ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Britain leaves the European Union: Against nationalism, For the United Socialist States of Europe!

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

Statement by the Socialist Equality Party (UK)
31 January 2020

GMT நேரப்படி இரவு 11 மணிக்கு, 45 ஆண்டு கால அங்கத்துவத்திற்குப் பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் மீது 2016 கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வெளியேறுதல் நிகழ்கின்றது. அந்த வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 உம், எதிராக 48 உம் என்ற சிறிய வித்தியாசத்தில் வாக்குகள் வழங்கப்பட்டு இருந்தது.

பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பு, பழமைவாத கட்சியின் அப்போதைய பிரதம மந்திரி டேவிட் கேமரூனால், அக்கட்சிக்குள் யூரோ மீது ஐயுறவு கொண்டிருந்த கன்னையை ஓரங்கட்டுவதற்காகவும், இல்லாவிடின் தமக்கு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்காவிடில் ஓர் ஆதரவான வாக்காளர் வட்டம் பிரிட்டன் சுதந்திர கட்சிக்குத் (UKIP) தாவி விடுமோ என்று அஞ்சி அதை சமாதானப்படுத்துவதற்காகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து மூன்று நாடாளுமன்ற கட்சிகள், தொழிற்சங்கங்கள், வங்கிகள் மற்றும் நிதியியல் துறை, ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகியோரின் ஆதரவு ஒன்றியத்திலேயே தங்கியிருக்கும் முடிவையே வாக்களிப்பில் கொண்டு வருமென்ற அவரின் கணக்கீடு தலைகீழாக ஆனதுடன், அதற்கு மாறாக "வெஸ்ட்மின்ஸ்டர் உயரடுக்கின்" மீதும் மற்றும் "ஆளும்தட்டின்" மீதும் அப்போது முளைவிட்ட விரோதத்தால் பகுதியாக உயிரூட்டப்பட்டதினால் வெளியேறுவதற்கு ஆதரவான வாக்குகளை உருவாக்கியது.

2016 இல் இருந்து, பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவதற்கோ அல்லது அதை மாற்றுவதற்கோ அங்கே எண்ணற்ற முயற்சிகள் நடந்துள்ளன. இருப்பினும் பிரெக்ஸிட் இப்போது யதார்த்தமாகி உள்ளது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களை உருவாக்கிய இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான தீவிரமடைந்துவரும் பெரும் எதிர்விரோதங்களின் விளைவாக, ஆளும் வர்க்கத்தின் முன்னணி கன்னைகளே அதை ஊக்குவித்ததால் பிரெக்ஸிட் மீதான மக்கள் உணர்வு அரசியல்ரீதியில் குழப்பப்பட்டது.

பிரதான சக்திகளுக்கு இடையே வர்த்தகப் போரை நோக்கிய கட்டுக்கடங்காத போக்குக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதன் மீது தங்கியிருப்பதை ஆதரிக்கும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பிரிவும் சரி வெளியேறுவதை ஆதரிக்கும் பிரிவும் சரி எதிரெதிர் மூலோபாயங்களைக் கொண்டிருந்தன. இந்த இரண்டு கன்னைகளுமே சமஅளவில் பிற்போக்குத்தனமானவையே. ஒன்றியத்தில் தங்கியிருப்பதை ஆதரிக்கும் கன்னை ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அணி மற்றும் அதன் பாரிய ஒரே சந்தைக்குள்ளேயே பிரிட்டனின் உலகளாவிய நிலையைப் பேணுவதற்கு விரும்பியது. ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை ஆதரிக்கும் சக்திகளோ, அமெரிக்காவுடன் பலமான கூட்டணியை மையப்படுத்திய மற்றும் குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு எதிராக திரும்பிய, முற்றிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிதியியல் ஊகவணிகத்திற்கான அடித்தளமாக ஓர் உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கையைப் பிரிட்டன் பின்தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தடைக்கல்லாக பார்த்தன.

ஆகவே பிரெக்ஸிட் ஆனது, முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளின் விளைபொருளாகும். இது, அந்த கருத்து வாக்கெடுப்பு நடந்து ஒரு சில மாதங்களுக்குள், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அவரின் சொந்த தேசியவாத "அமெரிக்கா முதலில்" திட்டநிரலின் மீது போட்டியிட்டு தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது. ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றிய உடைவை ஊக்குவிக்க பிரெக்ஸிட்டை ஓர் ஆயுதமாக எடுத்துக்கொண்டார், அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு கூட்டாளியாக அல்ல ஒரு "போட்டியாளர்" எனக் கண்டித்தார், மற்றும் ஜேர்மனியின் நலன்களில் செயல்படும் ஒரு "கூட்டமைப்பு" என்றார்.

முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பிய கண்டத்தை சமாதானமான முறையில் ஐக்கியப்படுத்துவது சாத்தியமே இல்லை என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை பிரெக்ஸிட் உறுதிப்படுத்தி உள்ளது. இது, அமெரிக்காவுடன் மட்டுமல்ல மாறாக ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலும் மோதல்களைத் தீவிரப்படுத்தி வரும் மையவிலக்கு சக்திகளின் அதிகரித்த அழுத்தத்தின் கீழ், தீவிரமடைந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய உடைவின் மிகவும் முன்னேறிய வெளிப்பாடாகும். அனைத்திற்கும் மேலாக, பிரெக்ஸிட் ஆல் உருவாக்கப்பட்டுள்ள தேசியவாத பதட்டங்களும், உலகளாவிய சந்தைகள் மற்றும் ஆதார வளங்களைக் கட்டுப்பாட்டில் கொள்வதற்கான நாட்டமும் ஏகாதிபத்திய இராணுவவாத வெடிப்புக்கு, அனைத்திற்கும் மேலாக ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி திருப்பி விடப்பட்ட மோதலுக்கு இட்டுச் செல்கின்றன, இது ஒட்டுமொத்த உலகையும் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

வேலைகள், கூலிகள் மீது தயவுதாட்சண்யமின்றி தாக்குதல்கள் மூலமாகவும் அத்தியாவசிய சமூக சேவைகளின் அழிப்பின் மூலமாகவும் பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கும் அதன் போட்டியாளர்களும் உலகளவில் போட்டித்தன்மையைத் தக்க வைக்க முனைகையில், வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மீள்ஆயுதமயப்படலுக்கு சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க செய்யப்பட்டு வருகிறது. “தாட்சர் புரட்சியைப் பூர்த்தி செய்வது" மற்றும் இலண்டனை "தேம்ஸ்-கரை சிங்கப்பூராக" மாற்றுவது என ஜோன்சன் அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களால், பிரெக்ஸிட் இன் நிஜமான பொருளாதார மற்றும் சமூக திட்டநிரல் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது.

இந்த வர்க்கப் போர் தாக்குதல், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்கள் சுதந்திரங்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையைக் கோருகிறது, அது ஜனநாயக ஆட்சிமுறை பொலிஸ் அரசு வழி முறைகளுக்கு வழி விட வேண்டுமென எதிர்பார்க்கிறது. “உடன்படிக்கை எட்டப்படாத" பிரெக்ஸிட் சம்பவத்தில் பத்தாயிரக் கணக்கான துருப்புகளும் கலகம் ஒடுக்கும் பொலிஸையும் நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய, அரசாங்கத்தின் “Operation Yellowhammer” என்பது, உழைக்கும் மக்களைத் தொடர்ந்து வறுமைக்குட்படுத்துவதன் தவிர்க்கவியலாத விளைவாக ஏற்படும் சமூக மோதலைக் கையாள்வதற்கான உண்மையான தயாரிப்பு திட்டங்களாக உள்ளன. முதலில் போக்குவரத்து துறையிலும், பின்னர் "அத்தியாவசியமானவை" எனக் கூறப்படும் அனைத்து சேவைகளிலும் மற்றும் தொழில்துறை அனைத்திலும் எந்தவொரு வேலைநிறுத்தங்களுக்கும் தடைவிதிக்கும் சட்டமசோதா ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசாங்கம், அதன் "தடுக்கும்" மூலோபாயத்தில் எண்ணற்ற பல அமைதியான போராட்ட குழுக்களையும், இடதுசாரி கட்சிகளையும் சேர்த்துள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு சட்டமசோதாவைக் கொண்டு இதனை செய்ய உத்தேசிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக இப்போது தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மரணகதியிலான அபாயங்களுக்கான முழு பொறுப்பும், தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் மீதும் மற்றும் பிரிட்டனில் போலி-இடது மற்றும் ஸ்ராலினிச போக்குகளில் இருந்து அவரை உற்சாகப்படுத்துபவர்கள் மீதும் விழுகிறது.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு ஓர் எதிர்ப்பாளராக அறிவித்துக் கொண்ட கோர்பின் நான்காண்டுகளாக அவரின் பெரும் ஆதரவை, வர்க்கப் போராட்டத்தையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு சவாலையும் நசுக்குவதற்குப் பயன்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் குறை இருந்தாலும், அதை தொழிலாளர்களின் நலன்களுக்கேற்ப சீர்திருத்த முடியும் என்று கூறி, அவர் அதிலேயே தங்கியிருக்கும் பிரச்சாரத்தில் கேமரூனுக்கு பக்கவாட்டில் நின்றார். இந்த ஆதரவு நிலைப்பாடானது, கிரீஸிலும், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஏனைய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் திணித்த நாசகரமான சிக்கன திட்டங்களாலும் மற்றும் மத்திய தரைக்கடலில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கும் மற்றும் அக்கண்டத்தின் எல்லை நெடுகிலும் முட்கம்பி வளையங்களை எழுப்பி நடைமுறையளவில் சித்திரவதை முகாம்களை அமைக்க இட்டுச் சென்றுள்ள புலம்பெயர்வுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான "ஐரோப்பிய கோட்டை" நடவடிக்கைகளாலும் உருவான பாரிய ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இதில், கோர்பின் கிரீஸில் சிரிசா வகித்த அதே பாத்திரம் வகித்தார். சிரிசா ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக வாக்குறுதி அளித்தது ஆனால் அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த புதிய ஜனநாயக அரசாங்கம் நடத்திய தாக்குதல்களை விட மோசமானதை நடைமுறைப்படுத்தியதுடன், இப்போது அது அகதிகள் தடுப்புக் காவல் முகாம்கள் மற்றும் நாடு கடத்தல்களை கண்காணிப்பு செய்து வருகிறது.

“Left Leave" அல்லது "லெக்ஸிட்" (Lexit) க்கு வக்காலத்து வாங்கியவர்களும், சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் தான் ஒட்டுமொத்தத்திலும் மிகவும் பிற்போக்குத்தனமான பாத்திரம் வகித்தன, இவை பிரெக்ஸிட் க்குப் பின்னர் கோர்பின் "சோசலிசத்திற்கான பிரிட்டன் பாதையை" நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற வாதத்தின் மீது மையமிட்டிருந்த ஒருவித பொருளாதார தேசியவாத தழுவலின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தன. இந்த கொள்கை, அதிலிருந்து வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்குத் தலைமை வகித்த ஆளும் உயரடுக்கின் மிகவும் பிற்போக்குத்தனமான கூறுபாடுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அடிபணிய வைத்தது. Left Leave அணியின் முக்கிய செய்தி தொடர்பாளர் ஜோர்ஜ் ஹலோவே UKIP தலைவர் நைஜல் ஃபாராஜ் உடன் பொதுவான அரங்கைப் பகிர்ந்து கொண்டு “இடது, வலது, இடது, வலது! என ஒன்றிணைந்து அணிவகுப்போம்,” என்று அறிவித்த போது, இது மிகவும் கீழ்தரமான வெளிப்பாட்டைக் கண்டது.

ஹலோவே இப்போது அவரின் பிரிட்டன் தொழிலாளர் கட்சியை ஸ்தாபித்துள்ளார். அது "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை சாதகமாக கருதி ஏற்றுக்கொள்கின்றது" மற்றும் புலம்பெயர்வோர்-விரோத நடவடிக்கைகளைக் கோருகிறது. ஒரு "தேசப்பற்று எழுச்சியை" அனுமானித்து, “தேச-விரோத" மற்றும் "பிரிட்டன் விரோத" நபர்களாக பார்க்கப்படும் "… தங்களின் சொந்த தேசக்கொடியை மற்றும் தங்களின் சொந்த தேசத்தை மற்றும் அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மற்றும் வரலாறை ஜீரணிக்க முடியாத" எந்தவொரு "இடது" நபரும் கடந்த "வரலாறாக" ஆகிவிடுவார் என்று அச்சுறுத்துகிறார்.

ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கிற்கும் எதிராக இப்போது ஒரு கடுமையான போராட்டத்தை முகங்கொடுக்கும் தொழிலாளர்களை நிராயுதபாணியாக ஆக்கும் வகையில் அபாயகரமான பிளவுகளை வளர்ப்பதே, கோர்பின் மற்றும் போலி-இடது கொள்கைகளினது ஒட்டுமொத்த விளைவாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மட்டுமே, சோசலிச சர்வதேசியவாதத்திற்கான கோட்பாட்டுரீதியிலான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கான உண்மையான சுயாதீனமான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதேனும் ஒரு பிற்போக்குத்தன முகாம்களுக்குப் பின்னால் இழுத்து விடுவதற்கான எந்தவொரு முயற்சிகளையும் எதிர்ப்பதில், பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு SEP அழைப்பு விடுத்தது. நமது முன்னோக்கு ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மீது அடித்தளத்தை கொண்டிருந்தது.

நமது அறிக்கை குறிப்பிட்டது: “சோசலிச சமத்துவக் கட்சி சமரசத்திற்கிடமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறது. ஆனால் நமது எதிர்ப்பு இடதிலிருந்தே தவிர, வலதிலிருந்து அல்ல.”

நாம் விவரித்தோம், “சோசலிஸ்டுகளின் முதல் அக்கறை வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் நிகழ்கால நலன்களை பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக அதன் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும். இந்த சூழ்நிலையில் “இடது தேசியவாதம்” என்பதாகக் கூறப்படுகின்ற ஒன்றை ஏற்பதன் அடிப்படையில் வர்க்கப் பதாகைகளைக் கலப்பதென்பது மிகப்பெரும் அரசியல் அபாயமாகும்.”

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) "ஒரு செயலூக்கமான புறக்கணிப்பை SEP ஒரு தனிப்பட்ட ஆர்ப்பாட்டமாக சிந்திக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவுபெறலுக்கான ஒரு தொடக்கத்திற்கும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினாலும் மற்றும் அதன் போலி-இடது வக்காலத்துவாதிகளாலும் உருவாக்கப்பட்ட நோக்குநிலை பிறழ்வை எதிர்த்து நிற்பதற்குமான ஒரு வழிவகையாகவே சிந்திக்கிறது... சர்வஜன வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் இரண்டு தரப்பினராலும் ஊக்குவிக்கப்படுகின்ற தேசியப் பேரினவாதம் மற்றும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமானது வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு ஐரோப்பா முழுமையிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான தனது சர்வதேச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு முன்வைக்கின்ற மாற்றீடு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டமாகும்.”

இந்த முன்னோக்கை உணர்ந்து கொள்வதற்கான புறநிலை அடித்தளம், இந்தியா, மெக்சிகோ, போர்த்தோ ரிக்கோ, ஈக்வடோர், கொலம்பியா, சிலி, அமெரிக்கா, அல்ஜீரியா, லெபனான், ஈராக், ஈரான் மற்றும் சூடான், கென்யா, தென் ஆபிரிக்காவில் மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களிலும், ஐரோப்பாவில் பிரான்சில் மஞ்சள் சீருடையாளர் போராட்டங்கள் மற்றும் மக்ரோனுக்கு எதிரான பொதுத்துறை வேலைநிறுத்தங்களிலும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஓர் உலகளாவிய வெடிப்பின் வடிவில் இப்போது உருவாகி வருகிறது.


டிசம்பர் 5, 2019, வியாழக்கிழமை, மேற்கு பிரான்சின் ரென்னில் போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ டேவிட் வின்சென்ட்]

ஆங்கில     கால்வாயை கடந்து அங்கே வர்க்க போராட்டம் பரவுவதை பிரெக்ஸிட் தடுக்குமென நம்புவதாக ரூபேர்ட் முர்டோக்கின் சன் பத்திரிகை வலியுறுத்தியது. “நமது கண்டத்தின் அண்டை நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஒன்றியத்தால் முட்டுக்கொடுக்கப்பட்டு ஸ்திரப்பாட்டில் குளிர் காய்கையில்" பிரிட்டன் தான் குழப்பத்தில் பொறிந்து போய்விடும் என்றும் அங்கு கருதப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக "வன்முறை ஆத்திரத்தின் உச்சபட்ச மட்டத்துடன் பிரான்சில் உள்நாட்டு குழப்பம் இப்போது அதன் அரசியல் ஸ்தாபகத்தை நோக்கியும், மற்றும் அவர்களின் விருப்பத்தை அமுல்படுத்தும் பொலிஸ் மீதும் திரும்பி வருகிறது, அது கட்டுப்பாட்டை மீறி விடும் அபாயத்தில் உள்ளதாக,” அப்பத்திரிகை குறிப்பிட்டது.

சன் பத்திரிகை தனது கனவுகள் சாத்தியமாகலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன. பிரிட்டனில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள், உலக சோசலிச வலைத் தளம் முன்கணித்தவாறு "தீவிரமடைந்து வரும் வர்க்க போராட்டம் மற்றும் உலக சோசலிச புரட்சியின் தசாப்தமாக" இருக்கும் ஒன்றின் ஓர் உள்ளார்ந்த பாகமாக, பிரிட்டனில் தவிர்க்கவியலாமல் வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்புக்கு இட்டுச் செல்லும்.”

தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது (ICFI) தலைமையின் கீழ், அதன் பொதுவான வர்க்க எதிரிக்கு எதிராக அதன் சர்வதேச ஐக்கியத்தைச் சார்ந்துள்ளது. நமது சகோதரத்துவ கட்சிகளுடன் சேர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி (SEP), சோசலிசத்திற்காக ஓர் ஒருங்கிணைந்த ஐரோப்பிய மற்றும் உலக தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைத்து, இப்போது அட்டவணையில் உள்ள வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு அவசியமான தலைமையை வழங்கும்.