ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump administration’s surveillance dragnet

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth
10 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

தேசிய பாதுகாப்பு உளவு அமைப்பு பெருந்திரளான மக்களை உளவுபார்த்து வருவதை 2013 இல் இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய நபர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்டதற்குப் பின்னரும் கூட அரசாங்கத்தின் சட்டவிரோத வேவுபார்ப்பு பொறி விரிவாக்கப்பட்டுள்ளது என்பதையே வெளியாகி இருக்கும் இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

உள்நாட்டு மின்னணு உளவுபார்ப்பு மீது ஒரு தேசிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மற்றும் அரசு நடவடிக்கைகளைக் கூடுதலாக மேற்பார்வையிடுவதற்கான சட்டமசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் போலித்தனமானவை என்பதற்கு கூடுதலாக வேறொன்றுமில்லை. மத்திய அரசு முன்னர் அதுவே நடத்தி வந்த மின்னணு உளவுபார்ப்பின் கணிசமான பங்கைத் இப்போது தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த சேவையில் வழங்கி வருகிறது.


[படம்: அசோசியேடெட் பிரஸ்/ செத் வெனிங், கோப்பு]

அந்தரங்க தகவல் தொடர்பான அமெரிக்க மற்றும் உலக மக்களின் உரிமை மீதான இந்த மீறல், முதலில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடிமறைப்பின் கீழ் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் நியாயப்படுத்தப்பட்டு, பின்னர் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் விரிவாக்கப்பட்டத. இது  இப்போது புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் பாசிசவாத போரில் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க பிரஜைகளைப் பாதுகாக்க அது பயன்படுத்தும் கைபேசி தகவல் விபரங்கள் "பெயர் வெளியிடப்படாதவை" என்று அரசாங்கம் வாதிடுகின்ற போதினும், இதுபோன்ற நடவடிக்கைகள் புலம்பெயர்ந்தவர்களோடு மட்டுபடுத்தப்பட்டு இருக்காது. அவை அரசாங்கத்தின் இடதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பரந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்படி, ட்ரம்ப் நிர்வாகம் வாஷிங்டன் டிசி இன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள Venntel என்று பெயர் கொண்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து 2017 இல் கைப்பேசியின் இருப்பிடம் பற்றிய தகவல் விபரங்களை கொள்முதல் செய்யத் தொடங்கியது. இந்நிறுவனம், மிகப் பெரிய மொபைல் விளம்பர நிறுவனமான Gravy Analytics என்பதுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

கைபேசி பயனாளர்களால் பதிவிறக்கம் செய்யப்படும் வானிலை, விளையாட்டு, வர்த்தகம் மற்றும் பிற மென்பொருள் பயன்பாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இருப்பிட தகவல் விபரங்களை Venntel நிறுவனம் கொள்முதல் செய்து, பின்னர் அந்த விபரங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு, அதாவது இவ்விடயத்தில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை (DHS), சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு (CBS), புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) ஆகியவற்றுக்கு மறுவிற்பனை செய்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் தொடர்ச்சியாக கைபேசி கோபுரங்களுக்கும் மற்றும் இருப்பிட விபரங்களை வழங்கும் ஏனைய சாதனங்களுக்கும் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. பெருநிறுவன சந்தைப்படுத்துனர்கள் அதிகரித்தளவில் மிரட்சியூட்டும் துல்லியத்துடன் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து விளம்பரப்படுத்த இந்த தகவல்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்கள் அவர்கள் செல்லும் இடங்களின் வானிலை அறிக்கையைப் பெற்று வருவதாக நினைக்கக்கூடும், ஆனால் அவர்களை நாடு கடத்த திட்டம் தீட்டி வரும் அரசாங்கத்திற்கு அவர்களின் இருக்கும் இடம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

வர்த்தக தகவல் விபரங்களைப் பயன்படுத்துவது என்பது Carpenter v. United States என்ற 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒதுக்கித் தள்ளுவதாகும். அது மிகப்பெரும் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து அமெரிக்க பிரஜைகளின் செல்பேசி தகவல் விபரங்களை நேரடியாக சேகரிப்பதற்கான மத்திய அரசு அதிகாரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. “இவ்விடயத்தில், அரசு வேறெந்த அமைப்பையும் போலவே ஒரு வர்த்தக கொள்முதலாளராக உள்ளது. Carpenter தீர்ப்பு இதில் சம்பந்தப்படவில்லை,” என்று DHS கொள்கைக்கான முன்னாள் துணை செயலர் Paul Rosenzweig வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவித்தார். “அரசாங்கம் வெறுமனே ஒரு தொழில்நுட்ப பொருளைத் தான் விலைக்கு வாங்குகிறது,” என்றார்.

ஒரு குற்றவாளியென சந்தேகத்திற்குரியவருக்கு உத்தரவாணை பிறப்பிப்பதற்கு நீதி விசாரணையைப் பின்பற்றுவது மற்றும் மத்திய நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்காவுக்கு பயணித்து வரும் அல்லது வாழ்ந்து வரும் ஒவ்வொருவரையும் உளவுபார்க்க சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து அரசு மொத்தமாக தகவல்களைக் கொள்முதல் செய்து வருகிறது. சந்தைப்படுத்துவதற்கான தகவல் விபரங்களைக் கொள்முதல் செய்வது என்பது சர்வதேச அளவில் உளவுத்தகவல்களைச் சேகரிக்க அமெரிக்க முகமைகளால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்த ஒப்பந்தங்கள் இரகசியமானவை என்பதால் இது எந்தளவுக்கு நடக்கின்றது என்பது தெளிவாக இல்லை என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் மிகப்பெரியளவில் அதிகரித்து, 2010 இல் 63 மில்லியனாக இருந்ததில் இருந்து இந்தாண்டு 273 மில்லியனாக, மொத்த மக்கள்தொகையில் முக்கால்வாசிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மெக்சிகோவில், இந்த பயனர்களின் எண்ணிக்கை 71 மில்லியனில் இருந்து 2024 இல் 92 மில்லியனாக, மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உலக மக்கள்தொகையில் அண்மித்து மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 3.5 பில்லியன் பேர், தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்தும் அரசின் வேவுபார்ப்பு ஆற்றல் அளப்பரியதாக உள்ளது.

“செயல்பாடுகளை மிகவும் ஊடுருவக்கூடிய, இதுவரையில் சிந்தித்தே பார்த்திராத பெருநிறுவன உளவுபார்ப்பு முறை" என்று நியூ யோர்க் டைம்ஸ் எதை குறிப்பிட்டதோ அத்தகைய ஒன்றை ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்துவதன் மீது காங்கிரஸ் விசாரணைக்கு அழைப்பு விடுத்து அப்பத்திரிகை இவ்வாரம் ஒரு தலையங்கம் பிரசுரித்தது என்றாலும், அந்த வெளியீடுகள் பெரிதும் மவுனமாகவே கடந்து செல்லப்பட்டன. அது ஞாயிற்றுக்கிழமை செய்தி நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடப்படவில்லை அல்லது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் எவராலும் மேலெழுப்படவில்லை. இது ஏனென்றால், ஆளும் வர்க்கத்தின் எந்த பிரிவும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், அமெரிக்க பிரஜைகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் கட்சி பேதமின்றி அவர்களால் நடக்கிறது என்ற உண்மையினால் ஆகும்.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை, உள்நாட்டு மின்னணு தகவல்தொடர்பு பெருந்தகவல் விபரங்களை உத்தரவாணையின்றி தொகையாக உளவுபார்ப்பதை அனுமதிக்கும் ஒரு வழிவகை உள்ளடங்கலாக 2001 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு நீட்சியை நவம்பரில் நிறைவேற்றியது. ரஷ்யாவுடன் சம்பந்தப்பட்ட ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மீது அவர்கள் அவரை நோக்கி பதவிநீக்க குற்றவிசாரணையை நடத்தி, ட்ரம்ப் விளாடிமீர் புட்டனின் ஒரு கைப்பாவை என்று வலியுறுத்திய அதேவேளையில், செயல்பாடுகளை ஊடுருவி உளவுபார்க்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தக்க வைத்திருப்பதை ஜனநாயகக் கட்சியினர் உறுதிசெய்து வைத்துள்ளனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி சுவர் கட்டியெழுப்புவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களைச் சட்டவிரோதமாக ட்ரம்ப் மாற்றி ஒதுக்கீடு செய்வதை அனுமதித்ததில் இருந்து, இராணுவ செலவுகளுக்கு 738 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்தது வரையில், அவரின் சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கை நிறைவேற்றியது வரையில், மெக்சிகோ மற்றும் கனடா உடனான சீன-விரோத வர்த்தக உடன்படிக்கைக்கு அனுமதி அளித்தது வரையில், ட்ரம்பின் பிரதான கொள்கை முனைவுகளை அவர் முன்னெடுப்பதற்கு உதவுவதில் இருந்து இந்த பதவிநீக்க குற்றவிசாரணை நடைமுறை ஜனநாயகக் கட்சியினரைத் தடுத்துவிடவில்லை.

முன்எதிர்பார்த்தபடியே ஜனநாயகக் கட்சிக்கு தோல்வியில் முடிந்த, ரஷ்ய-விரோத, தேசிய பாதுகாப்பு பதவிநீக்க குற்றவிசாரணையானது, தஞ்சம் கோரும் உரிமையை மறுப்பது மற்றும் குழந்தைகள் உட்பட நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோரைத் தடுப்புக்காவல் முகாம்களில் சிறையிலடைப்பது உள்ளடங்கலாக விரிந்து செல்லும் புலம்பெயர்ந்தோர் மீதான போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் திசைதிருப்பலாகும்.

அவருக்குப் பின்னால் பதவிநீக்க குற்றவிசாரணை இருந்த நிலையிலும், புலம்பெயர்ந்தோரின் அத்துடன் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அவரின் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் பலம் அடைந்துள்ளார். இத்தகைய தாக்குதல்களை, சிஐஏ, பென்டகன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி மூலமாக போராட முடியாது. ட்ரம்பையும் மற்றும் இரண்டு கட்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிதியியல் செல்வந்த தட்டுக்களைத் தோற்கடிக்க கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும்.

அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடும் ஒரு புரட்சிகரமான தொழிலாள வர்க்க தலைமையைக் கட்டியெழுப்பவே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அதன் ஜனாதிபதி பிரச்சாரத்தைத் தொடுத்து வருகிறது. SEP இன் வேட்பாளர்கள், ஜனாதிபதி பதவிக்கு ஜோசப் கிஷோரும் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு நோரிஸ்சா சான்டா குரூஸூம், தேசிய எல்லைகளை இல்லாதொழிக்கவும் மற்றும் அனைத்து மக்களும் அவர்கள் விரும்பும் இடத்திற்குப் பயணித்து வேலை செய்வதற்கான உரிமைக்காகவும், அரசு உளவுபார்ப்பு மற்றும் துன்புறுத்தலிலிருந்து விடுவிப்பதற்காகவும் நிற்கிறார்கள்.

SEP தேர்தல் பிரச்சாரம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு socialism2020.org தளத்தைப் பார்வையிட்டு, பதிவு செய்யலாம்.