ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French “Yellow Vests” rally for Julian Assange outside London’s Belmarsh Prison

ஜூலியன் அசான்ஜிற்காக இலண்டனின் பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே பிரெஞ்சு “மஞ்சள் சீருடையாளர்களின்” அணிவகுப்பு

By our reporters
27 January 2020

சிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் ஊடகவியலாளருமான ஜூலியன் அசான்ஜை பாதுகாக்க இலண்டனின் பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நூறுக்கும் அதிகமான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் சனியன்று பிரான்சிலிருந்து பயணித்தனர்.

“மஞ்சள் சீருடையாளர்கள்” பங்கேற்றதான இந்த சனிக்கிழமை நிகழ்வு, பிப்ரவரி 24 அன்று தொடங்கப்படவுள்ள அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிக்கோ, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஐக்கியப்பட்ட நிகழ்வுகளுடன் சேர்ந்து அசான்ஜிற்கு இருக்கும் உலகளாவிய ஆதரவிற்கு சாட்சியமளித்தது.


சிறைக்கு வெளியே ஒன்றுகூடிய மஞ்சள் சீருடையாளர்கள் (நன்றி: லியோனல் சைமன்)

ஏப்ரல் 2019 முதல் அதிஉயர் பாதுகாப்புள்ள சிறையில் அசான்ஜ் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டால், அமெரிக்கப் போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய இராஜதந்திர சூழ்ச்சிகளை அவர் அம்பலப்படுத்தியதற்காக உளவுச் சட்ட குற்றச்சாட்டுகளையும், ஆயுள் தண்டனை, அல்லது ஏன் மரண தண்டனையைக் கூட அவர் எதிர்கொள்வார்.

“மஞ்சள் சீருடையாளர்களால்” நிரம்பிய இரண்டு கோச்சுக்கள் பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே காலை 9 மணிக்கு வந்தடைந்தன. பாரிஸ், லில், மார்சைய், நீஸ் மற்றும் பிரான்ஸ் எங்கிலுமான பிற நகரங்கள் மற்றும் பெருநகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அவர்கள் ஒன்றுதிரண்டது போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை 200 க்கும் அதிகமாக உயர்த்தியிருந்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன திட்டநிரலுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பிரான்சிலிருந்து “மஞ்சள் சீருடையாளர்கள்” குழு புறப்பட்டது. மஞ்சள் சீருடையாளர்களின் நீடித்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு பொலிஸ் வன்முறை மிக்க அடக்குமுறை கொண்டு பதிலிறுத்துள்ளது.

சனிக்கிழமை போராட்டத்தை ஒழுங்கமைக்க உதவிய “மஞ்சள் சீருடையாளர்களில்” ஒருவரான கோரின், WSWS இற்கு இவ்வாறு தெரிவித்தார்: “நாங்கள் அங்கு இருப்பதை ஜூலியன் அசான்ஜ் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். முன்னேற்பாடு இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை நாங்கள் தொடங்கினோம் என்ற நிலையில் கைதிகள் தங்களது ஜன்னல்களை ஓரளவு திறந்து வைத்திருக்க முடிந்தது என்பதால் எங்களது கோஷங்கள் அவர்களுக்கு கேட்டிருக்கும். அப்போது வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குள் நாங்கள் நுழைய முயன்ற போது, நாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டோம்.

“ஆனால் ஒரு பாதுகாவலர் ஜூலியன் எங்களது கோஷங்களைக் கேட்டார் என்று வந்து சொன்னது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மற்றொரு காவலர், ஜூலியன் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், அதிக பதிவுகளைப் பெறும் கைதி என்றும் கூறினார். அதற்கு முன்னர் அவரால் தகவல்களை அணுக முடியவில்லை. (கோரின் உடனான முழு நேர்காணலை இங்கே படியுங்கள்.)


ஆர்ப்பாட்டக்காரர்கள் பெல்மார்ஷ் சிறையின் சுற்றுப்பாதையில் அணிவகுக்கின்றனர் (நன்றி: லியோனல் சைமன்)

பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் Laurent Bouhnik கூட “மஞ்சள் சீருடையாளர்கள்” குழுவில் அங்கம் வகித்திருந்தார், அவர் பிரெஞ்சு ஊடகவியலாளர் Fabien Rives இடம் இவ்வாறு கூறினார்: “இன்று இங்கு மூன்று இயக்குநர்கள் உள்ளனர், என்னைப் பொறுத்தவரை, நான் அதிர்ச்சியடைகிறேன். இங்கு நடப்பதைக் கண்டு உண்மையில் நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன். இது அறியாமை அல்ல. இது வெறுமனே வர்க்க அவமதிப்பின் ஒரு வடிவமே. சக்திபடைத்தவர்கள் நாம் கூறுவதை கேட்க விரும்பவில்லை என்ற உண்மையை தானாக முன்வந்து அம்பலப்படுத்திய ஒருவரை இது கேலி செய்வதாக உள்ளது.”

“ஒரு கலைஞராக, நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் எனது நண்பர்களுடன் இங்கு வந்திருக்காவிட்டால், என்னால் இனி திரைப்படங்களை உருவாக்கியிருக்க முடியாது… அரசியல் ரீதியாக அது சாத்தியமற்றது. ஜூலியனுக்கு நடந்து கொண்டிருப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. யாரும் எதையும் செய்யவில்லை, அல்லது குறைந்தபட்சம், ஒருசிலராவது… உலகம் முழுவதுமாக நாங்கள் போராடத் தொடங்குகிறோம், என்றாலும் அது ஒன்றுமே இல்லை, ஜூலியன் அசான்ஜ் தான் அவை அனைத்திற்குமான அடையாளமாக உள்ளார்.”

இந்த பேரணி காலை 8 மணிக்கு தொடங்கி இரவு பிற்பகுதி வரையிலுமாக நடந்து முடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், அசான்ஜின் விடுதலையைக் கோரியும், அவரது துன்புறுத்தலுக்கு தூண்டுதலளிக்கும் போர்க்குற்றவாளிகளை கண்டித்தும், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் கோஷங்களை எழுப்பினர். நாள் முழுவதுமாக அவர்களை கடந்து சென்ற வாகன ஓட்டிகளின் ஆதரவைப் பெற்றனர், வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்தும், கையசைத்தும் அவர்களுக்கு ஆதரவளித்ததுடன், வாகனங்களை நிறுத்தி துண்டு பிரசுரங்களையும் பெற்றுச் சென்றனர்.

முந்தைய ஆர்ப்பாட்டங்களைப் போலல்லாமல், ஆர்ப்பாட்டாக்காரர்களை பொலிசார் எதிர்கொண்டு, சிறைச்சாலையின் முன்பகுதியை அவர்கள் அணுகவிடாமல் தடுத்துநிறுத்தினர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது பிரசன்னம் அங்கு அவசியம் என்று கருதி, பெல்மார்ஷ் சிறையின் சுற்றுப்பாதையில் அணிவகுத்துச் சென்றனர்.

ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்புக் குழுவின் (JADC) உறுப்பினரான மாக்சின் வாக்கர், WSWS இடம், “ஜூலியனுக்கான சர்வதேச ஒற்றுமையை “மஞ்சள் சீருடையாளர்கள்” எடுத்துக் காட்டினர். சிறைச்சாலைக்குள் அவர்கள் அதைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஏனென்றால் இங்கு மிகவும் சத்தமாக இருந்தது. ஆகவே, ஜூலியன் உட்பட, ஏராளமான கைதிகள் இதைக் கேட்டிருப்பதற்கு நியாயமான வாய்ப்பு உள்ளது. அவர் உற்சாகமடைந்திருப்பார்” என்று தெரிவித்தார்.

“பிரான்சில் நடந்து வரும் போராட்டங்களை பிரிட்டனின் ஊடகங்கள் பெரும்பாலும் புறக்கணித்துள்ளன” என்று வாக்கர் கூறினார். “மிகச் சிலராலேயே அந்த ஆர்ப்பாட்டங்களை சரியான வடிவத்தில் காண முடிந்தது. ‘மஞ்சள் சீருடையாளர்களின்’ பிரசன்னம் எப்போதும் தூண்டுதலளிக்கிறது, ஏனென்றால் அரசாங்கம் மற்றும் பொலிஸின் தாக்குதல்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மிகுந்த உறுதியுடன் போராட்டங்களை தொடர்கின்ற நிலையில் பிரான்சில் அவர்கள் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டுள்ளனர் என்பதால், இங்கு பங்கேற்ற ஜூலியன் அசான்ஜின் ஆதரவாளர்களும் அடக்குமுறையை பற்றி நன்கறிவார்கள். எனவே, மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஒரு முன்மாதிரியை வழங்குகின்றனர்.”

மேலும், அசான்ஜ், “பல நாடுகளில், பேச்சு சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கான, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். ஒரு புதிய வடிவில் இதழியலை மேம்படுத்துவதில் அவர் ஒரு மகத்தான துணிச்சல் மிக்க செயலாற்றியுள்ளார் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளில், குறிப்பாக ஏகாதிபத்தியப் போர்கள் நடந்த நாடுகளில், அவரது பங்கைப் பற்றி மிகுந்த பாராட்டு உள்ளது. [கடந்த ஆண்டில்] அவர் கைது செய்யப்பட்ட போது காபூலில் [ஆப்கானிஸ்தானில்] ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.


மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்களால் கையெழுத்திடப்பட்ட பதாகை (நன்றி: லியோனல் சைமன்)

பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகத்தின் பங்களிப்புடன் சாமான்ய மக்களுக்கு மத்தியில் அசான்ஜிற்கு இருக்கும் ஆதரவை வாக்கர் வேறுபடுத்தினார். “கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் அவர் துன்புறுத்தப்படுவது பற்றி பேசவோ அல்லது அதை ஒப்புக்கொள்ளவோ இயலாமல் மிகவும் கோழைத்தனமாக இருந்தனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெல்மார்ஷ் சிறை அதன் மிருகத்தனமான மற்றும் அடக்குமுறை நிலைமைகளுக்கு இழி பெயர் பெற்றது. அங்கு அவரது பெரும்பாலான நேரம், உண்மையான தனிமைச் சிறைவாசம் கொண்டதாகவே இருந்தது, அதாவது அவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு தேவையான சட்ட ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான பொருள்களை அணுகுவது மறுக்கப்பட்டது – அவரது இந்த நிலைமைகளுக்கு அவரது சட்டக் குழு, பிரச்சாரக் குழுக்கள், மற்றும் சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர் ஆகியோரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், விக்கிலீக்ஸ் தூதரும், பிரிவு ஆசிரியருமான ஜோசப் ஃபாரெல், அசான்ஜை தனிமைச் சிறையிலிருந்து நகர்த்த சிறை அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார். “பெல்மார்ஷ் சிறை அதிகாரிகள் ஜூலியன் அசான்ஜை மருத்துவப் பிரிவின் தனிமைச் சிறை பகுதியிலிருந்து மற்ற கைதிகள் இருக்கும் பகுதிக்கு மாற்றினர்.”

இந்த முடிவு சிறை அதிகாரிகளின் “கடுமையான வீழ்ச்சியே” என்று ஃபாரெல் கூறினார், இந்த நடவடிக்கை அசான்ஜின் வழக்கறிஞர்கள், அத்துடன் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அவரது ஆதரவாளர்களின் பிரச்சாரத்திற்கு பின்னரே எடுக்கப்பட்டது.

விக்கிலீக்ஸ் பிரதிநிதி, “கைதிகளின் ஒரு குழுவினர் அசான்ஜ் நடத்தப்படும் விதம் அநியாயமானது மற்றும் நியாயமற்றது என்று சிறை ஆளுநரிடம் மூன்று முறை மனு அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார். இது அசான்ஜின் இடமாற்றத்திற்கு வழி செய்தது என்று அவர் கூறியதுடன், இது அசான்ஜின் சட்டக் குழு, பிரச்சாரகர்கள் மற்றும் சிறையில் உள்ள மக்கள் தொகையினருக்கு கிடைத்த வெற்றி என்றும் விவரித்தார்.

எவ்வாறாயினும், “பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் நடத்தப்படும் விதம் குறித்து இன்னமும் கடுமையான கவலைகள் உள்ளன” என்று ஃபாரெல் எச்சரித்தார். வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மேலாண்மை விசாரணையின் போது நீதிபதி அங்கீகரித்த பின்னரும் கூட, அவர் இன்னமும் தனது வழக்கறிஞர்களை தேவையான அளவிற்கு அணுக முடியாமல் தடுக்கப்படுகிறார். இந்நிலையில், அசான்ஜை தொடர்ந்து எந்த சிறையிலும், அதிலும் குறைந்தபட்சம் அதிஉயர் பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அவரை அடைத்து வைக்கக் கூடாது என்றே பிரச்சாரகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.”