகையிட்டனர். உலகிலேயே மிகப் பெரிய அமெரிக்க தூதரக கட்டிடமான அந்த தூதரக வளாகம் திக்ரஸ் ஆற்றின் அருகில் 104 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது, 2011 இல் உத்தியோகப்பூர்வமாக நிறுத்தப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பின் நடைமுறையளவிலான தொடர்ச்சியாக, 2012 இல் அதிகபட்சமாக அது 16,000 அமெரிக்க சிப்பாய்களைக் கொண்டிருந்தது.

போராட்டக்காரர்கள், பாதுகாவலர்களினது ஒரு சாவடி மற்றும் இரண்டு வரவேற்பறைகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வளாகத்தின் பிரதான முகப்பைத் தாக்கி நொருக்கினர். புதன்கிழமை அசோசியேடெட் பிரஸ் வெளியிட்ட புகைப்படங்கள் தூதரக வளாகத்தின் கருகிய உள்பகுதிகளைக் காட்டியது, அதில் நாற்காலிகளும் ஜன்னல்களும் தீயில் கருகி போயிருந்ததுடன், சிதைவுகளில் இருந்து அப்போதும் புகை எழுந்து கொண்டிருந்தது.

"மக்கள் உத்தரவின் பேரில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது", "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மரணிக்கட்டும்" என்பது போன்ற கோஷங்கள் உட்பட தூதரக சுற்றுச்சுவர் கிறுக்கல்களால் நிறைந்திருந்தன.

தூதரகத்தின் உள்புறம் காவலில் இருந்த அமெரிக்க கடற்படையினர் தொடர்ந்து பல சுற்று கண்ணீர் புகைக்குண்டுகள், உணர்விழக்க செய்யும் கையெறி குண்டுகள் வீசியதுடன், போராட்டக்காரர்களைக் கலைக்கும் ஒரு முயற்சியில் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தினர். கூட்டங்களை நோக்கி நெருப்பு சுவாலைகளை வீசிய அப்பாச்சி தாக்கும் ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேல் வட்டமிட்டன, இது "பலத்தைக் காட்டும் நிகழ்வாக" வர்ணிக்கப்பட்டது.

டிசம்பர் 29 விமானத் தாக்குதல்கள் அமெரிக்க பலத்தை எடுத்துகாட்டுவதையும் மற்றும் Kata’ib Hizbullah போராளிகள் குழுவிற்கு ஒரு சரியான அடியை அர்த்தப்படுத்தியது என்ற போதினும், தூதரகத்தை முற்றுகையிட்டதில் எடுத்துக்காட்டப்பட்ட மக்கள் விடையிறுப்பானது ஈராக்கிலும் அப்பிராந்தியம் எங்கிலும் வாஷிங்டன் கொள்கையின் அளப்பரிய நெருக்கடியை எடுத்துக்காட்டியது.

அரசு கட்டிடங்களையும், ஏனைய தூதரகங்கள் மற்றும் ஈராக்கிய செல்வந்த தன்னலக் குழுக்களின் தனிபெரும் வீடுகளையும் உள்ளடக்கி இருந்த அந்த பசுமை மண்டலத்தைப் பாதுகாக்க நிலைநிறுத்தப்பட்டிருந்த உயர்மட்ட அமெரிக்க-பயிற்சி பெற்ற ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு துருப்புகள் எந்த எதிர்ப்பையும் வழங்கவில்லை என்பதாலேயே, போராட்டக்காரர்களின் கூட்டதால் தூதரகத்தை அடைந்து அதற்குள் நுழைய முடிந்தது.

இந்த சம்பவம், மக்கள் அணிதிரள்வு படையின் (PMF) குடையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஷியா போராளிகள் —இவர்களில் பலரும் ஈராக் மீதான குற்றகரமான 2003 அமெரிக்க படையெடுப்பதைத் தொடர்ந்து அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான சண்டையில் உருவானவர்கள்—ஈராக்கிய அரசாங்கத்திலும் மற்றும் அதன் பாதுகாப்பு படைகளிலும் வகித்து வரும் மேலோங்கிய பாத்திரத்தை இன்னும் கூடுதலாக வெளிப்படுத்துகிறது. 2014 இல் அமெரிக்க பயிற்சி பெற்ற பாதுகாப்பு படைகள் தோற்றதும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசால் (ISIS) சுமார் ஈராக்கின் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்ற முடிந்த போதும், மற்றும் PMF இக்குள் ஒழுங்கமைய இருந்த படைகளால் நடத்தப்பட்ட பிரதான எதிர்ப்பின் போதும் அப்போதே இது தெளிவாக வெளிப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகத்திற்குச் சீற்றம் ஏற்படுத்தும் வகையில், தூதரக போராட்டத்தில் இருந்தவர்களில் PMF இன் பெயரளவிற்கான தலைவரும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் சேவையாற்றும் பலெஹ் அல்-ஃபய்யாஹ் (Faleh al-Fayyadh), PMF இன் மிகப் பெரிய போராளிகள் குழுக்களில் ஒன்றான பத்ர் (Badr) படைப்பிரிவின் தலைவரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான ஹாதி அல்-அமீரி மற்றும் ஷியோ போராளிகள் குழுக்களுடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற கன்னைகளின் ஏனைய முன்னணி உறுப்பினர்களும் இருந்தனர்.

சமீபத்திய மாதங்களில் அமெரிக்க தூதர் இந்த பிரமுகர்களைச் சந்தித்திருந்தார் என்றாலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அவர்களின் நான்கு நபர்களினது புகைப்படத்தையும் உள்ளடக்கி அவர்களை "பயங்கரவாதிகளாக" முத்திரை குத்தி கோபமான ஒரு ட்வீட் செய்தியைத் தெறிக்க விட்டிருந்தார்.

ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் நாடாளுமன்ற தலைவர் உட்பட ஈராக்கின் முக்கிய அரசு தலைவர்கள் அனைவருமே அமெரிக்க விமான தாக்குதல்களை ஈராக்கிய இறையாண்மை மீதான ஒரு மீறலாக கண்டித்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் கடந்த அக்டோபரில் இருந்து அந்நாட்டை மூழ்கடித்துள்ள அரசு ஊழலுக்கு எதிரான பாரிய வெகுஜன போராட்டங்களை முகங்கொடுத்து இராஜினாமா செய்த பின்னர் ஒரு காபந்து அரசாங்கத்திற்குத் தலைமை கொடுத்து வரும் அப்துல் மஹ்தி, ஈராக்கிய ஆயுதப் படைகளின் பாகமாக கருதப்படும் ஒரு போராளிகள் குழுக்களுக்கு எதிராக "ஏற்கவியலாத வக்கிரமான தாக்குதல்" என்று அந்த தாக்குதல்களை வர்ணித்ததுடன், அதன் "அபாயகரமான விளைவுகளை" குறித்தும் எச்சரித்தார். அந்த குண்டுவீச்சுக்கள் நடத்தப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு செயலர் எஸ்பெர் அது குறித்து அவருக்குத் தெரியப்படுத்தப்படுத்தியதாகவும், அவற்றை நிறுத்துமாறு அவரிடம் மன்றாடிய அழைப்பு தோல்வியடைந்ததாகவும் விவரித்தார்.

அந்நாட்டின் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ், இவரும் அமெரிக்க தாக்குதலைக் கண்டித்துள்ளார், அவருக்கும் ஓர் அமெரிக்க இராஜாங்க அதிகாரிக்கும் இடையிலான இதேபோன்றவொரு உரையாடலை அவர் விவரித்தார்.

தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு வாஷிங்டனின் கோரிக்கைக்கு அப்துல் மஹ்தி மற்றும் சாலிஹ் "வேகமாக விடையிறுத்ததற்காக" அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்ரம்ப் புதன்கிழமை ஒரு ட்வீட் செய்தி வெளியிட்ட அதேவேளையில், அமெரிக்க பயிற்சி பெற்ற ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு படைக்கு "எந்தவொரு கட்டிடத்தையும்" பாதுகாக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது என்பதை மறுத்து அது ஊடகங்களுக்கு நேர்த்தியான ஒரு அறிக்கை வெளியிட்டு, பசுமை மண்டலத்தின் பாதுகாப்பு குறித்து குற்றஞ்சாட்டியது.

போராளிகள் குழுவின் தலைவர்கள் அவர்களின் நோக்கத்தை எட்டிவிட்டதாகவும், அந்நாட்டில் இருந்து மொத்த அமெரிக்க துருப்புகளையும் வெளியேற்றுவதைக் கோரி ஈராக்கிய நாடாளுமன்றத்தில் சட்டமசோதா கொண்டு வரப்படும் என்றும் கூறிய பின்னர், “ஆம், நாங்கள் தான் எரித்தோம்!” என்று கோஷமிட்டவாறு போராட்டக்காரர்கள் பசுமை மண்டலத்தை விட்டு விலகிச் சென்றனர்.

கடந்த காலத்தில் இதுபோன்ற முன்மொழிவுகள் வெற்றி பெறாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், தற்போதைய நெருக்கடி அதுபோன்றவொரு நடவடிக்கை ஒப்புதல் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கக்கூடும். ஈராக்கிய சட்டமன்றத்தில் உள்ள பல அணிகளின் தலைவர்களும் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்களின் ஆதரவைச் சமிக்ஞை செய்துள்ளனர்.

பென்டகன் விபரங்களின்படி, சுமார் 5,000 சீருடை அணிந்த அமெரிக்க சிப்பாய்கள் எண்ணற்ற உள்துறை இராணுவ ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து —ஐயத்திற்கிடமின்றி அந்த எண்ணிக்கையை விட கூடுதலாகவே— ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டில் அவர்களின் பிரசன்னம் "ISIS க்கு எதிரான போர்" என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது, இதில் அமெரிக்கா முன்னர் ஈராக்கின் இரண்டாவது நகரமாக விளங்கிய மொசூலையும் அன்பர் மாகாணத்தின் ஏனைய பல நகர்புற மையங்களையும், வெறும் இடிபாடுகளாக குறைத்து, பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொல்வதில், பாரியளவில் ஒரு நாசகரமான பாத்திரம் வகித்தது.

ISIS நசுக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு தொடக்கத்தில் ட்ரம்ப் கூறுகையில், ஈரானைக் "கண்காணிப்பதற்காக" ஈராக்கில் "இந்த நம்பவியலாத தளத்தைக் கட்டமைப்பதில் பெரும் செல்வத்தைச் செலவிட்டு" இருப்பதாகவும் அதற்காக அதை வாஷிங்டன் வைத்திருக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த கருத்து ஈராக்கிய ஜனாதிபதியிடம் இருந்து உடனடியாக ஒரு பதிலடியை கொண்டு வந்தது, அவர், ஈராக்கிய அரசியலமைப்பு "எங்களின் அண்டைநாட்டவருக்கு எதிராக பயன்படுத்துவதற்காக… எங்களின் எல்லைப் பகுதியை அனுமதிக்காது" என்றும், பாக்தாத் "எந்த அச்சின் பாகமாகவும்" இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமசோதா மீது ஈராக்கிய நாடாளுமன்றம் வாக்களித்தால், வாஷிங்டன் அதன் துருப்புகளைத் திரும்ப பெறுமா என்பது எந்த விதத்திலும் தெளிவாக இல்லை. தூண்டுதலற்ற ஒரு குற்றகரமான படையெடுப்பில் தொடங்கப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதென்பது, ஈராக்கிய சமூகத்தைச் சீரழித்துள்ள இந்த நீண்ட நெடிய போரில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி வைக்கும்.

ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஒரு தூதரக படையெடுப்பில் பாதிக்கப்பட்ட நபராக வாஷிங்டன் காட்டிக் கொண்டாலும், மத்திய கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் எரிச்சலூட்டும் இந்த மோதல்களும் பதட்டங்களும், தசாப்த காலமாக அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பினதும் மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வைப் பறித்துள்ள ஈராக், ஈரான் மற்றும் சிரியாவுக்கு எதிராக அவற்றின் பொருளாதாரத்தை முடக்கும் தடையாணைகளினதும் விளைவாகும்.

இது கடந்தாண்டு தெஹ்ரான் மற்றும் பிரதான உலக சக்திகளுக்கு இடையிலான 2015 அணுசக்தி உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் கடந்தாண்டு இல்லாதொழித்ததிலும், அதை தொடர்ந்து ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளைப் பூஜ்ஜியத்திற்குக் குறைத்து ஈராக்கிய மக்கள் ஆட்சி மாற்றத்தையும் ஓர் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதை ஏற்றுக் கொள்ள செய்வதையும் நோக்கமாக கொண்ட "அதிகபட்ச அழுத்தத்தை" தொடங்கியதிலும் உச்சத்தை அடைந்தது.

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் நடவடிக்கைகளை குணாம்சப்படுத்தும் இந்த அடாவடித்தனமும் குற்றத்தனமும் பலத்தின் அறிகுறி அல்ல, மாறாக ஆழமடைந்து சென்று கொண்டிருக்கும் சமூக பதட்டங்கள், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தைப் பீடித்து வரும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஒரு வெளிப்பாடாகும், இதை ஆளும் நிதியியல் செல்வந்த தன்னலக் குழு இராணுவ வன்முறையின் ஒரு வெடிப்பை நோக்கி வெளிப்புறமாக திருப்பி விட முயல்கிறது.

ஈரானுக்கு எதிரான ஒரு போரானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "வல்லரசு" போட்டியாளர்கள் என்றழைக்கப்படும் ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரதான சக்திகள் அனைத்தையும் மற்றும் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உள்ளீர்த்து, மனிதகுலத்தை நேருக்குநேராக ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போர் அச்சுறுத்தலுக்குக் கொண்டு வந்து, அது, 2003 இல் தொடங்கப்பட்ட ஈராக் போரில் கொடூரமாக சிந்தப்பட்ட இரத்த ஆற்றையே விஞ்சி விடக்கூடியளவில் இருக்கும்.